நேற்றைய புதுவெள்ளம்

ஆரோக்கிய நிகேதனம் தமிழ்விக்கி

கவி தமிழ் விக்கி

விபூதிபூஷண் பந்தியோபாத்யாய தமிழ் விக்கி

நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது.

தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் பெருவெள்ளமாக பெருகிவந்தது கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி இருவரும் நேரடியாக வங்கக் கதைகளின் செல்வாக்குக்கு ஆளாகியிருந்தனர்.

சரத் சந்திரர்

அதற்கடுத்த காலகட்டத்தில் வங்க வெகுஜனவாசிப்பு நாவல்களும் தமிழில் பெரும்வாசக ஆதரவைப்பெற்றன. குறிப்பாக சரத் சந்திரர் ஒருகாலகட்டத்தில் தமிழ் எழுத்தாளராகவே அறியப்பட்டவர். அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன், ஆர்.ஷண்முகசுந்தரம் மொழியாக்கத்தில் வெளிவந்த ஸ்ரீகாந்தன், தேவதாஸ் போன்ற நாவல்கள் தமிழில் விற்பனையில் சாதனை படைத்தவை. அ.கி.கோபாலன் அதற்கென ஜோதி நிலையம் என ஒரு பதிப்பகமே வைத்திருந்தார்.

ஆனால் என்ன காரணத்தாலோ அவருக்கு நிகரான வெகுஜனஎழுத்தாளரான பிமல் மித்ரா தமிழில் அறிமுகமாகவில்லை. அவர் இடதுசாரி எழுத்தாளர் என்பது காரணமாக இருக்கலாம். அக்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு இடதுசாரி அரசியலில் ஆர்வமிருக்கவில்லை.

ரவீந்திரநாத் தாகூர் அடைந்த பெரும் புகழும் வங்க இலக்கியம் இந்தியாவெங்கும் சென்று சேர ஒருகாரணம். தாகூர் 30களில் நாகர்கோயிலுக்கு வந்து ஸ்காட் கிறித்தவக்கல்லூரியில் பேசியபோது இரண்டாயிரம்பேர் வந்திருந்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாகூரின் கோரா முதலிய நாவல்கள் காபூலிவாலா முதலிய கதைகள் அக்காலத்தில் இங்கே பெரிதும் விரும்பப்பட்டன.

அக்காலகட்டத்தில் கலைமகள் பதிப்பகம் தொடர்ந்து வங்கநாவல்களை நல்லமொழியாக்கத்தில் வெளியிட்டது. தாராசஙக்ர் பானர்ஜி, மாணிக்பந்த்யோபாத்யாய, விபூதிபூஷன் பானர்ஜி என்னும் முப்பெரும் பானர்ஜிக்களின் ஆக்கங்கள் தமிழில் பெரும் வாசிப்பைப்பெற்றன. த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி இருவரும் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள்.

வங்கப்பேரிலக்கியங்களான பதேர்பாஞ்சாலி [விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய] வனவாசி [மாணிக் பந்த்யோபாத்யாய] பொம்மலாட்டம் [மாணிக் பந்த்யோபாத்யாய] கணதேவதை [தாராசங்கர் பானர்ஜி] கவி, [தாராசங்கர் பானர்ஜி] ஆரோக்கிய நிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி] ஆகியவை தமிழில் வெளிவந்து பேரிலக்கியமென்றால் என்ன என்று தமிழ் வாசகர்களுக்குக் காட்டின.

விபூதி பூஷன் பானர்ஜி
தாராசங்கர் பானர்ஜி
மாணிக் பந்த்யோபாத்யாய

அடுத்தகாலகட்டத்தில் மேலும் சில முக்கியமான ஆசிரியர்கள் தமிழுக்கு வந்தனர். முக்கியமாக அதீன் பந்த்யோபாத்யாய, [நீலகண்ட பறவையைத்தேடி] ஆஷாபூர்ணாதேவி [முதல்சபதம்] போன்றவர்களை குறிப்பாகச் சொல்லலாம். மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி தன் பெருமுயற்சியால் தொடர்ந்து வங்கப்படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவந்தார்.

