விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,
நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். . நான் பனராஸ் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து முடித்து இப்போது மேற்க்கில்  உள்ளேன்.(ஜெர்மனி). உங்கள்   இணையதளத்தை தினமும் பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொள்கிறென்.

 கடந்த 5 வருடங்களாக தமிழ் நவீன இலக்கிய புத்தகங்களை படிக்கிறேன்.( இதர்கு முன் ஆங்கில இலக்கியம் தீவிரமாக படித்திருக்கிறென்).சமீபத்தில் உங்களின் விஷ்னுபுரம் நாவல் படித்தவுடன் என்ன சொல்வது என்பது புரியாமல் ஒரு நீண்ட மொளனத்தில் உள்ளே போகிரேன்( trance????).இந்த நூற்றாண்டில் வந்த ஒரு மிகச்சிறந்த நாவல் என்று சொல்லமுடியும். குறிப்பாக பொளத்த உரையாடல்கள்.
இந்திய கலாச்சாரத்தையும்/பண்பாடுகளையும் இவ்வளவு  விரிவாக எந்த கதையிலும்  சொல்லப்படவில்லை.இந்நாவலை பற்றி கூடிய விரைவில் உங்களுக்கு விமர்சனமாக எழுதி அனுப்பிகிறேன்.

  மேலும் காந்தி/அம்பெத்கார் பற்றிய உங்களின் நெடிய கட்டுரையையும் வாசித்தேன். இதிலும் உங்களின் நேர்மையான பதிவு ( எந்த விமரிசனத்திற்கும் கவலைப்படாமல்)என்னை பிரமப்பில் ஆழ்த்துகிறது. கொற்றவை நாவல் இன்னும் படிக்கவில்லை.

 பின் ந‌வீன‌த்துவ‌ம் என்ற‌ பெய‌ரில் ஒன்றும் புரியாம‌ல் எழுதுகிறார்க‌ள். இப்போதுதான் படித்தேன் ஒரு வலைதளத்தில் பின் ந‌வின்த்துவ‌ம் எல்லாம் இந்திய‌ த‌த்துவ‌த்தில் இருக்கிற‌து என்ப‌து நிருப‌ண‌மாகியிருக்கிற்து. (நாகார்ஜூன‌ன் என்ற‌ வெப்ளாக்கில்)
இதை பற்றி உங்கள் கருத்து என்ன? இதைப்பற்றி நீங்கள் விரிவாக எழுதவேண்டும்.
அன்புடன்
தீபா நாயர்.

  

அன்புள்ள தீபா

 பொதுவாக உலகத்தில் உள்ள எல்லா சிந்தனை மரபுகலிலும் எல்லாவிதமான சிந்தனைகளுக்கும் வேர்கள் இருக்கும். மேலைநாட்டுச் சிந்தனைகள் கிரேக்க மரபில் இருந்து உருவானவை. இந்திய சிந்தனைகளுக்கும் கிரேக்க சிந்தனைகளுக்கும் பல்லாண்டுக்கால கொடுக்கல் வாங்கல் உண்டு. ஆகவே பொதுவாக எல்லா மேலைநாட்டுச் சிந்தனைகளுக்கும் ஒரு முன் தொடர்ச்சி இந்திய மரபில் உண்டு

 அதிலும் பன்மைத்தன்மை, மையமின்மை போன்றவற்றை முன்வைக்கும் பின் நவீனத்துவச் சிந்தனைகளுக்கு இந்திய பௌத்த மரபில் மிக நெருக்கமான முன்மாதிரிகள் உள்ளன

 பின் நவீனத்துவம் என்பது ஒரு சமீபகால பொதுப்போக்கு. இத்தகைய பொதுபோக்குகள் குப்பைகளையும் செத்தைகளையும் அடித்துவரும் புதுவெள்ளம் போன்றவை. நிறைய அரைவேக்காட்டு முயற்சிகள் நிறைய தவறிப்போன முயற்சிகள் கொஞ்சம் உண்மையான படைப்புகள் இருக்கும். சமகாலத்தில் நம்மால் அவற்றை முழுமையாக மதிப்பிடுவது கடினம். புரியாத, அல்லது குழப்பமான ஆக்கங்கள் கண்ணில் படுவது அதனால்தான். கொஞ்சநாளிலேயே எது முக்கியமோ அது மட்டும் எஞ்சிவிடும்

 விஷ்ணுபுரம் குறித்து எழுதுங்கள்

 ஜெ

 

 அன்புள்ள ஜெயமோகன்,
       தங்களின் தீவிர வாசகன் நான்.  தங்களின் ஒவ்வொரு  படைப்பும்  ஒரு புதுவிதமான அனுபவத்தை தருகின்றன. ஒரு நல்ல படைப்பை வாசித்த திருப்தியும் கிடைக்கிறது. கீதை பற்றிய கட்டுரைகள் , காந்தி பற்றிய கட்டுரைகள் நிறைய விஷயங்களை புரியவைத்தன. மகாபாரத்தை மையமாகக் கொண்ட அனைத்துக் கதைகளும் மிக நன்றாக இருந்தது.  விஷ்ணுபுரம் என்னை பயங்கரமாக உலுக்கி விட்டது. அது தந்த  வெறுமையிலிருந்து வெளி வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

அதில் ஒரு சநதேகம் உள்ளது. என்னுடைய சந்தேகம் சிறுபிள்ளைத்தனமாக தோன்றினால் அதற்காக வருந்துகிறேன். ஆனால் தங்களைத் தவிர வேறு யாரும் இதற்கு அறிவு பூர்வமாக விளளக்கம் அளிக்க முடியாது என நான் நம்புவதால்  தான் தங்களிடம் எனது சந்தேகத்தை வைக்கிறேன்.

  பிங்கலனின்  காமத்தை ஒரே சமயத்தில் வெறுக்கவும் ஆனால் அதை தவிர்க்க முடியாமல் அதற்கு அடிபணிவதுமான தவிப்பை நன்றாக விளக்கியுள்ளீர்கள். கிட்டத்தட்ட என்னை போன்ற இளைஞர்கள் எல்லோருமே இந்த பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறோம். ஒரு புறம் பிரம்மச்சரியம் மிக அவசியம் , அதில்லாமல் மேன்மை இல்லை என்று நம் முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர். மறு பக்கம் இவையெல்லாம் முட்டாள் தனம், காமத்தை அடக்கக் கூடாது  என்று கூறும் ‘நவீன’ வாதிகள்.இரு பக்கமும் உண்மை இருப்பது போல் தோன்றுகிறது .  இவை அனைத்தும் சேர்ந்து  குழப்பத்தையும், இனம் தெரியாத பெரும்  குற்ற உணர்ச்சியையும்  உண்டாக்குகின்றன.    இவற்றில்  எது உண்மை ?

நன்றி.
Shankaran.

அன்புள்ள சங்கரன்

காமத்தைக் குறித்து சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் ஒரு குறள்

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்

செவ்வி தலைப்படுவார்

மிக மென்மையான அகம் சார்ந்த விஷயம் காமம் என்பது. இயல்பிலேயே அப்படியா அல்லது மனிதன் தன் பண்பாட்டு வளர்ச்சிப்போக்கில் அப்படி உருவாக்கிக்கொண்டானா என்பதை உணர்வது கடினம் . ஆனால் அதைக்குறித்து போகிறபோக்கில் எதையும் சொல்லிவிடமுடியாதென்றே எண்ணுகிறேன். கோட்பாடுகள் வந்து போய்க்கொண்டே இருக்கும். அது என்றென்றும் அதற்கான நுண்ணிய மர்மத்துடன் தான் நீடிக்கும்

காமம் என்றல்ல வாழ்க்கையின் எந்த ஒரு விஷயத்தையும் அதன் உச்சம் அதீதம் நோக்கிக் கொண்டுசெல்ல இயற்கை அனுமதிப்பதில்லை. இயர்கை எல்லாவற்றையும் அதற்கு இணையான எதிர் ஆற்றலால் சமப்படுத்தியே வைத்துள்ளது. அதீதமாக எது சென்றாலும் அந்த எதிர் ஆற்றலும் அதே அளவுக்கு அதீதமாகும். அது அழிவை உருவாக்கும்

காமம் மனிதனுக்கு அளிக்கப்பட்ட இன்பம். அவனுடைய படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண். அவனை உயிர்த்துடிப்புடன் அது வைத்திருக்கிறது. ஆனால் அதன்பொருட்டு அவன் உறவுகளை இழந்தானென்றால், நுண்ணுணர்வுகளை இழந்தானென்றால், அறவுணர்ச்சியை இழந்தானென்றால், ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டானென்றால் காலப்போக்கில் காமத்தையும் இழந்துவிடுவான்.

