கொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து…

தேர்வு ‘ கட்டுரை பற்றி வந்த முதல் குறுஞ்செய்தி நண்பர் மனுஷ்யபுத்திரன் அனுப்பியது– கண்ணீருடன் அதை வாசிக்கிறேன் என்று.. தந்தைமை பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை என்று அவர் வாசித்து முடித்த பின் அதைப்பற்றி மேலும் எழுதினார். அதன்பின் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். பல கடிதங்கள் பிரமிக்கச்செய்தன. பெரும்பாலும் அனைத்து கடிதங்களுக்கும் பதில் போட்டிருப்பேன். எண்ணிக்கை பெருக்கம் காரணமாக தவறுதலாக சில விடுபட்டிருக்கலாம். எவை அந்தரங்கமானவை எவற்றை பிரசுரிகலாமென என்னால் முடிவுகட்ட முடியவில்லை. ஆகவே அக்கடிதங்களின் சாரம் பற்றி என் கருத்துக்களை சொல்கிறேன்.

பள்ளி யந்திரம்
நம் சமூகத்தில் சாரமான ஒரு பகுதியினர் மனதில் பள்ளி பற்றி இருக்கும் கசப்பான மனப்பதிவு கடிதங்களில் தெரிந்தது.. இந்த அளவு நான் எதிர்பார்க்கவே இல்லை. பலர் கல்விகற்று பெரும்பதவிகளில் இருக்கிறார்கள். சொந்த நிறுவனங்களை நடத்துகிறார்கள். ஆனால் பள்ளிநாட்களில் அவர்கள் தண்டனைக் கைதிகளை விட கொடூரமாகக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றும் அவர்கள் நெஞ்சில் அந்த கசப்பு எஞ்சியிருக்கிறது.

அவர்கள் கண்டிப்பாக அறிவுத்திறன் குறைந்தவர்கள் அல்ல. ஏன், சாதாரணமானவர்கள் கூட அல்ல. அப்படியானால் அவர்கள் கொடுமைக்கு ஆளானது அவர்களின் தனித்திறனால்தான். கற்பனை ஆற்றல், கேள்விகேட்கும் ஆற்றல், புதிய கோணத்தில் சிந்திக்கும் ஆற்றல், ஒரு துறையில் மட்டும் அதீத ஆற்றல் போன்ற இயல்புகளினால்தான் அவர்கள் வதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் கற்பித்த பள்ளி என்ற நிறுவனம் ஒரு மாபெரும் இயந்திரம் போன்றது. அது அதற்காகன அளவுகளுடன் உள்ள கச்சிதமான சராசரிகளை மட்டுமே கையாளகூடியது. மீறும் மற்றவர்களை அது நசுக்கும்.

அதன் ஆற்றலுக்குத் தப்பி மேலெழுந்தவர்கள் இவர்கள். மேலெழாமல் அழிந்தேபோன எத்தனையோ பேர் இருக்கலாம். அவர்கள் நமக்கு எழுதப்போவதேயில்லை. உதாரணமாக ஒரு வாசகர் இப்போது ஐரோப்பாவில் முக்கியமான மருத்துவராக இருப்பவர் எழுதியிருந்தார். எட்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாகப்பெற்றதனால் கடும் தண்டனைக்கு வீட்டிலும் பள்ளியிலும் ஆலாகி வீட்டைவிட்டே ஓடிப்போனாராம். ஒருவருடம் ஓட்டல்களில் பணியாற்றினார். கடும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். தினமும் மூன்று§ற்ற் வரை அவரை புணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அப்போதும் வீடு திரும்பவில்லை. அந்த அளவுக்கு பள்ளியை பயம்,வெறுப்பு.

பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டபின் அவரை அவரது அப்பா தண்டிப்பதை நிறுத்தினார். அவரைச் சாதாரண பள்ளியில் சேர்த்து முற்றிலுமாக கைவிட்டார். ஆனால் அதன் பின் அவர் மேலெழுந்து தன் ஆற்றல் வெளிப்படும் இடத்தை அடைந்தார். அவர் ஒரு ஓட்டல் தொழிலாளியாக, குற்றவாளியாக ஆகிவிட்டிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். எத்தனை அபாயகரமான விளிம்பில் வாழ்கிரது நம் மாணவர் உலகம்! இந்த வகையிலான தனிப்பட்ட வாழ்க்கைச் சித்தரிப்புகளை பன்னிரண்டு வாசகர்கள் அனுப்பியிருந்தார்கள்! பள்ளியில் முழுநாளும் குனிந்தே நிற்க வைக்கப்பட்டவர்கள், நான் ஒரு முட்டாள் என்று கழுத்தில் போர்டு மாட்டியபடி பள்ளிவாசலில் நின்றவர்கள், சகமாணவர்களின் கையில் பிரம்பு கொடுக்கப்பட்டு அடிக்கப்பட்டவர்கள்…
பள்ளிகளும் பாலியல் கொடுமைகளும்

பலரும் சொன்ன விஷயம், பாதிரிமார்கள் மற்றும் துறவியருடனான அவர்களின் இருண்ட அனுபவங்கள். என் கட்டுரையில் நான் பொதுவாக துறவியர்களின் குரூரமான ஒழுங்குமுறை மோகத்தையே குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் நகைச்சுவை உணர்ச்சியோ மனமலர்ச்சியோ அற்றவர்களாகவே பொதுவாக இருப்பது வழக்கம்– என் மொத்த வாழ்நாளில் அபப்டி இல்லாத ஒரே ஒரு பாதிரியாரையே கண்டிருக்கிறேன்.  ஆனால் எனக்கு வந்த கடிதங்கள் அவர்களின் மனவக்கிரங்கள் விடுதிகளில் வெளிப்படும் விதம் சார்ந்தவை. அதிர்ச்சி அடையச் செய்பவை அவை. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பள்ளிகளில் நிகழ்ந்தவை. மிக்க குரூரமான பாலியல் வதைகள். அவமதிப்புகள்….

ஒரு கான்வெண்டில் கன்னியா ஸ்த்ரீ ஒருவர் தன்னை இரண்டுவருடங்கள் தொடர்ந்து கீழ்த்தரமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதை ஒர் இளம் வாசகி விரிவாக எழுதியிருந்தார். அந்த நிறுவனத்தில் அது மிக மிக சாதாரணமாக நிகழ்ந்துவருவது என்று அவர் எழுதி பலருடைய அனுபவங்களையும் சொல்லியிருந்தார். இம்மாதிரி நிறுவனங்களில் மாணவியரின் தற்கொலைகள் தொடர்ந்து நிகழ்கின்றன என்று நாளிதழ்களில் காண்கிறோம். சிறிய செய்தியலைக்குப் பின் அவை ‘பேசித் தீர்க்கப்படுகின்றன’. இந்துத் துறவியர் மடத்தில் நடந்ததாக ஒரு நிகழ்ச்சியையும் ஒருவர் எழுதியிருந்தார். தொலைபேசியிலும் சொன்னார். விடுதிகளில் இளம் மாணவர்களை மூத்த மாணவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்குவது மிக சாதாரணமாக நடக்கிறது என்று கடிதங்கள் வழியாக அறிந்தேன்.

நான் இப்போது உணர்வது இதைத்தான். ஒருபோதும் பத்தாம் வகுப்புக்கு கீழே உள்ள குழந்தைகளை நாம் விடுதிகளில் விடக்கூடாது. குறிப்பாக துறவிகள், பிரம்மசாரிகள் நடத்தும் விடுதிகளில். விடுவது தெரிந்தே ஆபத்தை வரவழைப்பது. இக்கடிதம் எழுதியவர்களின் உள்ளத்தில் உள்ள கடும் வலிகளும் சுயவதைமனநிலையும் மிக மிக மனத்தொந்தரவு அளிக்கின்றன. இம்மாதிரி எத்தனையோ வாசித்து அறிந்திருக்கிறேன். நமக்கே அவற்றை அந்தரங்கமாக ஒருவர் எழுதும்போது அது மிகவும் அச்சுறுத்துகிறது. தூக்கமில்லாமல்செய்துவிடுகிறது.

சிறைக்கொட்டடிகள்

நாமக்கல், திருச்செங்கோடு  முதலிய இடங்களில் தொடங்கி இப்போது பாளையங்கோட்டை கோவை என எல்லா இடங்களிலும் பரவியுள்ள  தனியார் சிறப்பு கல்வி நிலையங்களைப்பற்றி வந்த கடிதங்கள் பல பயங்கரமானவை. இந்நிறுவனங்களைப்பற்றி நானும் அறிவேன். சென்ற சில வருடங்களாக என் மகன் அஜிதனை இத்தகைய பள்ளிக்கு அனுப்பும்படி என் நண்பர்களும் சக ஊழியர்களும் பரிந்துரைத்திருந்தார்கள். சராசரி திறன் கொண்ட மாணவர்களை உயரிய மதிப்பெண் பெறவைக்கும் தனிப்பயிற்சி பள்ளிகள் இவை. தொடக்கத்திலேயே ஒரு லட்ச ரூபாய் வரை செலுத்த எவெண்டும். பின்னர் ஒரு லட்ச ரூபாய் வரை படிப்படியாக செலவாகும். இவை  உறைவிடப்பள்ளிகள்.

இது ஒருவகை சிறைக்கொட்டடியேதான். காலை நான்குமணிக்கு சைரன் ஊதியதுமே குழந்தைகள் எழுந்துவிடவேண்டும். எழாத குழந்தைகள் முதலிலேயே கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதனால் பெரும்பாலான குழந்தைகள் சிறு ஒலிக்கே பாய்ந்து எழுந்துவிடுவார்கள். அரைமணிநேரம் குளியல், பிரார்த்தனை, மற்றும் டீ. பிறகு நாலைந்து பேர் கொண்ட குழுக்களாக அமரச்செய்யப்பட்டு படிக்கச் செய்கிறார்கள். ஒரு குழுவுக்கு ஒரு ஆசிரியர் கூடவே இருப்பார். எட்டரை மணிக்கு படிப்பு முடியும். பின்னர் அரை மணிநேரம் உடையணிந்து தயாராவதற்கு. ஒன்பதரைக்கு பள்ளி ஆரம்பிக்கும். பள்ளியிலும் அதே ஆசிரியர்கள்.

மாலையில் ஐந்துமணிவரை பள்ளி. மாலை டிபன். ஐந்தரைக்கு மீண்டும் அதேபோல படிப்பு. இரவு பத்தரை மணிவரை. அதன் பின் இரவுணவு. பதினொரு மணிக்கு தூக்கம். பெரிய ஹாலில். கூடவே ஆசிரியரும் படுப்பார். மாணவர்கள் தூங்கி குரட்டைவரும்வரை ஆசிரியர் விழித்திருக்கவேண்டும். சில பள்ளிகளில் காலையில் மாணவனின் படுக்கை மற்றும் கால்சட்டையை ஆசிரியர் சோதனை செய்வார்– சுய இன்பம்செய்துகொண்டிருக்கிறானா என்று அறிவதற்காக. அதைச் செய்தால் கண்பார்வை மழுங்கும், படிக்கும் கவனம் சிதறும் என்று ஒரு நம்பிக்கை. ”ஒரு நிமிசம் கூட பையன் மேலே கண் இல்லாம இருக்காது சார்”

படிப்பு என்பது நெட்டுருப்போடுதல். ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடத்தை ஆரம்பித்துவிடுவார்கள். பிளஸ் ஒன்னிலெயே பிளஸ்
டூ பாடங்கள். இரண்டுவருடம் புத்தகத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் கையொடிய எழுத வைப்பார்கள். ஒருநாளில் குறைந்தது எட்டு மணிநேரம் எழுத்து! கைவிரல்களுக்கு இரவில் எண்ணை போட்டு நீவுவார்கள். மீண்டும் மறுநாள் எழுத்து. கணிதத்தில் புத்தகங்களிலும் பழைய கேள்வித்தாள்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கணக்குகளை அப்படியே செய்யுள் போல மனப்பாடம்  செய்யவைக்கிறார்கள். அதிலிருந்துதான் கேள்விகள் வரும்.  அப்படியே அச்சுஅசலாக எழுதிவிடவேண்டியதுதான். மதிப்பெண்கள் எடுத்துவிடலாம்.

உண்மையிலேயே பிரமிக்கத்தக்க விளைவுகளைக் காட்டுகிறார்கள். 99 சதவீத மதிப்பெண் என்பது மிக மிகச் சாதாரணம். ஆனால் மாணவர்களில் அனைவருக்குமே ஆழமான குணச்சீர்கேடுகள் உணாகிவிடுகின்றன என்று சில் வருடங்கள் கழிந்து பல பெற்றோர் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு பரிந்துரைத்து, தன் மகனைச் சேர்த்த பேராசிரியருக்கே அந்த்தகைய அனுபவம்தான். தூக்கமின்மை போன்ற நோய்கள். பய்ந்தாங்குள்ளித்தனம் அல்லது அதீத முரட்டுத்தனம். சிலசமயம் இரண்டும் கலந்து. மனசோர்வு மிகச் சாதாரணமாக ஏற்படுகிறது. அங்கே செல்லும் குழந்தைகளில் 80 சதவீதம்பேரும் மதிப்பெண் பெற்று மீள்கையில் மீதிபேர் படிக்கவே முடியாத நிலையை அடைந்துவிடுகிறார்கள்.

ஒரு பள்ளிக்கு நானே சென்று இதையெல்லாம் பார்த்தேன். கடும் தண்டனைகளை. ஓயாத கண்காணிப்பை. அச்சுறுத்தலை. ”ஒரு நிமிஷம் கூட வீணாக விடுறதில்லை சார்”என்று சொல்லி அந்த தலைமை ஆசிரியர் எல்லாவற்றையும் அவரேதான் சொன்னார்.– வெற்றிக்கதைகளை மட்டும். உண்மையைச் சொல்லப்போனால் அங்கே நேரில்செல்லாமல் இருந்திருந்தால் நானே அஜிதனை அங்கே விட்டிருப்பேன்.

என் நண்பர் இளங்கோ அத்தகைய பள்ளிகளின் நடைமுறைகளைப் பற்றிச் சொன்னார். அவர் நல்ல மாணவராக இருந்தார். அவரது அப்பா அதற்கு மேல் ஆசைப்பட்டு அத்தகைய ஒரு பள்ளியில் அவரைச் சேர்த்தார். விளைவாக இளங்கோ மிகமுரட்டுத்தனமானவராக ஆனார். படிப்புகளை விட்டார். அலைமோதினார். இன்றும் நீங்காத பதற்றச் சிக்கல்களுக்கு ஆளானார். அவரே ஒருவழியாக ஆங்கில இலக்கியம் படித்து ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். என்னுடைய மிகமிக நுண்ணிய வாசகர்களில் ஒருவர்.’இண்ணைக்கும் அதுக்காக என் அப்பாவை என்னால மன்னிக்க முடியலை ஜே” என்று ஒருநாள் இளம் போதையில் சொன்னார்.

நான் அறிந்து ரவிக்குமார் எம்.எல்.ஏ மட்டுமே இந்தப் பள்ளிகளை  தடைசெய்ய வேண்டும்  என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சட்டச்சபையிலும் சொல்லியிருக்கிறார்.ஆனால் எந்த அரசும் இதன் மீது கையை வைக்கமுடியாது. காரணம் பெற்றோர்களே விரும்பிச் செய்யும் ஒரு காரியம் இது. ‘முன்னேற்றத்துக்’கான பாதை. இதை தடைசெய்தால் தமிழ் சமூகமே கொதித்து எழும். குறிப்பாக நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு எல்லாமே பிளஸ் டூ மதிப்பெண்ணை நம்பி இருக்கும் இன்றைய நிலையில்.

இதில் உள்ள மனித உரிமை மீறல் எவர் கண்களுக்கும் படுவதில்லை. ஒரு ஆயுள்தண்டனையை நாம் எப்படி நம் குழந்தைகளுக்கு அளிக்கலாம்? அதற்கான தகுதியும் உரிமையும் நமக்கு உண்டா என்ன? பெற்றோர் விரும்பினால் பிள்ளைகளை கொல்லவும் உரிமை உண்டா?

