‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21

பகுதி நான்கு : பீலித்தாலம்

[ 4 ]

திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக வெளியே நிகழ்பவை தெரிந்தன. களமுற்றத்திலிருந்த பன்னிரு சடலங்களை அகற்றினர். இருபத்தேழு பேர் நினைவிழந்து கிடந்தனர். பதினெண்மர் எழமுடியாது கிடந்து முனகி அசைந்தனர். அவர்களை அகற்றி தரையில் கிடந்த அம்புகளையும் மரச்சிதர்களையும் விலக்கினர்.

களமுற்றத்து ஓரமாக ஒரு பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரனின் உடலில் இருந்த பன்னிரண்டு அம்புகளையும் பிடுங்கி எடுத்தனர் ஆதுரப்பணியாளர். சந்தனத்தைலத்தையும்,வேப்பெண்ணையையும் சற்றே கொதிக்கச்செய்து அதில் படிகாரம்சேர்த்து வற்றவைத்து அந்தக்கலவையில் மஞ்சள்தூள் சேர்த்துக் குழைத்துச்செய்யப்பட்ட லேபனத்தை காயங்கள்மேல் வைத்து அதன்மேல் சிறியவெப்பத்தில் இளக்கப்பட்ட பன்றிக்கொழுப்பைப் பூசி அது உறைவதற்குள் பன்றிக்குடலில் எடுத்த மெல்லிய சவ்வை வைத்து அழுத்தினர். அது அப்படியே காயங்கள் மேல் கவ்வி ஒட்டிக்கொண்டது. புண்களின் வலியையே அறியாதவனாக தலையை ஆட்டியபடி தனக்குள் மகிழ்ந்து திருதராஷ்டிரன் அமர்ந்திருந்தான்.

அவனுடைய கரியபேருடலை அவள் திரை வழியாகப் பார்த்தாள். தோலுக்குள் தசைகள் இருளுக்குள் பாதாள நாகங்கள் அசைவதுபோலத் தெரிந்தன. ஓருடலுக்குள் பத்துமனிதர்கள் வாழ்வதுபோல. தலையை சுழற்றிக்கொண்டும் பெரிய பற்கள் தெரிய வாயை அசைத்துக்கொண்டும் இருந்த அரக்கவடிவினனைப் பார்த்தபோது அவளுக்குள் என்ன உணர்வுகள் எழுகின்றன என்றே அவளால் உணரமுடியவில்லை. அச்சம்தான் முதலில். அவள் கால்களின் நடுக்கம் அப்போதும் நிற்கவில்லை. விரல்நுனிகள் குளிர்ந்திருந்தன. உடலெங்கும் வியர்வை உப்பாக மாறத்தொடங்கியிருந்தது. வியர்வை உலர்வதுபோல அச்சமும் மறைந்தபோது ஒருவகை பதற்றம் மட்டும் எஞ்சியது. அந்தப்பதற்றம் ஏன் என்று எண்ணியபோது அந்தப் பேருருவம் அளிக்கும் ஒவ்வாமைதான் காரணம் என்று புரிந்துகொண்டாள்.

அவள் எண்ணியிருந்த ஆணுடலே அல்ல அது. அவளுக்குள் சூதர்பாடல்களும் தோழியர்களின் பேச்சுக்களும் கொண்டுவந்து நிறைத்த ஆண்மகன் மெல்லிய உடலும் சிவந்த நிறமும், பிங்கலநிறமான பருந்துச்சிறகுக்குழலும் சிவந்த சாயமிட்ட தாடிக்குள் அழகிய வெண்பல் சிரிப்பும், குறும்பு திகழும் கண்களும், கனிந்த மென்குரலும் கொண்ட இளைஞன். வெண்குதிரையில் விரிநிலத்தில் பருந்தெனப் பாய்பவன். கோடைமழைவானில் மின்னலெனச் சுழலும் ஒண்வாளை ஏந்தியவன். உச்சிமரத்துத் தனிமலர்களை காம்புமட்டும் அறுபட இதழ்குலையாது அம்பெய்து வீழ்த்தும் வில்லவன். எதிரே அமர்ந்திருந்த அரக்கனின் கைகளோ வேங்கையின் அடிமரம்போலிருந்தன. புடைத்தவேர்கள் போல நரம்புகள் ஓட அவை இணைசேரும் மலைப்பாம்புகள் என அசைந்தன. அவன் கண்கள் திறந்தகுங்குமச்சிமிழ் போலத் தெரிந்தன. அவள் திணறும் மூச்சுடன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

