ஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்

கடந்த சில நாட்களாகப் பார்த்தது – நீல் ஸ்டீஃபன்சனின் (Neal Stephenson) ஒரு ப்ராஜெக்ட். அறிவியல் புனைவாசிரியரான அவரிடம் ஒருவர் முன்வைத்த சவால் காரணமாக உதித்த பிராஜெக்ட்.

ஏன் விஞ்ஞானப் புனைவு இருளான எதிர்காலத்தை முன்வைக்கிறது? உடனடியாக பெரிய மாற்றங்கள் விஞ்ஞானத்தில் உருவாவதைப் போலக் காட்டாமல் ஏன் எதிர்காலத்தில் உலகம் அழிவதைப் போலவோ, இல்லை மனித இனம் வேறொரு மேலான அறிவிடம் அடிமைப்பட்டுப் போவது போலவோ உங்கள் கதையை உருவாக்குகிறீர்கள்? எனக் கேட்டிருப்பதால் அவர் ஒரு பிராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்.
இந்த பிராஜெக்ட் விண்வெளிப்பயணங்களை சுலபமாக்குவது எப்படி என ஆராய்கிறது. சந்திராயன் பத்து மாதங்களே இயங்கினாலும் நம்மைப் பொறுத்தவரை அசுர சாதனை. கிட்டத்தட்ட எதிர்பார்த்த எல்லா விஷயங்களையும் செய்துவிட்டுத்தான் அதன் ஆயுள் முடிந்திருக்கிறது. ஆனால் அதற்கான செலவு சந்திரனின் சுற்றுப்பாதையை அடைவதுவரை எரிபொருளுக்காகத்தான் அதிகம். மங்கல்யான் 300 நாட்களுக்குள் செவ்வாயைச் சேர்ந்துவிடும். அதன் ஆகப்பெரிய செலவே நமது வான் மண்டலத்திலிருந்து வெளியேறி செவ்வாயின் சுற்றுப்பாதையை சேர்வதுதானாம். அதற்கான எரிபொருள் தேவை அதிகமாக இருப்பதால் ராக்கெட்டின் எடையும் அதிகமாகிறது. எடை அதிகமாகும்போது புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க அதிக வேகமும், எரிபொருளும் தேவைப்படும். இத் தேவையைக் குறைக்கும்போது குறைந்த செலவில் விண்வெளி பயணங்களைத் தொடங்கலாம் என்கிறார்கள்.

அதாவது 20 கிமீ உயரம் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கினால் அங்கிருந்து விண்வெளிப் பயணங்களை துரிதமாக, குறைவான விலையில் செய்யலாம் எனும் திட்டம். அதற்கு என்னென்ன தேவை, எப்படி டிசைன் செய்வது என்பதைப் பற்றி கீழுள்ள காணொளியில் பாருங்கள். சிவாத்மா போன்ற கட்டிட இயல் வல்லுனர்களுக்கு இதில் இன்னும் ஆர்வம் அதிகம் இருக்கும்.
நமக்கு ஏன் பெரிய கனவுகளை சாத்தியமாக்கவில்லை எனும் கேள்வி மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் புது நுட்பங்களைக் கண்டடைவதினால் இந்த டவரை எழுப்ப முடியுமா என ஆராய்கிறார்கள். அதாவது ஒரே டவரில், நான்குவித பருவங்களும் இருக்கும். மேற்பகுதி கிட்டத்தட்ட உறைந்துகிடக்கும் (-60 டிகிரி), மேல் மாடிகளில் காற்று மணிக்கு 300 மைல் வேகத்தில் வீசும் என்பதால் எதிர்விசையாக ராக்கெட் ப்ரொப்பல்லர்களை வைக்க வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு ஆட்களை வைக்க முடியாது. ஒரு கட்டத்துக்கு மேல் ரோபாட்கள் தேவை. கட்டிடம் ஸ்டீலில் செய்தாலும், கொஞ்சம் எடை குறைவாக இருக்க வேண்டும். ரொம்பக் குறைந்தால் பளு தாங்காது முறிந்துவிடும்.

அதாவது அடிப்படையான விஞ்ஞானக் கருத்துகளிலிருந்து இக்கட்டடத்துக்குத் தேவையான பொருட்களை உருவாக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு 3டி டிசைன் ரெடி செய்திருக்கிறார்கள்.
எத்தனை எத்தனை கண்டிஷன்கள்!! இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் வந்திடலாமாம்,..ரொம்ப ஆச்சர்யமாக உள்ளது. எத்தனை அற்புதமான கனவு.

http://www.youtube.com/watch?v=BU7antoxCzg

முந்தைய கட்டுரைநூல்கள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப்