அன்னை சூடிய மாலை

மரபிலக்கியங்களை வாசிப்பதில் நவீன வாசகனுக்கு இருக்கும் தடை என்ன? பழைமையான மொழியோ இலக்கணமோ அணிகளோ ஒன்றும் அல்ல. அவற்றை மிக எளிதில் தாண்டிவிடலாம் – குறிப்பாக இன்றைய இணைய யுகத்தில். சிக்கல் அந்தப்பேரிலக்கியங்கள் இருக்கும் உணர்வுநிலைநிலைக்கும் நாம் வாழும் இன்றைய மனநிலைக்குமான இடைவெளிதான். அதனால்தான் அக்கவிதைகள் முன்வைக்கும் உச்சங்கள் நமக்கு மனஎழுச்சியை நாம் அடைவதில்லை.

இந்தத்தடையை தாண்டி பேரிலக்கியங்களை அணுகுவதற்கான முக்கியமான வழி நேரடியான ஆசிரியர்கள்தான். அவர்கள் அந்தப் பேரிலக்கியங்களின் உணர்வுநிலையில் இருந்துகொண்டிருப்பார்கள். நம் முன் ஒரு மனிதர் அந்த உணர்வுநிலையில் இருப்பது நம்மையும் எளிதாக அங்கே கொண்டுசெல்கிறது. அவர் நமக்கு அவ்விலக்கிய உச்சங்களை அடையாளம் காட்டினால் நாம் எளிதாக அதைச் சென்று தொடமுடிகிறது.

ஆனால் தமிழில் நம்முடைய பெரிய தீயூழ் என்பது இன்று அத்தகைய நல்லாசிரியர்கள் அனேகமாக இல்லை என்பதே. அவர்களை நம் கல்விக்கூடங்களில் காணமுடியாது. மிக அபூர்வமாக சிலரை வெளியே கண்டுகொள்ளலாம். இந்நிலையில் பேரிலக்கியங்களை நவீன வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ரசனை அடிப்படையிலான நூல்கள் மிக முக்கியமானவை.அவை நமக்கும் பேரிலக்கியங்களுக்குமான அந்த இடைவெளியை நிரப்பவேண்டும். பேரிலக்கியங்கள் நின்றிருக்கும் உணர்வு வெளிக்கு நம்மை நாமறிந்த இன்றைய அனுபவங்கள் வழியாக கொண்டுசென்றபின் அவற்றை நமக்கு அறிமுகம் செய்யவேண்டு.

மரபின்மைந்தன் முத்தையா

சென்ற தலைமுறையில் ஆசிரியராகவும் நூல்கள் வழியாகவும் டி.கெ.சிதம்பரநாத முதலியார் அத்தகைய பெரும்பணியை தொடங்கிவைத்தார். டி.கெ.சியின் பங்களிப்பு என்ன என்று இன்றும் சரியாக வகுத்துக்கொள்ளப்படவில்லை. உ.வே.சுவாமிநாதய்யர் பண்டைய பேரிலக்கியங்களை பதிப்பித்து நம் கையில் கொண்டுவந்து சேர்த்த அறிவியக்கத்தின் தலைமகன் எனலாம். அதே இடம் இன்னொருவகையில் டி.கெ.சிக்கு உண்டு. அவர் நவீன வாழ்க்கையில் நின்றுகொண்டு அப்பேரிலக்கியங்களை ரசிப்பதற்கான ஒரு பாதையை தொடங்கிவைத்த முன்னோடி. இன்றைய வாழ்க்கைசார்ந்த ரசனையை பேரிலக்கியம் நோக்கி நீட்டிக்கொண்டுசெல்வதைத்தான் டி.கெ.சி செய்தார் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

டி.கெ.சி
ஜஸ்டிஸ் மகராஜன்
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
மீ.ப.சோமு
மீ.ப.சோமு
ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயீல்
அ.சீனிவாசராகவன்

நீதிபதி மகராஜன், மு.மு.இஸ்மாயில், அ.சீனிவாசராகவன், மீ.ப.சோமு, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் போன்றவர்களை அவரது வழித்தோன்றல்கள் என்று சொல்லமுடியும். அந்த மரபு இன்று பெரும்பாலும் காணாமலாகிவிட்டது.இன்று வாசிப்புச்சுவையைக் கூட்டுகிறோம் என்ற பேரில் அசட்டு நகைச்சுவைகள், கேலிகள், கீழ்த்தர மொழிகள் வழியாக பேரிலக்கிய அனுபவத்தையே சல்லிசாக ஆக்கும் முயற்சிகளே நிகழ்ந்துவருகின்றன. இச்சூழலில் மரபின்மைந்தன் முத்தையா ஒரு மேடைப்பேச்சாளராகவும் பேரிலக்கிய ரசனையாளராகவும் முக்கியமானவர். சொல்லப்போனால் டி.கெ.சி மரபின் சமகால நீட்சி என அவரை தயங்காமல் சொல்லமுடியும்

