இலக்கணம்- வெள்ளையானை- மொழி

அன்புள்ள ஜெமோ
வணக்கம்!
முன்பு திராவிட வேதம் குறித்துப் பேசியுள்ளோம்;
இந்த மடல், “தமிழ் இலக்கணத்தில் அறிவியல் போக்கு” குறித்து!

உங்கள் “வெள்ளையானை – இலக்கணம்” குறித்துப் பல எதிர்வினைகளை ட்விட்டரில் வாசித்தேன்; அவற்றில் பலவும்..
*ஜெயமோகனின் “ஈகோ”, அறிவை மறைக்கும் அகந்தை
*இலக்கணத்தைப் பழித்து, இலக்கியம் விக்குறாரு – Extra 10 copy விற்றால் சந்தோஷமே.. என்ற ரீதியில் பே(ஏ)சப்பட்டிருந்தன:)

இது போன்ற “இலக்கணப் பீடாதிபதிகள்” குறித்து எனக்கு நெடுநாட்களாய் ஓர் ஐயம்..
தமிழிலக்கணம் வெறுமனே “விதி”களா? இது பற்றி, உங்கள் ஆய்வு ஏதேனும் உளதா? என அறிய விழைவு;
———

தமிழ் இலக்கணம், தொல்காப்பியர் காலந் தொட்டு, மிக்க நெகிழ்வு கொண்டது!
வெறுமனே விதிகளை “விதி”த்து விட்டுப் போகும் “சாஸ்திரப் புத்தகங்கள்” அல்ல தமிழ் இலக்கணம்!

*இ, ஈ, ஐ வழி = யவ்வும்
*ஏனை உயிர் வழி = வவ்வும்
-ன்னு நூற்பாவாக ஆக்கி வைத்தாலும், சாதாரண கிராமப் பள்ளிக்கூடத்தில், இது நம் வாழ்வியலில் கலந்த ஒன்று தான்!

*ஆ-வன்னா, ஊ-வன்னா -ன்னு சொல்லுவோம்!
*ஆனா, ஈ -வன்னா -ன்னு சொல்லவோமா?
= ஈயன்னா, ஐயன்னா தான்!

இ, ஈ, ஐ வழி = “ய”வ்வும் என்ற நூற்பா, வாழ்வில் இயல்பாய் ஒன்றி விடுகிறது பார்த்தீர்களா?
But in today’s convent, அ-ஆ தான்! அ-னா-ஆவன்னா என்று சொன்னால் அது பாமரத்தனம்:(

இன்னொரு எடுத்துக் காட்டு:
*வெடிபொருள் = வினைத்தொகையா வந்தால் மிகாது; வெடித்த பொருள், வெடிக்கின்ற பொருள், வெடிக்கும் பொருள்
*வெடிப்பொருள் = வெடி ஆகிய பொருள் -ன்னு பண்புத் தொகையா வரும் போது மிகும்!

இப்படி இரண்டு வழக்குமே உள்ளது தமிழ்! = “நெகிழ்வு”!
இடத்துக்கு ஏற்றாற் போல் = context sensitive!

ஆனா, திடீர் இலக்கண “வாத்திகள்” முளைத்து,
ப் போடாம எழுதினா தப்பு.. தலையில குட்டு -ன்னு.. ஒரு விதமான “சட்டாம் பிள்ளைப் போக்கு”
= இது எப்போது வந்தது? ஏன் வந்தது?

பிற்காலத் தமிழ்ப் பண்டிதாள் பலரும், ஸ்மிருதி/ சாஸ்திரம் படித்த விற்பன்னர்கள் என்பதால்..
அங்கேயுள்ள dos & donts போல, இங்கேயும் நடந்து கொண்டார்களா? அதுவே இன்று பரவி விட்டதா?
———

தொல்காப்பியம் = தமிழுக்கு வாய்த்த கொடை!
ஓசை-> ஒலி-> எழுத்து-> சொல்-> பொருள் என்று அறிவியல் சார்ந்து, மொழியை வளப்படுத்துவது;
இதைத் “தமிழறிஞர்கள்” என்ற சான்றோர் உணர்வர்; ஆனால் “வாத்திகள்” உணர்வதில்லை:(