வேதபாடசாலைகள்

இந்த பத்தாம் வகுப்புத்தேர்வில் முதலிடங்களைப் பிடித்த குழந்தைகளின் பேட்டிகளை கூர்ந்து கவனித்தேன். ‘சென்ற மேமாதத்துக்கு முன்னரே படிக்க ஆரம்பித்து விட்டேன், ஒருநாளில் எட்டு மணிநேரம் படிப்பேன், விடுமுறைநாட்களில் பன்னிரண்டு மணிநேரம்’ என்று அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். கணிதம் ஆங்கிலம் அறிவியல் பாடங்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண் என்பது பெரும்பாலும் அஜிதன் பெற்ற மதிப்பெண்கள் அளவுக்கே. ஆனால் தேர்வுக்கு மூன்றுமாதம் முன்பு இவன் பொறுமையாக அமர்ந்து படித்து நான் கண்டதே இல்லை. ஏதாவது குளத்தின் அருகே நோட்புக், பைனாகுலருடன் பறவைகளைப் பார்க்க அமர்ந்திருப்பான். ‘ஹாய் அப்பா!’ என்று வெயிலில் சுண்டிய முகத்துடன் சிரிப்பான். இரவு பனிரண்டுமணிவரை ஏதேதோ புத்தகங்களை ஒரேசமயம் கலந்து போட்டு படிப்பான். அதன் பின் எழுந்து கொடூரமான கொலைக்குரலில் பாட்டுகள் பாடுவான். கிட்டத்தட்ட இவனளவுக்கே மதிப்பெண் பெற்ற சமீர் என்ற இன்னொரு பையன் கிரிக்கெட் பைத்தியம். தேர்வுநாளிலும் கிரிகெட் பார்த்துவிட்டுதான் படித்திருக்கிறான்.

அப்படியானால் இந்த முதலிட மாணவர்கள்[ அதிகமும் பெண்குழந்தைகள்] என்னதான் படித்தார்கள்? வருடக்கணக்காக நாள்தோறும் முழுநாளையும் செலவிட்டு? மீண்டும் மீண்டும் மீண்டும்…. முன்னர் வேதபாடசாலைகளில்தான் இப்படிப்பட்ட படிப்பு உள்ளது என்று படித்திருக்கிறேன். இ.எம்.எஸ் அவரது சுயசரிதையில் மிகநக்கலாக எழுதியிருக்கிறார். வேதங்களை உச்சரிப்பு மாறாமல், இடைவெளிகள் ஒலிகள் கூட மாறாமல், அப்படியே படிக்க வேண்டும். பொருள் தெரியாமல். பத்துப்பன்னிரண்டு வருடம் அப்படிப் படித்து முடித்தால் மூளைக்குள் சிறிய விஷயங்கள் கூடப் போய்ச் சேராது. சுத்தமான மக்கு ஆத்மாக்களாக ஆகிவிடுவார்கள். அதன் பின் வேத பண்டிதர்களின் ‘களங்கமற்ற’ தன்மையை அனைவரும் ரசிப்பார்கள். ‘அம்மா வந்தாள்’ நாவலில் தி.ஜானகிராமனும் இந்த வேதக்கல்வியை பற்றி பேசியிருக்கிறார். இது கல்வியே அல்ல. மைனாக்களை பழக்குவது போன்ற ஒரு வித்தை. இதைத்தான் நம் பிள்ளைகளும் பயில்கின்றனவா?

தரையில் நட்சத்திரங்கள்
‘தாரே ஜமீன் பர்’ படத்தைப் பார்க்கும்படி பலர் எழுதியிருந்தார்கள். நண்பர் அதை முன்னரே கொடுத்திருந்தார். சைதன்யாவும் அருண்மொழியும் மட்டும்தான் பார்த்திருந்தார்கள். நான் பார்க்கவில்லை. படம் பார்க்கும் மனநிலையே இல்லை. அது தத்துவம் சார்ந்த வாசிப்பின் பிரச்சினை. அவ்வகை வாசிப்பு முடியவே முடியாது. ஒரு நூல் இன்னொன்றுக்கு இட்டுச் செல்லும். நான் கடைசியாகப் பார்த்த படம், ‘காளை’. திருவாரூர் பேருந்தில். தாரே ஜமீன் பர் படத்தில் ஆசிரியை மாணவனின் பரீட்சைத் தாள்களை பெற்றோர் முகத்தில் விட்டெறியும் காட்சி அப்படியே என் வாழ்க்கையில் நடந்திருப்பதாக அருண்மொழி சொன்னாள். ஆச்சரியமாக இருந்தது.  

தேர்வு

முந்தைய கட்டுரைவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்