குலமூத்தார் அவளை திருதராஷ்டிரனுக்கு கையளிப்பதாக அறிவித்ததை அவள் கேட்டாள். தன் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஒன்று ஓடியதை, உள்ளங்கால் அதிர்ந்ததை அறிந்ததும் இன்னொன்றை உணர்ந்தாள். அவளுக்காக அவன் வெறும்கைகளால் கதவைப்பிளந்து உள்ளேவந்த அக்காட்சியை அவள் ஆன்மா ஒருபோதும் மறக்கப்போவதில்லை. அவளுடைய ஆழத்தில் வாழ்ந்த ஷத்ரியப்பெண் புளகம்கொண்ட தருணம். ஷத்ரியப்பெண்ணுக்கு வீரன் அளிக்கத்தக்க மாபெரும் பரிசு அது. இன்னொரு ஆணை இப்போது அவள் ஏற்கவேண்டுமென்றால், அவன் அவளுடைய பகற்கனவுகளில் வாழும் அந்தப் பேரழகன் என்றாலும் கூட, இந்த அரக்கனிடம் மற்போரிட்டு வென்றுவரும்படிதான் அவளால் சொல்லமுடியும்.

அவள் மீண்டும் திருதராஷ்டிரனைப் பார்த்தாள். அவனுடைய உடலை காலில் இருந்து தலைவரை கூர்ந்தாள். என்ன ஒரு முழுமை என்று அப்போதுதான் அவளுடைய பெண்ணுடல் கண்டுகொண்டது. ஒவ்வொரு தசையும் அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தன. கால்விரல்நகங்கள் ஒவ்வொன்றிலும் தாரநாகத்தின் தேய்ந்து உருண்டு பளபளப்பான வெண்கல்லின் ஒளிமிக்க பார்வை இருப்பதுபோலப் பட்டது. கருங்கல்லால் செதுக்கப்பட்டதுபோன்ற கணுக்கால்கள். உழலைத்தடியென இறுகிய கெண்டைக்கால். நின்றசையும் குதிரையின் தசைகளைக் காட்டிய பெருந்தொடைகள். எட்டு பாளங்களாக இறுகிய வயிறு. மயிரே இல்லாமல் எருமைத்தோல் என கருமையாகப் பளபளத்த அகன்ற மார்பு. சுருண்ட கரிய தலைமயிர்.

அவள் அப்போதுதான் அவனுடைய விரல்கள் அசைந்துகொண்டே இருப்பதைக் கண்டாள். என்ன செய்கிறான்? அவன் காற்றில் தாளமிட்டுக்கொண்டிருக்கிறான் என்று கண்டுகொண்டாள். சிலகணங்களுக்குள் அவன் உடலே அவனுள் ஓடும் இசைக்கேற்ப மெல்ல அசைந்துகொண்டிருப்பதை உணர்ந்தாள். பாடுகிறானா? உதடுகள் அசையவில்லை. ஆனால் முகம் கனவில் மூழ்கி இருந்தது. இசை கேட்கிறான்! தன்னுள் இருந்து எடுத்த இசையை. அல்லது காற்று அவன் ஆன்மாவுக்கு நேரடியாக அளித்த இசையை.

அவனைச்சுற்றி பல்லாயிரம்பேர் பெருங்கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். பெருமுரசுகளும் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் இலைத்தாளங்களும் ஓசையிட்டன. அங்கிருந்த விழிகளெல்லாமே அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் அவன் அவர்களிடமிருந்து மிக விலகி இளங்காற்றில் தன்னைத்தானே மீட்டிக்கொண்டிருக்கும் கருங்குளிர்ச்சுனை என இசையாடிக்கொண்டிருந்தான். பாலைவனக் காற்றில் கைவிரித்து நடமிடும் ஒற்றை ஈச்சை மரம் போல. மௌனமாக பொழிந்து உருமாறிக்கொண்டே இருக்கும் பாலை மணற்குன்றுபோல.

