எழுவர் விடுதலை — அறமும் அரசியலும்

நீதி ஒரு போதும் தோற்காது ஏனெனில் நீதி என்பது நம் மீட்பர் .கூறிய சொல் – அன்னா லாரினா புகாரின். [பின்தொடரும் நிழலின் குரல்]

கிட்டத் தட்ட இருப்பது வருடங்களுக்கும் மேலாக நீதித்துறை மற்றும் சிறை சம்பிரதாயங்கள் சார்ந்த அதன் அனைத்து உச்ச பட்ச சோர்வு,காத்திருப்பு, அலைகலைப்பு மற்றும் சமுக புறகணிப்பு ஆகிய அனைத்தையும் சலிப்பு இல்லாது எதிர்கொண்டு பெரும் நம்பிக்கையுடன் வழக்கை முன்னெடுத்து சென்ற அற்புதம் அம்மாள் அவர்களை பற்றி நினைக்கும்தோறும் கண்கள் விடுகின்றன.

இந்த புத்தக காட்சியில் அற்புதம் அம்மாள் அவர்களை பார்க்க முடிந்தது. அன்னா அவர்களயே நேரில் பார்த்த உணர்வு.

தாய்மையை அதன் உச்ச வலுவுடன் தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து எழுதி வரும் திரு.ஜெயமோகன் அவர்கள் இந்த அசாதரணமான தாயை பற்றி தங்களுடைய எண்ணங்களை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பகிர்ந்து கொள்ளலாமே..

.
தினேஷ் நல்லசிவம்

8

திரு ஜெயமோகன்,

குற்றம் செய்தவர்களில் 99% பேர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையின் இரைகள்தாம். இதில் தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் மற்றும் சர்வாதிகாரிகள் மட்டும்தான் விதிவிலக்கு. ராஜீவின் கொலையில் தெரிந்தே பங்கு பெற்றவர்கள் அனைவருமே அதற்கான பொருளாதாரக் கூலிகளைப் பெற்றவர்கள்தாம். நளியின் பெண் லண்டனில் மருத்துவப் படிப்பைப் படிக்கும் அளவுக்கு வசதி எப்படி வந்தது என்பதை யாரும் கேட்பதில்லை. பேரரிவாளனின் தாயார் புத்தக கண்காட்சிகள் போன்ற பொது விழாக்களில் தனியான அரங்கு வைத்துப் போராடுவது எப்படி? மற்ற சாதாரண கொலைகளை செய்தவர்களுக்கு அப்பீல் செய்ய முடியாத நிலையே இருக்கிறது.

நடந்தது அரசியல் படுகொலை. இதில் நேரடியாகப் பங்கேற்றவர்கள் திட்டமிட்டு கொல்லப் பட்டு விட்டனர். மீதி உள்ளவர்களுக்கு தூக்கு தண்டனை மிகப் பல காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. ந்டுவில் கொலையானவரின் மகள் பிரியங்கா வதேரா கொலை சதியின் முக்கிய பங்களிப்பு செய்த்தாகக் கருதப் படுகிற நளினியை சந்திக்கிறார். கொலையானவரின் மனைவி சோனியா ‘மன்னிப்பு’ அளிக்கிறார். இப்போது அனைவரும் விடுதலை. ராகுல் இப்போதுதான் நடந்தது நினைவுக்கு வந்தார்ப் போல, ‘பிரதமராகப் பதவி வகித்தவரை கொன்றவர்களை இப்படி விடுதலை செய்வது சரியா என்று ‘தார்மீக’ கோபம் கொள்கிறார். இந்த செயல்களின் நாடகத் தன்மையை கேள்வி கேட்க ஆளில்லை. கொலை சதியில் பங்கு கொண்டவர்கள் என்று நிரூபிக்கப் பட்டு, உச்சநீதிமன்றம் வரை உச்ச பட்ச தொகையை கட்டணமாக வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து வழக்காடி முடித்து அதன் பிறகுதான் தூக்கு தண்டனை உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அதன் பிறகு ஜனாதிபதிக்கு கருணை மனு, அது 100% அரசியல் மற்ரும் வெளியில் வராதக் காரண்ங்களுக்காக கிடப்பில் போடப் பட்ட்டது, இப்போது அதை வைத்தே அவர்க்ள் அனைவரும் விடுதலையாகப் போவது வரை வந்துள்ளது.

ஒரு மாபெரும் கொலைச் சதி நாடகத்தின் இறுதிகட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் ஜனநாயக்ப் படுகொலையே தவிர, வேறெதுவும் இல்லை. ஜெயமோகன் தனியாக தனக்கென்று கருத்துக்களை சொல்லி, மற்றவர்களை, அதாவது பொதுவில் கவனிக்கப் பட்டவர்களைப் பற்றி அர்த்தபூர்வமாகவும் ஆத்திரத்திடுடனும் விமர்சனம் செய்தே கவனத்தை வென்று அதனால் திரைப் படத்துறையில் காலூன்றியவர். அதன் பின்னர் அவரது கருத்துக்கள், இப்போது வெளியிட்டிருப்பது போலவே பொதுவில் ஏற்றுக்கொள்ளப் படும் கருத்துக்களுக்கு ஒத்திசைந்தே இருக்கிறது.

