சுந்தர ராமசாமி – நினைவின் நதியில்

சுந்தர ராமசாமி 

20-10-2005 காலையில் சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நாள். அதற்கு முந்தைய நாளே அவரது உடல் அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டது. அவரது இறப்புச் செய்தி கேட்ட சனிக்கிழமை முதல் தொடர்ந்து இரவும் பகலும் தூக்கம் இன்றி அவரது நினைவுகளை மீட்டியபடி, அவற்றை எழுதியபடி இருந்தேன். செவ்வாய் விடியற்காலையில் நான்குமணிக்கு முதல் பகுதியை எழுதி முடித்தேன். அச்சில் ஏறத்தாழ 70 பக்கம் வரும். அது கடுமையான உழைப்பும் கூட. ஆழமான களைப்பும் தனிமையுணர்வும் ஏற்பட்டது. அருண்மொழியும் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்ப மனமின்றி கதவைத் திறந்து ?ீரோவை உள்ளே அழைத்தேன். இந்த லாப்ரடார் இன நாய்கள் இயற்கையின் அற்புதமான படைப்பு. மனிதனின் மனநிலைகளை இத்தனை நுட்பமாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய, உணர்வுரீதியாக இத்தனை ஆழமாக நம்முடன் இணையக்கூடிய இன்னொரு உயிர் இப்பூமியில் இல்லை. கரடி போன்ற கரிய உடலும் ஒளிரும் மனிதக் கண்களுமாக அது உள்ளே வந்து வாலாட்டி நக்கி தன் பிரியத்தை வெளிக்காட்டிய பிறகு என் காலடியில் என்னையே நோக்கியபடி படுத்துக்கொண்டது. காலையில் கவிஞர்கள் எம். யுவன், தண்டபாணி இருவரும் வருவதாகச் சொல்லியிருந்தனர். என் நண்பர் அன்புவை நான் வரும்படிக் கோரியிருந்தேன். அவரது அருகாமை தேவைப்பட்டது. ஐந்து மணிக்குப் படுத்துக்கொண்டேன். நாய் அருகிலேயே தூங்காமல் அமர்ந்துகொண்டது. அரைமணிநேரம் தூங்கியிருப்பேன், உடனே விழிப்பு. நினைவுகளின் ஓட்டம். உயிருள்ள பிம்பங்கள். ‘உங்களோட உணர்ச்சிகரம்ங்கிறது ஒருவகையான நரம்புச்சிக்கல். அது உங்களுக்கு ஒரு எழுத்தாளனா பெரிய பலம். மனிதனா பெரிய சுமை ‘ சுந்தர ராமசாமி சொல்வார். உண்மைதான். எழுத்தில் இதே உணர்ச்சிகரம் வெளிப்படும்போது அது மிக மிக இன்பமூட்டுவதாக உள்ளது. சனிக்கிழமை முதல் தொடர்ந்து தூங்காமல் இருக்கிறேன். என் பெரிய நாவல்களை எழுதியபோது அப்படி தவித்திருக்கிறேன். அவையெல்லாம் இனிய துன்பங்கள். இது அப்படியல்ல. தூங்குவதற்காக மாத்திரை சாப்பிட்டேன். உடனே வாந்தி வந்து வெளியே போய்விட்டது. விழித்து எழுந்து அமர்ந்திருந்தேன். ஐந்து மணிக்கு ஹீரோ சிறுநீர் கழிக்க வெளியே போக விரும்பி முனகியது. வெளியே விட்டேன். ஐந்தரை மணிக்கு அருண்மொழி வாசலைத் திறந்தாள். அவள் வாசலைக் கூட்டும் ஒலியும் நாய்களின் குரைப்பும் கேட்டன. ஆறுமணிக்கு யுவனும் அன்புவும் வந்தனர். இடைவெளியே இல்லாமல் சுந்தர ராமசாமி குறித்த நினைவுகளாகப் பேசிக்கொண்டிருந்தோம். 12 மணிக்குத் தண்டபாணி வந்தார். மாலை சுந்தர ராமசாமியின் உடலைத் திருவனந்தபுரத்தில் விமானநிலையத்தில் இருந்து பெறுவதற்காகக் கண்ணனும் பிறரும் செல்லும்போது தண்டபாணியும் யுவனும் கூடவே சென்றார்கள். அன்பு என்னுடன் இருந்தார். அன்று மாலை பெங்களூரிலிருந்து சத்தியமூர்த்தி வந்தார். அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். அன்றிரவாவது தூங்கிவிடவேண்டும் என்று பட்டது. இல்லையேல் மறுநாள் நான் நிலைதடுமாறிவிடக்கூடும், அது அவசியமில்லாத காட்சிப்படுத்தலாகப் புரிந்துகொள்ளவும்படும். ஆனால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் நடந்து சுகுமாரன் முதலியோர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குச் சென்றோம். சுந்தர ராமசாமியின் உடலைக் கொண்டுவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் யுவனும் அங்கேயே தங்கியிருந்தான். அங்கே சென்றதும் முன்னைவிட பலமடங்கு விழிப்பாகிவிட்டேன். சுந்தர ராமசாமி குறித்தே பேசிக்கொண்டிருந்தேன். விடிகாலையில் யுவன் தங்குவதற்காக நான் வீடு திரும்பினேன். குளித்துவிட்டு மனுஷ்யபுத்திரன் வந்து தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். அவர் தயாராக இருந்தார்.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம். 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018.

தொலைபேசி : 91-44-24993448. email : [email protected]

பக். 216 விலை ரூ.100.

நவம்பர் 27ஆம் தேதி சென்னை, அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் அரங்கில் வெளியிடப்படவிருக்கும் இந்நூலிலிருந்து சுந்தர ராமசாமியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை விவரிக்கும் பகுதி இங்கே தரப்படுகிறது.

முந்தைய கட்டுரைராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி
அடுத்த கட்டுரைஅய்யப்ப பணிக்கருக்கு அஞ்சலி