ஓர் எளிய கூழாங்கல்

பதினான்குவருடம் காட்டில் உழன்றாலும் அவன் சக்ரவர்த்தித் திருமகன். இடையர்குடிலில் வளர்ந்தாலும் அவன் யாதவர்களின் மன்னன். அரசு துறந்து சென்றாலும் அவன் சாக்கிய குலத்தரசு. ஆம், மகதி கோசாலனும் வர்த்தமான மகாவீரனும் கூட பிறப்பால் மன்னர்களே. பெரும் ஜனக்ககூட்டங்களை ஆள்வதற்காகவே அவதரித்தவர்கள். கோடிக்கணக்கான மனிதர்கள் நடுவே கூழாங்கல்வெளியில் வைரமென ஒளிவிடுபவர்கள்…

 காஜதான் தேவாலயம்,கோவா

ஆனால் தச்சன்மகன் எளியவன். அவனை நெரிசலான சாலையில் ஒருவருமே அடையாளம் காணமுடியாமல் போகலாம். அவன் நம் வீட்டுவாசலில் வந்து நின்றானென்றால் நாம் ஒருவேளை அதிருப்தியுடன் முகம் சுளிக்கக்கூடும். மாட்டுத்தொழுவில் பிறந்த அவன் ஒருவேளையேனும் நல்ல உணவு உண்டிருக்க வாய்ப்பில்லை. புழுதியில்லாத உடை ஒன்றை அவன் அணிந்திருக்க மாட்டான். பாம்புகளுக்கு வளைகளிருந்தன பறவைகளுக்கு வானமிருந்தது, மனிதகுமாரன் தலைசாய்க்க இடமிருந்ததில்லை.

அவனுக்காகவா இந்த மாபெரும் ஆலயம்? அவன் இங்கே எப்படி உணர்கிறான்? இந்த மாபெரும் சிற்ப வளைவின்கீழ், இந்த நீரலை மின்னும் பளிங்குக்கல்தரையில், இந்த ஒளி நடனமிடும் வண்ணக் கண்ணாடிச் சில்லுகளில் அவன் எப்படி தன்னை உணர்கிறான்? இந்த ஆலயத்து மையத்தில், வானுருவம் கொண்ட கன்னியொருத்தியின் பிரம்மாண்டமான நகை போல பொன்னொளி சுடர நின்றிருக்கிறது தேவாலய மையபீடம். அதன் நடுவே பொன்னிற தேவதைகள் சூழ்ந்து வாழ்த்த, பொன் மின்னும் கன்னங்களுடன் தூயவள் அவனை கையில் ஏந்தி நிற்கிறாள். பேரழகுடன் பூத்த இளமரம் ஒன்றில் இருந்து எழும் பூங்குருத்துபோல அவன் குழந்தையாக கைநீட்டி நம்மை அழைக்கிறான்.

எத்தனை கம்பீரம்! சக்ரவர்த்தியொருவரின் களஞ்சியம் திறந்ததுபோலிருக்கிறது. பூதங்கள் கைவிட்டு விலகிய பொற்புதையல் போலிருக்கிறது. ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குரியவற்றில் மேன்மையானவற்றையெல்லாம் பொன்னென உணர்ந்த மரபில் பூத்துவந்த என் கண்கள் இவ்வெழிலை விட்டு விலக மறுக்கின்றன. ஆனால் இது கடையர்களுக்காக மண்ணுக்கு வந்த கருணையாளனின் இடம்தானா?

 

பழைய கோவா ‘கிழக்கின் ரோமாபுரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த சுத்தமான அழகிய நகரத்தில் எங்கு பார்த்தாலும் மனிதர்களை சிறியதாக்கி மண்ணுடன் சேர்த்து அழுத்திவிடும் மாபெரும் தேவாலயங்கள் உள்ளன. உதிரிச் சுற்றுலாப் பயணிகள் அன்றி அதிகம்பேர் கண்ணில்படாத கடற்கரையில் இருக்கிறது காஜதான் தேவாலயம்.  [Church of St. Cajatan] தியேட்ரின் குருமரபைச் சேர்ந்த தந்தையர் அவர்களின் முதல் குருவான புனித. காஜதான் அவர்களின் நினைவுக்காக விரும்ப 1651ல் இத்தாலியச் சிற்பிகளால் ரோமாபுரியின் புனிதபீட்டர் தேவாலயத்தை மாதிரியாக்கிக் கட்டப்பட்ட ஆலயம் இது.