ரவீந்திரன்

இன்றும் நளினி போன்ற ஒரு சந்தர்ப்பசூழலின் இரையை சிறையில் இட்டிருப்பதென்பது அறமற்ற செயல் என்றே படுகிறது. அவரது குற்றத்துக்கான தண்டனையை அவர் அனுபவித்து விட்டிருக்கிறார். அவரது வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அவரையும் பிற ராஜீவ் கொலைக்குற்றச்சாட்டுக் கைதிகளையும் விடுதலை செய்வதே இந்தியா தன் முகமாக முன்வைக்கும் ஜனநாயகத்துக்கும் தார்மீகத்துக்கும் உகந்ததாக இருக்கும்.

அன்புள்ள தினேஷ், ரவி

உடனடியாக கருத்துக்கள் சொல்லி உடனடி விவாதங்களில் ஈடுபடுவது என்னை மிகவும் திசைதிருப்பி நேரத்தை வீணடிக்கும் என நினைப்பவன் நான். ஆனாலும் சில சொற்கள்

ஏழுபேரையும் விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவை வரவேற்கிறேன். அடிப்படையில் அவருடைய வெகுசில விஷயங்கள் மீது எனக்கு மதிப்புண்டு. மகளிர் காவல்நிலையங்கள் வழி தமிழகத்தில் குடும்ப வன்முறையை கட்டுப்படுத்தியது, பெண்கள்சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் பொருளியலில் ஆக்கபூர்வமான மாற்றத்தை உருவாக்கியது, எப்போதும் ரவுடி சாம்ராஜ்யத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போல. அதற்குமேல் இன்றைய அரசியலில் தமிழகத்தில் எதிர்பார்க்கவும் ஒன்றுமில்லை. இந்த முடிவில் உள்ள தைரியம் அவர்ளின் ஆளுமையை வெளிப்படுத்துவது. ஒரு குடிமகனாக அவருக்கு என் வணக்கமும், நன்றியும்.

இதை ஒட்டி சில மலையாள இதழ்களின் ஐயங்களூக்கு என்னுடைய விளக்கங்களை அளித்தேன். அவற்றை இத்தருணத்தில் சொல்லலாமென நினைக்கிறேன்

1. தூக்குத்தண்டனையை முழுமையாக ரத்துசெய்யலாமா?

இன்றைய நிலையில் இந்தியாவில் கூடாது என்பதே என் உறுதியான கருத்து. அனைத்து வன்முறை அமைப்புகளையும் வன்முறைப்பேச்சுகளையும் ஆதரித்தபடி, மரணதடனை என்று வரும்போது மட்டும் போலிமனிதாபிமானம் பேசுவதும் போலிஅகிம்சைபேசுவதும் ஒன்று அசட்டுத்தனம் அல்லது உள்நோக்கமும் சுயலாப உத்தேசங்களும் கொண்ட அயோக்கியத்தனம் என்பதே என் எண்ணம்.

தூக்குத்தண்டனையை ஒழித்திருக்கும் நாடுகள் மிக முன்னேறிய நீதித்துறையும் தெளிவான சிவில்சமூகமும் கொண்டவை. பயங்கரவாதத்தின் நேரடித்தாக்குதலுக்கு இலக்குகளாக இல்லாதவை. அந்நாடுகளில் குற்றங்கள் தெளிவாகவே துப்புதுலக்கப்படுகின்றன. அங்கே நீதியின் பிடியில் இருந்து அதிகாரம் மற்றும் பணபலம் கொண்டு எளிதில் தப்பிக்கமுடியாது.

நம் நாடு அப்படி அல்ல. பல்லாயிரம்பேருக்கு ஒரு போலீஸ் வீதம் உள்ள நாடு. பல்லாயிரம் வழக்குகள் தேங்கிக்கிடக்கும் நீதித்துறை. உண்மையில் இங்கே நீதி என்பது மிக அரிதாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆயிரத்தில் ஒரு குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். அதுவும் மிகத் தற்செயலாக அல்லது கண்மண் தெரியாத மூர்க்கத்தால் மாட்டிக்கொண்டவர்கள் மட்டும். அவர்களையும் ‘மனிதாபிமானத்தால்’ விடுவிப்பதென்பது நீதித்துறையையே அழிப்பதற்குச் சமம். தலைவர்களின் பிறந்தநாளில் குற்றவாளிகளை விடுவிப்பது ஒரு சமூகத்துரோகம்.

