சாரைப்பாம்பின் பத்தி

ஜெயமோகன் அவர்களே,

ம.க.இ.க முதலான அமைப்புகள் சீன நிதி உதவி பெறுவது இல்லை. அப்படி பெறுவதாக இருந்தால் மத்திய அரசின் அயல் விவகார அமைச்சகத்தின் அறிவுக்கு எட்டாமல் செய்ய முடியாது. அடுத்த கணமே ம.க.இ.க அமைப்பை தடை செய்து விடுவார்கள்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை இப்படிப்பட்ட அவதூறு மூலம் ஒடுக்க நினைத்தார்கள். காரணம், உதயகுமார் முன்பு அந்நிய நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனத்தை நடத்தியதால். எனவே முதலில் எடுபட்ட நாராயணசாமியின் குற்றச்சாட்டு பிறகு சந்தி சிரித்தது. காலப்போக்கில் நிலைக்கவில்லை. ஏனென்றால், உதயகுமார் மிக வெளிப்படையாக செயல்பட்டது தான்.

உதயகுமாரை விட பன்மடங்கு வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவது ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள். கட்சியின் கொள்கைகள், நிதி ஆதாரம் முதலானவற்றில் அதிசயிக்கத்தக்க ஒளிவின்மை இருக்கிறது. கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு அந்த பகுதிகளில் தோழர்கள் குவிந்து பொதுக்கூட்ட நேரத்துக்கு முன்பாக பொதுக்கூட்ட நோக்க பிரசுரத்தை விநியோகித்து அஞ்சு, பத்து, ஐம்பது, நூறு என்று மக்களிடம் வசூல் செய்வார்கள். மாநாடு என்றால் சில மாதங்களுக்கு முன்பாகவே தோழர்கள் குவிந்து குறிப்பிட்டப் பகுதியை சுற்றிலும் முகாமிட்டு பணியாற்றி மக்களிடம் வசூல் செய்வார்கள். முக்கியமாக, கட்சியின் கொள்கைகளையும், கூட்டத்தின் நோக்கத்தையும் விளக்கிய பிறகே வசூல் செய்வர். சில வார்த்தைகளிலிருந்து சில மணிநேரம் வரையிலும் உரையாடி விட்டே நிதி வசூல் செய்வார்கள், தோழர்கள். இது போக தனி நபர்கள், தோழர்கள் மனமுவந்து அளிக்கும் நிதிகளும் உண்டு. பேருந்துகள் மற்றும் ரயிலில் தோழர்கள் குழுவாக பிரிந்து சென்று பிரச்சாரம் செய்வார்கள். அப்போது நிறைய மக்கள் கொட்டி கொடுப்பார்கள்.

பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடைபெறும் போது உரை நடுவே துண்டேந்தி தோழர்கள் கூடியிருக்கும் மக்களிடம் செல்வார்கள். அப்படியும் நிதி கிடைக்கும். அதனை கூட்ட முடிவில் தோழர்கள் அறிவிப்பார்கள். வசூலிலும் நெறிமுறைகள் உண்டு. அடகுகடைகாரர்கள் மற்றும் சுரண்டல் முதலாளிகளிடமிருந்து வசூலிக்க மாட்டார்கள், தோழர்கள். சி.பி.எம் -க்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது ம.க.இ.கவுக்குத் தான். ஒரு சாதாரண பொதுக்கூட்டத்துக்கு பத்தாயிரத்துக்கும் குறையாமல் மக்கள் கூடுவார்கள். பொதுமக்கள், மாற்றுக் கட்சியினர், ஜனநாயக இயக்கத்தினர் என்று பலரும் விருப்பார்வத்தோடு கலந்து கொள்வர். 20 வருடமாக தோழர்களை அறிந்திருப்பதாக நீங்கள் சொல்வது பொய். நீங்கள் தோழர்களை பற்றி மகஇகவுக்கு விரோதமான நபர்களிடமிருந்து மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புண்டு.

