கல்வி,புராணம்

அன்பு ஜெயமோகன் அவர்களே!!

நூறு நாட்களுக்குள் ஏதோ ஓர் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்துத் தர உறுதி பூண்டது போல அவசர அவசரமாய் “சமச்சீர் கல்வி” (அப்படியென்றால் என்ன?!) எனும் கல்வி முறையினை நாடெங்கும் பரப்ப எத்தனிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நோக்கம் தான் என்ன? எதற்கிந்‌த அவசரம்?

 

அன்புள்ள கார்த்திகேசன் அவர்களுக்கு,

 

நம் சூழலில் கல்விச்சீர்திருத்தங்கள் மிக அவசியமாக தேவைப்படுகிறதென்றே எண்ணுகிறேன். ஆனால் அவை நடைமுறை யதார்த்தத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். அதற்குப்பதில் மேலிருந்து அவை திணிக்கப்படுகின்றன. இந்தியாவின் சாபக்கேடே இந்த மனநிலைதான். அறிவுஜீவி மையவாதம். அறிவுஜீவி என்பவன் ஆங்கிலம் பேசத்தெரிந்தவன் சில ஆங்கில நூல்களை வாசித்தவன், அவ்வளவுதான். அவனுக்கு இந்திய யதார்த்தத்தைப் பற்றி எளிய நடைமுறை அறிதல்கூட இருக்க வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவையே தன் கைகளில் போட்டு உருட்டிவிடமுடியும் என்ற  அபாரமான தன்னம்பிக்கையுடன் இருப்பான்.

 

இவர்களில் நம் அதிகாரிகள், இதழாளார்கள்,பேராசிரியர்கள் அடக்கம். இவர்களில் பலரை நான் நேரில்சந்தித்திருக்கிறேன். வடிகட்டிய முட்டாள்கள் என்றே பலரைப்பற்றி என் மனம் கணக்கிட்டிருக்கிறது. ஒரே ஒரு பரீட்சை எழுதி வென்று இந்திய ஆட்சிப்பணியில் ஒருவன் அமர்ந்தால் இந்தியாவின் எந்தத்துறையிலும் அவனே துறை நிபுணர் என்பதுபோன்ற ஓர் அசட்டுத்தனம் வேறெந்த நாட்டிலாவது உண்டா என்று தெரியவில்லை

 

 

நமது கல்விமுறையில் வரவேண்டிய சீர்திருத்தம் என்பது மாணவர்களின் சுயமான வாசிப்பை வளர்க்ககூடியதாக இருக்க வேண்டும். நம் மாணவ்ர்களுக்கு ஒரு நூலை தாங்களே வாசிக்கவும் அதை புரிந்துகொண்டு ஒரு சுருக்கமான கருத்தை தெரிவிக்கவும் அடிப்படைப் பயிற்சியே இல்லை. நம் சூழலில் ஒருவன் உயர்கல்விகற்றிருந்தால்கூட ஒரு நூலை அவனே வாசிக்க முடியாது. ஒரே ஒரு நூலைக்கூட வாசிக்காமல் ஒருவன் இங்கே முனைவர் பட்டம் பெற்றுவிடமுடியும்

 

இரண்டாவதாக நம் கல்வித்துறை ஊழலில் சீரழிது கிடக்கிறது. மதிப்புக்குரிய துணைவேந்தர்கள் என மிகச்சிலர்கூட இன்று இல்லை. பணம்சுருட்டும் வணிகர்கள் நம் கல்விநிலையங்களை ஆள்கிறார்கள். ஆகவே கல்வித்துறைக்குள் தகுதிக்கு இடமில்லை என்ற நிலை நிலவுகிறது . ஒன்று சொல்கிறேன், இன்று சிறந்த கல்லூரி ஆசிரியர்களாக விளங்க முடியும் என நான் எண்ணும் ஒரு பதினைந்து இளம் அறிஞர்கள் உண்டு. அவர்கள் முழுமையான கல்வித்தகுதி கொண்டவர்கள். ஆனால் அவர்கள் எவருக்குமே ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. காரணம் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க முடிவதில்லை. லஞ்சம் கொடுக்கும் வடிகட்டிய மடையர்களால் நிறைந்துள்ளன நம் கல்லூரிகள்

 

பள்ளிகள் தொழிற்சங்க அரசியலாலும் ஊழலாலும் நிறைந்துள்ளன. ஆத்மார்த்தமாகக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பத்துசதவீதம்தான். ஆகவே அரசுப்பள்ளிகளுக்கு கொஞ்சம் பணவசதி உடையவர்கள்கூட குழந்தைகளை அனுப்புவதில்லை. இந்தச் சூழலை சீர்செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை நம் அரசு. பத்து ஆசிரியர்கள் தேவையான சூழலில் எங்குமே ஏழுபேர்தான் இருக்கிறார்கள் . என் மகன் படித்த பள்ளியில் பாதி ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர்கழகத்தில் சொற்கக்கூலிக்கு நியமிக்கப்பட்டவர்கள். சென்ற வருடம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நன்கொடை வாங்குவது தடைசெய்யப்பட்டது. இப்போது அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பாதிபேர்தான்

