பாடலும் காதலும்

தமிழிலும் மலையாளத்திலும் உள்ள இயக்குநர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் அனைவருமே சொல்லக்கூடிய ஒரு விஷயமுண்டு, பாடல்காட்சிகளில் காதலை அமைப்பதன் சவாலைப்பற்றி.

முதலில் திரைப்படத்தில் பாடல் என்பதே ஒரு செயற்கையான விஷயம். உலக அளவில் அனேகமாக இந்திய சினிமாவில் மட்டுமே பாட்டு தவிர்க்கமுடியாத அம்சமாக உள்ளது. பிறபகுதிகளில் படத்தின் பல அம்சங்களில் ஒன்றாக ஒரு பாட்டு ஒலிக்கலாம். அல்லது இசைத்திரைப்படங்கள் வரலாம். ஆனால் சாதாரண கதைக்குள் ஒரு பாடல் அமைவதில்லை.

இந்தியசினிமாவில் பாடல் அமைந்ததற்கு ஒரு பின்னணி வரலாறு உண்டு. நம்முடைய நாட்டார் நாடக மரபும் சரி, செவ்வியல் நாடக மரபும் சரி பாடலை ஆதாரமாகக் கொண்டவை. பெரும்பாலானவற்றை இசைநாடகம் என்றே சொல்லிவிடலாம். நாடகக் காப்பியமான சிலப்பதிகாரமே பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுள் வடிவில்தான் உள்ளது.

ஏன் பாடல் அந்த இடத்தைப் பெற்றது? உணர்ச்சிநிலைகளை உச்சத்திற்குக் கொண்டுசென்று நிலைநிறுத்த பாடலால்தான் முடியும். அரிச்சந்திரன் மயானகாண்டத்தில் எந்த வசனமும் அந்த உக்கிரமான துயரத்தைச் சொல்லிவிடமுடியாது. துயரத்தின் உச்சத்தை மேடையில் நிகழ்த்துவதுதான் அங்கே முக்கியமே ஒழிய அதை யதார்த்தத்தில் நிறுத்துவது அல்ல.

கதகளி என்னும் செவ்வியல் நாடகவடிவத்தில் வசனம் ஒலிப்பதைப்பற்றி நினைத்தே பார்க்கமுடியவில்லை. ‘என் தம்பிகள் களத்தில் மாண்டனர், நான் பத்து தலைகளுடன் கைகளற்றவன் ஆனேன்’ என்று ராவணன் பாடத்தான் முடியும்.

அங்கிருந்து நம் நவீன மேடைநாடகமரபு உருவானது. பார்ஸி நாடகங்கள். பின்பு சபா நாடகங்கள். அந்நாடகங்களில் இருந்துதான் சினிமா வந்தது. மேலைநாட்டிலிருந்து நாம் எடுத்துக்கொண்டது சினிமா என்னும் தொழில்நுட்பத்தை மட்டுமே. இந்தியசினிமாவின் நாற்றங்கால் நாடகமே. நாடகத்தில் இருந்த பாடல்கள் சினிமாவில் இடம்பெற்றன. தவிர்க்கமுடியாதவையாக இன்றும் நீடிக்கின்றன.

இன்றுமெல்ல மெல்ல சினிமாப்பாடல்களின் இயல்பு மாறிவிட்டது. துயரத்தின் உச்சத்தில் இன்று பாடல் ஒலிப்பதில்லை. தத்துவார்த்தமான இக்கட்டுகளைச் சொல்ல பாடலை எவரும் பாடுவதில்லை. இன்று காதலுக்கு மட்டுமே பாடல் என ஆகிவிட்டிருக்கிறது.

இயக்குநரான நண்பர் சொன்னார் ‘காதலையும் பாடலையும் இணைப்பதற்காக நம் முன்னோடிகள் பட்ட பாடுகளை யூடியூபில் போய்ப்பார்த்தால் அது ஒரு பெரிய பண்பாட்டு இயக்கம் என்ற எண்ணம் ஏற்படுகிறது’ உண்மைதான். நம்முடைய பாடல்சித்தரிப்பு இரண்டு முன்னுதாரணங்கள் கொண்டது.

ஒன்று, ‘உத்தியானப்படுதா’ காதல். நாடகத்தில் தோட்டத்தில் கதாநாயகியை நாயகன் சந்திக்கிறான். அந்தப் படுதா கறுப்புவெள்ளைப் படங்களில் ஸ்டுடியோ செட் ஆக மாறியது. அதன்பின் உண்மையான உத்தியானங்களில் அதே ஆடல் பாடல். அந்த உத்தியானம் வெளிநாட்டுச்சூழலில் இருப்பதாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கிறது

இரண்டு, நடனஅறை காதல். இதை நம் சினிமா மேலைநாட்டு சினிமாக்களில் இருந்து பெற்றுக்கொண்டது. சாப்பாட்டுக்குப்பின் ‘பால்ரூமில்’ அமர்ந்து பியானோ வாசிக்கிறார்கள். பாடுகிறார்கள். நம் சினிமாவில் பியானோ வகித்த இடம் பற்றி எவராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா? இங்கே தேவாலயங்கள் தவிர எங்கும் பியானோ கிடையாது. பியானோ இசைக்கும் நம் இசைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் சினிமாக்களில் காதலர்கள் பியானோ வாசிப்பார்கள். எத்தனைபடங்கள்!

விதவிதமான பாடல்காதல்கள். இப்போது யூடியூபில் பார்க்கையில் ஆரம்பகாலப் பாடல்கள்தான் இயற்கையாக இருப்பதாகப் படுவது பெரிய ஆச்சரியம். அதாவது பழையபடங்கள் வசனக்காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன, பாடல்கள் பெரும்பாலும் இயற்கையாக உள்ளன. சும்மா அமர்ந்து பாடுவது போல அவை அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய படங்களில் காட்சிகள் இயற்கையானவை, பாடல்களில் என்னென்னவோ செய்கிறார்கள்

மிகச்செயற்கையான காட்சியமைப்புக்குள் மிக இயல்பாக காதல் காட்டப்பட்ட பாடல். எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்று. பானுமதி காலை ஆட்டிக்கொண்டே இருப்பதிலும் கடைசியில் சட்டென்று திரும்புவதிலும் உள்ள இயற்கையான இளமை அழகு.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2FG5rrmrdoo

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 34
அடுத்த கட்டுரைஜோ.டி.குரூஸுக்கு பாராட்டு விழா