நீங்கள் திறமையாக வைத்திருக்கும் வாதம் ஒன்று இருக்கிறது. அந்நிய நிதி உதவி பெற்றுக் கொண்டு ‘இந்தியா ஒழிக’ என்று கத்துபவர்கள் மட்டுமே தேச் விரோதி என்கிறீர்கள். அதன்படி அந்நிய நிதி உதவி பெற்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் மட்டுமே மோசமானவர்கள் ஆகிறார்கள். ஆனால், அந்நிய நிதி உதவி பெற்றுவிட்டு தேசபக்தி வேடம் போடும் வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் பிழையானவர்கள் அல்லர் ஆகிறார்கள். உங்கள் திறமை இல. கணேசனுக்கே வராது. பா.ஜ.கவில் எங்கோ இருக்க வேண்டியவர் நீங்கள். ஏன், இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று நினைக்க பரிதாபமாக இருக்கிறது. அந்நிய நாடுகளிலிருந்து நிதி பெறும் அமைப்புகளிலே முன்நிற்பது வி.ஹெச்.பி என்ற விபரம் நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்து வசூலிக்கப்படும் நிதிகள் மூலம் இந்தியாவில் ஏராளமான கலவரங்களை திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள். நீங்கள் அறிந்த இந்த உண்மைகளை சொன்னால் நீங்கள் ஜெயமோகனாக இருக்க முடியாது. நன்றி.

உண்மையுடன்,
சுக்தேவ்.

அன்புள்ள சுக்தேவ்,

நீங்கள் இதழாளர் சுக்தேவ் இல்லை என நினைக்கிறேன். இதழாளர்கள் இந்த அளவுக்கு அப்பாவித்தனமாக இருக்கமாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை

நீங்கள் ம.க.இ.க என்னும் அந்த அமைப்புக்குள் பொறுப்பில் இருப்பவ்பராகவும் இருக்க நியாயமில்லை. அவர்கள் அப்படி வெளிக்காட்டமாட்டார்கள். ஆக நீங்கள் வெறுமே வினவு போன்ற தளங்களை வாசித்து ஒரு உடனடி மனஎழுச்சியை கற்பனைசெய்துகொள்ளும் அப்பாவி என ஊகிக்கிறேன் – ஒருவசதிக்காக

உங்களிடம் நான் என்ன விவாதித்தாலும் ஏறாது. அப்படி என்னிடம் விவாதித்து கொதித்த பலர் சிலவருடங்கள் கழித்து பிடரியில் அடிபட்டவர்களாக உண்மைகளை உணர்ந்து கண்ணீருடன் வந்து பேசியிருக்கிறார்கள். மிகச்சமீபத்தில்கூட சென்னை விடுதி ஒன்றில் ஒரு நண்பரின் கண்ணீரை கண்டேன். கூடவே இருந்த கவிஞரும் அதே கண்ணீரை சில ஆண்டுகளுக்கு முன் விட்டவர்தான்.

நண்பரே, மிக எளிமையான தத்துவார்த்த வினா. இந்திய அரசு அதற்கு உண்மையிலேயே ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஓர் அமைப்பை எப்படிக் கையாளும் என்பதுதான். இந்திய உளவுத்துறையை அல்லது காவல்துறையை சற்றேனும் அறிந்த ஒருவர் அதிகபட்சம் நூறுபேர் கூட தேறாத, மேலும் நூறு ஆதரவாளர்களக்கூட தேற்றிக்காட்ட தெம்பில்லாத, இந்த போலிப்புரட்சி குறுங்குழுக்களை ஒருநாளில் அது நசுக்கி அழிக்கமுடியும் என அறிந்திருப்பார்ர். இந்திய அரசு ஆணையிட்டதும் வெறும் ஒரே வாரத்தில் தமிழகத்தில் செயல்பட்டுவந்த ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்தும் முழுமையாகவே ஒடுக்கி அழிக்கப்பட்டன என்பதை நான் அண்மையாக நின்று அறிந்தவன்.