அவளுக்கு அவனருகே செல்லவேண்டும் போலிருந்தது. அவன் உடல் ஒரு மாபெரும் யாழைப்போல இசையால் நிறைந்திருக்குமென்று தோன்றியது. அந்த கனத்த கைவிரல்களைப் பற்றிக்கொண்டால்போதும், அதைக் கேட்கமுடியும். அது என்ன இசை? அன்றுவரை அவள் கேட்காத இசை. அவள் உடல் புல்லரித்து கண்கள் கலங்கின. அப்போது அவளறிந்தாள், அவள் அவன் மனைவியாகிவிட்டிருப்பதை. இனி வாழ்நாளெல்லாம் அவள் வேறெதுவுமல்ல என்பதை.

திரைக்குள் வந்த சேடியர் அவள் உடைகளை சீர்படுத்தி குங்குமமும் மங்கலங்களும் அணிவித்தனர். சங்கொலி அறிவிக்க, திரைவிலக்கி அவள் வந்தபோது கூட்டம் கைகளை வீசி அணியணியாகக் கண்கள் மின்ன வாழ்த்தொலி எழுப்பியது. களமுற்றத்திலேயே இளவரசி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு கையளித்தனர் ஏழுகுலமூதாதையர். அவன் வந்து அவள் முன் நின்றபோது அவளால் ஏறிட்டுநோக்கவே முடியவில்லை. அவனுடைய மின்னும் கால்நகங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுடைய பெரிய கைகளுக்குள் அவளுடைய சிறிய கைகளை பிடித்து வைத்து அதை வண்ணம் தோய்த்த பனையோலையால் கட்டினார் குலமூத்தார். அவளுடைய வெண்ணிறக் கை அவனுடைய கரிய கைக்குள் யானை மருப்பில் வெண்தந்தம்போலத் தெரிந்தது. அவனுடைய உள்ளங்கை கல்போன்றிருந்தாலும் உயிர்துடிப்பு கொண்டிருந்தது.

குலமூத்தார் நன்மணம் அறிவிக்க, கூடி நின்ற லாஷ்கரர்கள் கூச்சலிட்டபடி தங்கள் ஆயுதங்களை வானோக்கி வீசினர். வாழ்த்தொலிகளும் முரசொலிகளும் சேர்ந்து காந்தாரநகரியே பெருமுரசு போல வானைநோக்கி உறுமியது. ஏழுமூதாதையரும் அந்த மணநிகழ்வுக்கு அனுமதி அளித்த செய்தியை அவர்களின் நிமித்திகன் கூவியறிவித்ததும் அரண்மனை முரசு இமிழத்தொடங்கியது. அரண்மனைக்குள் மங்கலக்குறுமுரசும் கொம்புகளும் ஓசையிட்டன. வைதிகர் நிறைக்கலம் ஏந்தி நீர்தெளித்து வேதமோதி வழியொருக்க, சூதர் இசைமுழக்க, குடையும் கவரியும் செங்கோலும் துணைவர, மணிமுடி சூடி முழுதணிக்கோலத்தில் சுபலரும் அவர் துணைவியான சுகர்ணையும் களமுற்றத்துக்கு வந்தனர். அங்கிருந்த அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர்.

சுபலரின் வலப்பக்கம் மைந்தர்களான அசலனும் விருஷகனும் சகுனியும் நிற்க இடப்பக்கம் பட்டத்தரசி சுகர்ணையும் விருஷ்டி, சுதமை, சித்ரை, பத்மை என்னும் நான்கு மனைவியரும் நின்றனர். பின்னால் அமைச்சர்கள் நின்றனர். நிமித்திகர் கோலைத்தூக்கியதும் அமைதி எழுந்தது. அவர் மாமன்னர் சுபலர் தன் பிற பத்து மகள்களையும் அஸ்தினபுரியின் அரசனாகிய திருதராஷ்டிரனுக்கு அளிக்கவிருப்பதாக அறிவித்ததும் மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

சுகதரும் சத்யவிரதரும் வந்து அழைக்க பீஷ்மரும் திருதராஷ்டிரனும் விதுரனும் முன்னால் சென்றனர். அஸ்தினபுரியின் அரண்மனைப்பெண்களும் அணிப்பரத்தையரும் பின்னால் தொடர்ந்தனர். சேவகர்களும் பரத்தையரும் அஸ்தினபுரியில் இருந்து கொண்டுவந்திருந்த மங்கலப்பொருட்களை காந்தாரமன்னனுக்கு வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்டு சுபலர் முதலில் காந்தாரியான வசுமதியை தர்ப்பையணிந்த விரல்களால் பொற்கிண்ணத்து நீரை ஊற்றி திருதராஷ்டிரனுக்கு கன்னிக்கொடை அளித்தார். அதன்பின் சுபலர் சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை என்னும் பத்து மகள்களையும் திருதராஷ்டிரனுக்கு அளித்தார்.

