ஐரோம் ஷர்மிளாவும் அன்னா ஹசாரேவும்- 2

[தொடர்ச்சி]

காந்தியப்போராட்டமும் கட்டாயப்போராட்டமும்

என் இடதுசாரி நண்பர்கள் காந்தியின் போராட்டங்களை வன்முறைப்போராட்டங்கள் என்பதுண்டு. காரணம், அவற்றில் வன்முறை நேரடியாக இல்லாவிட்டாலும் உள்ளடக்கமாக கருத்தியல்வன்முறை உண்டு என்பார்கள். அதே நண்பர்கள் அதே வாயால் ஐரோம் ஷர்மிளா நடத்துவது காந்தியப் போராட்டம் என்கிறார்கள். ஆச்சரியங்களுக்கு அரசியல் விவாதங்களில் அளவே இல்லை.

ஷர்மிளா நடத்துவது வன்முறை இல்லாத போராட்டம் என்பதனாலேயே காந்திய போராட்டம் அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல காந்தியப் போராட்டம் என்பது ஒரு அரசையோ அமைப்பையோ கட்டாயப்படுத்துவதோ மிரட்டுவதோ அல்ல. அது மக்களாதரவை திரட்டுவதே. பிரச்சாரம் மூலம் மக்களிடம் இன்றியமையாத ஓர் அறக்கோரிக்கையாக நிலைநாட்டப் பட்டுவிட்ட ஒன்றுக்காக போராடும் நேரடி நடவடிக்கை அது. அதற்குப் பின்னால் மக்கள் ஆதரவு திரளும்போதே அது வெற்றியாக ஆகிறது. அப்படி மக்கள் ஆதரவு திரளாதபோது போராட்டத்தை நிறுத்திவிட்டு அப்படி ஆதரவு திரளாமைக்கான காரணத்தை கண்டறிவதே காந்திய வழிமுறை. அந்த காரணங்களை திறந்த மனத்துடன் ஏற்று திருத்திக்கொண்டு முன்னகர்வதே காந்தி செய்தது.

காந்திய வழிமுறைகள் எப்படி இயங்கும் என்பதை அண்ணா ஹசாரேவை வைத்தே பார்க்கலாமே. முதன்மையாக காந்தியப் போராட்டம் என்பது எதிர்மறைப் பண்பு கொண்டது அல்ல, அது நேர்நிலையானது, கட்டியெழுப்பும் தன்மை கொண்டது. நிர்மாணத் திட்டங்களைச் செய்து பார்த்து, நடைமுறையில் அவை என்னென்ன சிக்கல்களுக்கு ஆளாகின்றன என்று அவதானித்து, அந்தச் சிக்கல்களுக்கு எதிராக போராடி அவற்றை களைய முயல்வதே காந்திய வழிமுறை. அதாவது ஒரு சிருஷ்டிகரச் செயலுக்கான தடைகளை களைவதற்காகவே அடிப்படையில் காந்தியப் போராட்டம் தொடங்கப்படுகிறது

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்த காந்தி தன் வாழ்நாள் முழுக்க நிர்மாணத் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார். நடுவே பல வருடங்களை போராட்டங்களை கைவிட்டுவிட்டு நிர்மாணத் திட்டங்களுக்கு மட்டுமாகச் செலவிட்டிருக்கிறார். அதைப்பற்றி ஜவகர்லால் நேரு போன்றவர்களே கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். காந்தியை பொறுத்தவரை உண்மையான பிரச்சினை அதற்கான நடைமுறை தீர்வு இரண்டுமே நிர்மாணச் செயல்பாடுகள் மூலமே கண்டடையப்பட முடியும். மேலும் போராடுவதற்கான அடிப்படையான ஆன்மீக வல்லமையும் அதனூடாகவே கிடைக்கும்.

அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் செய்தது அதையே. குடியிலும் ஊழலிலும் சோம்பலிலும் ஒருங்கிணைவின்மையிலும் மூழ்கி இருந்த ஒரு கிராம சமூகத்தை மீட்டு மறு அமைப்பு செய்ய தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார். அந்த நிர்மாண அனுபவத்தில் இருந்தே அவர் ஊழல் என்ற பிரச்சினையை கண்டு அதற்கு எதிரான தீர்வை நோக்கி வந்தார். 1991ல் ராலேகான் சித்தியில் கிராம நிர்மாண திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட நாற்பது வனத்துறை ஊழியர்களின் ஊழலுக்கு எதிராக போராடியதே தொடக்கம். அதில் அவர் அடைந்த வெற்றியே பின்னர் அடுத்த படி நோக்கி கொண்டு சென்றது.