வினைத்தொகையில் மிகாது,மிகாது-ன்னு Rules காட்டுவார்களே தவிர,
வினைத்தொகையில் ஏன் மிகக் கூடாது? -ன்னு அறிவியல் கேட்டுப் பாருங்க, முழிப்பாங்க:) | Book-ல போட்டிருக்கு, அவ்ளோ தான்:))

வெள்ளை யானை = இன்று நாம் பத்தி பிரித்து எழுதுவது போல், ஒரு வசதி, அவ்வளவு தான்!
*வெள்ளைப்பானை -ன்னு எழுதும் போது விகாரப் புணர்ச்சி
*வெள்ளையானை -ன்னு எழுதும் போது இயல்புப் புணர்ச்சி
= இதற்கு இத்தனை எதிர்வினைகளா?

இப்படித் தான் வாழ்த்துக்கள் என்பதற்கும் போதை/கள்ளு -ன்னு எள்ளல் எகத்தாளம்!
“டுமீலை ஒழுங்கா எழுதுங்க டுமீலன்ஸ், அப்பறம் டுமீல் கோஷம் போடப் போகலாம்” போன்ற எள்ளல்கள்!
ஆனால், நச்சினார்க்கினியரே, எழுத்துக்கள் என்று எழுதியுள்ளதைக் காட்டிய பின்பு, சற்று அடங்கிப் போனது!

“விதிகள்” என்ற பேரிலேயே, ஒரு வித “மிரட்டும்/விரட்டும்” போக்கு!
சிறு பிழைகள் செய்யும் தமிழ் அன்பர்களையும்..
எள்ளியே, அவர்கள் மொழிக் காதலைக் கூசிப் போகச் செய்தல்:(
———

வெயில்/வெய்யில் = இரண்டும் சரியான இலக்கியப் பயன்பாடு தான்!
வாழ்த்துகள்/ வாழ்த்துக்கள் = இரண்டும் சரியே!
இஃதொரு தமிழ் “நெகிழ்வு”

தொல்காப்பியர், மொழிக்குப் பல நெகிழ்வுகளைக் குடுக்குறாரு!
புறனடை -ன்னு தனியாகவும் Exceptions குடுப்பாரு;
“ஒள” எப்போ “அவ்” ஆகும்.. ஒளகாரக் குறுக்கத்தில் -ன்னும் சொல்லுவாரு, based on sound acoustics!

ஆனா, அவ்வை -ன்னு எழுதினாலே, வாத்திகள் குதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்!
அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ?
அம்மாமி தன் வீவுங் கேட்டாயோ தோழீ?
-ன்னு இளங்கோவடிகளே பாடுவதையும் அறிய மாட்டார்கள்!

*இலக்கிய நுகர்ச்சியும் இல்லை!
*இலக்கண அறிவியலும் இல்லை!
வெறுமனே “சட்டாம்பிள்ளை விதிகள்” – இதற்கு மாற்று என்ன?

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள் இன்று ஆகில் எண்ணெயும் இன்றே
-ன்னு, தமிழ் இலக்கணமே, இலக்கியத்தைத் தான் தூக்கிப் பிடிக்கும்!
இம்மொழியின், ஆதி இலக்கணமே = ஒரு “காப்பியம்” தான்!

வெள்ளை space யானை போல், தொல் space காப்பியம் -ன்னு வாத்திகள் கிளம்பாமல் இருந்தால் சரி:)

தமிழ் இலக்கணம் = வெறுமனே “விதி” கடந்து..
சுமை அல்ல, சுவை
-என்பதை, ஓர் எளிய தலைமுறைக்கு எப்படிக் கொண்டு சேர்ப்பது?
உங்கள் கூர் கருத்தும், யோசனையும் அறியவொரு மனத்தெண்ணம்!