அங்கிருந்தே அரசகுலத்தவர் ஏழு ரதங்களில் லாஷ்கரர்களுடன் கிளம்பி ஆரியகௌசிகை ஆற்றங்கரைக்குச் சென்றனர். காந்தாரி ரதத்தில் இருந்தபடி திரையின் இடைவெளிவழியாக வெளியே ஓடிய பாலைநிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆரியகௌசிகை ஆற்றின் சரிவு மிக ஆழமானது. ஆனால் உள்ளே நீர் குறைவாகவே ஓடியது. பாம்புச்சட்டைபோல கரிய நீர் வெயிலில் அலைமின்னிக் கிடந்தது. அதன்கரையில் நின்றிருந்த தொன்மையான வேங்கை மரத்தின் அடியில் இருந்தது மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்று அழைக்கப்பட்ட லாஷ்கரர்களின் ஆறுதேவதைகளின் ஆலயம்.

நெடுங்காலம் அந்த ஆலயம் இயற்கையான கற்பாறையை செதுக்கி உருவாக்கப்பட்ட பீடத்தின்மேல் நிறுவப்பட்ட ஆறு கற்களாகவே இருந்தது. சுபலரின் காலகட்டத்தில்தான் அந்தப்பாறையை உள்ளடக்கி மரத்தாலான கூரைகொண்ட சிறியகட்டடம் எழுப்பப்பட்டது. பாலை மண்ணின் நிறங்களான சாம்பல், செங்காவி, மஞ்சள், தவிட்டு நிறம், வெண்மை, கருமை ஆகியவற்றால் ஆனவையாக இருந்தன அந்தக் கற்கள். நெடுங்காலம் முன்பு ஏதோ மூதாதையர் கைகளால் செதுக்கப்பட்ட ஒழுங்கற்ற வடிவம் கொண்ட குத்துக்கற்கள்மேல் கண்கள் மட்டும் செவ்வண்ணத்தால் வரையப்பட்டிருந்தன.

லாஷ்கரப் பூசகர் ஆறு அன்னையருக்கும் குருதிபூசை செய்தனர். திருதராஷ்டிரனும் இளவரசியரும் குருதியுணவை உண்டபின் பன்னிருமுறை அன்னையரைச் சுற்றிவந்து வணங்கினர். பூசனை முடிந்தபின் லாஷ்கரப்பூசகர்கள் மேற்குநோக்கி கண்களைத் திருப்பியபடி அசையாமல் காத்துநின்றனர். ஒருநாழிகை நேரம் அவர்கள் அசையாமல் நிற்க பிறரும் நின்றனர். விதுரன் அவர்கள் காற்றுக்காக காத்துநிற்கிறார்கள் என்று புரிந்துகொண்டான்.

ஒன்றும் நிகழவில்லை. ஆனால் ஒருபூசகர் மெல்லியகுரலில் ஏதோ சொன்னார். மற்றவர்களும் ஆமோதித்தனர். நெடுந்தொலைவில் சருகுகள் மிதிபடும் ஒலி போல ஏதோ கேட்டது. காற்று மூங்கில்துளைகள் வழியாகச் செல்லும் ஒலி போல மெல்லிய ஓசை கேட்டதா இல்லையா என மயக்களித்துக் கடந்துசென்றது. பின்னர் வானில் ஒளி குறையத்தொடங்கியது. அதற்கேற்ப நிலம் மங்கலடைந்து இருண்டது. மேலும் மேலும் ஒளி சிவந்தபடியே வந்தது. காய்ந்து வற்றி முறுகும் தேன்பாகு போல. சற்றுநேரத்தில் செம்பழுப்புநிறப் படிகம் வழியாகப் பார்ப்பதுபோல பாலை இருண்ட ஒளிகொண்டது. உறையத்தொடங்கும் குருதி போல சிவந்து சிவந்து இருளாகியது.