பீட்டரின் தேவாலயம்  இதைவிட ஆறுமடங்கு பெரிது என்றார்கள். ஆனால் காஜதான் தேவாலயமே உள்ளே நுழைபவர்களின் பிரக்ஞையை ஒரு புறாவாக ஆக்கிப் பறக்கச் செய்யுமளவுக்கு பிரம்மாண்டமானது. புனித உபகார அன்னையின் தேவாலயம் இது. மேற்குநோக்கிய மாபெரும்  கூடத்தில் தியேட்ரின் மரபைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திருத்தந்தையரின் கல்லறையைமூடிய மேற்கற்களே தரையாகியிருக்கின்றன. அவர்களின் புனிதப் பெயர்களின் மீது மீது நடந்து சென்றுதான் நாம் எதிரே பொற்குன்றம் போல் ஓங்கி நிற்கும் உபகார அன்னையின் ஆல்டரை எதிர்நோக்கி விழிதூக்க முடியும்.

மைய ஆல்டருக்கு இருபக்கமும் பகுதிக்கு ஒன்று வீதம் மூன்று ஆல்டர்கள் உள்ளன. இடதுபக்கத்தின் மூன்று ஆல்டர்களில் ஒன்றில் தன் தாய்தந்தையுடன் சிரிக்கும் மனிதகுமாரன். இன்னொரு ஆல்டரில் பக்தியுள்ள அன்னை. புனித கிளேரின் சிலை மூன்றாவது மறுபக்கம் மூன்று ஆல்டர்களில் புனித ஜான், புனித காஜதன் மற்றும் புனித ஆக்னஸ். கைதூக்கி அருள்புரிந்து தலைசரித்து தாங்களும் பிறிதொரு பேரருளில் நனைந்து நிற்கும் சிற்பங்கள்.

கண்கள் நிறைக்கும் பொன்னொளியில் ஒருகணமேனும் அந்தப்பொன்னிறம் அவன் கிடந்த மாட்டுத்தொழுவின் வைக்கோல் நிறத்துக்கு ஈடாகுமா என்ற எண்ணம் எழாமலிருக்காது. விசித்திரமானதோர் தத்தளிப்பு அங்கே உருவாகிறது. இதுவல்ல, இவ்வளவல்ல என்று மனம் சொல்லிக்கோண்டே இருப்பது போல. ஆனால் அந்த இடத்திலிருந்து விலகிச்செல்ல முடியாமல் பிரக்ஞை ரீங்கரித்துக்கொண்டு சுற்றிச் சுற்றிப்பறக்கிறது.

எந்த தேவாலயத்திலும் எந்த கோயிலிலும் நான் எதையும் கேட்டு பிரார்த்தனைசெய்வதில்லை. பிரார்த்தனை என்பது எப்போதும் எனக்கு மிக அருகே உணரப்படும் ஓர் அருகாமை மட்டுமே. அது என்னுள்ளிருந்து வெளிப்பொருட்களில் எதிரொளிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் உடனிருத்தல் என்னும் அனுபவம் மட்டுமே அது. நான் கேட்பதற்கிருப்பதெல்லாம் அது அறியும் என்பதுபோல. குறையொன்றுமில்லை என்று வான்பெருகும் பெருநிறைவின்முன் உணரும் தருணமே உண்மையான பிரார்த்தனையாக இருக்கமுடியும்.