நன்றி

கண்ணபிரான்
-krs
(http://madhavipanthal.blogspot.com
http://dosa365.wordpress.com)

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கெஆர்ஸ்

அடிக்கடி மாதவிப்பந்தல் பக்கம் வருவதுண்டு. எதையாவது தேடினாலும் அங்கே கொண்டு விட்டுவிடுகிறது. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

இணையத்தில் இலக்கணம் பற்றிப்பேசுபவர்கள் இலக்கணம் அறியாத, இலக்கியம் அறியாத ஒரு பாமரக்கூட்டம் என்பது எனக்கு அவர்களின் பிற எழுத்துக்களும் அளித்த சித்திரம். அறியாமையை உணரக்கூட ஓர் அறிவுத்திறன் தேவை அல்லவா?

ஆகவேதான் சொன்னேன், அதற்கான தகுதி கொண்ட ஒரு சிறந்த அறிஞன் பேசுவது மட்டுமே பொருட்படுத்தத் தக்கது என்று.

இலக்கணத்தில் மட்டுமல்ல இலக்கணத்தின் வரலாற்றிலும் எனக்கு ஆர்வமுண்டு. முன்பு ஒரு கேரளப்பல்கலைக்காக சம்ஸ்கிருத- மலையாள இலக்கண அமைப்புகளை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். இலக்கணம் உறைந்த ஒரு மொழி [சம்ஸ்கிருதம்] இலக்கணமே உருவாகாத ஒரு மொழி [மலையாளம்] வளரும் இலக்கணத்தை ஆதாரவல்லமையாகக் கொண்ட ஒரு மொழி [தமிழ்] மூன்றையும் ஒப்பிட்டு சிந்திப்பதற்கு நிறையவே உள்ளது.

சம்ஸ்கிருத இலக்கணம் வளர்ந்த கதையை ஏ.ஆர்.ராஜராஜவர்மா போன்றவர்கள் விரிவாக எழுதியிருக்கிறார்கள். தண்டி வரைக்கும்கூட அது மிக நெகிழ்வானதாகவே இருந்தது. ஆகவேதான் இந்தியாவின் அனைத்துமொழிகளில் இருந்தும் சொற்களையும் சொல்லாட்சிகளையும் உள்ளேஇழுக்க முடிந்தது

பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் அதன் மையம் இறுகியது, மாற்றங்களை உள்ளிழுக்கமுடியாததாக அது ஆகியது. மெல்லமெல்ல தன் காலத்துக்கு உகந்த தன்மையை இழந்தது. மகாகாவியப் பிரஸ்தானத்துக்குப்பின்னர் அதில் படைப்பூக்கத்துடன் ஏதும் நிகழவில்லை.

இப்படி ஏன் நிகழ்கிறது? மொழியின் இயல்பான இயக்கவிசையிலேயே இந்த இயல்பு உள்ளது. அது மக்களின் புழக்கத்துக்கு ஏற்ப நாற்புறமும் விரிந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த விரிவை ஒழுங்குபடுத்தும் மைய விசையாக இலக்கணம் உள்ளது. மொழியின் ஆதார இயல்பு அழியாமல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குப் பெயர்தான் இலக்கணம்.

உண்மையான இலக்கியங்கள் என்றும் அந்த வாழும்மொழியில் இருந்துதான் உதயமாகும். கம்பன் ‘துமி’ என்ற சொல்லை ஆய்ச்சியிடம் இருந்து பெற்றார் என்ற கதை அதை உறுதிப்படுத்தும் அழகிய சான்று. கம்பனில் பலநூறு நாட்டார் சொற்கள் சம்ஸ்கிருத மருவுச் சொற்கள் உள்ளன

இதை தமிழ் முன்னோடிகள் நன்கறிந்திருந்தனர். ஆகவேதான் ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்ற அற்புதமான விதி இங்கே இருந்தது. [உதாரணமாக இங்கே இதைத் தமிழ் முன்னோடிகள் என்று எழுதவேண்டும் என வாதிடுவர் இயந்திரவாத இலக்கண அறிஞர். ஆனால் செவி அப்படிச் சொல்வதில்லை, அந்தப் புணர்வு பொருட்குழப்பமே அளிக்கும் என அறிந்தவரே எழுத்தாளர்]

*

இதில் உள்ள சமூகவியல் அம்சம் என்னவென்றால் அவ்வாறு இலக்கணத்தை உருவாக்கும் இடம் சமூகத்தின் அதிகார மையம் என்பதுதான். அரசசபைகள், உயர்குடிமன்றுகள். கம்பன் – ஒட்டக்கூத்தர் கதை அதற்கும் சான்று

