காவல்கோட்டம் 3

ஆக்கல் அழித்தலின் ஆட்டம்

‘கட்டிடங்கள் கண்ணால் பார்க்கத்தக்க வரலாறு’ என்று கிப்பன் பிரபு அவரது ‘ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் சரிவும்’ என்ற புகழ்பெற்ற நூலில் சொல்கிறார். கட்டிடங்களை உருவாக்கிய அந்த சமூக அமைப்பின் இயல்பு எதுவோ அது அந்தக் கட்டிடங்களிலும் இருக்கும். அவர்களின் குறியீடுகள் அக்கட்டிடங்களில் உறைந்திருக்கும். அக்கட்டிடங்களில் புழங்கிய மனிதர்களின் நினைவுகள் அக்கட்டிடங்களையே காலப்போக்கில் குறியீடுகளாக ஆக்கியிருக்கும்.

ஆகவேதான் போர்களின்போது கட்டிடங்கள் சிதைக்கப்படுகின்றன. நெடுங்கால வரலாறு உள்ள தேசங்களின் கட்டிடங்கள் ஒவ்வொரு வரலாற்றுக்காலகட்டத்திலும் அழித்து அழித்து கட்டப்படுகின்றன. கட்டிடங்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. மதுரை நாயக்கர்கள் அவர்களின் ஆட்சிக்குள் வந்த அனேகமாக எல்லா கட்டிடங்களையும் திருத்தியமைத்திருக்கிறார்கள். நாயக்கர்களின் ஆட்சி இன்றும் ராயகோபுரங்களாக நம் நிலத்தில் பரவிக்கிடக்கிறது.

வரலாற்றுக் காலகட்ட மாறுதல்களை காவல் கோட்டம் இடித்துக்கட்டுதல் மூலம் சித்தரிக்கிறது என்பது ஒரு நுட்பமான படிமத் தன்மையுடன் உள்ளது. விசுவநாத நாயக்கன் மதுரையைப் பிடித்ததும் ஒரு பெரிய ஆட்சி மாற்றம் நிகழ்கிறது. இன்னொரு காலகட்டம் ஆரம்பிக்கிறது. அதற்கேற்ப அவள் மதுரையின் சிறிய, தாழ்வான கோட்டையை இடித்து அகழியைத் தூர்த்து விரிவாக்கிக் கட்டுகிறான். மதுரை என்பதே இந்நாவலில் இந்தக்கோட்டையாகவே அறிமுகமாகிறதென்பது கவனிக்கத்தக்கது. மதுரையின் பேராலயம் எப்படி ஆசிரியரின் படைப்புக்கவனத்தில் இருந்து விடுபட்டது? அதைப்பற்றிய சித்தரிப்புகளே இந்நாவலில் இல்லையே?

காரணம், இது காவலின் கதை என்பதே. இந்நாவலைப்பொறுத்தவரை அரசு என்பது ஒரு பண்பாட்டு அமைப்பு அல்ல. கலை அல்ல. மதம் அல்ல. அது ஒருவகை காவல்கோட்டம் மட்டுமே. ஓர் அதிகார அமைப்பும் தன்னைச்சார்ந்தவர்கள் என சிலரை வரையறைசெய்துகொண்டு அவர்களுக்குக் காவல் அளிப்பதே அரசு என்பது. அதற்கான குறியீடு கோட்டைதான்.

கோட்டை சிலரை உள்ளே அணைத்துக்கொள்கிறது. பலரை வெளியே விட்டு கதவை மூடிவிடுகிறது. அந்த வேலியில் ஊடுருவுவதன் மூலமே அந்த அரசை வெல்ல முடியும். அதை பணிய வைக்க முடியும். நாவலின் தொடக்கத்தில் நாயக்கர் படை அகழியைத்தூர்த்து சூழ்ந்துகொண்டு கோட்டைக்குள் செல்வதும் ஓர் ஊடுருவல்தான். தாதனூர் கள்ளன் கன்னம் வைத்து  உள்ளே செல்வது அவன் அளவில் ஓரு படையெடுப்பே.

பலபக்கங்களுக்கு நீளும் விரிவான குறிப்புகள் மூலம் புதிய மதுரை கோட்டை உருவாகி வரும் சித்திரம் நாவலில் அளிக்கப்படுகிறது. கல்கோட்டை கட்டுவதில் பாரம்பரிய தேர்ச்சி கொண்ட பெனுகொண்டா கம்மாளர்கள் வரவழைக்கப்படுகிறார். மூத்த ஆசாரி வெங்கட சுப்புவுக்கு விசுவநாத நாயக்கன் உன் கைப்பட கடிதம் எழுதி வரவழைக்கிறான். அதவேணி உப்பரர்களும் குண்டக்கல் ஒட்டர்களும் கொண்டுவரப்படுகிறார்கள். எழுபத்திரண்டு கொத்தளங்களுடன் ஏற்கனவே உள்ள கோட்டையைவிட இருமடங்கு அகலத்துடன் கோட்டை கட்டப்படுகிறது. 1529 மார்கழி அமாவசை அன்று கோட்டைக்கான பூசை நடந்தது. நாகமலையில் கல் உடைத்துக் கொண்டுவந்து அடுக்கி மதில் எழுகிறது. நான்காண்டுகளில் கோட்டை முடிவடைந்தது.

ஏறத்தாழ முந்நூறு வருடங்களுக்குப் பிறகு, நாயக்கர் ஆட்சி வீழ்ச்சி அடைந்து பிரம்மாண்டமான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்குள் மதுரை விழுந்த பின்னர், 22-1-1884 இல் கலெக்டர் பிளாக்பர்ன் மீண்டும் மதுரை கோட்டையை இடிக்க உத்தரவிடுகிறான். மதுரையை விரிவாக்குவதற்கு அந்தக் கோட்டையை இடிப்பதன்றி வேறு வழியே இல்லை என்று அவன் முடிவெடுக்கிறான். மதுரை விரிவடைகிறது. அதன் பொருள் அதன் அதிகாரத்தின் கைகள் அரவணைக்கும் மக்கள் பெருகுகிறார்கள் என்பதே.

கோட்டை இடிபடுவது மதுரையில் எழுப்பும் உணர்ச்சியலைகளை நாவல் விரிவாகப் பதிவு செய்கிறது அது ஒரு விராட புருஷனின் மரணம் போன்றது. ஒரு காலகட்டத்தின் மரணம் அது. உண்மையில் மதுரைக் கோட்டை அதற்கு எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து விட்டிருந்தது. நாயக்கர் ஆட்சி வீழ்ந்ததுமே அதன் பராமரிப்பு இல்லாமலாகியது. கான்சாகிப் கொல்லப்பட்டதும் அதன் வரலாற்றுக் காலகட்டம் முடிந்தது. நீள்தூர பீரங்கிகள், துப்பாக்கிகள் கொண்ட பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அந்தக் குறுகலான கோட்டையால் எந்தப் பயனும் இல்லை. பராமரிப்பின்றி ஒரு செத்த பூதம்போல நகரை அணைத்துக் கிடந்தது அது. அதன் சடலத்தை நீக்கம் செய்யவே கலெக்டர் பிளாக்பர்ன் ஆணையிடுகிறான். அது மதுரை நாயக்கர்களின் நினைவு என்ற சடலம்.