இங்கு இன்னும்கூட பழங்காலப் பழங்குடிமனநிலை, ஆணாதிக்கவெறி கோலோச்சுகிறது. பெரும்பாலான கொடும் குற்றங்கள் அந்த அடிப்படை கொண்டவை. கால்ங்காலமாக பழகிவரும் சாதி, மத, பாலினம் சார்ந்த திமிரின் விளைவுகள் அவை. அவற்றை நாகரீகச் சிவில்சமூகம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பது திரும்பத்திரும்ப நிலைநாட்டப்படவேண்டும். அதற்கு மரணதண்டனை தேவை. டெல்லி கற்பழிப்பு நிகழ்ச்சி போன்றவற்றை ‘மனிதாபிமானத்துடன்’ அணுகுவதில் எனக்கு உடன்பாடே இல்லை. என் மனிதாபிமானம் பாதிக்கப்பட்ட அந்த எளிய பெண் மீதுதானே ஒழிய குற்றவாளியிடம் அல்ல.

சென்றவார ஆனந்தவிகடனில் ஆசிட் ஊற்றப்பட்ட ஒரு பெண்ணின் முகத்தைப்பார்த்தேன். திட்டவட்டமாகச் சொல்கிறேனே, அந்த மனிதன் தூக்கில் தொங்காமல் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்வே முடியவில்லை. சில ஆண்டுகளில் வெளியேவந்த அவன் திருமணமாகி குழந்தைகுட்டிகளுடன் வாழ்கிறான் என்பது அறவீழ்ச்சியே ஆகும். கருணை என்பது எப்போதும் பாதிக்கப்பட்டவர்களை நோக்கிச் செல்லவேண்டும். நீதி ஈவிரக்கமற்ற வாளாகவே இருந்தாகவேண்டும். அந்தக்கூர்மையே அதன் கருணை.நமக்கு ஒரு மனிதாபிமானக்கிரீடம் கிடைக்கவேண்டும் என்பதற்காக குற்றவாளிகளை நோக்கிக் மனிதாபிமானப்பசப்பு காட்டுவது கருணை அல்ல, அது கீழ்த்தரமான அகங்காரம்.

தூக்குத்தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஆயுள்தண்டனை உள்ளது, அது ஆயுள்வரைக்கும் தண்டனையேதான். ஆனால் இங்கு அப்படி அல்ல. பொதுஊழியரான மார்க்ஸியர் லீலாவதியை நடுத்தெருவில் வெட்டிக்கொன்ற கீழ்மகன்களை திமுக அரசு அண்ணாத்துரை பிறந்தாளைக் கொண்டாடுவதற்காக வெறும் ஏழு வருடங்களில் ஆயுள்தண்டனையை முடித்து திறந்துவிட்டதை, அந்த ரவுடிகள் லீலாவதியின் வீட்டுக்கு முன்னால் ‘வீரமருது வாழ்க’ என போஸ்டர் அடித்து ஒட்டி பட்டாசு கொளுத்தி நடனமிட்டதை பார்த்து செயலிழந்து நின்றவர்கள் நாம். சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் அனைத்தின் முகத்திலும் மலம் வாரி வீசப்பட்ட தருணம் அது.

இன்று மரணதண்டனைக்கு எதிராக கொந்தளிக்கும் எந்த மனிதாபிமான அமைப்பும், மனிதாபிமான அறிவுஜீவியும் அந்த அநீதிக்கு எதிராக ஒரு சொல் சொல்லவில்லை. சொல்லிவிட்டு அவர்கள் இங்கே வாழமுடியாது என அவர்களுக்குத் தெரியும்.அத்துடன் அவர்களுக்கு அந்த ரவுடிகளை எதிர்ப்பதனால் அரசியல் லாபமோ பொருள்லாபமோ இல்லை.

இந்த தேசம் சர்வதேசத் தீவிரவாதத்தால் சூழப்பட்டிருக்கிறது. போர்தொடுக்கப்பட்டிருக்கும் தேசம் இது. போரில் எதிரி கொல்லப்படுவதைப்போன்றதே ஆயுதமேந்திய தீவிரவாதி, அவனுக்கு உதவும் தீவிரவாதி கொல்லப்படுவதும். உலகில் அனைத்து தேசங்களிலும் அதுவே மரபு. அதில் மனிதாபிமானத்துக்கு இடம்கொடுப்பது தோல்வியை ஒப்புக்கொள்வது. அரசு என்ற அமைப்பை நம்பி வாழும் சாமானியர்களை வன்முறைக்கு எறிந்துகொடுத்து அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ளும் அப்பட்டமான கோழைத்தனம்தான் அது.

