கேள்வி பதில் – 13

உங்கள் பார்வையில் இலக்கியம் என்பது என்ன? இலக்கிய வகை சார்ந்த எழுத்துகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறக்கூடியது என்ற கருத்து சரியா??— ஷக்தி ப்ரபா.
இலக்கியம் என்பது என்ன என்ற வரையறைகள் இலக்கியத்திறனாய்வில் பல்லாயிரம் உண்டு. எல்லாமே சரிதான். எல்லாமே முழுமையற்றவையும்கூட. அன்பு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? இலக்கியம் அதைப்போன்ற ஓர் அக உருவகம்.

என் நோக்கில் வாழ்க்கையைக் கற்பனை மூலம் மறுநிகழ்வு செய்துகொள்வதற்குப் பெயர்தான் இலக்கியம். வாழ்க்கையனுபவங்கள், தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு உண்மையான வாழ்க்கையனுபவம் போன்ற ஒன்றைக் கற்பனை மூலம் அமைத்துப் பார்த்தல். எழுத்தாளனின் தளத்திலும் வாசகனின் தளத்திலும் இதுதான்.

ஏன் இது தேவையாகிறது? முதல்விஷயம், மனித உடலின் எல்லைதான். நாம் ஓர் இடத்தில் ஒரு காலத்தில் மட்டுமே ஒரு சமயம் வாழ முடிகிறது. சாகசமே வாழ்வாகக் கொண்டவனுக்குக் கூட வாழ்வனுபவங்கள் மிக எல்லைக்குட்பட்டவையே. இலக்கியம் மூலம் நாம் எல்லையின்றி வாழமுடிகிறது. காலமும் இடமும் கட்டுப்படுத்தாத வாழ்க்கை. பலவிதமான உறவுகள், பலவிதமான நெருக்கடிகள், பலவிதமான உணர்ச்சிக்கட்டங்கள்…. இலக்கியவாசகனுக்குப் பல்லாயிரம் வாழ்க்கை.

புனைவின் துணை இன்றி மனிதனால் வாழ முடியாது. காரணம் மனிதன் கடலின் விரிவை அறியநேரிட்ட மீன். வாழும் இடத்தில் அவன் மனம் நிறைவுகொள்ளாது. கடலையே உண்டு உமிழ்ந்தாகவேண்டும். ஆகவேதான் இந்த இருபதாயிரம்வருடக் கலாசார வாழ்க்கையில் மனிதன் புனைவுகளைப் பெருக்கினான். சின்னஞ்சிறு பழங்குடிக்குக்கூட இதிகாசங்கள் தேவையாகின்றன. மொத்தம் பத்தாயிரம் பேர்கூட இல்லாத மலைக்கணி மக்களுக்குத் தெய்வங்கள் பலநூறு. கதைகள் முடிவேயற்றவை. நவீன உலகம் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள் அனைத்திலும் புனைவுகளைப் பெருக்கித்தள்ளுகிறது.

இலக்கியம் இப்புனைவுகளின் ஆற்றல்மையம். மேல்மட்டப் புனைவுகள் தங்கள் கற்பனைச்சக்தியின் தேவைக்கு ஈடுகட்டமுடியாதென உணரும் நுண்ணுணர்வு கொண்டவர்களுக்கு உரியது அது. அவன் ரசனையைத் திருப்தி செய்வதே இலக்கியம். வாழ்க்கையை முடிவின்றிப் பெருகச்செய்வது எதுவோ அதுவே இலக்கியம். அதாவது எந்தப் படைப்பு உண்மையான வாழ்க்கையனுபவத்துக்கு நிகரான ஓர் அனுபவமாக அமைகிறதோ அதுவே இலக்கியம். இதுவே முதல் தளம்.

அடுத்தபடியாக இலக்கியம் வாழ்க்கையை அறியும் முறையாகும். அதன் அறிதல்கருவி கற்பனை. வாழ்க்கையை மீண்டும் சொல்லிப்பார்த்து, நிகழ்த்திப்பார்த்து அதை அறியமுயல்கிறது இலக்கியம். வாழ்வனுபவத்துக்கும் இலக்கிய அனுபவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு வாழ்வனுபவத்துக்கு நோக்கம் இல்லை, இலக்கு இல்லை, ஆகவே மையம் இல்லை என்பதே. இலக்கிய அனுபவத்துக்கு நோக்கம், இலக்கு, மையம் உண்டு. அது நம்மை எங்கோ இட்டுச் செல்லவேண்டும். அது அனுபவம் அல்ல, செறிவுபடுத்தப்பட்ட அனுபவம். இலக்கியம் நம்மை எந்த அளவுக்கு வாழ்வை அறியவைக்கிறது என்பது இலக்கியத்தை மதிப்பிடும் இரண்டாவது வினா. இது இரண்டாவது தளம்.

இலக்கியம் தனித்தன்மை கொண்ட ஓர் அறிதல்முறை. தர்க்கத்தைத் தன் ஆயுதமாகக் கொண்ட கற்பனை அது. அதன் உச்சம் உள்ளுணர்வே. ஆகவே இலக்கியம் பிற அறிதல்முறைகள் எதுவுமே அளிக்காத ஒரு கோணத்தை வாழ்க்கையைப்பற்றி நமக்கு அளிக்கும். அரவிந்தர் இலக்கியப்படைப்பைப் பற்றிச் சொல்லும்போது ‘பிறிதொன்றிலாத தன்மை’ [அனன்யதா] அதன் அடிப்படையில் இயல்பாக இருக்கும் என்கிறார். இலக்கியம் பொதுவாகவே பிற அறிதல்முறைகள் ஏதும் அளிக்காத ஞானம் ஒன்றை அளிக்கும். ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் பிற படைப்பு ஏதும் அளிக்க முடியாத ஞானம் ஒன்றை அளிக்கும்.

எவ்வாறு எனச் சிந்திக்கலாம். இலக்கியம் ஞானத்தைப் பரிமாறுவது இல்லை. இலக்கியம் நம் ஆழத்து ஞான விதைகள் மீது ஒளியும் நீரும் பெய்கிறது, அவ்வளவுதான். இலக்கியம் மூலம் நாம் பெறும் ஞானம் அவ்விலக்கியப்படைப்பு அளிப்பது அல்ல, அது நம்முடையது. நான் தல்ஸ்தோயைப் பார்த்தால் ‘போரும் அமைதியும்’ நாவலைப்பற்றி அவருக்குத்தெரியாத ஏராளமான விஷயங்களைச் சொல்லி அவரை ஆச்சரியப்பட வைக்கமுடியும். இதுதான் இலக்கியத்தின் தனிவழி. ஆகவே மேலான இலக்கியம் நம்மில் நமக்கே உரிய ஞானத்தை உருவாக்கும். வேறு எதுவுமே அதை உருவாக்க முடியாது என நாம் அப்போது உணர்வோம்.

இறுதியாக, முக்கியமாக உள்ள தளம் உன்னதமாக்கல் [Sublimation]. பிற அறிதல்முறைகள் எதற்குமே இல்லாத சிறப்பம்சம் இது. வாழ்க்கைநோக்கை, விழுமியங்களை, உணர்வுகளை இலக்கியம் ஓர் உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறது. தர்க்கபூர்வமாகப் பார்த்தால் முற்றிலும் அசட்டுத்தனமான ஒரு தளம். ஆனால் திறந்துகொள்ளூம் இயல்புள்ள எந்த மானுடமனமும் நிராகரிக்கமுடியாதபடி அது ஓரு விஷயத்தை அப்போது நிறுவிவிடும். அதுவன்றி வேறு உண்மையே இல்லை என நம்மை நம்பவைத்துவிடும். இலக்கியவாசகர் எவரும் தன் வாசிப்பில் அப்படிப்பட்ட இடங்களை வாசித்திருப்பார். துயரமே இல்லாமல், தன்னிரக்கமே இல்லாமல், பரிதாபமே இல்லாமல் நாம் மனம் கரைந்து கண்ணீர் விடுவோம். அந்த மின்னலில் நாம் உலகையே ஒட்டுமொத்தமாகப் பார்த்துவிடுவோம். அவ்வாறு இலக்கியம் மூலம் தொகுக்கப்பட்ட, ஒளிப்படுத்தப்பட்ட, விழுமியங்களே நம் வாழ்வை இன்றும் ஆள்கின்றன.

பலவருடங்களுக்கு முன் அருண்மொழி தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைப் படித்துக் கொண்டிருக்கும்போது சிறு ஒலிகேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். தூய கண்ணீர்த்துளிகள் தாள்மீது ஒளிர்ந்து சொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டேன். ராஸ்கால்நிகாஃப் சோனியாவை விபச்சாரவிடுதியில் சந்தித்துப் பாவமன்னிப்புக் கோரும் இடம் அது. ஒரு கணம் நானும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் வரை சென்றேன். அது நாவலுக்காக அல்ல. நூறுவருடங்கள் கழித்து வேறு ஏதோ ஒரு மொழியில் வேறு ஒருநாட்டில் ஒரு சிறுபெண்ணின் மனம் அந்த ஆன்மீக உச்சத்தைச் சென்று தொடச்செய்ய சொற்களால், இலக்கியத்தால் முடிகிறதே என்ற எண்ணத்தால். அந்த மாபெரும் வரம் மானுடனுக்கு அருளப்பட்டுள்ளதே என்ற எண்ணத்தால். நானும் ஓர் எழுத்தாளன் என்ற எண்ணத்தால்.

இலக்கியத்தின் சாரம் அதுதான். இலக்கியப் படைப்பை இறுதியாக மதிப்பிடும் அளவுகோலும் அதுவே. அந்த உன்னதமாக்கல் நிகழ்வதனால்தான் ஷேக்ஸ்பியரும், தல்ஸ்தோயும் பேரிலக்கியவாதிகள். டி.எச்.லாரன்ஸும் ஹெமிங்வேயும் இலக்கியவாதிகள் மட்டும். மிக அந்தரங்கமான இந்த ஆழ்மன எழுச்சியை அடையும் அளவுக்கு படைப்பை நோக்கி மனம் திறப்பதுதான் வாசகன் செய்யக்கூடிய உயர்ந்த விஷயம். அதைவைத்துப் படைப்புகளை மதிப்பிடுவதுதான் இறுதியானது. என்னளவில் நான் கணிசமான இலக்கிய அரசியல்வாதிகளை, கோட்பாட்டாளர்களை மதிப்பதேயில்லை. காரணம் இதுதான், அவர்கள் இலக்கியத்தின் உன்னதநிலையை ஒருபோதும் அறிவதில்லை. இலக்கியத்தின் மிகச்சாதாரணமான கீழ்த்தட்டை மட்டுமே அவர்கள் அறிவார்கள். அதுவே அனைவருக்கும் பொதுவானது, புறவயமானது, பகுப்பாய்வுக்கு இணங்குவது. அதிலிருந்தே அவர்கள் தங்கள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு அதை இலக்கியவாதிமீது, நல்ல வாசகன் மீது சுமத்துகிறார்கள். ஆகவேதான் எஸ்ரா பவுண்ட் சொன்னார், “தன்னளவில் ஒரு நல்ல ஆக்கத்தையாவது உருவாக்காதவர்களின் விமரிசனக் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை” என. தமிழில் நமது கோட்பாட்டுத் திறனாய்வாளர்கள், இலக்கிய அரசியல்வாதிகள் இன்றுவரை ஒரு நல்ல படைப்பைக்கூட தாங்களே அடையாளம் கண்டுகொண்டதில்லை என்ற உண்மை நம் முன் உள்ளது. அவர்கள் எடுத்து அடுக்கும் மேற்கோள்களுக்கும் தர்க்கங்களுக்கும் வெகுவாக அப்பால் உள்ளது இலக்கியம் என பல்லாயிரம் வருடம் மானுடம் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீவிர மனநிகழ்வு.

எல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியவை, இலக்கியமும். ஆனால் காலத்துக்கு ஏற்ப மாறாதவை சில உண்டு. ஒன்று மெய்ஞானம் [Wisdom] இரண்டு கலை. மனிதனின் அடிப்படையான மெய்ஞானம் அவன் குரங்கு நிலையைவிட்டு மேலெழ ஆரம்பித்தபோதே அவனுக்குக் கிடைத்து விட்டது. அன்பு, கருணை, பாசம், நீதி என பற்பல சொற்களால் அதை நாம் சொல்கிறோம். அதை வாழ்க்கையாக ஆக்க, அதற்கேற்பச் சமூக அமைப்புகளை உருவாக்க, அவற்றுக்கு எதிரான அடிப்படை இச்சைகளைக் கட்டுக்குள் கொண்டுவர மனிதனுக்கு இன்னமும் முடியவில்லை. ஆனால் அப்பாதையில் அவனது பயணம் முன்னோக்கித்தான் நிகழ்கிறது என்றே நான் நினைக்கிறேன். மாறாத மெய்ஞானத்தையே பேரிலக்கியங்கள் அனைத்தும் சாரமாகக் கொண்டிருக்கின்றன என்றவகையில் அவற்றின் சருமம் மட்டுமே காலத்தால் பழையதாகிறது என்று சொல்லலாம். சருமத்தைத் தாண்டுவது நல்ல வாசகனுக்குச் சிரமமல்ல. எனக்கு இன்றும் வான்மீகியும் சோஃபாக்ளீசும் கம்பனும் தாந்தேயும் புத்தம் புதியவர்களாகவே உள்ளனர். என் மேஜையில் குவியும் புதுக்கவிதைத்தொகுதிகளில் பயணித்துச் சலித்து உறையும் கணம் சீவக சிந்தாமணியை எடுத்து ஏதேனும் பக்கத்தை விரித்து பத்து பாடல்களைப் படித்தால் இலக்கியத்தின் நிறைவை நான் அடைகிறேன்.

‘ஆயிரம் கந்நல்லோ மேயுந்நிதோ ஆரெல்லாம் கண்டெடியோ கொச்சுபெண்ணே’

ஆதிவாசிக் காணிக்காரர்களின் பாடல். ஆனந்த பைரவி ராகம். எத்தனைப் பழையது அது? யாரறியமுடியும்? பல்லாயிரம் ஆண்டு? அதற்கும் அப்பால்….? கலை அதிபுராதனமானது. அதைக் கேட்கும் மனம் காலமற்றது. அப்போது நியாண்டர்தால் மனிதனும் ஜெயமோகனும் ஒன்றையே உணர்கிறார்கள். பேரிலக்கியங்கள் அளிக்கும் கலையனுபவம் அகாலத்தில் சுடர்கிறது. “அசதோமா சத்கமய: தமசோமா ஜோதிர் கமய: ம்ருத்யோர்மா அமிர்தம் கமய:” [இன்மையிலிருந்து இருப்புக்குக் கொண்டுசெல்க; இருளிலிருந்து ஒளிக்கு; மரணத்திலிருந்து முழுமைக்கு]. எத்தனைப் புராதனமான பிரார்த்தனை. அது இன்றும் என்னை ஆழமான ஒரு மன உச்சநிலைக்குக் கொண்டுசெல்கிறது . ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எத்தனைப் பழைய சொற்கள். எத்தனைப் புதியவை. எலியட் சொன்னார், கலை வளர்வதில்லை கலையின் மூலப்பொருட்கள் மட்டும் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன என. நான் கலை மாறுபடுவது இல்லை, கலையின் மேற்தளம் மட்டுமே காலத்துக்குக் காலம் வேறுபடுகிறது என்பேன்.

இலக்கியத்தின் நான்கு தளங்களைப்பற்றிச் சொன்னேன். முதலிரு தளங்கள் மட்டுமே காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. இலக்கியத்தின் மெய்ஞானத்தளமும் உச்சமும் மலைச்சிகரங்கள்போல நிலையான மௌனம் கொண்டவை. இலக்கியம் தொடங்கும் இடம் அதாவது வாழ்க்கை சார்ந்த பிரச்சினைக் களம், அனுபவங்களின் சூழல் முதலியவை காலம் மாறுகையில் அன்னியமாகலாம். அது வாழ்க்கையை அறியும் கோணம், காலம் மாறும்போது மாறுபடலாம். அதற்கப்பால் அதன் சாரம் மாறுபடுவது இல்லை. இது வாசகனாக என் அனுபவம். இலக்கிய வாசிப்பின் தொடக்க காலத்தில் படைப்புகளின் அனுபவத்தளமும் பிரச்சினைமையமும் மட்டுமே முக்கியமாகப்படும்போது பழைய ஆக்கங்கள் காலத்தின் தூசுப்படலத்துக்கு அப்பால் தெரியலாம். ஆனால் தேர்ந்த வாசகன் அந்தத் தடையை இலகுவாகத் தாண்டிவிடுவான். அவனுக்கு அனுபவமும் ஆய்வும் சின்னவிஷயங்களாகிவிடும். மலை என்றால் சிகரம் மட்டுமே என்றாகிவிடும். உங்களுக்கு என்ன வயதெனத் தெரியவில்லை. ஆனால் நல்ல வாசகனாக நீடிக்கும் ஒருவருக்கு ஒரு வயதுக்குமேல் பேரிலக்கியங்கள் அளிக்கும் அகால அனுபவம் மட்டுமே தேவை என்றாகும். பேராசிரியர் ஜேசுதாசன் கடைசிக் காலத்தில் பைபிளும் கம்பராமாயணமும் மட்டுமே வாசித்தார்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 12
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 14, 15, 16