வேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

“வேதாந்தம், தமிழிலக்கியம்: கடிதங்கள்” ( வேதாந்தம்,தமிழிலக்கியம்:கடிதங்கள் ) என்ற பதிவில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, “இந்தக் கட்டுரையை தமிழில் எவரும் வெளியிட மாட்டார்கள். என்னிடம் கட்டுரை கேட்டு காத்திருக்கும் இதழ்கள்கூட பிரசுரிக்காது. இது ஒரு நடைமுறை உண்மை.” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

ஒருவிதமான பொதுமைப்படுத்தலாகவே இது எனக்குத் தோன்றுகிறது. பிற இதழ்களைப் பற்றிப் பேசுகிற தகுதி எனக்கில்லை. ஆனால், நான் இணையாசிரியராக இருக்கிற “வார்த்தை” இதழுக்கு இக்கட்டுரை அனுப்பப்பட்டிருந்தால், கண்டிப்பாக அது பிரசுரிக்கப்பட்டிருக்கும். “இந்திய சிந்தனை மரபு சார்ந்த அனைத்துமே பழமையானவையாக, காலாவதியானதாக கருதப்படுகின்றன” என்றும் எழுதியிருந்தீர்கள். “வார்த்தை” முதல் இதழின் தலையங்கத்திலேயே “ஆம், இந்தியா உலகிற்களிக்கும்” என்ற பாரதியின் வரியுடன், “இந்திய கலையிலக்கிய மரபின் செழுமை, தொன்ம மேன்மை, ஜனநாயகப் பண்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பெருமைப்படுகிறவர்கள் தங்களையும் பிறரையும் அறியும் முயற்சி ‘வார்த்தை'” என்று குறிப்பிடப்பட்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

உங்கள் கட்டுரைகளில் சிலவற்றைத் தாங்கள் இணையத்தில் மட்டுமே எழுத விரும்பினால் அது உங்கள் தேர்வு. ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை எந்த அச்சு இதழும் பிரசுரிக்காது என்ற காரணம் முழுஉண்மையில்லை. ஆதலால், அடுத்தமுறை இந்திய வேதாந்த மரபு பற்றித் தாங்கள் எழுதும்போது, அவற்றை ‘வார்த்தை’க்கு அனுப்பி வையுங்கள். யாரும் பிரசுரிக்க மாட்டார்கள் என்ற என்ற குறை எங்களால் நீங்கட்டுமே.

இக்கடிதத்தைத் தாங்கள் விரும்பினால், தங்கள் இணையதளத்தில் வெளியிடலாம்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

****

அன்புள்ள ஜெயமோகன்,

‘வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்’ குறித்த திவகரின் கடிதத்திற்கான பதில், மிகவும் வெளிப்படையான ஒன்று. இந்திய தத்துவ மரபு குறித்து சிறு அளவிலான எந்த கட்டுரையும் எந்த சிற்றிதழிலும் காணக் கிடைக்காது.

உங்கள் கட்டுரை முதல் பத்தியைப் படிக்கும்போதே , ஆண்டுக்கணக்கான படிப்பும், உள்நோக்கி பார்க்கும் பார்வையும் , தொடர்ந்த தேடலும் , சிந்தனையை எழுத்தாக்கும் வன்மையும் உள்ள ஒருவருக்கு மட்டுமே இத்தகைய கட்டுரை சாத்தியம் என்று பட்டது.இன்றைய சூழலில் நீங்கள் மட்டுமே அவ்வாறு உள்ளீர்கள்.

மற்றபடி , கட்டுரையை முழுவதுமாக செரிக்க எனக்கு பலமுறை வாசிப்பும் ,அதைத் தொடர்ந்த யோசிப்பும் தேவைப்படப் போகிறது. இத்தகைய கட்டுரைகளை தொடர்ந்து நீங்கள் இணையத்தில் எழுத வேண்டும் என்னும் எனது எண்ணத்தைத் தெரிவிக்கவே இக்கடிதத்தை எழுதினேன்.

அன்புடன்,
மதி

வேதாந்தம்,தமிழிலக்கியம்:கடிதங்கள்

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

முந்தைய கட்டுரைநீர் பங்கீடு
அடுத்த கட்டுரைகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து…