தோழர் லீலாவதி

ஆகவே மனிதகுலத்துக்கு எதிரான வெறுப்புடன் இழைக்கப்படும் வன்முறைகள், தீவிரவாதம் ஆகியவை மரணதண்டனையால் மட்டுமே ஒடுக்கப்படவேண்டும். இந்திய நீதிமுறை அரிதினும் அரிதான வழக்குகளில், பலபடிகளாக நீளும் மிகமிக நீண்ட விசாரணைக்குப்பின்னர், அனைத்துவகையான வாதாடும் வாய்ப்புகளையும் அளித்தபின்னர்தான் மரணதண்டனை விதிக்கிறது.

ஆகவே நான் மரணதண்டனையின் ஆதரவாளன். நான் அறிவுஜீவி அல்ல, சாமானியனின் உணர்வை பிரதிபலிப்பவன்.சமூகத்தில் நிலவும் பழமையான சில கீழ் மனநிலைகளை ஒறுத்து அழித்தாகவேண்டிய நிலையில் இருக்கும் சமூகங்கள், அம்மனநிலைக்கு எதிராக முழுமையான எதிர்ப்பை உறுதியாக பதிவுசெய்யவேண்டிய நிலையில் இருப்பவை, மரணதண்டனையை அதற்கன கருவியாகக் கொள்ளத்தான் வேண்டும். தீவிரவாதத்தால் போர் தொடுக்கப்பட்டிருக்கும் சமூகங்கள் மரணதண்டனையை போர்மரணமாகவே எடுத்துக்கொள்ளும். அது உலகமெங்கும் உள்ள வழக்கமே.

2.அப்படியென்றால் பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியமூவரும் தூக்கிலேற்றப்பட்டிருக்கவேண்டுமா?

இல்லை. அவர்கள் வேறுவகையில் அணுகப்பட்டாகவேண்டும். இதுவும் ஓர் உலகளாவிய வழக்கமே. அரசியல்நடவடிக்கைகளை எந்த ஜனநாயகதேசமும் அனுமதித்தாகவேண்டும். அந்த அரசியல்நடவடிக்கைகளின் ஒருபகுதி சிலசமயம் வன்முறையை நோக்கித் திரும்பி தேசத்தின் அதிகாரத்திற்கு எதிராக போர்செய்ய முனையலாம். அந்தப்போர் கீழ்த்தரமான குற்றமனநிலையில் செய்யப்படுவதல்ல. வலுவான மாற்றுக் கருத்தியலால் செயப்படுவது. அதைச்செய்பவர்கள் குற்றவாளிகளல்ல, அரசியல்நடவடிக்கையாளர்கள்.

ஜவகர்லால் நேருவின் சொற்களில் சொல்வதென்றால் ஓர் அரசை மாற்றுவதற்கான போராட்டங்களை அனுமதிக்கும் அரசே ஜனநாயக அரசு. ஓர் அமைப்பை மாற்றுவதற்காகச் செயல்படுவதற்கான அனுமதி அவ்வமைப்பால் அளிக்கப்படுமென்றால்தான் அந்த அமைப்பு வளர்ச்சியை நோக்கிச் செல்லக்கூடியது. ஆகவே இந்திய அரசுக்கும் அமைப்புக்கும் எதிரான அனைத்துவகையான கருத்தியல்செயல்பாடுகளும் அனுமதிக்கத்தக்கவையே. அவர்களில் சிலர் வன்முறையை நோக்கிச் செல்லும்போது மட்டுமே அது அரசின் அடிப்படைக்கு எதிரான செயல்பாடாக ஆகிறது.

லால்டெங்கா

[லால்டெங்கா]

நாம் அவர்களின் அரசியலை ஏற்காவிட்டாலும் அவர்களின் நோக்கத்தை ஏதோ ஒருவகை அரசியல்நம்பிக்கையாகத்தான் அடையாளம் காணவேண்டும். அரசியல்நடவடிக்கையாளர்களையும் குற்றவாளிகளையும் பிரித்தறியமுடியாவிட்டால் நாம் ஜனநாயக அரசியலின் ஆரம்பப் பாடங்களைக்கூட கற்கவில்லை என்றே பொருள். அவர்களை வெறும் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தவும் பிறகுற்றங்களுடன் அவர்களின் செயல்களை ஒப்பிடவும் முயல்பவர்கள் பெரும்பாலும் ஜனநாயகமென்பதையே அறிந்துகொள்ளாத பழமைவாதிகளோ பாமரர்களோதான்.

ஒரு ஜனநாயக அரசு அரசியல்சார்ந்த வன்முறையை ஒரேசமயம் இரு அணுகுமுறைகள் கொண்டுதான் எதிர்கொள்ளும். அந்த வன்முறை அரசுக்கும் சமூகத்துக்கும் எதிரானது என்பதனால் அதை தன்படைபலத்தால் அது எதிர்கொள்ளும். அதேசமயம் அவர்களுடன் பேசவும் அவர்களின் தரப்பை புரிந்துகொள்ளவும் அவர்களை வென்றெடுத்து தன்னுடன் ஒத்துப்போகச்செய்யவும் அது தொடர்ந்து முயலும். சொல்லப்போனால் வன்முறையை அது கையாள்வதே அந்தத் தரப்பை தன்னுடன் பேச வரும்படி கட்டாயப்படுத்துவதற்காகத்தான். முழுமையான அழித்தொழிப்பை அது இலக்காக்காது. அவர்கள் குற்றவாளிகளல்ல, தன்னுடைய சமூகத்தின் இலட்சியவாத மனங்கள் என அந்த அரசு அறிந்திருக்கும். அவர்களை இழக்கலாகாது என்று அது கவனம் கொள்ளும்.

அதாவது அரசியல்நடவடிக்கையின் விளைவான வன்முறை என்பது ஒரு போர். போரை போராகவே அரசு எதிர்கொள்வது இயல்பு. வன்முறைக்கு சாமரம்வீசும் போலிஅறிவுஜீவிகள் அதை அரசபயங்கரவாதம் என்று சொல்வார்கள். அது அபத்தம். அந்தப்போரில் அரசு தன் முழுப்படைபலத்தையும் பயன்படுத்தி தனக்கு எதிராக ஆயுதமெடுத்தவர்களை ஒடுக்கும். அதைச்செய்யாத அரசே உலகில் இல்லை. ஆனால் நாகரீக ஜனநாயக ஆர்சு எந்தப்போரும் ஒரு சமரசத்தில், ஒப்பந்தத்தில்தான் முடிந்தாகவேண்டும் என்றும் அறிந்திருக்கும். போரை வெற்றிகரமாக முடிக்க, அமைதியை முடிந்தவரை விரைவாகக் கொண்டுவரவே அது முயலும். அழித்தொழிப்பும் பழிவாங்கலும் அதன் இயல்பாக இருக்காது.

இந்திய அரசு அவ்வகையில் இன்றுவரை இன்றைய உலகின் மிகச்சிறந்த ஜனநாயக அரசுகளுக்கு இணையாகவே நடந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை. இந்திய அரசை மிகமோசமான வன்முறைஅரசு என்று இடைவெளியில்லாமல் சித்தரிக்கும் அரசியலெழுத்தாளர்கள் இங்குண்டு. மிகக்கீழ்த்தரமான சர்வாதிகார ,மதவெறி அரசுகளிடம் கூலிபெற்று கூச்சலிடும் கும்பலை விடுவோம். மற்றவர்கள் கூட இந்தியாவை விட இன்னும் மனிதாபிமானத்துடன் இவ்விஷயத்தில் நடந்துகொண்ட நாடுகளைச் சுட்டிக்காட்ட முடியாது.

இந்தியாபோன்ற பன்முகப் பண்பாடும், பலவகை இனங்களும், பற்பல அரசியல்களும் கொண்ட நாடுகள் அவ்வாறுதான் நடந்துகொள்ளமுடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற நாள்முதல் அந்த ஜனநாயக அணுகுமுறையை ஒரு முன்னுதாரணமாகவே முன்வைத்த ஜவகர்லால் நேருவை இத்தருணத்தில் நாம் நன்றியுடன் நினைவுகூரவேண்டும். இந்திய அரசுக்கு எதிரான முதல் கம்யூனிஸ கிளர்ச்சியின்போது இந்த வேறுபாட்டை நேரு மிகத்தெளிவாகவே பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1947 இந்தியா சுதந்திரம் பெற்றதுமே இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இந்தியாவின் ஜனநாயகக் குடியரசின் மீது ஆயுதப்போராட்டத்தை அறிவித்தது. 1948ல் அங்கீகரிக்கப்பட்ட கல்கத்தா கொள்கைமுடிவின் [Calcutta thesis] அடிப்படையில் இந்தியாவெங்கும் நேரடியான வன்முறைத்தாக்குதலில் அது இறங்கியது. நிலங்கள் கைப்பற்றப்பட்டன. அரசூழியர்களும் நிலப்பிரபுக்களும் கொல்லப்பட்டனர். அந்த வன்முறையை காவல்துறையைக்கொண்டு எதிர்கொண்டபோதுகூட அதை அடக்கி அவர்களை இந்திய தேசிய அரசை ஏற்றுக்கொள்ளவைக்கவே இந்திய அரசு முயன்றது.

பி டி ரணதிவே

விளைவாக அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். தேர்தல்முறையையும் ஜனநாயகத்தையும் ஏற்றுக்கொண்டனர். ஆயுதமேந்தி இந்திய அரசுமேல் தாக்குதல் தொடுத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள். கல்கத்தா கொள்கைமுடிவை வரைந்தவர் மார்க்ஸியத் தலைவரான பி.டி.ரணதிவே. இந்திய அரசுமீது வன்முறைப்போரை தொடுத்த அவர் இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக கடைசி வரைக்கும் இருந்தார். பலர் மாநில முதல்வர்கள் ஆனார்கள்.