மேற்குவானில் ஒரு சிவந்த திரை எழுவதை காந்தாரி கண்டாள். மிகவேகமாக அது வானில் தூக்கப்பட்டது. மெல்லொளிபரவிய வானை அது மூடியபடியே வந்தது. அதனுள் நூற்றுக்கணக்கான அலைமுனைகள் திரண்டு வருவதை அதன்பின் கண்டாள். எழுந்து தலைக்குமேல் அவை தெரிந்த கணத்தை அவள் சரிவர உணர்வதற்குள் புழுதிப்புயல் அவர்கள் மேல் மூடி மறுபக்கம் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்தது. மூச்சுவிடுவதற்காக முகத்தை துணியால் மூடியபடி அவர்கள் குனிந்து நின்றிருந்தனர். அலையலையாக புழுதி அவர்களை அறைந்தது. கூரிருள் சூழ்ந்த மௌனத்துக்குள் புயலின் ஒங்காரம் மட்டும் நிறைந்திருந்தது.

புயலில் நிற்பது ஒருவகை ஊழ்கம் என்று காந்தாரி பலமுறை உணர்ந்திருந்தாள். புயலையல்லாமல் வேறெதையுமே நினையாமல் காலம் அணைந்து கருத்தணைந்து நின்றுகொண்டிருக்கும் நிலை அது. ஆனால் முதல்முறையாக சிலகணங்களுக்குள் அவள் திருதராஷ்டிரனை நினைத்தாள். அவனுக்குப்பழக்கமில்லாத புயல் அவனை அச்சுறுத்துமோ என்ற எண்ணம் வந்ததும் அவள் மெல்ல கைகளை நீட்டி அவன் இடக்கையைப் பிடித்துக்கொண்டாள்.

VENMURASU_EPI_71__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

துயில் விழிப்பதுபோல அவள் மீண்டு வந்தபோது அவளைச்சுற்றி முழுமையாகவே இருட்டு நிறைந்திருந்தது. இருளுக்குள் ஒரு ரீங்காரம் போல வெகுதொலைவில் புயல் கடந்துசெல்லும் ஒலி கேட்டது. மெல்ல மேலைவானில் திரை நகர்ந்து ஒரு இடைவெளி உருவாகியது. புன்னகை மலர்ந்து விரிநகையாவதுபோல அது விலகியது, அவர்களைச் சுற்றி மங்கிய ஒளி பரவியது.

அவர்களனைவரும் செம்மண்சிலைகள் போல நின்றிருந்தனர். அவள் திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்தாள். அவனுடைய பெரிய தோள்களில் இருந்து மெல்லியபுழுதி வழிந்துகொண்டிருந்தது. அவள் அப்போதுதான் மறுபக்கம் விதுரன் அவனுடைய வலக்கையைப் பற்றியிருப்பதைக் கண்டு தன் கையை விட்டாள். அதற்குள் விதுரன் அவள் கண்களைச் சந்தித்து புன்னகை புரிந்தான்.

விதுரன் திருதராஷ்டிரனிடம் “அரசே தங்கள் உடலைத் தூய்மையாக்குகிறேன்” என்றபின் ஆடையால் திருதராஷ்டிரனின் தோள்களையும் மார்பையும் தட்டத் தொடங்கினான். காந்தாரி தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு முழுக்கவனத்தையும் அவன் மேலேயே வைத்திருந்தாள். குலப்பூசகர் குனிந்து அன்னையின் முற்றத்தில் கிடந்த கற்களை எண்ணினர். நூற்றியொரு கற்கள் இருந்தன. குலமூத்தார் லாஷ்கர மொழியில் ஏதோ சொல்ல மற்ற லாஷ்கரர் உரக்கச் சிரித்தனர்.

“என்ன சொல்கிறார்கள்?” என்று விதுரன் மெல்லிய குரலில் சத்யவிரதரிடம் கேட்டான். “முற்றத்தில் புயல்கொண்டுபோடும் கற்களை எண்ணி பிறக்கப்போகும் குழந்தைகளை கணிப்பது வழக்கம். நூற்றியொரு கற்கள் விழுந்திருக்கின்றன” என்றார் சத்யவிரதர். விதுரன் புன்னகைசெய்தான். அந்தச்செய்தி காந்தார சேவகர்கள் மற்றும் சேடிகள் வழியாகப் பரவுவதையும் இளவரசிகள் அனைவரும் நாணுவதையும் புன்னகை செய்வதையும் கவனித்தான்.