இரண்டாவதாக காந்திய போராட்டம் என்பது எப்போதுமே அடித்தள மட்டத்தில் சிறிய அளவில் செய்து பார்க்கப்படுவது. காந்தி எல்லா போராட்டங்களையும் சிறிய அளவில் செய்து பார்த்து விளைவுகளை அவதானித்த பின்னர் படிப்படியாகவே முன்னெடுத்திருக்கிறார். சத்யாக்கிரக போராட்ட வடிவம் குஜராத் அவுரி விவசாயிகளின் போராட்டத்தில் மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டது. ஆலய நுழைவுப் போராட்டத்தை முதலில் வைக்கத்தில் மட்டும் செய்து பின் மொத்த கேரளத்திற்கும் கொண்டு சென்று அதன் பின்னரே இந்திய அளவுக்கு விரிவாக்கம் செய்தார்.

இது எதற்காக என்றால் மக்களின் மனநிலையையும் அவர்கள் இவ்விஷயத்தில் ஆற்றும் எதிர்வினையையும் புரிந்து கொள்வதற்காகவே. ஒரு போராட்டத்தை சிறிய அளவில் ஆரம்பிக்கும்போது அதில் பலவகையான மக்கள் கலந்து கொள்ள நேர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் நலன்களும் நோக்கங்களும் உள்ளே வந்து முட்டி மோதுகின்றன. அந்த யதார்த்தத்தில் இருந்துதான் உண்மையில் மக்களுக்கு என்ன தேவை, எப்படி அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், எதுவரை அவர்கள் போராடுவார்கள் என்ற புரிதலை அடையமுடியும்.

அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் மக்களை திரட்டி செய்த அந்த போராட்டத்தையே அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விரிவாக்கம் செய்தார். 1997ல் விசைத்தறி ஊழல்களுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் 1998ல் நாசிக் நில ஊழலுக்கு எதிரான போராட்டம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை அவர் விரிவாக்கம் செய்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஒரு போராட்டத்தில் பெற்ற அனுபவமே இன்னொரு போராட்டமாக ஆகிறது.

காந்தியப்போராட்டம் என்பது சிறிய அலகுகளாக இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை அடைந்த பின்னர் அடுத்த இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு முன்னகர்வது. அடைவது ஒவ்வொன்றும் அடுத்த படிக்கான படியாகவே ஆகிறது. காந்தி அவரது போராட்டங்களில் முழுக்க இதை கடைப்பிடித்திருக்கிறார் என்பதைக் காணலாம். அண்ணா ஹசாரே 2000 த்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு மராட்டிய அரசு பணிந்தது.

அந்த போராட்டத்தின் விளைவாக உருவான தகவலறியும் சட்டத்தை மத்திய அரசை ஏற்கச்செய்யும் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தது. 2005 ல் மத்திய அரசு ஏற்றுக்கொண்ட தகவலறியும் உரிமை சட்டம் [RTI] இன்று ஊழல் ஒழிப்புக்க்கான மக்கள் போராட்டங்களில் எந்த அளவுக்கு இன்றியமையாத ஆயுதமாக உள்ளது என்பது எவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாகவே இன்று லோக்பால் அமைப்புக்கான தேசிய அளவிலான போராட்டத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கிறார்

இன்று லோக்பால் அமைப்புக்கான அவரது போராட்டத்தை குறைகூறும் அதே இடதுசாரிகள்தான் அவரால் அடையப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று லோக்பால் என்ன செய்யும் என்று கேட்பவர்கள் நேற்று தகவலுரிமைச் சட்டம் என்ன செய்யும் என்று கேட்டவர்கள்தான். நாளை லோக்பால் நடைமுறைக்கு வந்து அது ஊழலுக்கு எதிரான ஒரு கருவியாக ஆகும்போது அண்ணா ஹசாரே அடுத்த போராட்டத்தில் இருப்பார். இவர்கள் லோக்பால் சட்டத்தை பயன்படுத்தியபடி அண்ணாவை பகடி செய்து கொண்டிருப்பார்கள்.