ஆகவே காமத்தைப்பற்றி மட்டுமல்ல எல்லாவற்றைப் பற்றியும் நான் சொல்வதும் குறளின் உவகையே

‘அகலாது அணுகாது தீக்காய்தல்’

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே?

உங்கள் இணையதள எழுத்தின் பிரமிப்பில் நீங்கள் எழுதிய நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஏழாம் உலகம் தந்த அதிர்ச்சி இன்னும் வெகுகாலத்திற்கு இருக்கும். பின் கொற்றவை வாங்கினேன்.

படிக்கத் தொடங்கியதும் என் தமிழறிவுக்கு சற்றே அப்பாற்பட்ட நூலாய்த் தோன்றியது. சில பக்கங்கள் படித்துவிட்டு இனி இதை 2013 வரை எடுக்கக்கூடாதென்று வைத்துவிட்டேன். அதற்குள் என் தமிழறிவும் வாசிப்பனுபவமும் முன்னேறி இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

அந்த புத்தகத்தை என் நண்பன் (கணேஷ்) எடுத்துச்சென்றான். மூன்று மாதங்களுக்குப் பின் நேற்று அவனுடன் நீண்ட நேரம் உரையாட நேர்ந்தது. அத்தனையும் கொற்றவை நாவலைப் பற்றியதே. அவன் வார்த்தைகளை வாக்கியங்களாக கீழே அளிக்கிறேன்.

—————————
“கண்ணகி மதுரையை எரித்தாள்” என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டும் மனதில் கொண்டு சிலப்பதிகாரத்தையும் கண்ணகியையும் நகைப்பாய் எண்ணுபவர்களே இங்கு அதிகம். அதைப் பெரிய தவறென்றும் சொல்லலாகாது. சிலப்பதிகாரம் ஒரு புனைக் காப்பியம் போலவே எழுதப்பட்டிருக்கிறது. அதில் சொல்லப்பட்ட பெரும்பாலானவை இக்கால சமுதாயத்தில் விவாத தர்கத்திற்குரியவைகளே.

இதை களமெனக் கொண்டு ஜெயமோகன் எழுதியிருக்கும் கொற்றவை ஆராய்ச்சியையும் லாஜிக்கையும் மையமாய்க் கொண்டிருக்கிறது. கண்ணகியின் மேம்போக்கான கதை பலரும் அறிந்ததே. ஆனால் அதில் இருக்கும் சுளிவுகளை மிக அழகாக கையாண்டிருக்கிறார்.

கொற்றவை கதையோ காப்பியமோ மட்டுமல்ல. அது ஒரு பயணம். ஆராய்ச்சியின் அடிநாதம் வரை சென்றுமீண்ட ஒரு பயணம். எங்கிருந்து படிக்கத் தொடங்கினாலும் படிக்கத் தூண்டும் விதமாகவே இருப்பது இதன் சிறப்பு.

கொற்றவை சொல்லப்படும் விதங்களும் (பாணர், நீலி, காப்பியம், ..), ஜெயமோகனின் வார்த்தை ஜாலங்களும், மதுரையின் பின்புலமும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

மதுரை எப்படி முத்துக்கு விஷேமான ஊர் என்றும் மீன் சின்னம் எப்படி வந்தது இப்போது புலனாகிறது! புரான மதுரை கடல் அருகில் அல்லவா இருந்திருக்கிறது? (இது புத்தகத்தில் உண்டா என்று நினைவில்லை, மன்னிக்கவும்!)

சிறந்த எழுத்தாளர்கள் என்பதும் நல்ல எழுத்தாளர்களும் வெவ்வேறு. 20% நல்லது, 80% தீயது என்னும் விஷயத்தில் சிறந்த எழுத்தாளர்கள் (பேச்சாளர்கள், கவிஞர்கள்) அந்த 20% நியாயத்தை ஊதி ஊதி பிரம்மாணடமாய் காண்பிக்க இயலும் (பாண்டியன் மனைவி பாண்டியனை தன் வலைக்குள் வைத்ததைப் போல). எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்தும் உணர்வுப்பூர்வமாய் அனுபவித்தும் எழுதும் எழுத்தாளர்களே நல்ல எழுத்தாளர்கள். ஜெயமோகன் நற்சிறந்த எழுத்தாளர்.