மேலே சொல்லப்பட்ட சமூக அதிகார மையத்தில் தொடர்ச்சியான மாற்றம் நிகழும் சூழல் இருக்கையிலேயே ஒரு சமூகம் வளர்கிறது என்று பொருள். அங்கே விளிம்புகளில் இருந்து பிற குடியினர் வந்து சேர்ந்துகொண்டே இருக்கவேண்டும். அவ்வாறு நிகழுமென்றால் மொழியின் இலக்கண மையமும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்

தண்டியின் காலம் வரை சம்ஸ்கிருதம் அப்படித்தான் இருந்தது. அதில் சமணர்களுக்கும் பெரும் பங்களிப்பு இருந்தது. பிராகிருதமும் பாலியும் அதை பாதித்தன. ஆனால் பின்னர் அதன் அதிகார மையம் உறைந்தது. பக்திக் காலகட்டத்துக்குப்பின் அது மதத்தின் மொழியாக மட்டுமே ஆகியது. ஆகவே எந்த மாற்றங்களையும் அது அனுமதிக்கவில்லை. அது ஒருவகையில் பிராமண மொழி மட்டுமாக மாறியது. அதன் வீழ்ச்சி அங்கே ஆரம்பிக்கிறது

தமிழில் அது இன்றுவரை நிகழவில்லை. தமிழின் இலக்கண மையம் ஒருபோதும் உறைந்த நிலையில் இல்லை. சமூக அதிகார மையம் மாறிக்கொண்டே இருந்தது. ஆகவே அது மாற்றங்களை உள்ளிழுக்கும் நெகிழ்நிலையை இன்னும் தக்கவைக்கும் வாழும் மொழியாக உள்ளது.

இலக்கணத்தை உருவாக்கும் சமூகஅதிகார மையம் உறைந்துவிடும்போது அது எப்போதுமே வாழும் மக்கள்மொழியை ஏளனம் செய்வதாக இருப்பதைக் காணலாம்.இது உலகம் முழுக்கவே காணப்படும் ஒரு போக்கு.

இழிந்தவர் ,தாழ்ந்தவர் என நினைப்பவர்களின் மொழி பிழையானது என வாதிடுவதும், அம்மொழியை சீர்திருத்த முயல்வதும், அவர்களால் மொழியை சரியாகக் கையாள முடியாது என நம்புவதும், தங்களிடமிருப்பதே இலக்கணமுள்ள ‘சரியான’ மொழி என வாதிடுவதும்  இவர்களின் வழக்கம். இதற்காகத்தான் இலக்கணத்தை இறுக்கமான விதிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். அந்த விதியைக் கடைப்பிடிக்காதவர்கள் அனைவரும் இழிந்தவர்கள் , அன்னியர் என பேச ஆரம்பிக்கிறார்கள்.

தமிழில் என்றுமே இம்மனநிலை சாதியம் சார்ந்ததுதான். இந்தக்கட்டுரையை கவனியுங்கள். வள்ளலாரின் பாடல்கள் அருட்பாவா அல்லவா என்ற விவாதம் ஒருவரை ஒருவர் மாறி மாறி சாதியில் குறைந்தவர்கள், ஆகவே இலக்கணமறியாதவர்கள் என்று முத்திரைகுத்தும் போக்கு கொண்டதாக இருந்திருக்கிறது. இலக்கணம் எப்படி இதில் சாதிய அடையாளமாக ஆகியிருக்கிறதென்பதைக் கவனிக்கவும்.