பர்மாவிலோ ,இந்தோனேஷியாவிலோ, ஈரானிலோ, காங்கோவிலோ இதே போலக் கிளர்ந்தெழுந்த இடதுசாரிகள் என்ன ஆனார்கள் என்பதை மட்டும் கவனித்தால்போதும், இந்தியா நடந்துகொண்ட முறை என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். பிறநாடுகளைப்போல இங்கு அவர்கள் அழித்தொழிக்கப்பட்டிருந்தால் இன்று நான் வழிபடும் பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் அரசியல்தலைவர்கள் அன்றே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆற்றூர் ரவிவர்மா இருந்திருக்கமாட்டார். இ.எம்.எஸ் இருந்திருக்கமாட்டார். அச்சுத மேனன் இருந்திருக்கமாட்டார். நக்சலைட் இயக்கம் அப்படி அழிக்கப்பட்டிருந்தால் கெ.வேணு இருந்திருக்கமாட்டா. இந்தியாவின் பெரும் ஞானச்செல்வம் முளைக்காமலேயே அழிந்திருக்கும்

கனு சன்யால்

[கனு சன்யால்]

இந்தியா அனைத்து அரசியல்வன்முறைகளிலும் இந்த அணுகுமுறையையே கொண்டிருக்கிறது. இந்தியாவெங்கும் பெரும் வன்முறை இயக்கத்தை உருவாக்கியவரும் பலகொலைகளைச் செய்தவருமான நக்சலைட் இயக்கத்தலைவர் கனுசன்யால் விடுதலையாகி அதற்குப்பின்னரும் இந்திய அரசுக்கு எதிரான ஜனநாயகபூர்வ கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வாழ்ந்திருக்கிறார். [1989ல் அவரைச் சந்திப்பதற்காக கல்கத்தா சென்றேன். சந்திக்கமுடியவில்லை ]

நேரடியாகவே பலநூறு கொலைகளுடன் தொடர்புடைய மிசோரம் தீவிரவாதியான லால்டெங்காவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர் இந்தியப்பிரதமாரான ராஜீவ்காந்தி. நம் அரசுஅவருடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. அவர் மிசோரம் பகுதியின் முதல்வராக பணியாற்றியிருக்கிறார்.

பல்லாயிரம் வடகிழக்குத் தீவிரவாதிகள், பஞ்சாப் தீவிரவாதிகள் அவர்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டதுமே மன்னிக்கப்பட்டு பொதுவாழ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மிகச்சமீபத்தில்கூட பல அரசியல்கொலைகளுடன் தொடர்புள்ள ஆந்திர நக்சலைட் தலைவரான கொண்டப்பள்ளி சீதாராமையா சில ஆண்டுகளில் விடுதலையாகி இயல்புவாழ்க்கைக்கு மீண்டு மகள் வீட்டில் மரணம்டைந்திருக்கிறார்

கொண்டப்பள்ளி சீதாராமையா

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் அக்குற்றங்களைச் செய்தார்களா, விசாரணை சரியா என்றெல்லாம் நான் போகவிரும்பவில்லை.. ஆனால் அவர்கள் ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்று வைத்துக்கொண்டாலேகூட அவர்கள் கொலைகாரர்கள் அல்ல, மாற்று அரசியல் கொண்டவர்கள். அத்தகைய மாற்று அரசியல் கொண்டவர்கள் தொடர்ந்து இந்தியாவால் வெறும்குற்றவாளிகளாக நடத்தப்பட்டதில்லை என்பதே ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடரும் வரலாறு . அவர்கள் தண்டனைக்குப்பின் மன்னிக்கப்பட்டிருக்கிறார்கள், அரசியல்பொதுவாழ்க்கைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது ஐம்பதாயிரம் உதாரணங்களை இந்தியாவின் அரைநூற்றாண்டு வரலாற்றில் சுட்டிக்காட்டமுடியும்.

அப்படி இருக்க முதல்முறையாகத்தான் கொலைக்குற்றவாளிகள் விடுதலை ஆகிறார்கள், அவர்களால் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு யார் பதில் சொல்வது என்றெல்லாம் பேசுபவர்கள் அரசியல் அறியாமையை அல்லது நுட்பமான சந்தர்ப்பவாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள்.