கோட்டை இழக்கப்பட்டதன் தீவிரமான சித்தரிப்பே இந்நாவலின் உச்சம் என்றுகூடச் சொல்லலாம். பலவகையில் இதற்கிணையான நிகழ்வுகள் இந்திய இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றன. ஒரு திருப்புமுனைப் புள்ளி அது. புராணங்களும் தொன்மங்களும், நினைவுகளும் கலந்த தொல்வரலாற்றின் கடைசி நுனியும் காலப்பெருவெள்ளப்பரப்பில் மூழ்கி மறைதல் என்று அதனைக் கூறலாம். ஒரு பிரம்மாண்ட நடிகன் தன் உடையின் கடைசி நுனியை அரங்கிலிருந்து இழுத்துக் கொண்டு வெளியேறுகிறான்.

இந்தியாவின் மிகச்சிறந்த நாவல்கள் பலவற்றில் பல கோணங்களில் இந்த மாபெரும் நாடகக் காட்சி உள்ளது. நவீன காலக்கட்டம் வந்து பழைமை மீது அமர்ந்து அதை மூழ்கடித்து மறைத்து விடுகிறது. ‘சோரட் உனது பெருகும் வெள்ளம்’ ‘சதுரங்கக் குதிரைகள்’ ‘அக்னி நதி’ முதலிய இந்திய நாவல்களை இங்கே நினைவுறுத்திக் கொள்ளலாம். தமிழிலக்கியத்தில் இந்தக் காட்சியை நாம் சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையில் காண்கிறோம். புளியங்குளம் தூர்க்கப்பட்டு சாலை உருவாகும் சித்திரம் மதுரை கோட்டை இடித்துக் கட்டப்படுவதற்கு பல வகையிலும் நெருக்கமானது. சவுக்குத் தோப்பு பூந்தோட்டமாக மாறும் பரிணாமம் பிரிட்டிஷ் ஆட்சியின் கோட்டை இடிப்புக்கு நிகரானது.

இந்தக் காட்சியை அபாரமான குறியீட்டுத் தன்மையுடன் எழுதியிருக்கிறார் சு.வெங்கடேசன். நரபலி கொடுத்து கோட்டையில் அமரச் செய்யப்பட்ட தெய்வங்கள் ஒவ்வொன்றாக அலறிக் கதறியபடி விலகிச் செல்கின்றன. தெற்கு வாசல் ஜடாமுனி, கிழக்கு வாசல் வண்டியூர் மாரியம்மாள் மேற்கு வாசல் கொத்தளத்து முனி மூவரும் மூன்று வகையான பண்பாடுகளின் சின்னங்கள். ஜடாமுனி மதுரையின் சமணப் பாரம்பரியம். மாரியம்மன் தாய்வழிச் சமூகத்தின் பாரம்பரியம். மேற்கு வாசல் அதன் வீர வழிபாட்டு பாரம்பரியம். மூன்று தெய்வங்களும் அலறி நீங்குகின்றனர்.அறுகொலை தெய்வங்கள், வீர பலி தெய்வங்கள் என ஒவ்வொரு தெய்வமாக விடைபெறுகிறது.

மரபின் ஆழம் காணமுடியாத ஏதோ புள்ளியில் உதித்து ஒவ்வொரு கணமும் அம்மக்களுடன் இருந்தவை அவை. அம்மக்கலின் பீடின், பெருமிதத்தின் சின்னங்கள்  சில. இழிவின் தோல்வியின் சின்னங்கள் சில. நம் நாட்டுப்புற தெய்வங்களில் பல குற்றவுணர்ச்சி உருவாக்கிய தெய்வங்கள். கோட்டை கட்டுவதற்காக குழிக்குள் இறங்கி கழுத்தைவெட்டி களப்பலியான மாதிகனும் ஒருதெய்வமாக அவர்களில் இருப்பான். வெட்டுபட்டு விழும் மரத்திலிருந்து பறவைகள் விடைபெறுவதுபோல அலறி கூவி கரைந்து கலைந்து சிறகடித்து விலகுகின்றன அவை.

மதுரை மக்களின் ஆழ்மனத்தில் குடி கொண்டிருந்த தெய்வங்கள் வரலாற்றின் நினைவிலி அழம் நோக்கி புதைந்து செல்கின்றன. நவீன யுகத்தில் அவற்றுக்கு இடமில்லை. “கண்ணீர் கசிந்து இறங்குவதபோல கருங்கல் சுவரில் இருந்து சாமிகள் இறங்கின. இருள் பரப்பி நிற்கும் மதுரையின் விதிகளில் ஆங்கார ஓசையும் உடுக்கைச் சத்தமும் கதறலும் கேட்க ஆரம்பித்தது” என்று விவரிக்கிறது நாவல்.
“எட்டுபேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக் கருப்பன் இறங்கியபோது கோட்டையே பிய்த்துக் கொண்டு வருவதுபோல் இருந்தது. அவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.”

வெங்கடேசனின் புனைவுத்திறனும் மொழித்திறனும் உச்சம் கொள்ளும் இடம் இதுவே. இத்தெய்வங்கள் வாழும் இந்த அகயதார்த்தத்தில் தான் நம்முடைய நாட்டார்மரபின் எல்லா கதைகளும் வேரூன்றி நிற்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாதவரை நாம் நம் நாட்டார் பண்பாட்டின் கவித்துவத்திற்குள் செல்ல இயலாது. மாந்தீரிக யதார்த்தம், மீயதார்த்தம் என்றெல்லாம் கூறுகிறோம். ஆனால் அந்த புனைவு உத்திகளுக்கு நிகரான, நமது மண்ணுக்கே உரிய புனைவு உத்தி இது. இதன் தீவிரமான கவித்துவம் மூலமே இந்த மண்ணின் வரலாற்றை ஒருவர் கூறமுடியும். இங்கு வாழ்ந்து இறந்த தலைமுறைகளின் அக ஆழத்திற்குள் சொல்லமுடியும்.

“ரத்தத்தில் பிசைந்த பலிச்சோறு இரவெல்லாம் வானத்தில் எறியப்பட்டது. கண்ணீரும் கம்பலையும் ஆத்திரமும் அழுகையுமாய் இறங்கி வந்த காவல் தெய்வங்களையெல்லாம் வடக்கு செல்லத்தம்மன் தனது எல்லைக்குள் ஏற்று தாங்கிக் கொள்ள அனுமதித்தாள். அருகிலிருந்த கண்ணகி எதுவும் பேசாமல் அமைதி காத்தாள்… பொழுது விடிந்தது. இரத்தம் மேவிய அந்தப் பகுதி முழுவதும் பெரும் போர் நடந்தது போல் இருந்தது. சாமியாடிகளும் பூசாரிகளும் கோடாங்கிகளும் அயர்ந்துபோய் எங்கும் சுருண்டு கிடந்தார்கள்.” என்ற சித்தரிப்பு அந்த வரலாற்றுப் பெயர்வின் உக்கிரத்தைச் சொல்லிக் காட்டுகிறது.