காந்தியப் போராட்டத்தின் மிக முக்கியமான கூறு என்பது போராட்டத்திற்கும் சமரசத்திற்குமான சமநிலைப் புள்ளியே. காந்தி என்றுமே மூர்க்கமான மக்கள் போராட்டங்களை உருவாக்கியதில்லை. ஒரு போராட்டத்தின் அளவும் காலமும் பற்றி அவருக்கு ஒரு கணக்கு இருக்கும். மக்களை முடிவில்லா போராட்டங்களில் தள்ளிவிடுவது மடமை என அவர் அறிந்திருந்தார். மக்கள் குறைவான இழப்புகளுடன் அடைபவற்றையே அவர் உண்மையான வெற்றி என கருதினார். மக்களை இழப்புக்காக அறைகூவிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்கு இழப்பை மட்டுமே அளித்துள்ளார்கள் என்பதுதான் வரலாறு

இன்னொன்று, எதை எதிர்த்து போராடுகிறோமோ அது ஒரு அதிகார தரப்பு, எல்லா அதிகாரங்களும் மக்களின் அதிகாரங்களே என்ற புரிதல். அந்த அதிகார தரப்பு மீது கொடுக்கும் அழுத்தம் மூலம் அவர்களை ஒரு பேச்சுவார்த்தைக்கு ஒரு சமரசத்துக்கு கொண்டுவரமுடியும் அவ்வளவுதான். அவர்களை முற்றாக தோற்கடித்து தரையில் போட்டு ஏறி அமர்ந்து நம் வெற்றியை கொண்டாட முடியாது. அவர்கள் நம் உரிமையை ஒத்துக் கொள்வதற்காக தங்கள் அதிகாரத்தை கொஞ்சம் விட்டுக்கொடுக்க நேரும்போது அவர்களிடம் நம் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்க நாமும் முன்வர வேண்டும்.

காந்தியின் போராட்டத்தை அண்டோனியோ கிராம்ஷியின் மார்க்ஸிய கலைச் சொல்லால் சொல்லப்போனால் அது நிலை யுத்தம். [Static war] சமரசத்துக்காகவே போர். போருக்காகவே சமரசம். எல்லாமுறையும் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக் கொடுத்தே காந்தி சமரசம் செய்திருக்கிறார். ஆனால் தன் கோரிக்கைகளில் அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்ததனால் தன்னை மேலும் தயார் செய்துகொண்டு மீண்டும் போராட முன்வருவது அவரது வழக்கம்.

மீண்டும் வைக்கம் உதாரணம். காந்தி கோரியது அனைத்து சாதியினருக்கும் கோயிலிலும் கோயில் சார்ந்த தெருக்களிலும் நுழையும் உரிமை. ஆனால் முதல் ஒப்பந்தத்தில் கிழக்கு ராஜகோபுர வாசலில் மட்டும் பிறசாதியினர் நுழையக்கூடாது, அது பிராமணர்களுக்கு மட்டும் உள்ள உரிமையாக நீடிக்க வேண்டும் என்ற கோயில் நிர்வாகத்தின் தரப்பை காந்தி ஒத்துக்கொண்டார். வைக்கம் ஆலயச் சாலைகளிலும் ஆலயத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடிந்தது. ஆனால் மறுவருடமே எல்லா வாசல்களிலும் நுழைவதற்காக மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது.

காந்தி மக்கள் ஆதரவு இல்லாத போது, மக்கள் தன் போராட்டத்தை பிழையாக புரிந்துகொண்ட போது தன் போராட்டங்களை உடனடியாக நிறுத்திக்கொண்டு மறுபரிசீலனைக்கு ஆளாக்கியிருக்கிறார். அப்படி காந்தியப் போராட்டங்கள் கைவிடப்பட்டபோது அவரது சீடர்கள் மனக்கசப்பை அடைந்திருக்கிறார்கள். ஆனால் போராட்டத்தை நடத்துவது மக்கள், அவர்கள் பங்கேற்க வேண்டும், அவர்கள் அதை முன்னெடுக்க வேண்டும் என காந்தி எப்போதும் கவனம் கொண்டிருந்தார்.

காந்தியப்போராட்டத்தின் அடுத்த தளம் எங்கே நிர்ப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பது. ஒரு கருத்து ஒரு சமூகத்தில் ஒருபகுதியினரால் மட்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கையில் அத்தனை மக்களுக்கும் அதை கட்டாயமாக ஆக்கும்பொருட்டு ஒரு போராட்டத்தை காந்தி ஒருபோதும் ஆரம்பித்ததில்லை. அவரை பொறுத்தவரை பசுவதையும் மதுவிலக்கும் இரு கண்களைப்போல. ஆனால் அதற்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை.