உதா:  “புளி, முளகாய், மூசலுண்டைகள் விற்றுக் காலம் கழிக்கும் முண்டைப் பிள்ளைகள் முன் உலண்டத்தனை பிரசங்கம் செய்யும் இலங்கணிப் பிள்ளையே … என்னடா ஏலே பின்னாற் புறப்பட அத்தனை தாமதமேன்? முன்னாற் புறப்படலாகாதா? சீக்கிரம் ஓடிவாடா! ஒம்பட்டு சுவாகா! நல்லதிருக்கட்டும். முத்தமிழில் எத்தனை கற்றாய்? அடலே,ஓடாதே நில்! முத்தமிழுக்குமெத்தனை இலக்கணங்கள்? அதிலுமெத்தனை இலக்கணங்கள் உனக்கு தெரியும்?”  ‘[திரிகோணமலை இலங்கணிப் பிள்ளைக் கெரிகோணமலை இராம பாணம்]

இந்த வரிகளில் நேரடியாகவே இலக்கண ஞானம் என்பது சாதியமேன்மைதான் என்ற தொனி இருப்பதைக் காணலாம். பின்னர் வந்த சமூக இயக்கங்கள் காரணமாக அதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லாமலானார்கள். அவ்வளவுதான்.

இந்த இலக்கணவாதிகள் எப்போதுமே மொழிஞானம் அற்ற, ஆனால் சாதிய மேன்மையை கருதக்கூடிய, சமூக அதிகாரம் சார்ந்த சுய பிம்பங்களையும் பிரமைகளையும் மட்டுமே கொண்ட ஒருவகை அசடுகள் மட்டும்தான். ஒரே ஒரு நல்ல நூலை எழுதிய அறிஞன் கூட இப்பட்டியலில் இருப்பதில்லை. இவர்களால் படைப்பூக்கமுடைய நூலை வாசித்துப்புரிந்துகொள்ள முடியாது.

ஆனால் இவர்கள் பாரதி முதல் புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் வரை அனைவரையும் சிறுமை செய்தும் ஏளனம் செய்தும் பேசியிருப்பார்கள். அறியாமை மட்டுமே அளிக்கும் தன்னம்பிக்கை இது.

மையத்தில் இருந்துகொண்டு அதிகாரமும் சாதியமும் பேசி இலக்கணத்தைக்கொண்டு மிரட்டுவது தமிழ் எழுத்தும் வாசிப்பும் மக்கள்மயமான ஐம்பதுகளில் வலுவாக இருந்தது. ஆனால் விரைவிலேயே அது வலுவிழந்தது. அனைத்துச்சாதியினரும் மையத்துக்கு வர முடிந்த ஜனநாயகமே அதற்குக் காரணம்

நல்லவேளையாக இன்று இது இவர்களின் சொந்த சாதியச்சிரங்காக மட்டுமே உள்ளது. தமிழின் அதிகாரம் இவர்களிடம் எவ்வகையிலும் இல்லை. ஆகவே தமிழ் விதவிதமாக எழுதப்படுகிறது, வாழ்கிறது.

*

இலக்கணத்தை உலகமெங்கும் அடிப்படை இலக்கணம், செயல்முறை இலக்கணம் என இரண்டாகப்பிரித்துக்கொண்டுதான் அணுகுகிறார்கள். அடிப்படை இலக்கணம் பொருளுருவாக்கத்தில் மாற்றமுடியாத பங்களிப்புள்ள விதிகளால் ஆனது. உதாரணமாக, காலம். அல்லது செய்வினை செயப்பாட்டுவினை.  அது மீறப்பட்டால் சொற்றொடர்கள் புரியாமலாகும்.

செயல்முறை இலக்கணம் ஓசையழகுக்காகவோ, செய்யுள் வடிவுக்காகவோ பல காலங்களிலாக உருவாக்கப்பட்டது. அது பொருளை உருவாக்குவதில் பங்குள்ளதல்ல. அதை எந்த மொழியும் தொடர்ந்து மறுபரிசீலனைசெய்துகொண்டேதான் இருக்கும். உதாரணம், ஒரு,ஓர் போன்ற ஓசைநுணுக்கங்கள்.

தமிழ் மொழியிலக்கணத்தின் அழகே அதன் நெகிழ்தன்மைதான். ஆகவேதான் தமிழ் இன்றும் புத்தம்புதுச் சொற்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. நான் உருவாக்கிய பலசொற்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன- என் எதிரிகளிடம் கூட.

தமிழுக்கு நெகிழ்வான விதிகளும், இலக்கியத்தை முதன்மைப்படுத்தும் தரிசனமும் உள்ளன. அவை தமிழை வாழச்செய்யும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20