கடிதங்கள்

இந்நேரம் வீடடைந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பயணங்களில் போது வாசித்துக்கொண்டிருப்பதும், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. ஊட்டி யில் மீண்டும் ஒரு இலக்கியக்கூட்டம் நடைபெறுமாயின் அதில் கலந்துகொள்ள விரும்புகிறேன். கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது கட்டுரை வாசித்தேன். மேலும் சில நல்ல எழுத்துக்களின் பரிந்துரை கிடைக்குமாயின் மகிழ்ச்சியடைவேன். எனக்கு தெரிந்து இணையத்தில் இவ்வளவு வேகமாக தொடர்ந்து எழுதக்கூடிய ஒரே எழுத்தாளர் நீங்கள் தான்.
“ஆழ் நதியைத்தேடி” ஆரம்பத்தில் புரியவே இல்லை.
பலசமயங்களில் உங்கள் எழுத்துக்கள் மிகுந்த ஆறுதலாக இருந்திருக்கிறது.
படிப்பதற்கு ஒரு தெளிவான மனோநிலை அவசியமாகிறது. பலசமயங்களில் ஒழுங்கற்ற மனதுடன் வாசிக்க ஆரம்பிக்கிறேன்.. அப்போது பல விஷயங்கள் பிடிபடுவதே இல்லை. நான்கு ஆண்டுகளாக ஆழ் நதியைத் தேடி அப்படி இருந்த நூல் தான். இப்போது வாசிக்கும் அந்த மாற்றத்தை உணர்கிறேன்.

நீங்கள்  பதில் அனுப்பியதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அன்றாடம் வரும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு தொந்தரவாக இருக்காது என்று நம்புகிறேன். உங்கள் பதில் வரும்போது கொஞ்சம் சந்தோஷத்தை உணர்கிறேன்.. எப்போதும் சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறேன்.
அன்புடன்
ஷிஜுசிதம்பரம்
(சுள்ளிக்காடன்)

 

அன்புள்ள சுள்ளிக்கடன் ஷிஜுமோன்

மூர்க்கமாக ஒரே நாளில் ஜெட்லாக்கில் இருந்து மீண்டு விட்டேன். கடிகாரம் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு நல்ல அறிமுக நூல்தான். அதேபோல பல நூல்கள் உள்ளன. என் நோக்கில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் அறிமுக நூல்கள் முக்கியமானவை. நான் எழுதிய ‘கண்ணீரை பின் தொடர்தல் [உயிர்மை] வாசிக்கலாம். என்னுடைய ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ என்ற நூலில் மிக விரிவான நூல் பட்டியல் உள்ளது

ஜெ

ஜெ

வணக்கம். உங்கள் அமெரிக்க பயணம் சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள். மேலும் படங்கள் எதிர்பார்கிறேன்.

திரும்புதல்

உங்கள் திரும்புதல் கட்டுரை, ஒரு வித நாஸ்டால்ஜியாவை, எனக்கும் கொண்டு வந்தது.
நண்பர்கள் வழியனுப்ப வருவார்கள் ( விமான பயண பயம் வயிற்றில் இருக்கும் , அது வேறு :-) ) அச்சமயம், ஒரு வித சூழல், கண்களில் கண்ணீர்  என இருக்கும்…

நானும் 1999 சமயத்தில், இந்திய திரும்ப ( செட்டில் ஆக ) புறப்பட்ட போது, நண்பர்களை பிலேடேல்பியா வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இருந்தாலும் ஒரு வித நாஸ்டால்ஜியா மனதில் இன்றும் உள்ளது! தவறா தெரியவில்லை.

நான் 1990 வேலைக்கு சேர சென்ற போது முதல், ஒவ்வொரு முறையும் திருப்பூர் சென்று திரும்பும் போது, அப்பாவும் அம்மாவும் வந்து வழியனுப்புவார்கள்… பஸ்ஸோ ட்ரெயினோ நகர கண்களில் கண்ணீர் உருண்டோடும்… மனைவி வந்த பிறகு வேறானது… வேலை விஷயம் வெளிநாடு செல்லும் போது, பிஞ்சு குழந்தைகள், இருவரும் அழுவது, அப்பப்பா… என்ன சொல்வது என்று தெரியவில்லை.

***
திருப்பூர் சுப்ரபாரதிமணியனின் பட்டு கதை – காஞ்சீவரம் ஆகியுள்ளது என்கிறார். வெற்றி பெற்ற கதை ( சிறந்த நடிகர் ) என்பதால் இந்த சாடலா…. வெற்றி இல்லாவிட்டால் போனால் போகட்டும் என்று விட்டுவிடுவாரா? எழுத்தாளர்கள் இந்த தருணத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?