———————————-

இன்னும் நிறைய பேசினோம். பெரும்பாலானவை உங்களைப் போற்றுவதாகவே இருக்கும். அதிகப்படியான பாராட்டு நெளியவைக்கும் என்றெண்ணி விட்டுவிடுகிறேன் :)

குறையென்று ஏதுமில்லாமல் இல்லை!

இத்தனை நேர விவாதத்திற்குப் பின்னும் நான் கொற்றவையை எடுக்க முன்வரவில்லை. நிச்சயம் படிப்பேன், ஆனால் இப்போதல்ல. என் வாசிப்பை எளிதாகக் குறை சொல்லிவிடலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் எம்மைப் போன்றவர்களே! உங்கள் வாசிப்பாளர்கள் சகபயணிகளாகவும் சிறிய வட்டமாகவும் இருந்தாலே போதுமானது என்று நீங்கள் சொன்னதை அறிவேன். இருந்தாலும், வாக்கியங்களையும் இலக்கியத்தையும் இன்னும் கொஞ்சம் இலகுவாகக் கையாண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. புதுக்காப்பியம் என்பதால் அது சரியாகாது என்றிருக்கலாம்!

வாழ்த்துக்கள். நன்றி.

இப்படிக்கு,
ஜெகதீசன்
http://jaggybala.wordpress.com

 

அன்புள்ள ஜெகதீசன்

கொற்றவை ஒரு காவியம். காவியங்களை மீண்டும் எழுதுவதும் இன்றைய எழுத்தின் முறையே. புராணங்கள் எவ்வாறு ஒரு பண்பாட்டை உருவாக்குகின்றனவோ அவ்வாறு கொற்றவையும் தமிழ்ப்பண்பாட்டை உருவகிக்க முயல்கிறது

ஒரு சிறு பிரமிப்பும் தத்தளிப்பும் கொற்றவை உருவாக்கலாம் — முதல் படலமான நீர் முடியும் வரை. பின்னர் அது எளிதாக உள்ளே கொண்டுசெல்லும் என்றே நினைக்கிறேன்

வாசியுங்கள்

நன்றி

ஜெ

சமீபத்தில் உங்கள் நிகழ்தல் கட்டுரைத்தொகுப்பு படித்தேன். நான் மிகவும் ரசித்தேன்.  உங்கள் அப்பாவைப்பற்றியும் அம்மாவைப்பற்றியும் அற்புதமாக எழுதியிருந்தீர்கள். நான் அவ்வளவு நல்ல வாசகன் அல்ல. ஆனால் உங்கள் நாவல்களும் கட்டுரைகளும் கதைகளும் மிகவும் பிடித்திருக்கின்றன. உங்கல் எழுத்தில் என்னை முதலில் கவர்ந்தது கன்யாகுமரி.  பின்னர் லங்காதகனம். அதன் பின் ஏழாம் உலகம்

விஷ்ணுபுரம் பின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் வாசித்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் அவ்வளவாக புரிந்தது என்று சொல்ல முடியாது. நிகழ்தல் நூலும் ஊமைச்செந்நாயும் என்னை மிகவும் கவர்ந்தன. நான் முதன்முறையாக உங்களுக்குத்தான் எழுதுகிறேன்

ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்

நன்றி

நல்ல வாச்கான் என்பவன் கவனமாக வாசிப்பவன். மோசமான வாசகன் முன் முடிவுகள் காரணமாக அல்லது அலட்சியம் காரணமாக கவனமில்லாமல் வாசிப்பவன். நீங்கள் கவனமாகவும் ஆர்வத்துடனும் வாசித்திருப்பதாகவே தெரிகிறது

நாவல்கள் சிலசமயம் முழுமையாக புரியாமல் போகும். அதற்கு நாம் நாவலை வாசிக்கும் காலகட்டம்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். ஒரு காலகட்டத்தில் நம்மைக் கவராத அல்லது புரியாத நாவல்கள் பிறிதொரு தருணத்தில் சட்டென்று திறந்துகொள்வதை உணரலாம்

கவனமாக வாசிப்பதே இலக்கியத்துக்கு போதுமானதாகும் -புரியாமல் போகும் எதுவும் இருப்பதில்லை