இந்தியாவில் மதுவை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என்று கோரி ஒருவர் உண்ணாவிரதமிருந்து செத்தால் அது காந்திய போராட்டமா என்ன? அண்ணா ஹசாரே அப்படி ஒரு போராட்டத்தை ஆரம்பித்தால் அதை காந்திய போராட்டம் என்று சொல்லமுடியுமா? அவர் சாவார், அவ்வளவுதான். இன்று இங்கே பெரும்பாலானவர்கள் குடிப்பவர்கள். அவர்களிடம் குடிக்காதீர்கள் என்று கோரும், அவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்க முயலும் ஒரு போராட்டத்தை மட்டுமே காந்தியம் முன்வைக்க முடியும்.

ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கும் காந்திய வழிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஓரளவு சிந்திக்கும் எவரும் எளிதில் உணர முடியும். உலகத்தின் பல நாடுகளில் வன்முறைக்குழுக்கள் தங்கள் தரப்பு மக்களை கோபமும் வெறியும் கொள்ளச்செய்ய உண்ணாவிரத வழிகளை கடைப்பிடித்துள்ளன. அவற்றை தற்கொலைப் போராட்டம் என்றுதான் சொல்லவேண்டும். காந்தியப் போராட்டம் என்பது மக்களை திரட்டுவதும் மக்களிடம் ஒருங்கிணைந்த தரப்பை உருவாக்கி அதை ஒரு அதிகார சக்தியாக ஆக்குவதும் மட்டுமே.

ஐரோம் ஷர்மிளாவுடன் மிகச் சரியாக ஒப்பிடப்படவேண்டிய போராட்டம் என்பது இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்தை பிரிப்பதற்காக ஐரிஷ் விடுதலை முன்னணி அரை நூற்றாண்டுக்காலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்த்திய போர்தான். ஐரிஷ் ரிப்பப்ளிகன் ஆர்மி [ஐஆர்ஏ] உலகின் மிகத்தீவிரமான விடுதலை ராணுவங்களில் ஒன்று. ஈவிரக்கமில்லாத கொலைகளையும் குண்டு வெடிப்புகளையும் அது எழுபதுகள் வரைகூட செய்திருக்கிறது. 1800 கள் முதலே அயர்லாந்தும் இங்கிலாந்தும் போரிட்டு வந்தாலும் 1919-ல்தான் சரியான அயர்லாந்து விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது

பற்பல தலைவர்கள் இறந்தனர். பலமுனைகளில் உள்நாட்டுப்போர் நிகழ்ந்தது. பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இரண்டு வருட உள்நாட்டுப்போர் பிரிட்டிஷார் வென்றதுடன் நின்றது. ஆனால் மேலும் ஐம்பது வருடம் ஐஆர்ஏ தலைமறைவு இயக்கமாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியது. அது செய்த தியாகங்கள் பல. அவற்றில் முக்கியமானது இருபதுகளிலும் எண்பாதுகளிலும் ஐஆர்ஏ உறுப்பினர்கள் நடத்திய உக்கிரமான உண்ணாவிரதப்போராட்டம். உண்ணாவிரதமிருந்த இளைஞர்கள் சிறைகளிலும் அதை தொடர்ந்து நடத்தி வரிசையாகச் செத்துக்கொண்டே இருந்தார்கள். அதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தார்கள். உலகத்தின் கவனத்தை திருப்பினார்கள்.

பசி தாளாமல் உண்ணாவிரதத்தை கைவிட்ட ஐஆர்ஏ இளைஞனை அவன் அன்னை சிறையில் சந்தித்து கொள்கையை விளக்கி உண்ணாவிரதத்தை கைவிடாதிருக்கும்படி செய்து அவன் உயிர்துறந்த கதைகள் இன்றும் பேசப்படுகின்றன. ஆனால் அந்த போராட்டம் என்ன ஆயிற்று? அயர்லாந்து இன்றும் கிரேட் பிரிட்டனின் ஒரு பகுதியே. 1922ல் நடந்த உள்நாட்டுப் போராட்டத்தின் விளைவாக கூட்டமைப்புக்குள் ஒரு தனி அரசியலமைப்பு அதற்கு கிடைத்தது அவ்வளவுதான். ஐஆர்ஏ போராட்டம் இன்று வெறும் நினைவுகளாக எஞ்சுகிறது. [சிலகுழுக்கள் இப்போதும் உள்ளன என்கிறார்கள்]