இங்கே என்னை இழுத்து வைத்திருப்பது எது என எண்ணிக்கொண்டேன். அது கலைதான். மனிதக் கற்பனையின் தரிசன உச்சங்கள் கைகளாக ஆகி கல்லிலும் உலோகத்திலும் தங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. பொருட்கள் வழியாக நாம் அதை உருவாக்கியவனின் அகத்தின் எழுச்சியைச் சென்றடைய முடியும் என்றால் அதுவே கலை. இந்த சிலைகளை உருவாக்கியவன் எத்தகைய கனவில் இருந்தான். மண்ணுலகையே அழைக்கும் இந்த குட்டிக்கைகளின் குண்டு விரல்களைச் செதுக்கியபோது முதல் குழந்தையை கருவாசனையுடன் அள்ளி மார்போடணைத்துக்கொள்ளும் அன்னையின் மார்புகள் போல அவன் ஆத்மாவில் அமுதூறியதா என்ன?

கலையின் தருணங்களை ஒருபோதும் அள்ளிவிட முடிவதில்லை. அலையலையான மன எழுச்சிகளாக கரையை வந்து மோதிக்கொண்டே இருக்கிறது கலையின் முடிவிலி. அதன் விரிவை அவ்வலைகளே மறைத்துவிடுகின்றன. எத்தனை நுட்பங்கள். எத்தனை ஆயிரம் மலர்வளைவுகள் எத்தனை ஆயிரம் நுண்நெளிவுகள். இக்கணம் வரை ஒருவருமே கவனிக்காத எத்தனை ஆயிரம் செதுக்கல்கள் இங்கே இன்னுமிருக்கக் கூடும். கலைஞன் அவற்றை தன் அகக்கண்களுக்காகவே செதுக்கியிருப்பான். தன்னுள் ஊறிய மகத்துவமொன்றை பொன்னிலும் கல்லிலும் கண்டுகொள்வதற்கப்பால் அது வேறெதுவுமில்லை அவனுக்கு.

கலையை விட்டு வரச்சொல்லி மனதை பிடித்திழுக்கிறது தர்க்கம், தாயின் முந்தானையைப் பிடித்திழுக்கும் சேய்போல.’நேரமாகிறது, நேரமாகிறது’ என. ஆனால் நேரமின்மையில் நிரந்தரமாக நின்று விட்டிருக்கின்றது மாபெரும் கலை. புனிதர்களின் கண்களின் பெருங்கருணை. மரியின் கண்கள் மட்டுமல்ல அவள் உடைகளின் நெளிவில் அவள் கூந்தலின் அலைகளில் அவளுடைய சிறிய பாதங்களில் அவள் குழந்தையை ஏந்தியிருக்கும் மென்மையில் எங்கும் கருணை மட்டுமே. ஆயினும் அது சிலைதான். கலையின் வழியாக தெய்வங்களைக் காட்டிவிடமுடியுமா என்ன? கலை எத்தனை எளியது. எத்தனை வரையறைக்குட்பட்டது. கல்லின் வரையறை, பொன்னின் வரையறை, உருவங்களின் வரையறை. அழகு என்னும் மகத்தான வரையறை. ஆயினும் கடவுளரை காட்ட வேண்டுமென்றால் மானுடனுக்குக் கலையன்றி வேறென்ன வழி இருக்கிறது?

வெளியே வரும்போது நெஞ்சை விம்மச்செய்யும் ஒரு பெருமூச்சுடன் உணர்ந்தேன். இந்த பேராலயத்துக்கு ஆறுமடங்கு இருக்குமாம் ரோமாபுரியின் பேராலயம். ஒருவேளை இந்தச் சிறிய வாழ்க்கையின் நான் அங்கே செல்லமுடியாமலே போகலாம். ஆனால் சிலைகளில் இருந்து தெய்வங்களுக்குச் செல்லும் கற்பனையால் இவ்வாலயத்தில் இருந்து அவ்வாலயத்திற்குச் செல்கிறேன் இப்போது. அதன் பிரம்மாண்டமான கலைவெளியில் ஒரு சிறிய பூச்சியாக ஊர்ந்து செல்கிறேன். நான் என்ற எளிமையை ஒரு கணமும் நான் என்ற மகத்துவத்தை மறுகணமும் உணர்ந்தபடி நடக்கிறேன். அதன் வானில் நிறைந்திருக்கின்றது மைக்கேலாஞ்சலோவின் பெருங்கனவு. காலத்தை தனக்குத் திரைப்புலமாக விரித்துக்கொண்ட வல்லமை உடையது அது.