அப்படியென்றால் இவை எப்படி இத்தனைகாலம் நீடிக்கின்றன? இத்தனை வசைகளை இந்திய தேசியம் மீதும் அரசின் மீதும் இடைவிடாது பொழிந்தபடி எப்படி வாழ்கின்றன? இவை அரசால் விட்டுவைக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் இவற்றுக்கான தேவை உள்ளது. இவை போலி மனிதர்களால் [மருதையன் வீராச்சாமி என்றெல்லாம் பெயர்சூட்டிக்கொண்டிருக்கும் பிராமணர்களால்] தலைமைதாங்கப்பட்டிருக்கும் போலி அமைப்புகள். இவற்றுக்கு பலவகைகளில் சீன நிதியுதவி வருவதும் அரசுக்குத் தெரியும்.

ஒருமுறை காவல் உயரதிகாரி ஒருவர் சொன்னார். ‘சாரைப்பாம்பு ஒரு வீட்டடியிலே இருக்கிறது நல்லதுசார், அது இருக்கிற இடத்திலே விஷப்பாம்பு வராது’ இக்குழுக்கள் பிராமணர்களால் தலைமைதாங்கப்பட்டு சீனநிதியுதவி பெற்று சில்லறை வசைகளுடன் வாழும்வரை இங்கே உண்மையிலேயே கொந்தளிப்பென ஏதும் நிகழாது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக இக்குழுக்கள் இங்கே உள்ளன. பிளவுபட்டும் மாறிமாறி வசைபாடியும் கொள்கைமயிர்பிளப்பு செய்தும் இவை இங்கே வாழ்கின்றன. இவை எதையும் எங்கும் செய்துவிடமுடியாது

ஆனால் எங்கு அபாயம் நிகழும் என்றால் வடகிழக்கு வாயிலின் ஊடாக பீகார் வங்காளத்தின் வழியாக சத்திஸ்கர் ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு நேரடியான ஆயுதமளிக்க சீனாவால் முடியும்போது. அது வரை இவற்றை விட்டுவைப்பதே அனைத்துவகையிலும் சாதகமானது. அவ்வளவுதான்

இவை நகரப்பேருந்துகள் போல. வருடத்துக்கு ஐம்பது இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளே வருவார்கள். ஐம்பதுபேர் வாழ்க்கையை இழந்து கண்ணீருடன் வெளியே செல்வார்கள்.மூலவர்கள் மட்டும் அப்படியே கொலுவீற்றிருப்பார்கள். சிகரெட்டை இடக்கையால் இழுத்து ஊதி மோவாயைத் தூக்கி மோட்டுவளையைப்பார்த்துக்கொண்டு போலிச்சித்தாந்தம் பேசியபடி.

நண்பரே, நான் குறைந்தது இருபது ம.க.இ.க கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்களுக்கு வரும் கூட்டம் என்ன என்று எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களால் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளமுடியாது. முன்னரே மக்களிடம் உருவாகியிருக்கும் பிரச்சினைகளைக் கையிலெடுப்பார்கள். ஏற்கனவே பிறரால் திரட்டப்பட்ட மக்களிடம் செல்வார்கள். இறால்பண்ணை எதிர்ப்பு போராட்டம், கூடங்குளம் போராட்டம் போல.

அதில் மிதமிஞ்சிய தீவிர நிலைபாட்டை எடுத்து கோஷமிட்டு தற்காலிகமாக கூட்டம் சேர்ப்பார்கள். அதுவும் சிலநாட்களுக்கு. அப்பிரச்சினையை வன்முறையில்லாமல் முன்கொண்டுசெல்ல நினைக்கும் ஜனநாயக சக்திகளை இக்கட்டில் ஆழ்த்துவார்கள். அரசு அதை வன்முறைமூலம் கையாள வழியமைப்பார்கள். அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு விலகிச்செல்வார்கள். இறால்பண்ணை போராட்டத்தை அணுக்கமாக இருந்து கண்டவன் நான்

நீங்கள் குறைந்தபட்சம் ஒன்றையாவது விசாரித்துத் தெரிந்துகொண்டிருக்கலாம்.நான் முதிரா இளமையிலேயே ஓர் அரசியலியக்கத்தின் உச்சத்தில் சில ஆண்டுக்காலம் செயல்பட்டவன். அரசியலமைப்புகள் ‘உண்மையில்’ எப்படிச் செயல்படும் எப்படி எப்படி நிதி பெறும் என்றெல்லாம் நன்றாகவே அறிந்தவன். நாளிதழ்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வாசித்து அரசியல் பேசக்கூடியவனல்ல.

