மாமிச உணவு – ஒரு கடிதம்

வணக்கம் ஜெ,

மாட்டிறைச்சியும் மதமும் படித்தேன்.

இந்திய பண்பாட்டில் வழிபாடு என்பது ‘நன்றி’ தெரிவித்தல் அல்லவா? ஆதி இயற்கையை பெண் சக்தியாக உருவகிப்பது மற்றும் பூமி, நதி ஆகியவற்றை நன்றி செலுத்தி ‘அன்னையாக’ வணங்குவது நமது மரபல்லவா?

‘கோமாதா’ என்ற உருவகம் இந்த சாரத்தின் தொடர்ச்சி என்று தான் நான் அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இன்றைய நவீன யுகத்திலேயே கூட பால் கறக்கப்படுவது மட்டுமில்லாமல் மாடு உழுகிறது, அதன் சாணம் எரிகிறது. இன்று நான் பால் மற்றும் பால் பதார்த்தங்களை அருந்தும் பொழுது எங்கேயோ முன் பின் தெரியாத நூற்றுக்கணக்கான பசு/எருமைகளுக்கு மன ஆழத்தின் நன்றி வெளிப்படாமல் அருந்த முடிவதில்லை. எனது ஒரே ஒரு கோப்பை பாலில் கணக்கில் அடங்கா கால்நடைகளின் பங்கு இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். பசு என்னும் ஐந்து அறிவு உயிரினம் இங்கு ‘தாய்மை’ என்ற படிமம் ஆகிறது. அந்த நன்றியின் நீட்சியாக எந்த தோல் பொருட்களையும் நான் அணிவதில்லை.

இதில் அடிப்படையில் ‘புனிதம்’ / ‘புண்ணியம்’ எங்கிருந்து வந்தது? முக்கியமாக இது எப்படி “சென்ற கால எச்சம்” ஆகும்? இன்றும் நாம் பால் கறந்து கொண்டு தானே இருக்கிறோம்? சஹாராவின் தூசு கடல் தாண்டி அமேசானின் உரம் ஆவது போல் எவ்வளவு உயிர்களுக்கு நாம் நுண்ணிய அளவிலாவது கடமை பட்டிருக்கிறோமோ? இதை உணர்ந்த பின் வாயில் எசசில் ஊற இன்னொரு உயிரை பார்க்க முடியுமோ?

நீங்கள் சுட்டியது போல் இரண்டு மாதம் மட்டுமே வெயில் காலம் உடைய திபெத்திலும் எஸ்கிமோ மக்களுக்குமே கூட இன்று வருடம் முழுதும் புரதம் மிக்க சைவ உணவு மிக சாத்தியம். ‘பிழைப்பு’ அல்லது ‘சுவை’ மட்டும் அடிப்படையாக இல்லாமல் ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர சாத்திய கூறுகள் இருப்பதாகவே நினைக்கிறேன்.

கருணையை, நன்றியை ஒரு மூலையில் தள்ளி வைத்தாலும் – ‘மனித சுயநல மைய’ நன்மையை கருத்தில் கொண்டாவது அசைவத்தை குறைத்தால்/தவிர்த்தால் இன்று விளையும் தானியங்களை கொண்டே எல்லா மனிதரின் மூன்று வேலை பசி போக்க முடியும் – ஊட்ட சத்துடன். மேலும் உபரியை சேமிக்க இடம் தேட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருப்பது நீங்கள் குறிப்பிட்டு இருந்த சூழியல் சீர்கேட்டுக்கு சிறு உதாரணம் மட்டுமே.

இந்த சுட்டியை பாருங்கள் http://www.economist.com/blogs/dailychart/2011/07/global-livestock-counts – மூன்று வருட பழைய கணக்கு இது – மொத்தம் 1900 கோடி கோழிகள், 140 கோடி மாடுகள், 100 கோடி பன்றிகள், 70 கோடி ஆடுகள். பன்றியில் (மற்றும் கோழி) பால் நாம் கறப்பதில்லை. இதில் விவசாயம், பால் உற்பத்தி போக 80% மனித உணவுக்காக வளர்க்கப்படுபவை. இவை பெரும்பாலும் புல் மேய்பவை அல்ல – சோளம், பார்லி, கோதுமை, சோயா முதலான தானியங்கள் தான் கொடுக்கப்படுகின்றன. ஒரு கிலோ மாட்டு புலாலுக்கு குறைந்தது பதிமூன்று கிலோ தானியம் தேவை. ஒரு மனிதனுக்கு ஒரு நாள் சராசரி தண்ணீர் தேவை மூன்று லிட்டர். சராசரியாக ஒரு மாடு 40 லிட்டரும், ஒரு பன்றி 15 லிட்டரும், ஒரு ஆடு 4 லிட்டரும் தண்ணீர் குடிக்கின்றன. மேலும் அதனின் கழிவுகள் கொட்ட இடம் இல்லாமல் ஆற்றில் குட்டையில் கலக்கின்றன. பூமியில் நல்ல தண்ணீர் மொத்தம் இருப்பதே 2% தான். மற்றது எல்லாம் உப்பு நீரே. மேற்கொண்டு இதை பராமரிக்க ஆகும் ‘கச்சா எண்ணை’, ‘மின்சாரம்’ ஆகியவற்றை கூட்டி பார்த்தால், நாவின் சுவையின் வல்லமை புரிகிறது – புலன் அடக்கம் என்ன சும்மாவா? மேலும் ஒரு பண்ணை மீனின் ஒரு கிலோ எடைக்கு ஐந்து கிலோ கடல் மீன் தேவையாம். வெறும் நூறு கோடி மக்கள் தானே பசியோடு இருக்கிறார்கள் – போகட்டும். இது ‘புரதத்தின்’ தேவையா என்ன? இது அறிவியல் ரீதியாக காலாவதியானது. எனக்கு முதன்மையாக தெரிவது மனிதனின் பேராசை தான்.

-ராஜ் ஜெயராமன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91
அடுத்த கட்டுரைவிலங்கின் மறுநுனி