சாந்தன்,பேரறிவாளன்,முருகன் ஆகியோர் இதுவரை தூக்கிலேற்றப்படாமைக்குக் காரணமும் இதுவே, அவர்களை வன்முறையை நம்பிய அரசியலாளர்களாகவே இந்திய நீதிமன்றங்கள் கருதின, எளியகுற்றவாளிகள் என்று அல்ல. அவர்கள் ராஜீவ் காந்தியின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் என்பதனால், அந்தக்குடும்பம் அரசியலின் உச்ச அதிகாரத்தில் இருப்பதனால்தான் தூக்கை ரத்துசெய்யும் முடிவு ஒத்திப்போடப்பட்டது என்பது வெளிப்படை. காங்கிரஸ்தான் அம்முடிவை எடுக்கமுடியும், பாரதிய ஜனதா எடுக்கமுடியாது என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. இல்லையேல் பல்லாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் மிசோ,பஞ்சாப், நக்சலைட் தீவிரவாதிகளைப்போல விடுதலைசெய்யப்பட்டு பொது அரசியல் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பார்கள்.

சாந்தன் முதலியோர் நம்பிய அரசியலின் காலம் முடிந்துவிட்டது. அந்த நம்பிக்கைகளும் அவ்வரசியலும் வரலாற்றில் மூழ்கி மறைந்துவிட்டன. அதாவது அவர்கள் இந்தியாவுடன் தொடுத்தபோர் முடிவுக்கு வந்துவிட்டது. அவர்கள் இந்திய அரசுக்கு அளித்த கருணை மனு அவர்கள் இந்தியதேசத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. அவர்கள் இந்தியாவில் ஓரு சராசரி ஆயுள்தண்டனையைவிட இருமடங்கு தண்டனையை அனுபவித்துவிட்டனர். ஆகவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டு பொதுவாழ்க்கைக்கு அனுமதிக்கப்படுவதே நியாயமானது. இன்றுவரை இந்தியா மேற்கொண்டுள்ள ஜனநாயக வழிமுறைகளுக்கு ஏற்புடையது. லால்டெங்கா உள்ளிட்ட வன்முறை அரசியல்வாதிகளை ராஜீவ்காந்தி எதிர்கொண்ட முறையும் இதுவே.

அப்படியென்றால் அப்சல் குருவோ, அஜ்மல் கசாபோ தூக்கிலிடப்பட்டதை ஏற்கிறீர்களா?

ஆம். அவர்கள் உடனடியாக தூக்கிலிடப்படவேண்டியவர்களே. அவர்கள் அரசியலாளர்கள்தான். ஆனால் அவர்கள் இந்தியாமீது தொடுத்த போர் இன்னும் முடியவில்லை. மேலும் பலமடங்கு தீவிரத்துடன் அது நீடிக்கிறது. அதாவது போர்க்களத்தில் பேசவேண்டிய நியாயமே அவர்களுக்குரியது, ஜனநாயகத்தின் நியாயங்களை அவர்கள் கோரமுடியாது. அனாலும் இந்தியா முழுக்கமுழுக்க ஜனநாயக முறைப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம்.

இஸ்லாமியத் தீவிரவாதம் உலகளாவியது. ஒருவேளை இந்திய அரசைவிட வல்லமை வாய்ந்த நிதியமைப்பும் ராணுவ அமைப்பும் உள்ளது. அவர்களை இங்கே உயிருடன் வைத்திருந்தால் அவர்களை மீட்கும்பொருட்டு இந்தியாமேல் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு அப்பாவிகள் பலியாகலாம். ஏற்கனவே காண்டகார் விமானக்கடத்தலின் அனுபவம் நமக்குள்ளது. மௌலானா மசூத் அசார் என்ற தீவிரவாதிக்கு இந்தியா அளித்த ஜனநாயக உரிமை காரணமாகவே இந்தியவிமானம் கடத்தப்பட்டது. இந்தியக்குடிமகன்களின் உயிர் பணயம்வைக்கப்பட்டு பேரம்பேசபப்ட்டது. இந்தியக்குடிமகன்கள் கொல்லப்பட்டு அந்த தீவிரவாதி தப்பிச்சென்றான். இந்தியாமீது இன்றும் அவனுடைய போரை நடத்திவருகிறான்.

ஆகவே அப்சல் குரு, அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை நீண்டகாலம் சிறையில் வைத்திருப்பது இந்தியக்குடிமகன்களை அடகுவைக்கும் பொறுப்பின்மையாக ஆகக்கூடும். மரணதண்டனை மட்டுமே அதைத் தவிர்க்கும்வழி.

தீவிரவாதத்துடனான போரில் சமரசமே இல்லை என்பதை அவர்களுக்கு இந்தியா உணர்த்தியாகவேண்டும். அதைவிட இந்திய அரசை நடத்துபவர்கள் தீவிரவாதத்துக்கு அஞ்சிநடுங்கவில்லை, இந்திய நீதித்துறை பயந்துவிடவில்லை என்பதை இந்திய மக்களுக்கு உணர்த்தியாகவேண்டும். ஆகவே மரணதண்டனை தேவை, இன்னமும் வேகமாக உடனடியாக அவை நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை நிரபராதிகள் என ஆதாரமில்லாமல் பிரச்ச்சாரம்செய்யும் கூலிப்படை அறிவுஜீவிகளும் மதவெறியர்களும் இந்திய நீதியமைப்பு மீதான அவநம்பிக்கையை பரப்புபவர்கள். அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டும்.