ஆயினும் எளிய தச்சன்மகனுக்குப்போய் எதற்காக இந்த ஆடம்பரம்? இத்தனை பொன்னை அவன்பெயரால் குவித்து வைத்தால் எப்படித்தாங்குவான் அவன்? அவனுடைய காட்டுச்சுனை போன்ற எளிய சொற்களின் மீது இந்த பிரம்மாண்டமான கலைச்சிகரங்களை ஏற்றி வைத்தால் இவற்றை விலக்கி அச்சொற்களை சென்றடைய முடியுமா என்ன? இங்கே ஒவ்வொன்றிலும் திமிறியெழும் ஆடம்பரம் அதற்குள் உள்ள அதிகாரத்தைச் சுட்டுகிறது. அதிகாரம் சுயமுனைப்பின் அறுவடை. சுயமுனைப்போ அனைத்து தியாகங்களுக்கும் எதிரானது. தியாகங்களினால் மட்டுமே நெருங்கக்கூடிய அவன் மாளிகையின் படிகள் எப்படி பொன்னால் அமையமுடியும்?  எங்கிருந்து வந்து எதைத் தீண்டியிருக்கிறது இந்த பேராலயம்?

எத்தனை எளிமையானவை அவனுடைய சொற்கள்! நாற்பது வருடங்களுக்கும் மேலாக அனேகமாக தினமும் அவனுடைய ஒருவரியையேனும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மண்ணில் மாபெரும் ஞானம் ததும்பிய சொற்கள் நிகழ்ந்துள்ளன. பெருங்கருணை விளங்கிய சொற்கள், கூரிய நீதி சுடர்ந்த சொற்கள், முடிவில்லாத அழகு நிறைந்த சொற்கள் பிறந்துள்ளன. அவன் சொற்களின் அளவுக்கு எளிமை எச்சொற்களிலும் கூடவில்லை. பாலைவனத்து சிற்றோடை போல தெளிந்தவை. கைக்குழந்தை தேடி எடுத்து பட்டுச் சிறுகையில் பொத்தி வைத்திருக்கும் ஈரமான வெதுவெதுப்பான கூழாங்கல் போல சர்வசாதாரணமான பேரெழில் கொண்டவை.

ஏனென்றால் அவை ஞானதாகிகளுக்காகச் சொல்லப்படவில்லை. சான்றோருக்காகவோ கற்றோருக்காகவோ சொல்லப்படவில்லை. ஏன், நல்லவர்களுக்காகக்கூடச் சொல்லப்படவில்லை. பூமிக்கு வந்த அருளாளர்களிடையே தச்சன்மகனை தனித்து நிறுத்தும் அம்சம் அது ஒன்றே. அவன் மட்டுமே கைவிடப்பட்டவர்களுக்காக, புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக, தோற்கடிக்கப்பட்டவர்களுக்காக, பாவத்தில் நீந்துபவர்களுக்காக பேசினான். பிறர் சமூகத்தின் கோபுரமுகடுகளை நோக்கிப் பேசினார்கள், அவனே அதன் அழுக்கு ஓடைகளை நோக்கிப் பேசினான். பிறர் கல்விச்சாலைகளை நோக்கிப் பேசினார்கள் அவன் போகசாலைகளை நோக்கிப் பேசினான். பிறர் அவர்களின் மகத்துவத்தை அறியும் வல்லமை கொண்டவர்களுக்காகப் பேசினார்கள். அவனோ அவனை சிலுவையில் ஏற்றுபவர்களுக்காகப் பேசினான்.