காந்தியின் சத்தியாக்கிரகத்தை கண்டு ‘நல்லவர்களான’ பிரிட்டிஷார் அஞ்சினார்கள் என்பவர்கள் ஐஆர்ஏ போராட்டங்களை பிரிட்டிஷார் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். பிரிட்டிஷார் அதை பெரிதாக பொருட்படுத்தவே இல்லை. அந்த உக்கிரமான உண்ணாவிரதப் போராட்டம் மூலம் உருவான உணர்ச்சியலைகளை அவர்கள் மிக எளிதாக வென்றார்கள். அதாவது சும்மா இருந்தார்கள். கொஞ்ச நாளில் அவை அப்படியே மறக்கப்பட்டன. அந்த இளைஞர்களின் தியாகம் வீணாகியது

அரசுகள் உணர்ச்சிகளுக்கு அஞ்சுவதில்லை. மக்கள் சக்திக்கு மட்டுமே அவை அஞ்சும். ஐஆர்ஏ ஏற்கனவே பெருவாரியான மக்களாதரவை இழந்துவிட்டிருந்தது. மக்கள் நெடுங்காலப் போரினால் சலித்து விட்டிருந்தார்கள். உலகப்போருக்கு பிந்தைய பொருளியல் சூழலில் தங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள். உலகம் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. மிக இயல்பாக மக்கள் அயர்லாந்து பிரிவினை இயக்கங்களை மறந்தார்கள்.

உண்மையில் ஐம்பதுகள் வரை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் உபதேசிய இனங்களின் போராட்டங்கள் பெரிய பிரச்சினையாக இருந்தன. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் என எல்லா நாடுகளும் இதைப்போன்ற பிரச்சினைகளை சந்தித்தன. எல்லா இடங்களிலும் நடந்தது ஒன்றே. பொருளியல் மாற்றமும் நவீன வாழ்க்கைமுறையும் வந்தது. இந்த பிரிவினை இயக்கங்களின் கொள்கை அடிப்படைகளான இன அடையாளங்களும் பிராந்திய அடையாளங்களும் பொருளிழந்தன. அந்த உள்நாட்டுப் போர்களின் முடிவு ஐரோப்பிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தியது. இன்றைய இத்தாலியில் சார்டீனிய தேசிய இயக்கமோ பிரான்ஸில் மார்சேல்ஸ் தேசிய இயக்கமோ நினைவில் இருக்கும் என்று படவில்லை

ஆனால் அவர்கள்தான் கீழைநாடுகளில் எல்லாவிதமான உபதேசிய போராட்டங்களையும் தூண்டி விடுகிறார்கள். அவற்றுக்கு பின்னணி ஆதரவளிக்கிறார்கள். இந்தியாவில் பஞ்சாப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, நைஜீரியாவில் பையாஃப்ரா பிரச்சினையாக இருந்தாலும் சரி, அவற்றின் முக்கியமான தூண்டுதலும் ஆதரவும் மேலைநாடுகளில் இருந்தே வருகின்றன. இந்த போராட்டங்கள் கீழைநாடுகளை நிரந்தர பொருளியல் சிக்கலில் வைத்திருக்கும் என்றும், நிரந்தரமாக தங்களிடம் ஆயுதம் வாங்கச் செய்யும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

ஐஆர்ஏ உறுப்பினர்களின் உண்ணாவிரதத்தை, தற்கொலையை, காந்தியப் போராட்டம் என்று சொல்லலாம் என்றால் மட்டுமே ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்தையும் அப்படிச் சொல்லமுடியும். அவரது போராட்டத்தின் பின்னணியில் உள்ளவை பிரிவினைவாத இயக்கங்கள். இனக்குழு ராணுவங்களின் வன்முறை நோக்கங்கள். ஐஆர்ஏ ஊழியர்களின் தியாகம் மகத்தானதே. ஆனால் அதன் நோக்கமும் வழிமுறைகளும் மக்களின் தேவைகளுடனும் ஆசைகளுடனும் இணைந்தவை அல்ல. மக்களை திரட்டும் பொருட்டு அவை நடத்தப்படவிலலி. ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும் அப்படித்தான்.

