இன்னொரு கம்பராமாயணம்:ஒரு கடிதம்

அன்பின் ஜெயமோகன்,

ஹ்யூஸ்டனிலிருந்து வணக்கம்.

கொங்கு நாட்டிலே 400 ஆண்டுகளுக்கு முன்னால் கம்பனுக்கு ஒரு பெரிய
மரியாதையைச் செய்திருக்கிறார்கள்.
திருச்செங்கோட்டிலே எம்பெருமான் கவிராயர் என்பவர் வாழ்ந்து
கம்பனை 1/3-ஆக இசை ராமாயணமாகத் தந்துள்ளார்.
வரிக்கு வரி கம்பனை ரசித்துச் சுருக்கிப் பாடப்பட்டது.
தக்கை என்னும் தாளக் கருவி இப்பொழுது அருகிவிட்டது,
ஸ்ரீரங்கத்தில் மாத்திரம் இருக்கிறது.

எம்ஜிஆரின் கடைசி காலத்தில் தக்கை ராமாயணத்தை
அச்சிட உத்தரவிட்டார். அது முதல் 5 காண்டங்களை மாத்திரம்
தொல்பொருள் ஆய்வுத்துறை அச்சுப்போட்டு விட்டுவிட்டது.
முதல் 5 காண்டம் தொல்பொருள்துறையில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.
என்னிடம் நூல் முழுதும் இருக்கிறது. வலையேற்றியும்
இருக்கிறேன். (ஒரு 2500 பாட்டு கொடுத்திருக்கிறேன். கடைசி 800 பாட்டும் ஏற்றணும்).

தக்கை ராமாயணம் படித்துப் பாருங்கள்,
http://nganesan.thamizamuthu.com/wp/?cat=1
யுத்த காண்டம் பனையோலையில் இருந்து நேரடியாய் யுனிகோடுக்கு!
தமிழ்நாட்டிலும், இணையத்திலும் அறிமுகப் படுத்துங்கள். நன்றி.

அன்புடன்,
நா. கணேசன்

அன்புள்ள நா கணேசன் அவர்களுக்கு,

கொங்கு மண்டலம் குறித்த தங்கள் தகவலுக்கு நன்றி. ஒரு காலகட்டத்தில் கம்ப ராமாயணம் பல்வேறு வடிவங்களில் தமிழில் பரந்து புழங்கிவந்திருப்பதாகப் படுகிறது. தோல் பாவைக்கூத்து ராமாயணம் கம்பராமாயணத்தின் ஓர் எளிய அவ்டிவம். கேரளத்தில் திரிச்ச்சூரிலும் ஒன்று கிடைத்துள்ளது. மலையாளம் உருவாவதற்கு முந்தைய மலையாண்மை மொழியில் அமைந்த நூல்களான கண்ணச்ச ராமாயணம் போன்றவை அபப்டியே கம்ப ராமாயணம் போல் உள்ளன.[எண்சீர் விருத்தம்]  ஒரு கட்டத்தில் இந்நூல்கள் வழியாகவே கம்பராமாயணம் போன்ற காப்பியம் மக்கள்வயபப்டுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று படுகிறது. இந்நூல்களை கம்பராமாயணத்துடன் ஒப்பிட்டு ஆய்வது தமிழ் உளவியலையும் பண்பாட்டின் பல்வேறு அடுக்குகளையும் பற்றிய ஆழமான பல புரிதல்களை உருவாக்கக் கூடும்.

முந்தைய கட்டுரைபிந்து கிருஷ்ணன் கவிதைகள்
அடுத்த கட்டுரைஜெ.சைதன்யா ஒரு கடிதம்