என் இருபதுவயதில் அவனை மீண்டும் சுங்கக்காரர்களும் பரிசேயர்களும் சிறையிட்டு வைத்திருப்பதைக் கண்டேன். அவனை விட்டு வெகுதூரம் விலகிச்சென்றேன்.எத்தனை தேவாலயங்கள். வானபரியந்தம் ஏறி இல்லை என்று கைவிரித்து நிற்கும் சிலுவைகள் [ராஜசுந்தர ராஜனின் கவிதை] பின்பு ஒருநாள் ஒரு கடற்கரைக் குடிலில் புகைபடிந்த சிறிய கண்ணாடிக்குப்பிக்குள் தாமரையில் தனியிதழ்போல நின்ற மண்ணெண்ணைச்சுடரின் வெளிச்சத்தில், கயிறுகொண்டு காதுடன் கட்டப்பட்ட உடைந்த மூக்குக்கண்ணாடியின் செவ்வொளி மின்னும் கீழ்ப்பிறை வளைவுவழியாக குனிந்து விவிலியத்தைப் படிக்கும் ஒரு அன்னைமுகத்தில் மீண்டும் அவன் சொற்களை கண்டெடுத்தேன். அவள் பறக்கும் கூந்தலிழைகளில், ஒளிபரவிய கன்னங்களில், நடுங்கி அசையும் கரிய உதடுகளில் மண்ணில் சாத்தியமான மிகப்புனிதமான ஒன்று நிகழ்வதைக் கண்டேன். ஏனென்றறியாமல் நான் கண்ணீர் மல்கினேன்.

பின்பு எனக்காக அவனைக் காட்டித்தருபவர்களை தேடியலைந்தேன். தாகம் கொண்டவன் என்ன செய்தாலும் அகம் நீர் நீர் என எண்ணிக்கொண்டிருப்பதைப்போல. அவனை நான் இந்த ஆலயங்களில், ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடி எனக்கு எனக்கு என தவிக்கும் உலகியல் வேண்டல்களில், எங்களிடம் வா எங்களிடம் வா என்று நச்சரிக்கும் மதவெறியர்களின் வெளிறிய சொற்களில் ஒருபோதும் கண்டடைய முடியாது என்று உணர்ந்தேன். ஒரு நாத்திகனுக்காவது என்றாவது அவன் சொற்கள் திறக்கக்கூடும். இந்த இறுகிய மதநம்பிக்கையாளர்கள் அவனை வெளியே விட்டு கதவைமூடி இறுகத்தாழிட்டுக் கொண்டவர்கள்.

செல்மா லாகர்லோஃப்

அவனை நான் தேடிச்செல்லவேண்டியதில்லை. என்னுடைய பாதை எதுவானாலும் அவன் அங்கே வந்தே ஆகவேண்டும். ஏனென்றால் அது அவனுடைய விதி. அவனை விட்டுச்செல்பவனை ஒருபோதும் அவனால் விட்டுவிட முடியாது. மழை பெய்து கொண்டிருந்த ஓர் இரவு. நான் என் தனி வீட்டில் என்னுடைய பழைய கட்டிலில் போர்த்திக் கொண்டு அமர்ந்து தல்ஸ்தோயின் நெஹ்ல்யுடோவின் மாபெரும் உயிர்த்தெழலின் கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். கந்தலுடுத்து வந்து அழைத்த எளியதச்சனின் சொல்லைக் கேட்டு படகுடன் கடலையும் விட்டு அவனைத்தொடர்ந்த பீட்டரைப்போல தன் மனசாட்சியைப் பின் தொடர்ந்து செல்வத்தை பதவியை குடும்பத்தை தாய்நாட்டை உதறிச் செல்லும் நெஹ்ல்யுடோவ் ருஷ்ய மொழியில் மனசாட்சியின் ஒளியைக் கோண்டுவந்தார் என்றார் லெனின்.