ஐரோம் ஷர்மிளா அவருக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு போராடுவது நியாயம். அந்த ராணுவ வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்க கோரலாம். அந்நிலையில் அந்த அடிப்படைக் கோரிக்கை மேல் அனுதாபமுள்ள அனைவருமே இனக்குழு வேறுபாடில்லாமல், பிராந்திய வேறுபாடில்லாமல் அவர் கீழே திரள முடியும். ஒரு காந்திய போராட்டம் உண்மையில் அனைத்து மக்களையும் நோக்கி செய்யப்படும் ஒரு தார்மீக விண்ணப்பம். தன்னுடைய போராட்டத்தை பிரிட்டிஷ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று காந்தி கோரினார். அவரது கதரியக்கத்தால் வேலையிழந்த லண்டனின் துணி ஆலை தொழிலாளர்கள் கூட அவரை ஆதரித்தனர். அந்த ஆதரவு இந்திய விடுதலையின் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று. பிரிட்டனில் வந்த தொழிலாளர் கட்சியே இந்திய விடுதலையை முன்னெடுத்தது.

அத்தகைய மக்கள் சக்தியை அரசுகள் அஞ்சும். அந்த போராட்டம் வெற்றியை அடையும். அதுதான் காந்தியப் போராட்டம். இங்கே ஏன் ஷர்மிளாவை அரசு பொருட்படுத்தவே இல்லை என்றால் அது ஒரு மக்கள் சக்தியாக ஆகவில்லை என்பதனால்தான்.

இன்று தன் போராட்டம் ஏன் அப்படி ஆகவில்லை என்று பார்ப்பதே எந்த காந்தியவாதியும் இயல்பாகச் செய்யக் கூடியதாக இருக்கும். மக்களை கட்டாயப்படுத்துவதோ அவர்களை அவமதிப்பதோ அல்ல காந்திய வழி. மக்களின் நோக்கும் சூழலின் தேவையும் வேறாக உள்ளன. ஒருதனிநபர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று ஒரு சமூகத்தின் விருப்பத்தை மீறி அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கவேண்டும் என்பதோ, ஒரு அமைப்பின் கொள்கையை அல்லது நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோருவதோ காந்திய வழியே அல்ல

ஐரோம் ஷர்மிளா இந்திய அரசின் ராணுவத்தின் அராஜகங்களுக்கு எதிராக போராடுவது நியாயமானதே. ஆனால் அவர் காந்திய வழிகளை பின்தொடர்கிறார் என்றால் மக்களிடமிருந்து அவர்களுக்கு தேவையான தீர்வை கண்டடைய முயல்வேண்டும். அந்த தீர்வை நோக்கி மக்களைக் கொண்டு செல்லக்கூடியதாக அவரது போராட்டம் இருக்கவேண்டும்

ஐரோம் ஷர்மிளா என்ன செய்யலாம்?

நான் இருபதாண்டுக் காலமாக வடகிழக்குப் பிரச்சினையை கூர்ந்து கவனித்து வருகிறேன். அப்பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். இப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லும் அளவுக்கெல்லாம் என்னை அறிவுஜீவியாக நினைத்துக் கொள்ளவில்லை. வடகிழக்கின் பிரச்சினையின் முதல் காரணி வரலாற்று ரீதியானது. அதாவது பழங்குடி பண்பாட்டுச்சிக்கல். அதில் இருந்து மீள்வது காலப் போக்கில் அந்த மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் சிந்தனையும் பழங்குடி இனக்குழு அடையாளங்களில் இருந்து மீண்டு அவர்கள் நவீனத்துவ சமூக அமைப்புக்குள் வருவதைச் சார்ந்தே உள்ளது.

நவீன நுகர்வுப் பண்பாடும் ஊழல் அரசியலும் கேளிக்கை ஊடகங்களும் வந்தாலே பெரும்பாலும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மணிப்புரி மொழியின் கவிஞரான நண்பர் ஒருமுறை சொன்னார். என்னுள் உள்ள எழுத்தாளனை அதிர்ச்சி அடைய வைத்த கூற்று அது. ஆனால் அவர் மார்க்ஸியர். அவர் சொன்னார், அந்த முதலாளித்துவ சீரழிவுகளை பிறகு சரிசெய்யலாம், ஆனால் அந்த முதலாளித்துவம் எளிதாகப் பரவும். அதன் விளைவாக அது பழங்குடி மனநிலைகளை இல்லாமலாக்கி பகைமைகளையும் பூசல்களையும் தடுக்கும். நடைமுறைவாத உண்மையாகக்கூட தோன்றுகிறது.

