கடவுள் எழுக! ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

இந்த அரங்கில் மிக மகிழ்வுடன் கலந்துகொள்கிறேன். ஜெயமோகனைப்பற்றி இப்போது நிறைய பேசுகிறார்கள். எதிர்காலத்தில் மேலும் பேசுவார்கள். அவர் நேற்றைய எழுத்தாளர்களைப்பற்றி இங்கே பேசுகிறார். அவரை நாளைய எழுத்தாளர்கள் பேசுவார்கள்.

ஜெயமோகனின் ரப்பர் நாவலையே நான் முதலில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. அதன் பிறகு விஷ்ணுபுரம் நாவலை படிக்க முயன்றேன். என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. முன்பு ஒரு கூட்டத்தில் நான் சொன்னதுபோல அது தன் வாசல்களை சாத்திக் கொண்டுவிட்டது. இன்னமும் திறக்கவில்லை. அதன் பிறகு ஜெயமோகனின் மற்ற எழுத்துக்களை நான் படித்தேன். அவற்றின் மூலம் இவரைப்பற்றிய ஒரு சிறப்பான எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

ஜெயமோகனுக்கும் எனக்கும் இடையே மிகுந்த வேற்றுமைகள் உண்டு. அவர் தனக்கு முன்னால் உள்ள எழுத்தாளர்களைப்பற்றி அழகியல் நோக்கிலும் தத்துவார்த்த நோக்கிலும் கண்டு விரிவான விமரிசனங்களைபதிவு செய்திருக்கிறார். நானோ எப்போதுமே பிற எழுத்தாளர்களைப்பற்றி ஏதும் சொன்னது இல்லை. மூத்த எழுத்தாளர்களைப் பற்றி கருத்துக்கள் சொல்லும் வழக்கம் இல்லை. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது இல்லை. அவர்களுக்கு உதவும் வகையில்கூட அதிகமாக ஏதும் சொன்னது இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

விமரிசனத்தால் இலக்கியவாதிக்கு என்ன பயன் ? பிறரை மனதில்கொண்டு நல்ல எழுத்தாளன் எழுதுவது இல்லை. பிறர் சொல்வதை அவன் பொருட்படுத்துவதும் இல்லை. என்னைபொறுத்தவரை விமரிசனங்களை நான் கவனிப்பதே இல்லை. விமரிசனங்களினால் வாசகர்களுக்கு வாசகச் சூழலுக்கு ஒருவேளை ஏதேனும் பிரயோசனம் இருக்கலாம்.

ஆனால் ஜெயமோகன் மிகுந்த சிரத்தையுடன் தன் முன்னோடி எழுத்தாளர்களின் ஆக்கங்களை கூர்ந்து படித்து தர்க்கபூர்வமாக கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். இக்கருத்துக்கள் மூலம் அவர் இலக்கியம் பற்றிய சில அடிப்படைகளை உருவாக்கியிருக்கிறார். அதனால் தான் பல்வேறுபட்ட எழுத்தாளர்களை இங்கே திரட்டுபவராக இருக்கிறார். எழுத்தை ஓர் இயக்கமாக ஆக்கும் சக்தி அவரிடம் இருக்கிறது. பிறரது எழுத்துக்களைப்பற்றி இப்படி திட்டவட்டமான கருத்துக்களைக் கூற தன் சொற்களில் உள்ள சத்தியத்தின் மீது ஆழமான நம்பிக்கை தேவை. அந்த தன்னம்பிக்கை அவரிடம் உள்ளது.

நான் பொதுவாக அதிகமாக வாசிப்பவனல்ல என்னை ஒரு வாசகன் என்றேன் சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனல் இவரது எழுத்துக்களும் தீவிரமான செயல்பாடுகளும் என்னை இவரைத் திரும்பிப் பார்க்கச்செய்கின்றன. எனது காலகட்டத்துக்குப்பிறகு வந்த மிக முக்கியமான படைப்பாளியாக இவரைப் பார்க்கிறேன். இவரைப்பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