ஆகவே எனக்கு எந்த அரசியலியக்கமும் முன்வைக்கும் வெற்று கோஷங்களில் நம்பிக்கை இல்லை. இலட்சியவாதப்பேச்சுக்களையும் கொள்கை விளக்கங்களையும் முதல்மதிப்புக்கு நான் எடுத்துக்கொள்வதுமில்லை.அந்நாட்களில் மிகமிக உட்தகவல்களையே நான் அறிந்திருக்கிறேன். இவ்வமைப்புகளுக்கு நிதி வரும் வழிகள் என்னென்ன என்பதை. நீங்கள் அவ்வியக்கத்தில் கொஞ்சநாள் உள்ளே சென்று இருங்கள். உங்களுக்கும் தெரியும்

ஆம், நான் திட்டவட்டமாகவே சொல்கிறேன். ஒரு கலாச்சார அரசியல் அமைப்பு தனக்குச் சாதகமானவர்களிடமிருந்து வெளிப்படையாக நிதி பெறுவதில் பிழை ஏதும் இல்லை. விவேகானந்தரின் ராமகிருண்சமடமே அப்படி ‘அன்னிய நிதியாதாரத்தால்’ உருவாக்கப்பட்டதுதான். அதுதான் இந்தியாவில் மாபெரும் பஞ்சநிவாரணப்பணிகளை ஆற்றியது. அதுவும் சீர்குலைவு வேலைகளுக்கு நீங்கள் பெறும் எச்சிலும் சமானமா என்ன?

அந்த நிதியளிக்கும் அமைப்புக்கு இந்திய தேசம் மீது, இங்குள்ள மக்கள் மீது என்ன அக்கறை உள்ளது என்பதுதான் அளவுகோல்.ஏகாதிபத்திய ஆதரவு அமைப்பும், அன்னிய உளவு அமைப்பும் அளிக்கும் நன்கொடைகளுக்கும் கலாச்சார, சமூகவியல் அமைப்புகள் ஒத்த கருத்தால் மனிதாபிமானத்தால் அளிக்கும் நிதிக்கும் பெரும் வேறுபாடு உண்டு.

நாற்பதாண்டுக்காலம் நேபாளத்தில் செயல்பட்ட இடதுசாரிக்குழுக்கள் அந்நாட்டை கைப்பற்றி சீனாவின் காலடியில் போட்டதை, சீனப்பெருமுதலாளிகளின் அருளுக்காக அந்த இடதுசாரிகளின் தலைவர் சென்று கும்பிட்டு நின்றதை, அந்தப்பட்டினி தேசத்தை மேலதிகமாக அடிமைத்தளைக்கும் சென்று செலுத்தியதை கண்டுகொண்டிருக்கிறோம். நீங்கள் பெறும்கூலி எதற்காக என எவருக்குமே ஐயமிருக்காது

நண்பரே, நான் இந்துத்துவ அரசியலை விட்டு விலகி இருபத்தைந்தாண்டுகளாகின்றன. அதை நானே பதிவுசெய்திருக்கிறேன். அதன்பின்னரே நீங்களும் அறிவீர்கள். இன்று கட்சிஅரசியல்கள் அமைப்புசார் அரசியல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதையும் வெளிப்படையாகவே வைத்திருக்கிறேன்

இனி, நம்பிக்கை வருமென்றால் அதை உங்களைப்போன்ற டப்பாநடனக்கலைஞர்களை நம்பி மறைத்துக்கொள்வேன் என்று நீங்கள் நம்பினீர்கள் என்றால், மன்னிக்கவும், உங்களைப்பற்றி ரொம்பத்தான் உயர்வாக மதிப்பிட்டிருக்கிறீர்கள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 40