அது ஒரு மாபெரும் புண். மரம் பிடுங்கப்பட்ட புது மண் குழி. நவீன காலகட்டம் மரபில் இருந்து ஓர் அடையாளத்தை கெல்லி வீசியிருக்கிறது. சிலப்பதிகார அறிமுகம் உடையவர்களுக்கு ஊனும் சோறும் கலந்து வானில் வீசி பூதங்களுக்குப் பலி கொடுக்கும் சடங்கு அன்றுமுதல் இருந்திருப்பது தெரியவரும். அன்று வீசப்பட்ட அந்தக் கவளம் ஈராயிரம் வருடத்துப் பாரம்பரியத்தின் கடைசிக் கவளமாக இருக்கலாம்.

இன்னொரு நுட்பமான தளத்திலும் சென்ற வரலாற்றுக்கும் வந்த வரலாற்றுக்கும் இடையேயான வேறுபாட்டை நிறுவுகிறார் சு.வெங்கடேசன். உறுமி ஒலியுடன் வம்ச கதைகளைப்பாடும் குலப்பாடகர்களை கலெக்டர் பிளாக்பர்ன் சந்திக்கும் இடம். அதுவரை வந்தது எழுதப்பட்ட வரலாற்றின் காலகட்டம். வென்றவர்கள் வென்ற விதத்தை விரிவாக எழுதிப் பதிவு செய்ய நிகழும்போதே காலத்தில் பொறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் வரலாறு அது.

அதில் நிகழ்ச்சிகள் உண்டு, மாமனிதர்கள் உண்டு, வருடங்களும் தேதிகளும் உண்டு. தனிப்பட்ட வீரத்திற்கும் தியாகத்திற்கும் இடமில்லை. இழப்புகளுக்கு இடமில்லை. எழுதப்பட்ட அக்கணமே அது இறுகிப் பாறையாக ஆகிவிடுகிறது. பிறகு அது இரக்கமேயில்லாத இரும்புச் சட்டகம் போல ஆகிவிடுகிறது. அந்த வரலாற்றில்தான் நாயக்கர்கள் இறுகியமர்ந்திருக்கிறார்கள். பிரிட்டிஷார் அமரப்போகிறார்கள்.

மறுபக்கம் உறுமிக்காரர்களின் குல வரலாறு. அது காற்றில் அலையடிக்கும் மனிதக் குரலில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தலைமுறை நினைவுகளில்தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறை பாடப்படும்போதும் அது உணர்ச்சிகள் கலந்து கலந்து தொன்மங்களாக மாறியபடியே செல்கிறது. அதில் மாமனிதர்களை விட, மாபெரும் நிகழ்ச்சிகளைவிட, வீரம் என்றும் தியாகம் என்றும் மரபு வகுத்த விழுமியங்களுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. அது காற்றுபோல, நீர் போல சுதந்திரமானது. நெகிழ்வானது. ஆனால் எந்த கற்கோபுரத்தைப் போல காற்றும் அழிவில்லாததே. நீரும் அழிவில்லாததே. மதுரைக்காக உயிர் கொடுத்த அனைவருமே தெய்வங்களாகி குடியிருப்பது அந்த காற்றில்தான். கோட்டை இடிபடும்போது அவர்கள் அலறியபடி இறங்கிச் சென்றது அந்த குலப்பாடலில் இருந்துதான்.
 
அதிகாரத்தின் மையமாகிய கோட்டைக்கும் தாதனூர்க்காரர்களுக்குமான உறவை பெருமொழிபு வரலாற்றுக்கும் சிறு மொழிபு வரலாற்றுக்கும் இடையேயான உறவின் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். மதுரை கோட்டை கட்டப்பட்டது முதலே அந்த உறவின் சரடை நாம் நாவல் முழுக்க நீட்டிக் கொண்டு வரலாம். குறிப்பான முதல் விஷயம் தாதனூர்காரர்களுக்கு மதுரைக் கோட்டைக்குள் இடமில்லை என்பதே. அவர்கள் கோட்டைக்குள் வந்து செல்கிறார்கள், திருடவும் காவலுக்கும். ஆனால் அவர்கள் அதன் மக்கள் அல்ல.

இந்த விஷயத்தை நான் பத்மநாபபுரம் அரண்மனை அருகே கோட்டைக்குள் குடியிருந்தபோது உணர்ந்திருக்கிறேன். பத்மநாபபுரத்தை பொறுத்தவரை இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில்கூட  எங்கு வீடு இருக்கிறது என்பது மிகவும் பொருள் பொதிந்த கேள்வி – கோட்டைக்கு உள்ளிலா வெளியிலா? கோட்டைப்புறம் என்பது கோட்டையை உருவாக்கி நிலைநிறுத்தும் சக்திகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலை. கோட்டையின் வேலையாட்களாக இருக்கலாம், வீரர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் கோட்டைப்புறத்தான் என்றால் அவனுக்கு அந்த சமூக அமைப்பில் இடமில்லைதான். கேரளத்தில் திருவனந்தபுரம், திரிச்சூர், கண்ணனூர், தலைச்சேரி என அனேகமாக எல்லா ஊர்களிலும் கோட்டைப்புறம் என்ற இடங்கள் உள்ளன. கோட்டைபுற தெய்வங்கள் அனைத்துமே சிறுதெய்வங்கள். கழுவேற்றப்பட்ட அறுகொலை தெய்வங்கள். ஏன், பலசமயம் தீண்டத்தகாத தெய்வங்கள்!

தாதனூர்க்காரர்கள் கோட்டைப்புறத்தார் மட்டுமல்ல, அவர்கள் ஊருக்கும் வெளியேதான். அவர்கள் வாழ்வது மலைக்கு மிக அருகே. நகரைவிட காட்டிடம்தான் அவர்களுக்கு அதிக உறவு. மிக மிக அபூர்வமாகவே அவர்களை நோக்கி மதுரை ஆட்சியின் ஒரு கரம் நீள்கிறது. மற்றபடி அவர்கள் காட்டு மிருகங்கள்போல வாழ விதிக்கப்பட்டிருக்கிறார்கள். மந்தையில் களவு எடுக்கும் நரிகள் போல அவர்கள் பரம்பரை பரம்பரையாக ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கிறார்கள். அந்த வாழ்க்கையில் அவர்கள் கற்றுக் கொண்டவையே அந்த திருட்டு நுட்பங்கள், அவர்கள் பெற்ற தங்கி வாழும் திறன்கள். பஞ்சங்களில் அவர்கள் இருப்பதே ஆட்சி மையத்திற்கு தெரியாமலிருந்திருக்கும் – அவர்கள் திருடாமலிருந்திருந்தால்.

