விஷ்ணுபுரம்:ஓர் இணையப்பதிவு

அந்த புத்தகம் அதன் பல பக்கங்களை புரட்டி கொண்டு இருந்தது. சில பக்கங்கள் மிக வேகமாகவும், சில பக்கங்கள் பல நாட்கள் புரட்டபடாமலும் இருந்தன. புத்தகமே அதற்கு காரணம். புத்தகத்தின் இயக்கம் புலப்பட நாள் பிடித்ததால் பேருந்தின் சன்னல் வழி பார்வை மட்டுமே கொண்டு வாசிக்க முடிந்தது.

*************
அந்த நகரத்தில் மதம் கொண்ட யானைக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருந்தது. யானை ஒரே குழப்பத்தில் இருந்தது. யானையிலும் குலம் எதும் இருந்திருந்தால் தான் பிழைத்திருக்க வாய்ப்பிருக்குமா எனற ஐயம் கொண்டது. உயர் குல தண்டனைகள் மயிலிறகால் வருடுவதாகவும், தாழ்த்தப்பட்ட குல தண்டனைகள் கழுத்தறுப்பதாகவும் இருந்ததால் அது உயர் குலமாக மாறமுடியுமா என யோசிக்கலாயிற்று.

**************

அஜிதனுக்கும் பவதத்தருக்கும் இடையேயான ஞானசபை போராட்டத்தின் ஊடே வெவ்வேறு மதங்களான மீசாம்சம், சைவம், சமணமும் மற்றும் பௌத்த உட்பிரிவுகளும் தர்க்கமாய் வந்தன. விஷ்ணுபுர கோவிலில் கர்ப்பகிரகத்தின் கதவுகளால் அடைக்கப்பட்டவன் கூச்சல் தாளாது காதுகளை மூடிக் கொள்ள முடிவு செய்தான். செந்தலை பட்டனால் சிறையுண்டவன் இன்னும் கோபமாகதான் இருந்தான்.

*************

விஷ்ணுபுரத்தில் முதலில் செதுக்கிய சிற்பி கற்பனை உள்வாங்கிதான் செதுக்கியிருப்பார். விதிகளோ, மரபுகளோ அவனுக்கு சிலை செதுக்குதலை போதித்து இருக்காது. சிலைகளின் வீரியம் கொடுத்த உணர்வினால் அச்சம் கொண்ட கும்பலே சிற்பிக்கும் விதிகளை, மரபுகளை கொடுத்திருக்க கூடும். தலைமை சிற்பி இப்போதெல்லாம் சிற்பம் செத்து விட்டது என்றே கூறிக் கொள்கிறார்.

*************

சந்திரகீர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை. வேத முழக்கம் வேஷம் கட்டும் வீதிகளை பார்க்கையில் நொந்து போய் இருந்தார். ஊட்டு புறைகளில் அனுமதி மறுக்கப்பட்டு விஷ்ணுபுரத்தால் ஒதுக்கப்பட்ட மக்களின் குரல் வேத முழக்கங்களில் விழுங்கப்பட்டு வந்தது. பவதத்தரின் புத்திசாலிதனம் விஷ்ணுபுரமெனும் அதிகார மையத்தை காத்துவந்தது. நாளொரு புராணம் புனையப்பட்டு விஷ்ணுபுர வரலாறாய் மாறி கொண்டிருந்தது. நெடிய மதில்கள் உடைய விஷ்ணுபுரம் அதன் வரலாற்றுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

ஞானசபை இயக்கம் சந்திரகீர்த்திக்கு புலப்பட்டது. பவதத்தரின் வாதிடும் திறமை வேதத்தின் வெற்றியாக நிறுவப்பட்டிருந்தது. அவரின் பலகீனம் அவரது மகனே. உடலெல்லாம் சாம்பல் பூசி சுடுகாட்டு சித்தனாய் ஞானதேடல் கொண்டவன் மரபு, உறவு எல்லாவற்றையும் எரித்து சாம்பல் பொடியாக்கியிருந்தான்.

அஜிதனை முதலில் காஞ்சியில் பார்த்தபோதே அவனுடைய ்பௌத்த அறிவை கண்டு கொண்டார். பற்று அறுக்கும் முனி வெற்றி களிப்பில் பற்றுக் கொண்டதை கண்டதும் சந்திரகீர்த்தியின் மூளை சந்தோஷம் கொண்டது. கிட்டதட்ட சுடுகாட்டு சித்தனை ஒத்த உடலமைப்பும், முகப்பொழிவும் கொண்டிருந்த அஜிதனின் சந்திப்பு பவதத்தனை உலுக்குமென அவருக்கு பட்டது. மூடப்பட்ட கதவுகளை உடைத்து விஷ்ணுவுக்கு விடிவு செய்யும் காலம் அவரின் கண்ணில் பட்டது. வேதங்களிலும் கோவில்களிலும் முடக்கப்பட்ட நகரத்தின் ்செல்வம் எல்லோருக்கும் பயன்படுத்தல் இவன் வழி சாத்தியம் என்று முடிவு செய்தார். விஷ்ணுபுர ஞானசபைக்கு இவனை கொண்டு செல்வது எப்படி என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