 நாவலின் முடிவுவரியில் அலைகள் அடங்கி அமர்ந்து அனைத்தையும் ஒரேகணம் நினைவுகூர்ந்து நெஹ்ல்யுடோவ் பெருமூச்சுடன் அந்த மாபெரும் நூலைப்பிரித்தான் ”அனைத்துக்குமே இதில் பதிலைக் கண்டுகொள்ள முடியும் என்கிறார்கள்” என்று நினைத்தான். குத்துமதிப்பாக புதிய ஏற்பாட்டை திறந்து மாத்யூவின் நற்செய்தியை வாசிக்க ஆரம்பித்தான். ” அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி ‘விண்ணரசில் மிகப்பெரியவர் யார்?’ என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் அருகே நிறுத்தி பின்வருமாறு கூறினார். நீங்கள் மனம்திரும்பி சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என்று உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறுபிள்ளையைப் போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்”.

 அதுவே எனக்கான வழி என்றார் ருஷ்யக் கிழஞானி.  நூல்களிலும் உறவுகளிலும் பனிவெளியிலும் கண்ணீருடன் அலைந்து, ரயில் நிலையத்தில்  தனித்துக்கிடந்து இறந்து அவர் கண்டடைந்த மெய்ஞானம். என் கழுத்தில் எந்த அடையாளமும் தொங்க வேண்டியதில்லை. என் தலையில் எந்த நீரும் விழவேண்டியதில்லை. என்னால் எனது தனித்த  பாதைக்கு முன்னால் காற்றில் கரையும் முன் அவனுடைய பாதத் தடத்தைக் காணமுடிந்தால் போதும். இதோ வசந்தகுமார் சிகரெட் வாங்கும் பெட்டிக்கடையிலிருப்பவளின் இடையில் குட்டிவாய்க்குள் மொத்தக்கையையும் செருகி எச்சில் வழிய அமர்ந்திருக்கும் இந்தக் கரிய சிறுபிள்ளையை கையில் வாங்கி இவனை அவன் என என்னால் எண்ணமுடிந்தால் போதுமானது.

மீண்டும் மீண்டும் அவனை என் ஆசிரியர்களாக வந்த பெரும் கலைஞர்களிடமே கண்டேன். அவர்கள் மட்டுமே அவனைக் கண்டிருக்கிறார்கள் என்றுணர்ந்தேன். இன்னொரு புத்துயிர்ப்பான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் கொலைப்பாவத்தைச் சுமந்து குருதிவழியும் இதயத்துடன் விபச்சார விடுதிக்குச் சென்று சோனியாவைக் காண்கிறான் ரஸ்கால்நிகா·ப். ஏசுவைத்தேடியலைந்தவவன் மக்தலீன் மேரியைக் கண்டடைந்தான். ஏனென்றால் அவன் ஏசுவாக ஆக ஆரம்பித்திருந்தான். இருவரும் பாவத்தில் கறைபடிந்த உடல்களை தியாகத்தால் கழுவி புதிதாகப்பிறந்தெழும் தருணம். விவிலியத்தை எடுத்து லாஸரஸ் உயிர்த்தெழுந்த கதையைப் படிக்கச் சொல்கிறாள் சோனியா. ரஸ்கால்நிகா·ப் படித்தான். தஸ்தயேவ்ஸ்கியின் சொற்கள்…

”அது உயிர்த்தெழும் லாசரஸைப் பற்றியது” அவள் திடீரென்று தீவிரமாக முணுமுணுத்தாள். திரும்பிக்கொண்டு அசைவில்லாது நின்றாள். தன் கண்களை அவனுக்காக உயர்த்தக்கூட அவள் தயாராகவில்லை. காய்ச்சல்கண்டவள் போல மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தாள். சிதைந்தது போல தண்டின்மீது அசைந்த மெழுகுவர்த்திச் சுடர் வறுமைமூடிய அந்த அறையையும் அதற்குள் நின்றபடி அழியாத அந்த நூலை வாசிக்கும் ஒரு கொலைகாரனையும் தாசியையும் மங்கலாக ஒளிரச்செய்தது . அந்த உயிர்த்தெழும் தருணத்தில் நான் என் கையிலிருந்து நடுங்கிய நூலின் ஒவ்வொரு எழுத்தும் பாலைநிலத்தில் பதிந்த அவனுடைய காலடிச்சுவடுகள் எனவே உணர்ந்தேன்.