மரபின்மைந்தன் தமிழிலக்கிய பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். முறையான தமிழ்க்கல்வி கொண்டவர். கோவையில் விளம்பரநிறுவனம் நடத்திவந்தாலும் திருக்கடையூர் அவரது சொந்த ஊர். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் அமிர்தகடேசுவரர் கோயிலில் அபிராமி அந்தாதி அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு. முத்தையா அபிராமி அந்தாதியை அறிமுகம் செய்து எழுதியிருக்கும் ‘அபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம்’ அவரது முக்கியமான நூல்களில் ஒன்று. அபிராமி அந்தாதி மிகச்சிறிய நூல். இணையத்திலேயே அதை முழுமையாக வாசிக்கமுடியும். ஆனால் அந்நூலின் உணர்வுத்தளத்துக்குச் செல்லும் ஒரு அழகிய பாதை முத்தையாவின் இந்நூலில் உள்ளது.

சமீபத்தில் பொருள் சார்ந்த ஒரு இக்கட்டு என்னை அழுத்தியபோது நூலக அடுக்கை துழாவியபோது கை இந்நூலை எடுத்தது. சிலநிமிடங்களில் பொன்னொளிர் வெளி ஒன்றில் நிற்கக் கண்டேன். அன்னை இருக்க மண்ணில் எவரும் தனியனல்ல என்ற வரியை அன்றுதான் அடைந்தேன். திரும்பத்திரும்ப அச்சொற்களை சொல்லிக்கொண்டிருந்தேன். ‘சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி’ என்னும் வரியை பித்துப்பிடித்ததுபோல பலநாட்கள் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்தப்பதர்களையே எல்லாமென எண்ணியிருப்பேனோ என் பாரதி பாடிய மனநிலையைச் சென்றடைந்தேன்

முத்தையா இன்றைய வாழ்க்கைசார்ந்த ஒரு எளிய நிகழ்விலிருந்து ஆரம்பிக்கிறார். பெரும்பாலும் அவரது தனியனுபவங்கள். அவ்வனுபவங்களின் ஒரு நுனியை மெல்ல நெகிழ்ச்சியின் உன்னதத்தின் தளம் நோக்கிக் கொண்டுசென்று அங்கிருந்து அப்படியே அபிராமி அந்தாதியின் பாடலுக்குச் சென்றுவிடுகிறார். ‘சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி’ என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடலை எங்கோ மெல்ல கேட்கும் அனுபவத்தைச் சொன்னபடி ஆரம்பிக்கும் முதல்கட்டுரை மிக இயல்பாக ஏன் தில்லையில் உள்ள பிள்ளையாருக்குக் காப்புச்செய்யுள் பாடப்பட்டது என்ற வரியை அடைந்து ‘தாரமர் கொன்றையும் செண்பக மாலையும்’ என செய்யுளுக்குச் சென்று ‘தார் ஆண்களுக்குரியது. மாலை பெண்களுக்குரியது. முனைகள் கட்டப்படாதது தார். கட்டப்பட்டது மாலை’ என விரிகிறது.

‘சராசரி வாழ்வில்கூட பெண்கள் வகிக்கும் பொறுப்புகளின் நிலைமாற்றம் பிரமிக்கத்தக்கது. ஒருபுறம் பார்த்தால் அவள் கணவனைச் சார்ந்திருப்பவள் போல தென்படுகிறாள். இன்னொரு பக்கம் பார்த்தால் கணவனை தாங்கும் ஆதிபராசக்தியாகவும் இருக்கிறாள்’ என்று விளக்கிச்செல்லும் சொற்கள் ‘கொடியே இளவஞ்சிக் கொம்பே’ என அபிராமி அந்தாதியைச் சென்றடைகின்றன. கொடியாகவும் கொழுகொம்பாகவும் இருப்பவள் அவள். ‘பனிமால் இமையப் பிடியே’ என பெண் யானையாக அம்பிகையை உருவகிக்கும் வரி ஒருகணம் கற்பனையை நிறுத்திச் செயலிழக்கச் செய்துவிட்டது.

‘உதிக்கின்ற செங்கதிர்’ எனத் தொடங்கி ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!’ என முடியும் அபிராமி அந்தாதி தமிழில் உருவான பெரும்பக்தி இலக்கியத் இயக்கத்தின் கடைசிக்கதிர். சூரியனின் கடைசிக்கதிரின் பொன்னொளி நிறைந்தது. அந்தபேரெழிலை நோக்கி இட்டுச்செல்ல மரபின்மைந்தனால் முடிந்திருக்கிறது


அபிராமி அந்தாதி முழுமையும் உரையுடன்

மரபின்மைந்தன் இணையதளம் அ.சீனிவாசராகவன் ஆசிரியர்-ஒருகட்டுரை சீனிவாசராகவன் அறிமுகம்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69