அதற்கடுத்த அலை என ஒன்று வரவில்லை. மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டவற்றில் ஒருசில சுவாரசியமான வங்கப்படைப்புகள் உண்டே ஒழிய முதன்மையான பேரிலக்கியங்கள் ஒன்றுமில்லை. வங்க இலக்கியத்துக்கும் வங்க சினிமாவுக்கும் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இந்தி என்னும் பேரலையில் வங்க சினிமா முழுமையாக அழிந்துவிட்டது. வங்க அறிவியக்கம் மொத்தமாகவே ஆங்கிலத்துக்கு மாறிவிட்டது. சென்ற இருபதாண்டுகளில் பேசப்பட்ட வங்க எழுத்தாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்.

ஆஷாபூர்ணா தேவி
அதீன் பந்த்யோபாத்யாய்

வங்க இலக்கிய அலை உருவாக்கிய நூற்றுக்கணக்கான நூல்கள் தமிழில் உள்ளன. ஏராளமான நூல்கள் அ.கி.கோபாலனின் ஜோதி நிலையம், வை.கோவிந்தனின் சக்திபதிப்பகம், கலைமகள் காரியாலயம், அல்லயன்ஸ் பதிப்பகம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டவை. பெரும்பாலான நூல்கள் அறுபதுகளுக்குப்பின் மறுபதிப்பு வரவில்லை. சமீபகாலமாக உருவான புத்தகக் கண்காட்சி அலையில் சிலபதிப்பகங்கள் நூல்களைப்பற்றி எந்தக்குறிப்பும் இல்லாமல் அவற்றை மறுபதிப்பு செய்துள்ளன. சிலநூல்களில் மொழிபெயர்ப்பாளரின் பெயர்கூட காணப்படுவதில்லை. வங்க இலக்கியம் பற்றிய அறிமுகம் இல்லாத நிலையில் சரத்சந்திரரின் நூல்கள் மட்டுமே தொடர்ந்து விற்கின்றன.

த.நா.குமாரசாமி
சு கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பாளர்
சு கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பாளர்

வங்க அலையின் நூல்களில் முக்கியமான நூல்களை மறுபிரசுரம் செய்யவேண்டிய அவசியம் இன்றுள்ளது. வெறுமனே வரலாற்றுப்பதிவாக மட்டும் அல்ல. அவற்றில் ஏராளமான படைப்புகள் இன்றும் முக்கியமானவை, தவிர்க்கமுடியாதவை. அம்மொழியாக்கங்கள் தமிழின் சொத்து எனச் சொல்லத்தக்கவை.

என் நூலகத்தை துழாவிக்கொண்டிருந்தபோது சிக்கிய ஆற்றுவெள்ளம் அதில் ஒன்று. குரு பப்ளிகேஷன்ஸ் மே 1966-இல் வெளியிட்ட இந்நூல் மறுபதிப்பு வரவில்லை. த.நா.சேனாபதி, எம்.ஏ. மொழியாக்கம் செய்திருக்கிறார்.

என்னிடமிருக்கும் இந்நூலின் சிறப்பு என்னவென்றால் இது இருமுறை அட்டைபோடப்பட்டிருக்கிறது. இதில் உள்ள சிறுகதைகள் எதற்குமே ஆசிரியர் பெயர்கள் இல்லை. ஆற்றுவெள்ளம், தலைநகரம், அந்தச்சிலை, அஞ்சனக்கோட்டை, புகையிருளிலே, சுறாமீன், புதிய சிஷ்யன் ஆகிய நீள்கதைகள் இத்தொகுதியில் இருக்கின்றன.