 

இந்தநிலையைச் சீர்செய்ய எந்த முயற்சியும் எடுக்காத அரசு கொண்டுவரும் சீர்திருத்தங்கள் அனைத்துமே மோசடிகள் என்றே நான் நினைக்கிறேன். ‘கற்றல்கல்வி’ என்ற மோசடி. எண்பது குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் வந்து என்ன தனிப்பட்ட ஆற்றலை வளர்க்கும் கல்வியை அளித்துவிட முடியும்? இதன் விளைவாக அரசுக்கல்வி என்பதே ஒரு மோசடியாக ஆன நிலையில் தனியார் அளிக்கும் உச்சவேகப் பயிர்ச்சி [அதை கல்வி என்றே சொல்ல முடியாது] ஒன்றே கல்வியாக உள்ளது. அதையும் சீரழிக்க, அதன்மேலும் தங்கள் ஊழலின் பிடியை இறுக்க மட்டுமே சமச்சீர் கல்வி கொண்டுவரப்படுகிறது. கல்வித்துறையின் ஊழல்பெருச்சாளிகளான அதிகாரிகள் தனியார் கல்விநிலையங்களில் ஏறி மேய்வதற்கான ஓரு வழி , அவ்வளவுதான். தனியார் கல்வித்துறையில் புழங்கும் கோடிக்கணக்கான ரூபாய் அவர்களை கவர்கிறது

 

இந்தச் சீர்திருத்தங்கள் எவையுமே நாமே உருவாக்குவதில்லை. ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிதியுதவி அமைப்புகளால் நம் மீது திணிக்கப்படுகின்றன. கேரளத்தில் ஏழாதாண்டுகளுக்கு முன்னர் அறிமுகம்செய்யப்பட்ட செயல்வழிக்கல்வித்திட்டம் ஆசிய வளார்ச்சிவங்கியால் கட்டாயப்படுத்தப்பட்டு திணிக்கப்பட்டது. அது பெரும் தோல்வி அடைந்தது. காரணம் நிதிவசதி இல்லாமல் போதிய ஆசிரியர் இல்லாமல் ஆசிரியர்களை கட்டுப்படுத்தும் நிர்வாகம் இல்லாமல் செய்யப்படும் அந்த முயற்சிகள் அபத்தமானவை என்பதே. ஆனால் அதன் பின் அதே ஆசிய வங்கியால் அதே திட்டம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கல்வியை சீரழித்துக்கொண்டிருக்கிறது அது

 

அக்கறை உள்ளவர்கள் இதைப்பற்றி ஆழமாக எழுதியிருக்கிறார்கள். தமிழினி மாத இதழில் எட்வின் பிரகாஷ் எழுதிய கட்டுரையை நினைவுகூர்கிறேன். தங்கள் குழந்தைகளின் கல்வியைக் காக்க தமிழக பெற்றோர் ஒன்று திரண்டு முயலாதவரை இதற்கு விடிவில்லை.

 

ஜெ

 

 

அன்பு ஜெ,

 

                      சமநிலைப் படுத்துதல் என்கிற பேரில் தரமான கல்வியை எல்லார்க்கும் அளிக்க வழி செய்யாமல் ஒரு mediocre கல்வியை அனைவருக்கும் தினித்தல் என்பது நம் சமூகத்தை இன்னும் பின்னிழுத்துச் செல்லும் என்றே நான் கருதுகிறேன்.

 

                     மேலும் இக்கல்வித் திட்டத்திற்கென பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள பொதுப் பாடத்திட்ட வரைவு வேடிக்கையாகவும் வேதனை தருவதாகவும் இருக்கிறது (தமிழ் பாடத்திற்கானதை இணைத்துள்ளேன்).

 

“கம்பன்” என்கிற சொல்லை கேட்காமலே ஒரு மாணவன் 10ஆம் வகுப்பு முடித்து வெளியேறலாம் (முனைவர் பட்டம் கூட பெற்று விடலாம் போல).