ஆகவே தாதனூரின் பிறமலைக்கள்ளர்களுக்கு திருட்டு என்பது பிழைப்பு மட்டுமல்ல. தொழில் மட்டுமல்ல. கலையும் அதுதான். பண்பாடும் அதுதான். ஆகச்சிறந்த திருடனே அவர்களில் கனவான். மிகச்சிறந்த திருட்டே அவர்களின் வரலாற்று நிகழ்வு. பெருமிதங்கள் முழுக்க திருட்டைச் சார்ந்தே உள்ளன. அதைவிட முக்கியமாக அவர்கள் ‘பிற’ மக்களுடன் தொடர்பு கொள்வதே திருட்டு மூலம்தான். பிறருக்கும் அவர்களுக்கும் இடையே திருட்டு சம்பந்தமாகத்தான் ஒரு தொடர்புறுத்தும் சமூக அமைப்பு உள்ளது. திருட்டு கொடுத்துவிட்டால் துப்பு கொடுப்பவன் வழியாக தாதனூரை அணுகி பேரம் பேசி வாய்ப்பிருந்தால் பொருளை மீட்கமுடியும். இதற்காக மட்டுமே பிற சமூகம் தாதனூருடன் உறவாடுகிறது. உரையாடல் இதனூடாக மட்டுமே சாத்தியமாகிறது.

தாதனூர் பிறருக்கு சொல்லவேண்டிய சேதியும் திருட்டு மூலமே சொல்லப்படுகிறது. திருமலை நாயக்கர் மதுரையை தன் அதிகாரபீடுடன் நிர்மாணித்தபோது மேலூர் கள்ளரும் மறவரும் எல்லாம் தங்கள் அதிகாரப் பங்குகளை முறையாகப் பெற்றுக் கொண்டபோது மன்னருக்கு தங்கள் கோரிக்கையை தாதனூர் பிறமலைக் கள்ளர்கள் ஒரு திருட்டு மூலமே தெரிவிக்கிறார்கள். அவர்கள் யார் என்பதைக் காட்டும் ஒரு மகத்தான திருட்டு. அவர்களைப் புரிந்து கொண்ட நாயக்கர் அவர்களுக்குச் சாத்தியமான தொழிலை அளிக்கிறார். திருடனைவிட பெரிய காவலன் யார்? அந்தத் திருடன் மன்னரின் அரண்மனையில் அவன் கன்னம் வைத்துப் புகுந்த துளையை அடைக்காமலேயே விட்டுவிடவேண்டும் என்று கோருவதில் உள்ள வேடிக்கையான உண்மை கவனிக்கத்தக்கத, அது அவனுடைய வெற்றியின் கல்வெட்டு (சுவர் வெட்டு?) அல்லவா?

அதிகாரம் கைமாறப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சி உருவானபோது மீண்டும் ஒரு பெரிய திருட்டு வழியாகவே தாதனூர் கள்ளர்கள் தங்கள் ‘சேதி’யைச் சொல்கிறார்கள். மதுரையில் ஒரு பங்கு எங்களுக்கு அளித்தேயாக வேண்டும் என்று! கலெக்டரின் வீட்டிலேயே கன்னம் வைத்து மதிப்புமிக்க நினைவுப் பொருட்கள் இருந்த பெட்டகத்தை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். விஷயம் அவருக்கும் மக்களுக்கும் புரிகிறது. மதுரையின் காவல் உரிமை மீண்டும் தாதனூருக்கே வந்து சேர்கிறது. .

திருட்டும் காவலும் ஊடும் பாவுமாகக் கலந்த உறவே தாதனூர் கள்ளர்களுக்கும் மதுரைக்கும் இருக்கிறது. ஒருவேளை குறியீட்டு ரீதியாகப் பார்த்தால் அரச வரலாற்றுக்கும் மக்கள் வரலாற்றுக்கும் இடையே உள்ள உறவே இதுதானா? அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவும் இதுதானா? நாவலின் இரண்டாவது பகுதி ‘குடிமக்கள்’ என்ற தலைப்புடன் இருக்கிறது. மிக விரிவான அளவில் அது தாதனூர் கள்ளர்களின் ‘திருட்டு மற்றும் காவல்’ வாழ்க்கையைச் சித்தரிக்கிறது.

இங்கே மிகமிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்க ஒன்று உண்டு. சு.வெங்கடேசன் தாதனூர் கள்ளர்களின் திருட்டை எவ்வகையான ஒழுக்க விதிகளின் படியும் அணுகவில்லை. மொத்த நாவலிலும் தாதனூர்க்காரர்களின் திருட்டைப் பற்றிய சிறு கண்டனத் தொனிகூட இல்லை.
இன்னும் சொல்லப்போனால் மொத்த நாவலும் திருட்டை ஒரு ‘சிவில்’ பிரச்சினையாகவே அணுகுகிறது. குடிமைப் பிரச்சினை என்பது குடிகள் ஒருவரை ஒருவர் சார்ந்தும், முரண்பட்டும் வாழ்வதனூடாக உருவாகக்கூடியது. வெங்கடேசன் திருட்டை அதில் ஒன்றாகவே காட்டுகிறார். பிற சமூகங்கள் வியாபாரம், தொழில் சார்ந்த சுரண்டல்கள், அரசாங்க சேவகம் போன்றவற்றில் ஈடுபடுவதற்கும் திருட்டுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை என்ற நோக்கை நாவல் முழுக்கக் காணலாம்.

விரிந்த பார்வையை தாதனூர் கள்ளர்களில் வாழ்க்கையைப் பார்க்கையில் வியப்பும் பரிதாபமும் ஏற்படுகிறது. அவர்களுக்கு பிற சமூகங்களுடன் உறவு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு என்று சாமிகள், சடங்கு சாஸ்திரங்கள் எதுவும் இருப்பதும் இந்நாவலில் இல்லை. அவர்கள் வணங்கும் கருப்பும் சரி சடைச்சியும் சரி போர்சாதிகளின்ன் பொது தெய்வங்களே. அனைத்தையும்விட முக்கியமான இத்தனை பெரிய நாவலில் அவர்களின் சமையல் முறைகள் உணவு வகைகள் என எதுவுமே இல்லை. அவர்கள் கிட்டதட்ட பழங்குடிகள் போல இருக்கிறார்கள். விவசாயம் செய்யாத, ஆடு, மாடு வளர்க்காத,  ‘திரட்டி உண்ணும்’ வாழ்க்கைமுறை கொண்ட பழங்குடிகளைப் போல திருடி உண்கிறார்கள். ஊர்க்காவல் செய்வதன் கூலியாக ‘காவல் பணம்’ பெற்று உண்கிறார்கள். பஞ்சத்தில் மலைகளில் வேட்டையாடி உண்கிறார்கள்.

இந்த மொத்த நாவலிலும் தாதனூர் கள்ளர்களின் வாழ்க்கை எவ்விதமான உறவுச் சிடுக்குகளும் இல்லாததாகவே காட்டப்படுகிறது. மிகமிக நேரடியான மக்கள். பேச்சுக்கள் நேரடியானவை. எல்லா உறவுகளும் எளிமையானவை. திருமணம் மிக எளிமையானது. சின்னானை விரும்பும் தாதனூர்க்காரி அவனுக்கு சமைத்து எடுத்துக் கொண்டு மலைக்குப் போய் தருகிறாள். நான்கு ஊர் பெரிய தலைகளை கூப்பிட்டு சின்னான் சாப்பாடு போடுகிறான், சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். மணமுறிவு இன்னும் எளிமையானது. அது மணமுறிவே அல்ல ஒரு துரும்பின் முறிவுதான்.