ஆனால் இஸ்லாமியதீவிரவாதம் என்னும் அந்த அரசியல் முழுமையாகத் தோற்கடிக்கப்படுமென்றால், அது இல்லாமலாகிவிட்டபின்னர் அக்குற்றவாளிகள் மனமாற்றமும் அடைந்தபின்னர் அவர்களை தண்டிக்கப்படலாகாது. காஷ்மீரில் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்திய பல்லாயிரம் பேர் இந்தியாவால் மன்னிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தக்கோணத்திலேயே நாம் அணுகவேண்டும்

அரசும் சட்டமும் ஒருபோதும் பழிவாங்கலாகாது. அவற்றுக்கு வஞ்சம், பழி,வன்மம் போன்ற மானுடக்கீழுணர்வுகள் இருக்கலாகாது. அரசு தண்டனை வழங்குவதற்கான நோக்கம் சமூகத்தின் உள்வன்முறையை தவிர்ப்பதும் வெளிவன்முறையில் இருந்து பாதுகாப்பளிப்பதுமாகும். மரணதண்டனையைக்கூட இந்த பெரும் இலட்சியத்தின் அடிபப்டையிலேயே அது வழங்கவேண்டும். ஆகவே ஒருவரை தண்டிப்பதற்கு அரசுக்கும் சட்டத்துக்கும் இருக்கவேண்டிய ஒரே காரணம் அதனால் சமூகத்திற்கு நலம் விளையவேண்டும் என்பது மட்டுமே

இது ஜெயலலிதாவின் தேர்தல் உத்தியா?

இருக்கலாம். ஆனால் இந்தியாவில் எல்லாமே தேர்தலை முன்னில்கண்டு செய்யப்படுபவைதானே? நான் மத்திய அரசில் பணிபுரிந்தவன். ஒரு ஊதிய உயர்வு கூட தேர்தல் நெருங்காத சாதாரண காலகட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அந்த ஊதிய உயர்வை நாம் வேண்டாம் என்று சொன்னதுமில்லை. இங்குள்ள ஜனநாயகம் அப்படி, அவ்வளவுதான்

*

இவ்விஷயத்தில் நான் முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று உள்ளது. இதை கேரளத்தில்தான் தெளிவாக அடையாளம் காண்கிறேன். என் இளமையில் இத்தகைய விஷயத்தில் ஆழ்ந்த வரலாற்றறிவும் கோட்பாட்டுநோக்கும் சமநிலையும் கொண்ட இ.எம்.எஸ் போன்ற பேரறிஞர்கள் கருத்துச் சொல்வார்கள். அதை ஒட்டி விவாதம் நிகழும்.

இன்று அத்தகைய குரல்களே இல்லை. அரசியல்பேச்சாளர்கள் மற்றும் அர்னாப் கோஸ்வாமி ராஜ்தீப் சர்தேசாய் போன்ற அரைவேக்காட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிநடத்துநர்கள் தேசத்தின் கருத்தை தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வரலாற்றுணர்வும் இல்லை. ஜனநாயக அடிப்படைகளைப்பற்றிய அறிவில்லை. வெறும் கூச்சலிட்டு அந்நிகழ்ச்சியை காரசாரமாக ஆக்கி டிஆர்பி குவிப்பதன்றி வேறு இலக்கும் இல்லை. வாசிப்பு ஊடகத்தில் இருந்து காட்சி ஊடகத்துக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டதன் பக்கவிளைவா இது?

*

எந்தக்கருத்து சொன்னாலும் பாதிப்பேர் கொந்தளித்துக் கிளம்புவது தமிழ் வழக்கம். நான் என் தரப்பை எனக்குத்தெரிந்த நியாயத்தின் அடிப்படையில் தெளிவாகவே முன்வைக்கிறேன். எனக்கு இது இப்போது சரியானதாகப் படுகிறது. நான் அரசியல்சிந்தனையாளனோ செயல்பாட்டாளனோ அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் சொல்லியிருக்கும் இந்த வாதங்களை வேறெவரும் சொல்லிக் கேட்கவில்லை. ஆகவே இவற்றை எழுதுகிறேன். இவற்றை நிராகரிப்பவர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை

பேரறிவாளனின் தாய் தாய்மை என்பதன் இன்னொரு உதாரணம். அன்னை இருப்பது வரை ஒருவனுக்கு மண்ணில் வேறெந்த உறவும் தேவை இல்லை என்று உணர்கிறேன். அன்னைக்கு என் வணக்கம்.

ஜெ

முந்தைய கட்டுரைகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்
அடுத்த கட்டுரைஅம்மையும் அப்பனும் ஓர் ஆடல்