பழசிராஜா முன்னோட்டம்

http://movies.sulekha.com/tamil/pazhassi-raja/trailers/default.htm

அன்புள்ள ஜெ.எம்,

 

பழசிராஜாவைப்பற்றிய உங்கள் குறிப்பில்  மலையாளத்தின் எக்காலத்திலும் சிறந்தபாடல்களில் ஒன்றாக நீங்கள்  ஒரு பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள். அது எது? குன்னந்த்தே கொந்நய்க்கும் என்ற சித்ரா பாடிய பாடலா? அல்லது ஆதியுஷஸ் சந்திய என்ற ஜேசுதாஸ் பாடலா?  

 

இருபாடல்களுமே சிறப்பாக உள்ளன. இளையராஜாவின் மேதமைக்குச் சான்றாக உள்ளன.

 

 சுரேஷ்.எஸ்

 

அன்புள்ள சுரேஷ்

 

பாடல்களைப்பற்றிய என் கருத்துக்களை நான் சொல்லவில்லை. நான் அப்படத்தின் பகுதியாகச் செயல்பட்டவன் என்றமுறையில் அப்படிச்சொல்வது சரியாக இருக்காது. பொதுவான விமரிசனங்களைச் சொன்னேன்.

 

குந்நத்தே கொந்நய்க்கும் என்ற பாடல் இளையராஜா அமைத்த பாடல்களிலேயே மிக வித்தியாசமானது. இளையராஜாவின் பெரும்பாலான சிறந்தபாடல்கள் சுத்தமான தாளக்கட்டுடன் இருக்கும். தாளம் நம்மைக்கவரும் அம்சங்களில் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே நம்மை உடனடியாகக் கவரும் பாடல்கள் தாளத்தாலேயே அந்த ஈர்ப்பை நிகழ்த்துகின்றன

 

குந்நத்தே கொந்நய்க்கும் தாளம் முக்கியமே இல்லாத பாடல். தாளம் இல்லாத ஒரு சுய ரீங்காரம் போலிருக்கிறது. விதவிதமான ஏற்ற இறக்கங்களினாலேயே அந்தப்பாடல் அதன் இன்னிசையை அடைந்திருக்கிறது. கேட்கும்தோறும் அந்த இன்னிசைமெட்டின் பல அடுக்குகள் தெரியவரும் என இசை தெரிந்த நண்பர்கள் சொன்னார்கள்

 

அந்தப்பாடலின் முகப்பில் உள்ள இசைக்கோர்ப்பும் மிக நுட்பமானதாக, பழைய கேரள நரம்புவாத்திய இசையின் சாயல்களுடன் உள்ளது என்றார்கள்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

நன்றி.

 

இதோ இந்தப்பாடலைப்பற்றி நான் இன்னொரு உணையதளத்தில் போட்ட பதிவு

 

சுரேஷ்

 

http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1934849

 

 

 

 

***********

 

 

 

‘மம்மூட்டியை விடவும் சரத்குமாரின் நடிப்பு கேரளத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது//

காமெடி பண்ணாதீங்க ஜெ. :) எனிவே..நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அதனால் விமர்சிக்கக் கூடாது. இருந்தாலும்….(ஒருவேளை நீங்கள் பணியாற்றிய படம் தமிழகத்தில் ஓடவேண்டும் என்பதற்காக சொல்கிறீர்களா? தமிழர்கள் “தமிழன்” என்பதற்காக சரத்குமார் பக்கம் சார்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

 

 நான் பார்த்த வரையில் தென்னகத்தில் “இன உணர்வு” மிகக் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். நீங்கள் அதற்கே “இனவெறி” கொண்ட மாக்கள் நிறைய உள்ள மாநிலம் என்கிறீர்கள். கேரளத்தில் நீங்கள் உயர் அதிகாரியாக இருந்தாலும் சாதாரண ஊழியன் கூட “மலையாளிகளின் வேலையை உங்களைப் போன்ற வெளியாட்கள் பிடுங்கிக் கொள்கிறீர்கள்” என்று முகத்துக்கு நேர் சொல்வார்கள் என்று நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.)
….
“தளபதி” படத்தில் மம்முட்டி ஒரு காட்சியில் வேட்டியை மடித்துக்கட்டியபடி தாவி வருவார். ஒரு சோற்றுப் பதம்! சரத் மம்முட்டி அளவுக்கு நடிப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை!

 

வெங்கடேஷ்,

 

அன்புள்ள வெங்கடேஷ்,

 

உங்கள் கடிதங்களை நான் சுவாரசியமாக வாசிப்பதுண்டு. எந்தெந்த வழிகளில் எல்லாம் நான் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது, என்னன்ன கோணலான வழிகளிலெல்லாம் என் கருத்துக்கள் பார்க்கப்படக்கூடும் என்றெல்லாம் காட்டும் ஒரு நல்ல வாசகர் நீங்கள்.

 

தமிழகம்  இன உணர்வுமிக்க மாநிலம் என்றும் கேரளம் அப்படி இல்லை என்றும் நான் சொன்னதாக நீங்கள் வாசித்திருப்பது எப்படி என புன்னகை செய்து கொண்டேன். இருபது வருடங்களாக இதற்கு நேர் மாறாகவே தமிழிலும் மலையாளத்திலும் வலுவாக எழுதிவருகிறேன்.இந்த இணையதளத்திலேயே பற்பலமுறை எழுதியிருக்கிறேன்.