இந்நாவல் முழுக்க தாதனூர் கள்ளர்கள் கிட்டத்தட்ட மாற்றமே அடையாதவர்களாக இருக்கிறார்கள். தலைக்குமேல் சரித்திரம் கொப்பும் குலையும் அள்ளி நுரைத்து ஒழுகிச் செல்வதைப் பற்றி அவர்களுக்கு எந்தப் பிரக்ஞையும் இல்லை – அவர்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை, அவ்வளவுதான். மனிதர்கள் பிறக்கிறார்கள், திருடுகிறார்கள், பிடிபடுகிறார்கள், தப்புகிறார்கள், மீண்டும் திருடுகிறார்கள், காவல் பணம் பெறுகிறார்கள், வேட்டையாடுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் – இவ்வளவுதான் வாழ்க்கையே.

தாதனூர் கள்ளர்களின் வாழ்க்கையின் விரிந்த சித்திரத்தை  அளிக்கும் நாவலின் இரண்டாம் பகுதி ஒரு பொது வாசகனுக்கு அபாரமான வாசிப்பார்வத்தை அளிக்கக்கூடியது. சமீபகாலத்தில் தமிழில் இத்தனை ஆர்வமூட்டும் வாசிப்பை அளித்த இத்தனை பக்கங்கள் தமிழில் எழுதப்பட்டதில்லை என்றே கூறலாம். ஆனால கதையோட்டம் மூலமோ உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மூலமோ இந்த வாசிப்பார்வம் உருவாக்கப்படவில்லை. முழுக்க முழுக்க புத்தம் புதிய நுண்சித்தரிப்புகள் மற்றும் தகவல்கள் வழியாகவே அது உருவாக்கப்பட்டிருக்கிறது. பல பகுதிகளை கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் உள்ள படைப்பூக்கம் கொண்ட பகுதிகளுடன் ஒப்பிடலாம்.

நாவலின் இந்த இரண்டாம் பகுதி தொடங்கியதுமே வாய்மொழிக் கதை விரிவது கவனிப்புக்குரியது. அதன் இரண்டு சரடுகள் வாசகன் முன் வருகின்றன. ஊர்ச்சாவடியில் பிள்ளைகளை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும் ஆண்டாயிக் கிழவி ஒரு சரடு அவள் ரத்த ஓட்டமெல்லாம் கதையாகத்தான் இருந்தது. அவள் மட்டுமல்ல தாதனூரில் உள்ள எல்லாரையும் கதை நாளங்கள்தான் பாலூட்டி வளர்த்தவள் அவள். அவளுடைய கதையும் உயிரும் வேறுவேறல்ல என்று ஆசிரியர் கூறுகிறார். அவள் வாய் வழியாக வருவது திருமலை நாயக்க மன்னனின் அரண்மனையில் உடும்பின் உதவியால் தொற்றி ஏறி களவு செய்த கழுவனின் கதைதான். முதலில் பெருவரலாறாக வந்த அதே கதை மேலும் தகவல்களுடன் சிறு வரலாறாக மீண்டும் வருகிறது.

இரண்டாவது சரடு வாய்மொழியாகவே ஏட்டில் பதியப்பட்ட மரபு. செவ்வியல் வரலாற்றுக்கு தொடர்பே இல்லாத வரலாறு இது. “கம்பம் கருமத்திலும் காவல் மகிமை காவல் புஞ்சை செய் நஞ்சையில் மாத்தாலொரு கட்டு ஒரு கறுக்கு” என்று ஏட்டிலிருந்து உருவாகி வருகிறது இன்னொரு குரல். இரு குரல்களும் சேர்ந்து தாதனூரின் சிறு மொழிபு வரலாற்றை காட்டுகின்றன.

இந்த தாதனூர் சித்தரிப்பையே வெங்கடேசனின் சாதனை என்று கூறுவேன். சித்தரிப்பின் ஆற்றலும் நுண் அவதானிப்புகளின் அழகும் கவித்துவமும் கைகூடும் பல பகுதிகள் இந்தப் பக்கங்கள் வழியாக வந்துகொண்டே உள்ளன. குறிப்பாக வல்லங்கனும் குழுவும் உடும்பு வேட்டைக்கு போகும் அந்தக் காட்சியில் விவரணைகளின் நுட்பம் தொடர்சியாக வந்துகொண்டே உள்ளது. ஒரு குறுங்காட்டின் மரங்கள்,  மண் காய்ந்த காட்டில் இருக்கும் வெக்கை, விரைந்தோடும் வேட்டை நாய்களின் குரைப்பொலி மரக்கூட்டங்களில் எதிரொலிக்கும் விதம் எல்லாமே கண்முன் எழுகின்றன. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ (தமிழில் டி.எஸ்.சொக்கலிங்கம்) நாவலில் வரும் புகழ்பெற்ற வேட்டைக்காட்சியை நினைவுறுத்துகிறது இது.

உடும்பின் உடலில் இருந்து எடுத்த நாற்றப் பசையை வேட்டை நாயின் மூக்குக்குள் ஊதி ஏற்றி அதைப் பழக்குகிறார்கள். அதன்பின் அது எத்தனை தூரத்தில் உடும்பு இருந்தாலும் கூறிவிடும். காடு வரை மனிதர்கள் நாய்களுடன் செல்ல காட்டுக்குள் நாய்கள் மனிதர்களடன் செல்கிறார்கள். பொந்துக்குள் பாறையை காலால் பொத்திக் கவ்வி அமர்ந்திருக்கும் உடும்பை கிட்டத்தட்ட குச்சி நுனியால் ‘கிச்சுக்கிச்சு மூட்டி’யே வெளியே இழுத்து எடுக்கிறார்கள்.

மிருகயா

தாதனூரின் சோர்ந்த பகல்களை அழகிய காட்சி நுட்பத்துடன் சொல்கிறது இந்த நாவல். பகல் ஒளியில் வந்த அந்தை போல சோபையிழந்து கிடக்கிறது தாதனூர். கள்ளர்கள் பகலில் ஊர்களில் தூங்குவதில்லை, காடுகளில் குகைகளில்தான் தூன்குகிறார்கள். ஊரில் இருப்பது பெண்களும் தாத்தாக்களும்தான். பெரியாம்பிளைகள் வம்புபேசி பெண்களிடம் பாலியல் வேடிக்கைகளை பேசி ஆனந்தமாக வசவு வாங்கி சடச்சியின் அடியில் குந்தி அமர்ந்திருக்கின்றன. 