இக்கதைகளை வைத்துப்பார்த்தால் இவை எல்லாமே 1947-க்கு முந்தையவை. கிழக்குவங்கம் வங்காளத்தின் பகுதியாக இருந்தபோது எழுதப்பட்டவை. ஆற்றுவெள்ளம் கதை இன்று வங்கதேசத்தில் உள்ள பத்மாவின் கரையில் நிகழ்கிறது. அசாதாரணமான ஒரு மன எழுச்சியை அளிக்கும் மகத்தான கதை இது. பத்மாவில் வெள்ளம் வந்து ஒரு கிராமம் அழிகிறது. ஜமீன்தார் மேடான பகுதியில் புதியஊர் ஒன்றை அமைக்கிறார். அங்கே மின்சாரவசதி செய்கிறார். காலம் மாறத்தொடங்குகிறது.

பலநிகழ்வுகள் வழியாக இந்திய தேசிய எழுச்சியின் சித்திரம் விரிகிறது. ஜமீன்தாரின் மைந்தன் ரஜதன் காந்தியைப் பின்பற்றி சுதந்திரப்போரில் இறங்குகிறான். மொத்த ஊரே கொந்தளிக்கிறது. மீண்டும் வெள்ளம்பெருகும் பத்மா. ராஜா வெள்ளம்பெருகும் பத்மாவை நினைத்துக்கொள்கிறான் ‘உடை உடை தளைகளை எல்லாம் உடை’ என அது கூவுவதை அறிகிறான்.

பத்மாவின் வெள்ளத்தை அந்தக்காலகட்டத்தின் மாற்றத்தையும் உணர்வெழுச்சியையும் குறிப்பதற்காக பயன்படுத்தியிருக்கும் இக்கதை மிக அழகானது. குறியீட்டை அழுத்தாமல் முழுக்கமுழுக்க வாசக ஊகத்துக்கே விட்டிருக்கும் அழகு வியக்கச்செய்கிறது. அன்றைய வங்கத்தின் மனவேகத்தைச் சொல்லக்கூடிய அழகிய கதைகளில் ஒன்று இது. இதை நளினிகந்த பட்டசாலி எழுதியிருக்கலாமென நான் ஊகிக்கிறேன். ஆரம்பகால வங்க எழுத்தாளரான அவரது இதே பாணியிலான இன்னொரு கதையை  நான் வாசித்திருக்கிறேன்.

நளினிகந்த பட்டசாலி

இத்தொகுதியின் எல்லா கதைகளுக்குமே வெவ்வேறு முக்கியத்துவம் உண்டு. ஆணும்பெண்ணும் சரிநிகராகப் பழகத் தொடங்கிய காலகட்டத்தின் இனிய மோதல்களையும் கனவுகளையும் சொல்லும் ‘தலைநகரம்’ ஒரு அழகிய கதை. இந்திய தொல்லியல் ஆய்வுகள் தொடங்கிய காலகட்டத்தில் அவை உருவாக்கிய கனவுகளை புனைவாக்கிய ‘அந்தச்சிலை’யும் ஓர் அழகிய கதை.

இந்தத் தொகுதியை எவரேனும் கண்டுபிடித்து மறுபதிப்பு செய்தால் நல்லது. சேனாபதியின் நூல்கள் தேச உடைமையாக்கப்பட்டவை. ஆகவே பதிப்புரிமைச்சிக்கல்கள் இராது. வாசகர்களுக்கு அன்றைய வங்க இலக்கியத்தையும், அதையொட்டி உருவான தமிழ் நவீன இலக்கியப் பெருக்கையும் புரிந்துகொள்ள அது உதவும். நாம் எப்படி எழுதத்தொடங்கினோம் என நாம் உணரமுடியும்.

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Sep 7, 2014 


திருமணமாகாதவள் -சரத்சந்திரர்


தேவதாஸ்-சரத்சந்திரர்


சரத்சந்திரர் கடிதம்

ஆஷாபூர்ணாதேவி முதல்சபதம்


த.நா.குமாரசாமி

த.நா.சேனாபதி

 

முந்தைய கட்டுரைபிரபஞ்சன்
அடுத்த கட்டுரைமைத்ரி விமர்சன அரங்கு- உரைகள்