 

கேரளம் பிராந்திய உணர்ச்சி மிக்க மாநிலம் என்றும் அதற்குக் காரணம் அங்குள்ள ஒரேபண்பாடு என்றும் நான் எழுதிவந்திருக்கிறேன். நெடுங்காலமாக ஒரு பண்பாட்டுப் பரிமாற்றமும் பலவகையான மக்கள் ஊடாட்டமும் கொண்ட மாநிலம் தமிழ். அத்துடன் நீண்ட பண்பாட்டு மரபு உள்ளது. இனவெறுப்பையே தன் கொள்கையாக முன்வைத்த ஓர் அரசியல் இயக்கம் இங்கே அரை நூற்றாண்டு செயல்பட்டும்கூட இங்கே இனவாத மனநிலை வேரோடாமலிருப்பதற்குக் காரணம் அதுவே.

 

மம்மூட்டியை விட சரத்குமார் சிறந்த நடிகர் என்று நான் சொல்லவில்லை. நான் என் கருத்தென எதையும் சொல்லவில்லை. மம்முட்டி அவர் நடிக்கச் சாத்தியமான சிறந்த நடிப்பை நடித்திருக்கிறார், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கே என்றும் சரத்குமார் அசத்தியிருக்கிறார் என்றும் எழுதுவது மலையாள ஊடகங்கள்தான்

 

ஜெ

 

 

 

 

 

நான் பழசி ராஜாவின் சில பாடல் காட்சிகளைப் பார்த்த்தேன். ஓவியப் பக்கங்களை இசை விரல்கள் புரட்டுவது போல் அற்புதமாகக் கோர்க்கப் பட்டிருந்த்தது. அப்பொழுதே ஏதோ மின்னல் வெட்டியது

 உங்களின் கட்டுரை வழி பிற தகவ்ல்களை அறிந்து கொண்டேன்.

பார்ப்போம் தமிழ்ர்களின் ரசனையை வீரபாண்டிய  கட்டபொம்மன் பாணியை உடைக்க முடியுமா என்று

 

சமீபத்தில் வெளியாகி கலாம்ச்ங்களுடன் தோற்ற படம் எதுவுமில்லை என்ற உண்மை இப்படத்துக்கும் நீட்டிக்கப் படுமமா அல்லது விதி விலக்கக்

கோருமா – உண்மயில் ஒரு பரபரப்பு தான்

 

பூபதி

 

அன்புள்ள பூபதி

 

உண்மையில் பழசிராஜா நன்றாக வேடிக்கை பார்க்கத்தக்க நேரடியான படம். சண்டைக்காட்சிகள், போர்க்களக் காட்சிகள் என குழந்தைகளைக் கவரும் அம்சங்கள் கொண்டது. ஒரு பெருஞ்செலவுப் படத்தை குழந்தைகள் பார்க்கக்கூடியதாகவே எடுக்க முடியும். ஒரு சூழலில் உள்ள அனைவரும் அதைப் பார்த்தாகவேண்டும் அல்லவா? ஆனால் இன்னொரு தளத்தில் அன்றைய அரசியல், சமூக சித்திரமும் இருக்கும்

 

ஒரு அசல் தமிழ்ப்படத்தை ரசிப்பது போல் இதை ரசிக்க முடியாது. இதன் உடைகள் பண்பாட்டுச்சூழல் எல்லாமே கேரளம் சார்ந்தது. ஆனால் நாம் ஜப்பானிய சமுராய் படங்களை ரசிக்கிறோம் அல்லவா? அந்த மனநிலையுடன் ரசித்தால் பிடித்துப்போகும் படம்தான்.

 

இன்றைய சூழலில் ஊடகங்கள் என்னவகையான சித்திரங்களை உருவாக்குகின்றன என்பதே முக்கியமானது

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

உண்மை . ஜப்பானிய சாமுராய் படங்களை தமிழகத்தில் கணிசமானோர் பார்க்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் கேரள பண்பாட்டுப் ஆனால் கேரள பண்பாட்டுப் புலத்தின் உட்கூறுகள் தமிழில் எந்த மீ உணர்ச்சியையும் தோற்றுவிப்பதில்லை.

 

அனேகமாக  அனேகமாக கலாபாணிய விடச் சற்று அதிகமாகப் பார்க்கப் படும் என நினைக்கிறேன். தெலுங்கு குறித்து

தெலுங்கு குறித்து ஒன்றும் தெரியவில்லை உங்களின் அபிப்ராயம் என்ன ? தெலுஙிலும் இப்படம் கணிசமான தாக்கத்தை உண்டு

தாக்கத்தை உண்டு பண்ணுமா ? ஊடகங்களின் பங்களிப்பயௌம் மறுப்பதற்கில்லை

 

பூபதி

 

அன்புள்ள பூபதி

 

இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. பார்ப்போம்

ஜெ

 

 

பழசிராஜா முன்னோட்டம்

http://movies.sulekha.com/tamil/pazhassi-raja/trailers/default.htm

முந்தைய கட்டுரைபழசிராஜா வெள்ளிக்கிழமை…
அடுத்த கட்டுரைகடிதங்கள்