அதேபோல திருட்டு நுட்பங்கள். மதுரையின் காவல் வேலை தாதனூர் கள்ளர்களுக்கு வந்ததும் அத்தனை திருட்டு நுட்பங்களும் அப்படியே காவல் நுட்பங்களாக மாறிவிடுகின்றன. பறவைகள்தான் திருடனுக்கு துப்பு கொடுப்பவை. இப்போது காவலுக்கும் துப்பு கொடுக்கின்றன. பறவைகளை கலைக்காமல் திருடன் ஊருக்குள் புகுந்துவிட முடியும், ஆனால் பொருட்களுடன் வெளியேற முடியாது என்கிறது நாவல். பறவைக்குரலில் இருந்தே எத்தனை பேர், எந்த திசையில் செல்கிறார்கள் என்று  ஊகித்துவிடுகிறார்கள். தாதனூர் கள்ளர்கள் காவல் காப்பதென்றால் சுற்றிசுற்றி வருவதல்ல. அவர்கள் வந்து சாவடியில் சும்மா குந்தி அமர்ந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களின் ஆயுதங்களோ கைகால்களோ அல்ல கூடிய புலன்களே உண்மையான காவல்.

உதாரணமாக  வெளியூரில் இருந்து வண்டி வண்டியாக தானியங்களுடன் வந்து மதுரைக்குள் இருட்டில் நின்றிருக்கிறார்கள் வெளியூர்க்காரர். தாதனூர் கள்ளன் அதைப் பார்த்து விசாரித்து விட்டு காவல் கூலி கேட்கிறார். உங்களூரில் என்ன தொகை என்று கேட்டு கொடுக்க முற்படும் வண்டிச் சொந்தக்காரர் ஒரு வண்டியைக் குறைத்து சொல்லிவிடுகிறார். கூரிருளில் வண்டிக்காளைகளின் கழுத்துமணி ஓசையை வைத்தே எத்தனை வண்டி என்று ஊகிக்கும் காவலன் கள்ளன். சரியாகக் கணக்கு சொல்லி எச்சரித்து வாங்கிச் செல்கிறான். இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் ஊரிலேயே திருட வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று வியப்பு கொள்கிறார் வண்டிக்காரர். அதுவரை அவர் இருள் தனக்கு ஒரு பெரிய பாதுகாப்பு என்று நினைத்திருந்தார். சட்டென்று அந்த பாதுகாப்பு இல்லாமலாக, உடை களையப்பட்டு நிர்வாணமானது போல உணர்கிறார்.

கள்ளர்களுக்கு இருட்டுதான் எல்லாம். இருட்டு அவர்களுக்கு பாதை காட்டும், திசை காட்டும், தடம் காட்டும். இருட்டில் குழந்தைகள் வளர்கின்றன. திருட்டுத் தொழிலையும், காவல் தொழிலையும் விட்டுவிட்டு வயதானபிறகும் கூட பெரியோர்களால் இரவில் தூங்கமுடிவதில்லை. இருட்டுக்குள் கொஞ்ச தூரம் நடந்து அலைந்து களைத்தபிறகுதான் தூங்க முடிகிறது. புதிய மனிதர்களுக்கும் புதிய ஒலிகளுக்கும் எந்நேரமும் பிரக்ஞை கூர்ந்து கவனித்தபடியே இருக்கிறது. வெளிச்சத்தில் அவர்கள் வலிமையற்றவர்களாக தனியாக விடப்பட்டவர்களாக உணர்கிறார்கள்.

தட்பவெப்ப நிலை மாற்றங்கள் கூட நுண்மையான அவதானிப்புகளாகவே சொல்லப்படுகின்றன. தாதுவருடப்பஞ்சத்தில் இரண்டாமடுக்கு அடிமண் உலரும்போது தாவரங்களின் இலைகளிலும் தடியிலும் வரை உருவாகும் வாடல், மிருகங்களின் கண்களில் வரும் நிரந்தரமான பசி வெறிப்பு என விவரிக்கும் அதே நுட்பம் பலநாள் பெருமழையில் இரண்டாம் அடுக்கு மண்ணும் ஈரமாக ஆனபின் உருவாகும் கடும் குளிரையும் [மரபில் அதற்கு கூதல் என்று பெயர்] வெள்ளம் சூழ்ந்த நிலத்தில் மரங்களின் தோற்றத்தையும் அதே நுட்பத்துடன் விவரிக்கிறது.
மதுரையின் எரிக்கும் வெயில், தூசி தும்புடன் சுழன்றடிக்கும் காற்றுட, சூட்டை கிளப்பிவிட்டு நோய் பரவச் செய்யும் முதல் மழை, வைகையில் புது வெள்ளம் பெருகிவரச் செய்யும் பெருமழை  என்று பருவகாலங்களினூடாக மானுட வாழ்க்கை ஓடிச் செல்வதை நாவல் மிக விரிவாகச் சித்தரிக்கிறது. வரலாற்று நிகழ்வுகளினூடாக விரியும் இந்த இயற்கை விவரணை காலத்தின் புற அடையாளமாகவே உருவம் கொள்கிறது. அது நாவலுக்கு விரிந்த ஒரு பிரக்ஞைத்தளத்தை அளிக்கிறது. எல்லாம் ஒவ்வொன்றும் ஒழுகிச் சென்றபடியே இருப்பது போன்ற உணர்வு நாவலின் பக்கங்களை வாசிக்கும்போது உருவாகியபடியே இருக்கிறது. அதுவே இந்நாவலுக்கு ஒரு செவ்வியல் தன்மையை அளிக்கும் முக்கியமான கூறு என்று படுகிறது.

நாவலின் இப்பகுதியில் சிறுமொழிபு வரலாறே பிரதானமாக இருக்க பெரு மொழிபு வரலாறு வந்து வந்து தாக்கி செல்கிறது. தாதனூரின் வாழ்க்கையில் ஆகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது வெள்ளைய ஆட்சி கொண்டுவந்த போலீஸ் முறை. ஐரோப்பிய பாணியில் ஒருங்கிணைக்கப்பட்ட, பயிற்சியளிக்கப்பட்ட காவல் படையை உருவாக்குகிறார்கள் வெள்ளையர். அதில் நாயக்கரும் வெள்ளாளர்களும் காவல் வேலைக்குச் செல்கிறார்கள். பிராமணர்கள்கூட காவலர்களாக ஆகிறார்கள். தாதனூருக்கு மட்டுமல்ல மறவர் குலத்துக்கே அது பெரிய ஆச்சரியம். வேடிக்கையும் நக்கலுமாக அதைப்பற்றி பேசிக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் அது வெள்ளையனின் நிர்வாகம் சார்ந்த ஒரு மேல்மட்ட சீர்திருத்தம் மட்டுமாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் காவல் தாதனூர்க்காரர் கையில்தான் நீடிக்கிறது. போலீஸ்காரர்கள் கள்ளர்களுக்கு காவல் கூலி கொடுத்து காவல் வைத்திருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டின் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் தாதனூர் கள்ளன் ஒருவன் வந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டரிடமே காவல் கூலி கேட்டதும் அவர் அதை இயல்பாகவே கொடுப்பதும்தான்.