இன -பிராந்திய அடிப்படையிலான தேசியப் பிரிவினைவாதம் என்பது இன்று சர்வ தேச அரசியலால் உருவாக்கப்படுவது மட்டுமே. அது எதற்கும் தீர்வு அல்ல. அது இன்னும் பெரிய பிரச்சினைகளையே உருவாக்கும். தங்கள் உபதேசிய பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்துக் கொண்டு அமைதியான பொருளியல் வளர்ச்சியை அடைய ஐரோப்ப்பிய நாடுகளால் முடியும் என்றால் நம்மாலும் அது சாத்தியமாக வேண்டும்.

நம் முன் இரு அழிகள் உள்ளன. பலநூற்றாண்டு வரலாறுள்ள உபதேசியப் பிரச்சினைகளை வெற்றிகரமான அதிகாரப் பகிர்வு-பொருளியல் சமரசம் மூலம் தீர்த்துக்கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துள்ள ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும். இனக்குழுப் பிரச்சினைகளை உபதேசிய பிரச்சினைகளாக வளர்த்தெடுத்து ஆயுதக்கலவரமாக ஆக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக போரிட்டு கூட்டம் கூட்டமாக பட்டினியால் செத்து அழிந்துகொண்டிருக்கும் ஆப்ரிக்க நாடுகள்.

நம் இடதுசாரிகள் இங்கே ஆப்ரிக்க வழியை நமக்கு பரிந்துரைக்கிறார்கள். அது அல்லாமல் வழியே இல்லை என வாதிடுகிறார்கள். இவர்களுக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவனங்களும் பல்கலைகழகங்களும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கின்றன. வெறுப்புகளும் கசப்புகளும் வளர்க்கப்படுகின்றன. ஐரோம் ஷர்மிளா அதற்குரிய குறியீடாக ஆக்கப்பட்டுள்ளார்

இந்தியா ஆப்ரிக்காவை விட சிக்கலான நாடு. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் கலந்து கலந்து வாழ்ந்த பண்பாடுள்ளது. இங்கே பிரிவினையின் சிறிய துளி நிகழ்ந்தால்கூட அகதிப்பிரவாகம் உருவாகும். குருதி ஆறு ஓடும். இந்த உண்மை அரைநூற்றாண்டுக்கு முன்னால்கூட கண்ணெதிரே யதார்த்தமாக நடந்துள்ளது. ஒவ்வொரு கலவரமும் நமக்கு அதையே காட்டுகிறது.

ஆக மணிப்பூருக்கு தேவை பிரிவினைப் போக்கை ஊக்கப்படுத்தக்கூடிய, அந்த கசப்புகளை வளர்க்கக்கூடிய, இனக்குழு அவநம்பிக்கைகளை மேலெடுக்கக்கூடிய போக்குகள் அல்ல. ஒரு அமைதியான சிவில் சமூகத்தை உருவாக்குவதற்கான சமரச முயற்சிகள். இன்று மணிப்பூரில் இருந்து கிளம்பி இந்தியாவெங்கும் வேலைக்கு வந்துள்ள பல்லாயிரம் இளைஞர்களின் குரல் அதுவே. ஆனால் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் உருவாக்கும் விளைவு அது அல்ல. அவரது போராட்டம் அமைதிப்போராட்டமாக இருக்கலாம், அதன் நிகர விளைவு அமைதியின்மையையும் அவநம்பிக்கையையும் வன்முறையையும் உருவாக்கக்கூடியதாகவே உள்ளது. ஆகவே அது அம்மக்களாலேயே அவநம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது

அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக ஆகி பிரிவினைவாதம் பேசுபவர்களை மக்கள் விரோதிகளாகவே நான் பார்க்கிறேன். சென்றகாலங்களில் இவ்வகையான அயோக்கிய அறிவுஜீவிகள் பல நாடுகளை அழித்திருக்கிறார்கள். தங்கல் பிரிவினைத் திரிபுவாதம் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் போரிட்டு செத்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதற்கும் ஒரு எதிரியை காரணமாக காட்டி தங்கள் பழியில் இருந்து தப்பி விடுவார்கள். அவர்களால் பேசப்படுவதே ஐரோம் ஷர்மிளா மேல் ஆழமான ஐயத்தை உருவாக்குகிறது.

வடகிழக்கின் இனக்குழு ராணுவங்களின் பிரச்சினை எளிதில் தீரக்கூடியதல்ல. அவற்றுக்குப் பின்னால் உலகின் மிகமிக கொடூரமான இரு ராணுவ சர்வாதிகார நாடுகளான மியான்மாரும் சீனாவும் உள்ளன. மேலும் சமீப காலமாக இனக்குழுக்கள் நடுவே மதப்பிரச்ச்னையும் உள்ளதாக சொல்லப்படுகிறது. குக்கிகள், அங்கமிகளில் உள்ள இஸ்லாமியர் தங்களை தனியாகப் பிரித்துக்கொண்டு பிறரிடம் போரிடுகிறார்கள். அல்குவைதா போன்ற அமைப்புகள் அவற்றில் ஊடுருவியிருக்கின்றன.