2009/11/8 jeyamohan_ B <[email protected]>

– Show quoted text –

 

 

 *88888888

 

 

 

 

அன்புள்ள காத்திகேசன்

 

இது உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. பயனுள்ள கல்வி என்றபேரில் இலக்கியங்கள் வரலாறு போன்றவற்றை கற்பிப்பது தவிர்க்கப்படுகிறது. வரலாற்றுணர்வோ இலக்கிய அறிவோ பாரம்பரிய பிரக்ஞையோ இல்லாத வேலைபார்க்கும் இயந்திரங்களை உருவாக்கும் கல்வி உருவாக்கப்படுகிறது. ஆகவே அன்றாடத்தேவைக்கான மொழி மட்டுமே போதும் என்ற மனநிலை முன்வைக்கப்படுகிறது. அமெரிக்க கல்விநிலையங்களில் கூட அறிவியல் அல்லாத கல்வி பூரணமாக ஒழியும் நிலை வந்துகொண்டிருக்கிறது என்றார் ஜார்ஜ் எல் ஹார்ட்

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

 

வெகு நாட்களாக உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கோயில்களின் ஸ்தல புராணங்கள் குறித்து தங்கள் கருத்து என்ன? ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா? எதுவும் நம்பும்படியாக இல்லை. குறியீடுகளாகவும் தோன்றவில்லை. யார் இதை உருவாக்கி இருப்பார்கள்?

 

அன்புடன்

இளம்பரிதி

 

 

அன்புள்ள் இளம்பரிதி

 

நம்முடைய கோயில்களில் பெரும்பாலானவை சிறிய கிராமிய கோயில்களாக இருந்து மன்னர்களால் விரிவாக்கிக் கட்டப்பட்டவை. பிற கோயில்கள் மன்னர்களால் அமைக்கப்பட்டவை. கோயில்கள் இன்றைய நிலையில் உருவானது பக்தி இயக்கத்தின்போதுதான். அப்போதுதான் புராணங்களும் உருவாயின. சைவ வைண சாக்த பெருமதங்களின் மைய ஓட்டத்துடன் பலநூறு தனிவழிபாட்டுமுறைகளை இணைப்பதற்காகவே புராணங்கள் உருவாயின. அதே மையச் சரடுடன் கோயில்களை இணைப்பதற்காகவே ஸ்தல புராணங்கள் உருவாயின

 

புராணங்கள் பலவும் தன்னிச்சையாக ஆங்காங்கே உள்ள மக்களின் கற்பனைக்கு ஏற்ப உருவானவை. நம் புராணங்களில் தொண்ணூறு விழுக்காடு அர்த்தமற்ற அசட்டுக்கற்பனைகள் மட்டுமே. ஸ்தலபுராணங்களில் அபூர்வமாகவே தத்துவ ஆழமும் கவித்துவமும் காணக்கிடைக்கிறது.  பல ஸ்தலபுராணங்கள் கல்வியறிவற்ற பூசகர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றுக்கான ஒரு தேவை இருந்திருக்கிறது என்று மட்டுமே அதற்கு பொருள்

 

நம்முடைய ஸ்தலபுராணங்களில் கணிசமானவை 18 ஆம் நூற்றாண்டில் உருவானவை. தத்துவஞானம் முக்கியத்துவமிழந்து இந்துமதம் தேங்கிநின்ற காலகட்டத்தில் . பிறந்தவை. கிராமவாசிகள் கவிராயர்களுக்கு ஊதியம் கொடுத்து ஸ்தலபுராணங்களை எழுதச்செய்தார்கள். உ.வே.சாவின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் தொழிலே அதுதான். அந்தக் கவிராயரின் தகுதியைப்பொறுத்து ஸ்தலபுராணங்கள் மேலாகவோ கீழாகவோ இருக்கும்

 

உதாரணமாக குமரிமாவட்ட ஸ்தலபுராணங்களில் கன்யாகுமரி அம்மனின் ஸ்தலபுராணம் கவித்துவமானது. திருவட்டார் ஆலயத்தின் ஸ்தலபுரானம் கற்பனையற்ற எளிய நாட்டார் மனதால் உருவாக்கப்பட்டது. சிவாலய ஓட்டத்திற்கான புராணம் கேவலமான அசட்டுக்கற்பனை.

 

இவை ஒரு வரலாற்றுத்தேவைக்காக உருவானவை. தரம் பிரித்தறிவது நம் கடமை

 

ஜெ

 

 

 

 

 
 அன்புள்ள ஜெயமோகன்,

 

உங்கள் நலம் அறிய ஆவல். சில நாட்களுக்கு முன்பு, கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன், நீங்கள் ஒரு வலைப்பதிவிலேயோ அல்லது வேறொருவருக்கு பதில் அளிக்கையிலேயோ  (அந்தப் பதிவை சரியாக சுட்ட முடியவில்லை), தற்போதுள்ள உபன்யாசகர்கள் ஞானத்தைப் பற்றி எடுத்துரைக்காமல் வெறும் பக்தியைப் பேசுகிறார்கள் என்று கூறி உள்ளீர்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்வேன். அதிலும் குறிப்பாக வைஷ்ணவ உபன்யாசகர்கள் பக்தியையே பிரதானமாக எடுத்துரைக்கிறார்கள். வைஷ்ணவம் சரணாகதத்தை முன்வைப்பதால் அப்படி அமைந்து விட்டது என்று நினைக்கிறேன்.  இன்னொரு காரணம் விசிஷ்டாட்வைதத்தில், பக்தியோடு கூடிய ஞானத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற முக்கியத்துவம்.