ஆனால் அந்த ஆட்டம் அதிகநாள் நீடிக்கவில்லை. பிரிட்டிஷாரின் போலீஸ் மெல்ல மெல்ல விரிந்து பரவுகிறது. அதன் அதிகாரம் குடிமக்கள்மீது வலையென மூடுகிறது. வெள்ளையனின் நிர்வாகம் என்பது இரண்டே தளங்கள் கொண்டது. வரி வசூல், சட்டம் ஒழுங்கு பேணல். இரண்டும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. சட்டம் ஒழுங்கே சீரான வரிவசூலை உருவாக்கும். வரிவசூலுக்குச் சொல்லப்படும் காரணமும் சட்டம் ஒழுங்குதான்.

வெள்ளையனின் நிர்வாக மரபை இந்திய நடுத்தர வர்க்கம் எப்படி  ஏற்றுக் கொள்கிறது என்பதற்கான வேடிக்கையான ஒரு சித்தரிப்பு இந்நாவலில் உள்ளது. காவலர்களுக்கு அவன் அறிமுகம் செய்யும் கால்சராய், தொப்பி காலணி என்ற சீருடை பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. சாதிக்கொரு உடை இருந்த சமூகத்தில் வநத ஒரு தரப்படுத்தல் அது. நவீனத்துவத்தின் நுழைவு

இந்திய நாவல்களில் நவீனத்துவத்தின் நுழைவு பலவகைகளில் சொல்லப்பட்டிருக்கிரது. பொதுவாக சாலை, பேருந்து, மின்சாரம் போன்றவற்றின் வருகையே சம்பிரதாட்யமான குறியீடாகச் சொல்லப்படும். சத்யஜித் ரேயின் பாதேர் பாஞ்சாலியில் ரயில் அழகிய படிமமாகச் சொல்லப்படுகிறது, கிராமத்தைத் தீண்டாமல் செல்கிறது அது. ஆனால் மதுரைக்குள் நவீனத்துவத்தின் நுழைவை போலீஸ் சீருடையின் வருகை மூலம் சொல்கிறார் வெங்கடேசன். ஏனென்றால் மீண்டும் இது காவல்கோட்டத்தின் கதை என்றே சொல்லவேண்டும்

பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான போதிலும்கூட மிக விரைவிலேயே ‘இரண்டு கிழிந்த மரக்கால்களை சேர்த்து வைத்தது போன்ற’ கால் சராயும் ‘ஓட்டை போட்ட சுரைக்காய் குடுக்கை போன்ற’ சப்பாத்துக்களும் அதிகாரத்தின் சின்னமாக ஆயின. அதன்பின்னும் சில மனச்சங்கடங்கள் இருக்கத்தான் செய்தன. போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அய்யரால் மாட்டுத் தோல் பெல்டை போட மனத்தை ஒப்புக் கொள்ள செய்யமுடியவில்லை. சாதி ஆசாரம், ஊரார் எதிர்ப்பு. ஆனால் சிப்பாய் கலகம் ஏதும் வெடிக்கவில்லை. பிரமோஷன் போய்விடும் என்ர நிலைவந்தபோது அய்யர் செய்த சாரைப் பாம்பு போன்ற அதை கட்டிக் கொள்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காக ‘கச்சை கட்டி’ இறங்கிய ஒரு அதிகார வர்க்கம் உருவாகிறது.

வெள்ளையர் ஆட்சி மெல்ல மெல்ல மரபான காவலுரிமைகளை ரத்து செய்து தாதனூர் கள்ளர்களே மீண்டும் வெறும் குற்றவாளிகளாக மாற்றுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களால் மிக விரிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த மாற்றம் இந்நாவலின் முக்கியமான பகுதியாகும்.  முக்கியமான செவ்வியல் நாவல்களுக்குரிய நேர்த்தியுடன் இந்த மாற்றம் பல படிகளாக மிக விரிவாக இந்நாவலில் வருகிறது. இதை ஒரு வரலாற்று படிமமாக எடுத்துக்கொண்டால் மட்டுமே இந்த படிகளை புரிந்துகொள்ள முடியும். முதலில் விசுவநாத நாயக்கனின் கோட்டை இடிக்கப்படும் சித்திரம். பின்னர் கதை சிறுமொழிபாக, நாட்டார் மரபுக்கு மாறும் சித்திரம். பிறகு தாதனூர்க்கள்ளர்களின் விரிவான வாழ்க்கை விவரிப்பு. அதன்பின் அவர்கள் அவர்களையறியாமலேயே இன்னொன்றாக மாற்றப்படும் விசித்திரம்.

மாறாத மனிதர்கள் மாறும் காலத்தில் சட்டென்று முற்றிலும் புதியவர்களாக தங்களை சூழல் மாற்றியிருப்பதை உணர்வது ஓர் ஆசிய நிகழ்வு. இங்குள்ள பெரும்பாலான இலக்கியங்களில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகச்சிறந்த உதாரணம் மிருணாள் சென்னின் ‘மிருகயா’. வேட்டையாடிய மிருகத்தைக் கொண்டுவந்து கொடுத்தால் பணம் தரும் வெள்ளையன் அன்று தன் மிகப்பெரிய வேட்டைப் பொருளை, குல எதிரியின் தலையைக் கொண்டு வந்து கொடுத்தபோது ஏன் தன்னை சிறையிலடைக்கிறான் என்று சந்தால் ஆதிவாசிக்கும் புரிவதேயில்லை.

கிட்டத்தட்ட அப்படித்தான் தாதனூர் கள்ளர்களுக்கும். திருட்டும் வேட்டையும் அவர்களின் குல ஆசாரங்கள். அதில் எந்தப் பிழையையும் அவர்கள் பார்க்கவில்லை. அவர்களுக்குக் கிடைத்த அரச அங்கீகாரமான திருமலை மன்னனின் அரச காவல் வேலைகூட திருட்டுத் திறனை மெச்சி அளிக்கப்பட்டதுதான். திடீரென்று தெரிந்து கொள்கிறார்கள். திருட்டு ஒரு குற்றமாக மாறிவிட்டது என்று. திருட்டுக்கு ஈவிரக்கமற்ற தண்டனை உண்டு என்று. அந்த புதிய நீதிக்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். ஆகவே குற்ற பரம்பரை என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

தாதனூரை மாற்றுவது எளிதல்ல. அதைவிட அதை சிறையிடுவதும் அழிப்பதும்தான் எளிது. தாதனூரை தாக்க பகலில் படைகொண்டு வரும் வெள்ளையனாகிய வில்சன் அங்கே காண்பது பரிதாபமான சில சோளத்தட்டைக் குடிசைகளையும் சில வயல்களையும் மட்டும்தான். “ஏனென்றால் தாதனூர் பகலில் உள்ள ஊரல்ல. இருட்டில் எழுதப்படும் ஊர்” என்கிறார் வெங்கடேசன். தாதனூரின் ஒவ்வொரு இளைஞனும் திருடனாகவே வளர்கிறான். திருட்டு என்பது அவர்களின் மொழி.