“விதுரா, மூடா… ஒன்றை கவனித்தாயா?” என்றான் திருதராஷ்டிரன். “இத்தனை பெரிய புயல் மந்திரஸ்தாயியில்தான் ஒலிக்கிறது.” விதுரன் “நான் அதை கவனிக்கவில்லை” என்றான். திருதராஷ்டிரன் “நான் அதை மட்டுமே உணர்ந்தேன். மிகப்பிரம்மாண்டமான ஒரு குழல்வாத்தியத்தை மிகமிக மெல்ல வாசிப்பதுபோலிருக்கிறது அதன் நாதம்… புயலோசை ஒருவகையில் செவ்வழிப்பண்ணை ஒத்திருக்கிறது” என்றான். மேலே பேசமுடியாமல் கைகளைத் தூக்கினான். “என்னால் சொல்லமுடியவில்லை. விதுரா, முன்பொருநாள் வைதிகரான பாடகர் ஒருவர் திருவிடத்தில் இருந்து வந்தாரல்லவா? அவர் ஒரு சாமவேத நாதத்தைப் பாடிக்காட்டினாரே!”

“ஆம்” என்றான் விதுரன். “அவர் பெயர் சுதாமர். பவமானன் என்னும் நெருப்பின் மைந்தனை ரிஷி சத்யன் பாடியது.” “அதன் வரிகளைச் சொல்” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் சிறிது சிந்தித்துவிட்டு அவ்வரிகளைப் பாடினான்.

பேரோசையிடும் நதியலை போல
குரலெழுப்பியபடி உனது வல்லமைகள்
எழுந்து வருகின்றன!
ஒளிவிடும் கூரம்புகள்
போலப் பொங்கி வருக!

சூரியனுக்கு உறவினனே,
விண்ணகத்தில் நீ பெருகும்போது
உன் பொழிவில் திளைப்பவர்களின்
மும்மொழிகள் வானோக்கி எழுகின்றன!

அன்புக்குரிய மது நிறைந்த பவமானனை
ஒளிவிடும் கற்களால் வழிபடுவோம்!

இனியவனே, கவிஞனே,
இறைவனின் இடத்தை சென்றடைபவனே,
இந்தப் புனிதவேள்வியிலே பொழிக!

மகிழ்வளிப்பவனே,
பாலொளிக்கதிர்களாக பெருகுக!
இந்திரனின் வயிற்றில் சென்று நிறைக!

“ஆம்…” என்றான் திருதராஷ்டிரன். கைகளை மேலே தூக்கி ஒலியெழாச் சொற்களின் உந்தலை உடலால் வெளிப்படுத்தி “அவ்வரிகளை இன்றுதான் உணர்ந்தேன். இப்போது வந்தவன் பவமானன். சூரியமைந்தன். அவனைக்கண்டு மண் எழுப்பும் மும்மொழி வானோக்கி எழும் நாதத்தைக் கேட்டேன். காயத்ரி சந்தம்….உதடுகளில் எழாமல் காதை அடையாமல் கருத்தில் நிறையும் சந்தம் அது. மந்திரஸ்தாயி. ஆம்…மண்ணிலுள்ள அனைத்து கற்களும் வைரங்களாக மாறி அவனை வணங்கின. கோடானுகோடி கூரம்புகளின் ஒளியுடன் பாலின் வெண்மையுடன் அவன் பெருகி வானை நிறைத்தான்.”

காந்தாரி அவன் முகத்தையே விழிமலர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால் பீஷ்மர் கைகாட்ட பலபத்ரர் வந்து “அரசே, சோலைக்குச் செல்லலாமென பிதாமகர் ஆணையிட்டார்” என்றார். விதுரன் கைகளைப் பிடிக்க திருதராஷ்டிரன் நடந்தான். அவனுக்குள் அந்தவேதவரிகள் இசைக்கப்படுவதை அவன் முகம் காட்டியது. கனவில் மிதந்து செல்பவன் போல அவன் நடப்பதைக் கண்டு நின்றபின் அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். விதுரன் காந்தாரியை நோக்கி புன்னகை செய்துவிட்டுச்சென்றான்.

முந்தைய கட்டுரைமூன்று வேட்பாளர்கள்
அடுத்த கட்டுரைமலேசியா பயணம்