இந்த வருடங்களில் என் மேஜை மீது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது அவனுடைய சொற்களின் நூல். சஞ்சலங்களில், மன எழுச்சிகளில், தனிமையில், அச்சொற்களினூடாக அலைந்து  அதன் ஏதோ ஒருவரி என்னை வெளியே தள்ளும்போது மூடிவிடுகிறேன். ”அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்வீர்கள்”. வேர்கள் காயும் கோடையில் புதிதெனத் தளிர்க்கும் மரங்கள் மட்டுமே அறியும் அவன் ரகசியம்.

நிகாஸ் கசந்த்ஸகிஸ்
நிகாஸ் கசந்த்ஸகிஸ்

இத்தனை வருடங்களில் நான் வாசித்த மேலை இலக்கிய நூல்களில் பாதிக்கும் மேலானவை எப்படியோ அவன் சொற்களில் இருந்து முளைத்தவை என்பதை எண்ணிக்கொள்கிறேன். எமிலி ஜோலா,  பேர் லாகர் குவிஸ்ட், நிகாஸ் கசந்த் ஸகீஸ், மேரி கொரெல்லி, லியூ வாலஸ், ஜோஸ் சரமாகோ…அவர்கள் வழியாகவே நான் அவனை இன்னும் அறிய முடிகிறது. ஏனென்றால் ஆன்மீகத்திற்கும் லௌகீகத்திற்கும் இடையேயான மாபெரும் இடைவெளியை உணர்ச்சிகளையும் கனவுகளையும் விசுவரூபம் கொள்ளச் செய்து நிறைக்க கலையால் மட்டுமே முடியும். எத்தனை மாபெரும் இலக்கிய ஆக்கங்கள். அவை சொற்களின் திருவிழாக்கள். சொற்கள் பொன்னொளி பெறும் தருணங்கள்.

கலையையும் ஆடம்பரத்தையும் பிரிக்க முடியுமா என்ன? மானுடனுக்கு கலை என்பதே ஓர் ஆடம்பரம் அல்லவா? இந்த தேவாலயத்தை எதற்காக உருவாக்கினார்கள்? அவனுடைய தூய சொற்கள் அளித்த மன எழுச்சியை வேறு எப்படித்தான் சொல்வான் மானுடன்? அவனுக்கு கையில் கிடைப்பது எளிய கல், எளிய பொன் மட்டும்தானே? ரோமாபுரியின் புனித பீட்டரின் தேவாலயம் மகத்தானதுதான். ஆனால் அவனுடைய சொற்களின் மகத்துவத்தை உணர்ந்த மனம் கொண்ட எழுச்சியின் சிறிய துளிதானே அது?

கதைகளில் ஒரு ஊமைச் சிறுமி இருந்தாள். தன் கனவு ஒன்றுக்குப் பதிலாக ஒரு சிறு கூழாங்கல்லை முன்னால் வைத்துவிட்டு கைகள் விரித்து உலகையையே சுட்டிக்காட்டி தன் உள்ளத்தைச் சொன்னாள். இந்தப் பேராலயம், ஏன் மண்ணில் எழுப்பப்பட்ட எல்லா பேராலயங்களும், அந்த தனிக்கூழாங்கல் போன்றவை. அதிக பட்சம் மனிதனால் அடையாளமாக வைக்கத்தக்கது அதுவே. இவை மானுடனின் சிறுமையையும் அவன் சொற்களின் மகத்துவத்தையும் சாட்சியப்படுத்தி நிற்கின்றன. மாபெரும் எளிமையை ஆடம்பரத்தால் சுட்டவேண்டுமென்றால் எத்தனை கோடிப் பொன் தேவையாகும்!

Nov 25, 2009 முதற்பிரசுரம்
மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைகாடு- கடிதம்
அடுத்த கட்டுரைகபாடபுரம் மின்னிதழ்