Regards
விஜயஷங்கர்

அன்புள்ள விஜயசங்கர்

கலாப்ரியா ஒருமுறை சொன்னார் அவருக்குப் பயணம் பிடிக்கும்– வீடுதிரும்புதல் என்ற ஒரே மகிழ்ச்சி அதில் இருப்பதனால் என்று

காஞ்சீவரம் குறித்து தெரியவில்லை. பலசமயம் கதைகள் வாய்மொழியாகக் கூட பரவக்கூடும் என்றும் படுகிறது
ஜெ

 

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு…

திக்விஜயம் போல் அமெரிக்கா சென்று, தமிழ் மனங்களை வென்று வந்தமைக்கு வாழ்த்துக்கள். மீண்டும் குமரிக் காற்றைச் சுவாசிக்கும் போது அடுத்த
இன்னிங்ஸுக்குத் தயாராகி விடுவீர்கள் என்று நம்புகிறேன்.

அ. சமீபத்தில் உங்களது நகைச்சுவைக் கொட்டாரத்தில் ‘அச்சுப் பிழை’ படித்தேன். கோடிக்கணக்கான சாத்தியக் கூறுகளை வடிவமைக்கக்கூடிய அச்சுப் பிழைகள் மொழியின் வளர்ச்சிக்குத் தம்மால் ஆனதைச் செய்கின்றன என்றே நம்புகிறேன். அனந்தபுரத்தில் பணிக்குச் சேர்ந்த புதிதில், அலுவலகத்தில்
தென்மலைக்கு இருநாள் சுற்றுலா சென்றிருந்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேற்பட்ட தொடர்ப் பயணத்தில் ப்ளாடர் நிரம்பி விட்டிருந்ததால், தென்மலையில் நிறுத்தியவுடன் நண்பர்கள் ஓரம் தேடி
ஓடினர். ஒரு சுவரைத் தேர்ந்தெடுத்து ஜிப்பைத் திறந்து விட்டனர். அது ஓர்
ஓட்டலின் பக்கச் சுவர். யதேச்சையாக போர்டைப் பார்த்து விட்டு, ஜிப்பை மேலே இழுத்து விட்டு இடத்தை விட்டு அதிர்ச்சியாகி, ஓடோடி வந்து விட்டனர்.
காரணம்… படத்தில் இருக்கின்றது.

ஆ. அதே கொட்டாரத்தில் மற்றொரு கொம்பனான ‘யாப்பு’ படித்தேன். ஆசிரியர் கூறுவது உண்மைதான். யாப்பு மிக எளிமையானதும், எழுதுபவர்களுக்குச் சவாலான
கட்டுப்பாடுகளும் விதிப்பதால் உற்சாகத்தைத் தரும் ஒரு படைப்பு முறை.
எழுதிய சில வெண்பாக்கள் ::

ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
வட்டியோட சட்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
கிட்டிடும் வங்கிக் கடன்.

சூலைத்திங் கள்நான்காம் வாரபுதன் இவ்வாண்டு
காலை. கிழக்கினில் வானத்து – ஆளைப்
பொறுப்பைத் தொடங்கத் தடுத்ததார் என்றால்
நெருப்பை மறைத்த நிலவு.

வெட்டும் தலைமேல் வழித்த முகதாடை
தொட்டிட பட்டாய்ப் பளபளக்க – கட்டாயம்
கட்டிங்கோ ஷேவிங்கோ காலையில் வந்தாலோர்
சிட்டிங்கில் சீராகும் பார்.

காதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்
ஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை – போதவிலை
இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!

குரங்குதான் முன்னோர் குறிப்பிட்டார் டார்வின்
அரங்கை நிறைத்ததுகை தட்டல டங்கியபின்
எல்லாம் அறிவேன் எழுந்தொருவர் சொல்லிய
தில்லாளால் முன்பேயே யான்!

எடுத்துக் காட்டிய எளிமையான வெண்பாக்களைப் போல், யாப்பின் மேல் ஆர்வமுள்ள தங்கள் வாசகர்களும் படைத்திட கீழ்க்காணும் வெண்பா கற்கும் தளத்தைக் குறிப்பிடுகிறேன்.

http://venbaaeluthalaamvaanga.blogspot.com/

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

 

அன்புள்ள வசந்தகுமார்

தமிழ் மனங்களை வெல்வது எளிது– வெண்பா எழுதுவதைப்போல
ஜெ

முந்தைய கட்டுரைநாடார்,நாயர்,மிஷனரிகள்…
அடுத்த கட்டுரைகாந்தியும் சாதியும்