ஜெ

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ..,
                                                                                             நலம் அறிய ஆவல் சார் .. தற்போது உங்களின் “பத்ம வியூகம்” குறு நாவலை வாசித்தேஅன் . மகாபாரதத்தை நானும் வாசித்து இருகிறேஅன் செவ்வாய் கிரகத்தை பற்றி தெரிந்த அளவு மட்டுமே ; ஆனால் உங்களுக்கு இது ஒரு சுரங்கம் போல ;இதை மூல மாக வைத்து எழுதிய சிறுகதையான  “திசைகளின் நடுவே ”
தான் என்னை மிகவும் கவர்ந்தது இந்த குறுநாவலை விட. அதில் வரும் சார்வாகன் கதாபாத்திரம் மற்றும் கதை போக்கு காரணம் ;
 பத்ம வியூகம் போரில் மகனை இழந்த தாயின்  பார்வையில் மூலம் அந்த சூழ்நிலையின் அனைத்து பெண்களின் பிரதிநிதியாக சுபத்திரையின்  கணங்களை சொல்லி செல்லும் கதை போக்கு மகாபாரதம் என்றால் கர்ணன் என்ற கதாபாத்திரம் தான் வலி கொண்டது  என்று மட்டுமே நினைத்திருந்த எனக்கு ரொம்ப புதுசு ..

சுபத்திரையின் பார்வையில் தெரியும் அர்ச்சுனன் குறைகள் கொண்ட மிக சாமன்யனாகவே தெரிகிறான் . கொஞ்ச நேரம் தான் பேச முடியும் அந்த நேரத்தில் பதட்டத்தில் தேவை இல்லாத விஷியங்களை பேசும் சுபத்திரை  பெண்களின்  பலவீனங்களின் ஒட்டுமொத்த குறியீடாக அந்த சூழல் உணர்த்து கிறது . இனி எதுவும் ஆகபோவதில்லை எனும் போதும்  பத்ம வியூகம் தின் வழியை சொல்லாமல் கிருஷ்ணன் மறைவது வாசகனுக்கு தவிப்பை ஏற்படுத்தி தடார் முடிவு.

நான் கப்பலை பார்த்து இருகிறேஅன் ஆனால் ஒன்றும் அவ்வளவு பெரிது இல்லை எனும் முடிவுடன்  ; சமீபத்தில் “காஸ்ட் அவே ” எனும் படத்தில்தான் அட கப்பல் எவ்வளவு பெருசாகவும் இருக்குமா என்று அதன் பிரம்மாண்டத்தை வியக்க  முடிந்தது  . இந்த குறுநாவலை படித்து முடித்ததும் மகாபாரதத்தை பற்றியும் அப்படி என்ன தோன்றுகிறது .ஒரு கட்டுரை நூலில் பத்ம வியூகம் குறுநாவலை  பொர்வர்ட் செய்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்

Regards
dineshnallasivam

 

அன்புள்ள தினேஷ்

தெய்வங்கள் கூட திகைத்து நிற்கும் இடம் வாழ்க்கையின் மகத்தான தற்செயல் புதிர். அதைத்தான் பத்ம வியூகம் சொல்கிறது.

ஜெ

கொற்றவை கடிதம்

விஷ்ணுபுரம் நாலாவது பதிப்பு

வாசகர் கடிதங்கள்

ஏழாம் உலகம், கடிதங்கள்

 விஷ்ணுபுரம்:கடிதங்கள்

விஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள் விஷ்ணுபுரம்,ஊமைசெந்நாய்:கடிதங்கள்

நூல்கள்:கடிதங்கள்

நூல்கள்:கடிதங்கள்

வாசகர் கடிதங்கள்

ஏழாம் உலகம் :கடிதங்கள்

விஷ்ணுபுரம்: கடிதங்கள்

விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்

தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்.

விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்

விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

விஷ்ணுபுரம்:ஓர் இணையப்பதிவு

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து

ஜெயமோகனின் கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து”:அ.ராமசாமி

ஜெயமோகனின் ஏழாம் உலகம்”அ.முத்துலிங்கம்

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா

கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘

முந்தைய கட்டுரைபழசிராஜா ஒரு மதிப்புரை
அடுத்த கட்டுரைகாந்தியும் காமமும் – 4