நல்லமுத்துச் செட்டியார் அதை உணரும் கணம் இந்நாவலில் மிக நுட்பமான ஒரு பகுதி விருமாண்டியும் தோழனும் செம்பில் நீர் மொண்டு குடிப்படைப் பார்க்கிறார் செட்டியார். ஏதோ ஒரு வேறுபாடு இருப்பது தெரிகிறது, என்ன என்று தெரியவில்லை. பிறகு கண்டு கொள்கிறார். அவர்கள் செம்பை எடுக்கும்போதும் வைக்கும் போதும் சத்தமே எழுவதில்லை. அவர் அதேபோல வைக்க முயல்கிறார். செம்பு தரையில் உரசும் ஒலி இடிபோல எழுகிறது!

தாதனூருக்கு வாழ்க்கை என்பது எப்போதும் களியாட்டமாகவே இருப்பதை இந்நாவல் காட்டுகிறது. விசித்திரமான ஒரு விஷயம் இது. சுற்றுமுள்ள சம்சாரிகள் பலமடங்கு செல்வம் உடையவர்கள். மேலும் மேலும் செல்வம் சேர்க்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை என்பது உழைப்பும் இளைப்பாறலும் மட்டுமே. ஆண், பெண் அத்தனைபேரும் சமூகத் தளைகளில் சிக்குண்ட கிடக்கிறார்கள். நேர்மாறாக தாதனூருக்கு ஒரு நல்ல திருட்டு என்பது பெரும் திருவிழா. பாலியல் கதைகள் பேசி பெண்கள் சமைக்கிறார்கள். குடியும் சாப்பாட்டும் பூசலும் கைகலப்பும் விளையாட்டுமாக ஆண்கள் கொண்டாடுகிறார்கள். வேட்டையும் திருட்டும் அவர்களுக்கு களியாட்டமே. மரணமும் களியாட்டமே. ஆக, தாதனூர் தனக்கெனத் தீர்மானித்துக் கொண்ட ஒரு வாழ்க்கையில் நிறைவாகவே ஒழுகிக் செல்கிறது. அதைத்தான் வெள்ளையனின் சட்டம் வந்து தடுக்கிறது.

கள்ளர்கள் மீதான வெள்ளையரின் தாக்குதலின் மூர்க்கமான சித்திரங்கள் இந்நாவலில் வருகின்றன. அவற்றை எப்படி வகுத்துக் கொள்வது என்பது ஒரு சிக்கலான கேள்வி. மீண்டும் மீண்டும் அவ்வினாவை நோக்கி வாசகனைக் கொண்டு செல்வதனால்தான் நாவலின் அப்பக்கங்கள் மிக முக்கியமானவையாக ஆகின்றன. ஓர் நலம் நாடும் அரசு தன் குடிகளை காப்பதற்காக அக்குடிகளின் உயிரையும், உடைமையையும் பாதுகாக்கும் பொருட்டு, அதன் எதிரிகளை தண்டிக்கிறது என்பதே மரபான விடையாக இருக்க இயலும். அந்த விடை மரபான ஒரு வரலாற்று விவரிப்பின் பகுதியும்கூட. இந்நாவல் உருவாக்கும் மாற்று வரலாற்று விவரிப்பின் பின்புலத்தில் அந்த விடை வருவதில்லை. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், வெங்கடேசன் ‘குடிமக்கள்’ என்ற தனிப்பகுதியாக அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய விவரிப்பை அளிக்கிறார். அவர்கள் அரசின் குடிமக்கள், எதிரிகள் அல்ல. ஆனால் அந்த அரசு எந்த வரலாற்றுக் காலகட்டத்தில் வாழ்கிறதோ அந்த வரலாற்று காலகட்டத்தில் அவர்கள் வாழவில்லை, அவ்வளவுதான்.

உண்மையில் கள்ளர்கள் வாழும் வாழ்க்கை அகாலத்தில் என்று கூறலாம். அவர்கள் வாழும் வாழ்க்கையில் மாற்றம் என்பதே இல்லை. எப்போதோ ஒரு காலத்தில் தொடங்கிய ஒரு வாழ்க்கை மலைகளைப் போல அப்படியே மாறாமல் இருக்கிறது. அழகிய ஓர் உவமை வழியாக அதைச் சொல்கிறார் வெங்கடேசன். அவர்கள் பகலில் வாழ்வதில்லை, இரவில் வாழ்கிறார்கள். பகலில்தான் வரலாறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆட்சிகள் மாறுகின்றன. நாயக்கர்களும் கும்பினிக்காரர்களும் வருகிறார்கள். இரவு புராதனமானது. மாற்றமற்றது. அந்த மக்கள் இரவின் ஆழத்தில் அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட பரதவரும் அதேபோல் நிலத்தில் நிகழும் வரலாற்று அலைகளுடன் தொடர்பே இல்லாமல் கடலில் தங்கள் சொந்த காலத்தில் வாழ்பவர்களே.

நாயக்கர் அரசு அந்த மக்களை தங்கள் விரிவான அதிகாரக் கட்டமைப்பிற்குள் ஒரு இடத்தில் பொருத்திக் கொண்டு தன்னை அமைத்துக் கொண்டது. நாயக்கர் காலகட்டத்தில் அரசு உருவாக்க முறையே அதுதான். அரியநாத முதலி பாளையப்பட்டுக்களை உருவாக்குவதன் சித்திரத்தை வெங்கடேசன் உருவாக்கி அளிக்கிறார். ஏற்கனவே இருந்த அதிகார அமைப்புகளை தன் குடைக்கீழ் தொகுக்கிறார் அரியநாத முதலி. நாயக்கர் அரசை நிலப்பிரபுத்துவ அரசு எனலாம். பழங்குடி வாழ்க்கைமுறை கொண்ட தாதனூர் கள்ளர்களுக்கும்  நிலப்பிரபுத்துவ அரசில் ஓர் இடம் இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் அரசு நவீனத்துவ அரசு. அதில் பழங்குடிகளுக்கு இடமில்லை. ஏன் நிலப்பிரபுத்துவக் கூறுகளுக்கும் இடமில்லை.

இவ்விரு அமைப்புகளின் இயல்புகளும் அப்படிப்பட்டவை. நிலப்பிரபுத்துவம் நெகிழ்வானது, தன்னை மாற்றியமைக்கும் தன்மை கொண்டது. தனக்கு மாறானவற்றை உருமாற்றி தனக்குள் சேர்த்துக் கொள்கிறது அது – இந்துமதம் நிலப்பிரபுத்துவ காலத்தின் ஆக்கம். மாறாக நவீனத்துவம் இயந்திரம் போல மூர்க்கமான கச்சிதம் உடையது. தனக்கு மாறான அனைத்தையும் அழித்து அங்கே தன்னை இருத்திக் கொள்கிறது அது. இந்தியாவுக்கு வந்த கிறித்தவம் அத்தகையது. பிரிட்டிஷ் நவீனத்துவம் நவீனத்துவத்தின் படிகளை மிதிக்க மறுக்கும் தன் குடிமக்களின் ஒரு தரப்புடன் மேற்கொண்ட போரே தாதனூர் கள்ளர்களுக்கும் அவர்களுக்குமான மோதல் என்றுதான் இந்நாவலின் விவரிப்பினூடாக நாம் அறிகிறோம்.

முந்தைய கட்டுரைகத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅக்கினிபிரவேசம்,கடிதங்கள்