இந்த பிரச்சினையை ராணுவ ரீதியாக மட்டுமே சந்திக்கமுடியும். ராணுவம் மூலம் சட்டத்திலும் குடிமை ஆட்சியிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு பாதுகாப்பளித்தாக வேண்டியது அரசின் கடமை. அதே சமயம் பாதுகாப்பின் முழு பொறுப்புடன் ராணுவம் அங்கே இருக்கும் வரை ராணுவத்தின் அடக்குமுறை சாமானிய மக்களின் மேல் இருக்கத்தான் செய்யும். தொடர்ந்த மக்கள் கண்காணிப்பு மற்றும் போராட்டம் மூலம் ராணுவத்தை அதன் எல்லைக்குள் நிறுத்தலாம். மக்கள் இனக்குழு ராணுவங்களை புறக்கணிக்கும் காலம் வருமென்றால் எதிர்ராணுவ நடவடிக்கைகளும் குறையலாம். அந்தப்போக்கு ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்

இன்று அங்கே தேவையாக இருப்பது ஒரு நவீன குடிமைச் சமூகத்தை அங்கே உருவாக்குவதற்கான சீரான, தொடர்ச்சியான, நெடுங்கால அளவிலான, ஜனநாயக போராட்டமாகும். அது பழங்குடி ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் ஒரே சமயம் எதிரானதாக இருக்கவேண்டும். மக்களின் வாழ்வுரிமையை முன்வைப்பதாகவும் அவர்களிடையே பேதங்களை களைந்து உரையாடலை சாத்தியமாக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

அதற்கு மக்களை பிரச்சாரம் மூலம் திரட்டக்கூடிய காந்திய போராட்டங்கள் தேவை. மக்களின் ஆசைகளையும் அச்சங்களையும் பிரதிபலிக்கக்கூடிய போராட்டங்கள். பல்வேறு நோக்குள்ள, மாறுபட்ட நலன்களை நாடும் மக்களுக்கு ஒரேசமயம் பொருத்தமாக அமையக்கூடிய தீர்வுகளை முன்வைக்கும் போராட்டங்கள். அத்தகைய போராட்டங்களை சிறிய அளவில் ஆரம்பித்து, அதிகமான மக்களை பங்கேற்கச் செய்து, பிழைகளை திருத்திக்கொண்டு, தேவையான சமரசங்களும் பின்வாங்கல்களும் செய்துகொண்டு, மெல்ல மெல்லத்தான் செய்ய முடியும். அவையே உண்மையான பலன்களை அளிக்கும்

ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெறும் மூர்க்கமான தியாகம் மட்டுமாகவே எஞ்சும்- ஐரீஷ் போராளிகளின் தற்கொலைகள் போல. வரலாற்றில் அது இரக்கமே இல்லாமல் மறக்கவும் படும். ஆனால் ஒரு காந்திய போராட்டத்திற்கு இல்லாத ஒருவகை நேரடியான தீவிரம் இதற்கு உள்ளது. வெறும் சாகச அரசியலை நாடும் இளைஞர்களை கவரும். வாய்ச்சால இதழாளர்களுக்கு ஆவேசமாக எழுத உதவும். அவ்வளவுதான்

ஐரோம் ஷர்மிளாவின் மகத்தான தியாகத்தை மீண்டும் வணங்குகிறேன். ஒரு பொதுநன்மைக்க்காக தன்னை முன்வைக்கும் எவரும் அறத்தின் மானுட வடிவங்களே. அந்த ஆவேசத்துடன் மக்களையும் வரலாற்றையும் புரிந்துகொள்ளும் அரசியல் விவேகமும் கலக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்

வடகிழக்கு பிரியவேண்டுமா?

தேசிய சுய நிர்ணயம்

மாவோயிச வன்முறை

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1

சே குவேராவும் காந்தியும்

காந்தியின் வழி

ஒரு வரலாற்று நாயகன்

வெறுப்புடன் உரையாடுதல்

சேகுவேராவும் காந்தியும்

ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும்

முந்தைய கட்டுரைதாய்மொழி , செம்மொழி
அடுத்த கட்டுரைஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1