************
ஞானசபை வெற்றி உண்டாக்கிய வெறுமை அஜிதனின் உள்ளும் புறமும் நிரம்பியது. சந்திர கீர்த்தியின் கையில் விஷ்ணுபுர அதிகாரத்தை ஒப்படைத்தில் பளு குறைந்ததாக தெரியவில்லை. வென்றது பௌத்தமா இல்லை தருக்கமா என்ற வினா தந்த பளு மனவெளி நின்றது. வெற்றி என்பது பிறரின் தோல்வியிலா என்ற கேள்வியும் எழுந்து நின்றது. பிறரின் தோல்வியில் சிந்தை சிரிக்கையில் தானும் தோற்றதாகவே பட்டது. துற என்று கூறும் புத்தரின் கொள்கையில் வெற்றி என்பது சேகரிக்கும் பொருள்தான். சேமிக்கையில் துறவி என்ற நிலை எது?

சிற்பியின் உளியாய் சந்திரகீர்த்தி தனை பயன்படுத்தியதால் சந்திரகீர்த்தியிடம் ஒரு பயமும் வந்தது. உளி பூஜிக்கப்பட்டாலும் சுயமாய் இயங்குவது இல்லை. இயக்குபவன் பொருத்தே அதன் காரியம். வடபுலம் வந்த லாமாவின் மரணம் கொடுத்த பயம் இப்போது சந்திரகீர்த்தியினாலும் வந்தது.

வினாக்களுக்கு வயதாக வயதாக விடைகளை தேடுவதை விட விடைகள் தேடி வந்தால் பார்க்கலாம் அஜிதன் முடிவு செய்தான். மௌனித்திருக்க பழகலானான்.

****************
தத்துவங்கள் வெற்றி தோல்வியை எண்ணி உருவாக்கப்படுவதில்லை. தருக்கங்களே வெற்றி தோல்வியை நோக்கி உருவாக்கப்படுகின்றன. தத்துவங்கள் தனி மனித ஆன்மீக தேடல்கள், சமூக தேடல்கள் மேல் உருவாக்கப்படுகின்றது. அவற்றை படைக்கும் மனிதர்களின் அன்றைய காலகட்ட உணர்வுகளை தத்துவங்கள் பிரதிபலிக்கின்றன.
***************

ஆழ்வார் உருவாக்கங்களும், வைஜெயந்தி எனும் குதிரையின் மேல் சுவர்க்கம் பயணித்தலும்
தலைமையை குளிர்விக்க மொழிப்புலமை காட்டும் வராலாற்றாசிரியார்களால் நொடிப்பொழுதில் உருவாக்கப்பட்டுள்ளது. வராலாற்றாய் உருவாகும் புனைவுகள்தான் ஆளும் வர்க்கத்தின் அதிகார பீடத்தினை அலங்காரமாகவும், அஸ்திவாரமாகவும் தாங்கி பிடித்திருந்தன.

***************

அரசனுக்கு ஆன்மீகம் தேவைப்பட்டது. அதற்காக குரு உருவாக்கப்பட்டார். குருவின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டது. அதிகாரத்தை ்நிலை நிறுத்த ஆலயம் அமைக்கப்பட்டது. அச்சமும், பிரமிப்பும் உருவாக்கும் பிரமாண்டம் ஆலயத்தில் பொதிக்கப்பட்டது. சடங்குகளும், சாத்திரங்களும், மாயா வித்தைகளும் ஆலயத்தின் வழி வந்தன. ஆன்மிகத்தின் ராஜகோபுரமாய் ஞானசபை விவாதம் உண்டு. தத்துவமென தருக்கம் காட்டப்பட்டது. தருக்கத்தின் வெற்றியில் குருவின் ்காலடியில் அரசனோடு மற்ற அனைவரும்.

**************

பெருமூப்பன் புரளும் போதெல்லாம் வசந்தன் எனும் பாணன் அவனை விஷ்ணு என்றே குறிப்பிட்டான். வசந்தனுக்கு விஷ்ணு எனும் தர்க்கம் பிடித்ததால் பெருமூப்பன் விஷ்ணுவானான். வசந்தனுக்கு உங்களையோ என்னையோ பற்றிய தர்க்கம் பிடித்திருந்தால் அவன் நம்மை கூட சொல்லியிருப்பான். விஷ்ணு தத்துவமா தர்க்கமா என வசந்தன் தர்க்கம் கூட செய்வான்.

வசந்தன் எனும் பாணன் முடிக்க மற்றவன் கதையை தொடர்ந்தான். பெருமூப்பனிடத்து மோதி உடையும் தலைகளும், அவனிடத்து விரிந்த கனவுகளும் பெருமூப்பனின் சொத்தே. வசந்தனுக்கு கதை சொல்லி அலுப்பானாதால் தானும் அந்த புத்தகத்தின் பக்கங்களின் வார்த்தைகளாக முடிவு செய்து கொண்டான். கருப்பு நாயினை அவன் தேடி சென்று விட்டான். வசந்தன் போனால் வேறோருவன். தொடர்ந்து மூன்று காண்டங்களும் வாசிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.

நன்றி

http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/

முந்தைய கட்டுரைதமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்
அடுத்த கட்டுரைகதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்