ஒரு பேட்டியில் இவர் தன்னிடமிருந்து இப்போது எழுத்து பீறிட்டுவெளிவருவதாக சொல்லியிருந்தார். அது ஒரு அபூர்வமான காலகட்டம். அதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. அதுவரும்போது வரும். வராதபோது ஒன்றும் செய்யமுடியாது. அதை நிகழவிடுவது மட்டுமே நாம் செய்ய முடிவது. ஒருவகையில் நான் எழுத்தை நிறுத்தியபோது இவர் எழுத வந்ததும் இவரிடம் இந்த வேகம் இருப்பதும் வெறும் தற்செயலல்ல என்றே எனக்குப்படுகிறது. இந்தக்காலகட்டம் தன்னை எழுத இவரை தேர்வு செய்துள்ளது. நான் எழுதாது விட்டவைகள், எழுதமுடியாது போனவைகள் இவர் மூலம் வெளிவருகின்றன என்று எண்ணுகிறேன். நம் காலகட்டத்தின் கோபங்கள் துயரங்கள் இவர் மூலம் வெளிவருகின்றன.

இவர் முற்போக்கு எழுத்தாளரல்ல என்று சொன்னார்கள். யார் முற்போக்கு? யார் யாரை அப்படி சொல்வது? எவருடைய எழுத்தில் அடிப்படையில் மனிதாபிமானம் உள்ளதோ, எவருடைய நோக்கில் சத்தியமும் இலட்சியவேகமும் உள்ளதோ அவர் எழுதுவதுதான் முற்போக்கு எழுத்து. மேலான எல்லா இலக்கியமும் முற்போக்கு இலக்கியமே. இவர் நம் காலகட்டத்தில் சிறந்த முற்போக்கு படைப்பாளிகளில் ஒருவர் என்று நான் சொல்கிறேன்.

இவரை ஒரு தமிழ் எழுத்தாளராக கொள்ளமுடியாது. பலமொழி அறிவும் விரிந்த புலமையும் கொண்டவர். மலையாளத்திலும் தமிழிலும் எழுதிவருபவர். தமிழில் எழுதும் இந்திய எழுத்தாளர் இவர் என்றே நான் எண்ணுகிறேன். அவரது எழுத்தின் வீச்சும் ஆழமும் மொழி எல்லைகளைக் கடந்தவை.

இவர் இங்கே முன்வைத்துள்ள நூல்களில் இலக்கிய முன்னோடிகள் என்று சிலரை சொல்லியிருப்பது குறித்து கந்தர்வன் சொன்னார். அவர்கள் முன்னோடிகள் என்பது ஒரு பேச்சுதான். தனக்கென தேடலுள்ள எழுத்தாளனுக்கு யாருமே முன்னோடிகள் அல்ல. அவர்கள் முன்னால் சென்றவர்கள் அவ்வளவுதான். அவர்களிடமிருந்து இவர் சிலவற்றைக் கற்றுக் கொண்டிருக்கலாம். இவரிடமிருந்தும் நாம் பல கற்றுக் கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரை இவர் எனது காலத்துக்கு பின் வருபவர் ஆனாலும் எனக்கு பலவற்றை புதிதாக கற்பிப்பவர். எனவே இவர் என் ஆசான். இதில் யார் முதல் என்ற பேச்சே எழவில்லை

நாம் அனைவருமே பாரதி வழிவந்தவர்கள். அவன் நமக்கெல்லாம் முன்னோடி. நம் சொற்களில் கலைமகள் குடியிருப்பதாக அவன் சொன்னான். நம் சொற்களில் கடவுள் எழவேண்டும். எது எது எங்கும் இருந்தாலும் காணக்கிடைக்காததோ , எது அறியப்படாவிட்டாலும் நம்மை அதைப்பற்றியே பேசவைக்கிறதோ அதுகடவுள். எது உணர்வில் மட்டும் வசிக்கிறதோ எது உணர்வு மயமானதோ அது கடவுள். மனிதனை நேசிக்க கற்றுக் கொடுப்பது இந்த வாழ்க்கையை மேலானதாக மாற்ற கற்றுக் கொடுப்பது கடவுள்.

இலக்கியமும் கடவுள் வடிவம்தான். மனிதனையே கடவுளாகப் பார்க்க செய்வதுதான் இலக்கியம். அப்படிப்பட்ட இலக்கியங்களை நாம் படைக்க இது தருணமாக அமையட்டும்

[10-10-2003ல் திண்ணை இணைய இதழ் வெளியிட்ட கட்டுரை. இது மறுபிரசுரம்]

முந்தைய கட்டுரைதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6
அடுத்த கட்டுரைஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு