ஆஸ்துமா, ஒரு கடிதம்

வணக்கம் ஜெயமோகன் சார் !
உங்கள் எழுத்துக்கு எப்பவுமே சிறப்பான இடம் உண்டு.நீங்கள் எழுதிய சில மருத்துவ கட்டுரைகளை படித்தேன்.நல்ல தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.சுருக்கமாக கேள்வியை கேட்டு விடுகிறேன் .கடந்த ஒரு ஆண்டாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு  வருகிறேன். மழை , குளிரின் பொது இரைப்பு அதிகமாக உள்ளது.அலோபதியில் கட்டுப்படுத்த மட்டுமே மருந்து.என்பதால் நாட மனமின்றி ஆயுவேதம் எடுத்து வருகிறேன்.நன்றாகவே இருக்கிறது. அவ்வப்போது சுவாச பிரச்சினை  வருகிறது. ஆயுர்வேதம் இவ்வகை நோய்களை குணமாக்குமா இல்லை கட்டுப்படுத்தமட்டும்தானா ?உங்கள் பதில் என் மனதுக்கும் மருந்தாக அமையும்
நன்றி
சதீஷ்

 

அன்புள்ள சதீஷ்

 

மருத்துவ ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு மருத்துவமேதும் தெரியாது. மன்னிக்கவும்.

 

1. ஆஸ்துமாவுக்கு நானறிந்தவரை திட்டவட்டமான மருந்து எங்கும் இல்லை. அது ஒரு நோய் அல்ல, ஓர் அறிகுறி மட்டுமே. பல்வேறுவகையான ஒவ்வாமைகளினால் ஆஸ்துமா ஏற்படுகிறது. உடலின் சமநிலையிழப்பினாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. மனக்கொந்தளிப்புகளினாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. அனைத்துக்கும் மேலாக பல்வேறு ரசாயன மருந்துகளினாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது

 

2. ஆகவே அலோபதியின் ஆஸ்துமா மருந்துகளை நம்புவது ஆபத்து. அவை அளிக்கும் நிவாரணம் தற்காலிகமானது. நோயின் அறிகுறியை மட்டுமே தவிர்க்கக்கூடியது. மேலதிக உடற்சிக்கல்களை உருவாக்கக் கூடியது

 

3 ஆயுர்வேதத்தில் உள்ள மருந்துகள் அனைத்திலுமே தூதுவளை, கண்டங்கத்திரி ஆகிய இரு மூலிகைகள் இருக்கும். சுவாசநோய்களுக்கு இந்த இரு மூலிகைகளின் பயன்பாடு அளவில்லாதது.கிட்டத்தட்ட தெய்வீக மூலிகைகள் இவை. நான் என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேனே. எனக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்தது 1990 ல். கொல்லையில் ஒரு தூதுவளைச் செடியை நட்டு தினமும் சில இலைகளைச் சாப்பிட்டே முற்றிலும் குணமானேன். ஆகவே சரியாகச்செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் பயனுள்ளவையே.

 

4. ஆனால் சித்த மருந்துகளில் சேர்க்கும் சில ரசாயனங்கள் அபாயகரமானவை ஆதலால் தவிர்பப்தே நல்லது. அதேபோல டாபர் போன்ற நிறுவனங்களின் டப்பாவில் அடைக்கப்பட்ட ச்யவனப்பிராசம் போன்றவை சரியானவை அல்ல. அவற்றில் கெடுதல்தடை ரசாயனங்கள் இருக்கக் கூடும்

 

5. ஆனால் மூச்சு,செரிமானம் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் வாழ்க்கையின் ஒழுங்கே முக்கியமான மருந்தாகும். வாழ்க்கையின் பிழைகளைச் சரிசெய்வதன் மூலமே அவற்றை குணப்படுத்திக்கொள்ள முடியும். ஏனென்றால் அவை வாழ்க்கையின் அன்றாட விஷயங்கள். ஆகவே இயற்கை வைத்தியத்தின் சில அம்சங்களை கணக்கில் கொள்வது நல்லது.

 

6. காந்தி அவரது இயற்கை மருத்துவக்குறிப்புகளில் மூச்சு சம்பந்தமான சிக்கல்களுக்கு சுத்தமான மலக்குடல் மிக மிக தேவையானது என்கிறார். அதற்கு அவரது நீர்மருத்துவக் குறிப்புகள் உதவியானவையாக இருக்கக் கூடும். அவை அப்படியே லூயிஸ் குஷ்னேயின் குறிப்புகள்.

 

அ. மிகஅதிக அளவுக்கு சுத்தமான , இளஞ்சூடான நீரை அருந்துக

ஆ. ஆனால் சேர்த்து குடல் உப்பும்படி அதிக நீர் அருந்தக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுக்க தொடர்ச்சியாக அருந்துக

இ நீரில் எதையுமே சேர்க்கக் கூடாது. நீரில் உப்பு இருக்கக்கூடாது

உ வெறும் வயிற்றில் நீர்அருந்துவதே ஒப்பீட்டளவில் நல்லது.

 

7. அதிக உணவைப்போல மூச்சு சிக்கலை உருவாக்க கூடிய இன்னொன்றில்லை. ஒருபோதும் வயிறு நிறைய உண்ணலாகாது. புளிப்பு இல்லாத பழங்கள்,வேகவைத்த காய்கறிகள் ஆகியவற்றை கூடுதலாக உண்ணுதல் சுவாசப்பிரச்சினைகளை வெல்ல உதவக்கூடியது

 

8.  அனைத்தையும் விட முக்கியமாக எந்த உணவு, எந்தச் சூழல் மூச்சு சிக்கலை உருவாக்குகிறது என்பதை அவதானிப்பது மிக முக்கியமானது. அதற்கு டைரி எழுதுவது உதவும் என ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

9 மனக்கொந்தளிப்பு கண்டிப்பாக மூச்சு சிக்கல்கள் உருவாகின்றன. ஆகவே மனதை சமநிலையுடன் வைத்துக்கொள்ள வேண்டும்

 

10. கடைசியாக பிராணயாமம். அது மூச்சுச்சிக்கல்களுக்கு மிகச்சிறப்பாக உதவுகிறது என்பது என் அனுபவமும் கூட. பிராணயாமம் என்பது மிக மிக எளியது.

 

அ. இளஞ்சூடான நீர் குடித்துவிட்டு அமரவும்

ஆ. எந்த திசையில் காற்று வருகிறதோ அந்த திசை நோக்கி அமர்ந்துகொள்ளவும்

இ இடது மூக்கை விரலால் மூடிவிட்டு மூச்சை பலமாக உள்ளே இழுக்கவும்

இ நுரையீரலை நன்றாக நிரப்பிவிட்டு சில நொடிகள் நிறுத்திவிட்டு  வலது மூக்கு வழியாக வெளிவிடவும்

ஈ. வெளிவிடும் மூச்சு விசையுடன் வெளியே செல்லவேண்டும். முற்றாக நுரையீரல் காலியாக வேண்டும்

உ வெளிவிட்ட வலது மூக்கு வழியாக மூச்சை இழுத்து  அதை மூடிவிட்டு இடது மூக்கை திறந்து அதன் வழியாக வெளிவிடவும்.

ஊ தினசரி 41 முறை குறைந்தபட்சம் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

இது மருத்துவ ஆலோசனை அல்ல. உடலை வேடிக்கை பார்க்கும் ஒருவனின் கவனிப்புகள் மட்டுமே .

 

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் – 6
அடுத்த கட்டுரைகாந்தி கடிதங்கள்