 

மேலும், பழங்காலத்தைப் போல் இன்றைக்கு அத்வைத – விஷிஷ்டாத்வைத வாதப் போர்கள் இல்லாமையால், வைஷ்ணவ உபன்யாசகர்கள் விசிஷ்டாத்வைதத்தை   ஒட்டிய ஞான மார்க்கத்தை பின்னுக்கு தள்ளி விட்டார்கள் என்று நினைக்கிறேன். 

 

காலக்க்ஷேபங்களில் இன்னமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவை பொதுவில் நடப்பவை அல்ல. அவரவர் ஆசார்யன் வம்சத்தில் உள்ள காலாக்ஷேப அதிகாரம் உள்ளவர்களால் கற்றுக் கொடுக்கப்படுகிறது. பொதுவில் நடத்தப்படும் சொற்பொழிவுகளில் ஞான மார்க்கத்தை பேச முடியுமா என்பது ஒரு சந்தேகம். அப்படிப் பேசினால் கேட்க யாரவது இருப்பார்களா? தெரியவில்லை. 

 

ஆனால், ஒரு விதத்தில் இந்த முறை  ஸ்ரீவைஷ்ணவ பிராமணர் அல்லாதவர்களை தவிர்த்து விடுகிறதோ என்று ஒரு அச்சம் இருக்கிறது. இப்போதைக்கு ஸ்ரீவைஷ்ணவத்தை ஒட்டிய ஞான மார்கத்தை பிராமணர் அல்லாதவர் கற்றுக் கொள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள வைஷ்ணவத் துறையில் முதுகலைப்  பட்டப் படிப்பு படித்தால் உண்டு. வேறு வழி இருக்கிறதா என்று தெரியவில்லை. 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

 

– சீனு.

 

 

 

அன்புள்ள சீனு அவர்களுக்கு

ஹரிகதை, உபன்னியாசம் போன்றவை முழுக்க முழுக்க பக்தி இயக்கத்தால் பக்தியைப் பரப்புவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட கலைவடிவங்கள். பக்தி இயக்கம் பெருவாரியான கல்வியில்லா மக்களை உள்ளே கொண்டுவர இசையையும் கலையையும் பயன்படுத்தியபோது உருவானவை அவை. ஆகவே அவற்றில் இருந்து பக்தியை விலக்கவேமுடியாது.

ஆனால் பக்தி என்பதே இங்கே தத்துவத்துடன், மெய்ஞானத்துடன் இணைந்தே இருந்தது. நம் மாபெரும் பக்திநூல்கள் எல்லாமே மாபெரும் ஞானநூல்களுகூடத்தான். லௌகீகமான பக்தி என்பதை இந்து மரபில் மிகக்குறைவாகவே காணாமுடியும். எனக்கு அதைக்கொடு இதைக்கொடு என கடவுளிடம் பேரம்பேசும் பக்தி இந்து மதத்தின் கட்டமைப்புக்குள் அனேகமாகக் கிடையாது.

ஆனால் இன்று வெறும் லௌகீக பக்தி மட்டுமே எல்லா தரப்பில் இருந்தும் முன்வைக்கப்படுகிறது. எளிய ஸ்தலபுராணங்கள், தோஷ நிவர்த்திகள், வழிபாட்டுச்சடங்குகள், கதைகள் — அவ்வளவுதான். இது எது இந்துமதமோ அதை மெல்லமெல்ல இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது. இதையே நான் சொல்கிறேன்

ஞானம் குறித்துப் பேசினால் கேட்பார்களா? ஞானத்துடன் பேசினால் கேட்பார்கள். முக்கூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் பேசியபோது கேட்கவில்லையா? வாரியார் பேசியபோது கேட்கவில்லையா? பேச ஆள் இல்லை

அந்தக்குறையை உணர்ந்தால் போதும் அது உருவாகும். வெறும்  லௌகீக பக்தியைக் கக்கிக்கொண்டிருப்பவர்களை போற்றிப்புகழாமல், அவர்களே கடைசிப்புள்ளி என எண்ணாமல் இருந்தால் போது. தேவை எதையும் உருவாக்கி அளிக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைமலேசியா அகிலன் வலைப்பூ
அடுத்த கட்டுரைவந்தேமாதரம்