கோபிகா செய்தது என்ன?

’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்?’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.செ.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை.

ஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு படிந்த விலகல்தான் கதையின் மைய உணர்ச்சி. இயக்கம் இருந்த நாட்களை, இயக்கம் அழிந்தபின் மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளை பல்வேறு சில்லறை நிகழ்ச்சிகளின் வழியாக மென்மையாகத் தொட்டுச் செல்கிறது கதை.

மாம்பழமும் புட்டும் மீன்கறியுமாக யாழ்ப்பாணச்சாப்பாடு சாப்பிட்டு பழைய நினைவுகளை அலசியபடி போடும் மதியத்தூக்கம். இயக்கத்திற்குச்சென்ற கனவுநிறைந்த மனிதர்களின் துளித்துளி நினைவுகள். இயக்கத்தில் இருந்து அடிபட்டு மீண்டு வந்திருப்பவர்கள் இயக்கத்தில் இருந்து ஓடிப்போய் என்னென்னவோ ஆகி இப்போது முக்கால்வாசி பீலாவுடன் வாழ்பவர்கள் என நுட்பமாக முடையப்பட்ட சித்திரங்கள். அதன் வழியாக ஒரு விடுதலை – வன்முறை இயக்கத்துடன் எளிய லௌகீகர்களுக்கு இருக்கும் விருப்பும் வெறுப்பும் கலந்த உறவின் அந்தரங்கமும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

அந்தக்காலகட்டத்தை முதிரா இளமையின் காதலின் மனக்கிளர்ச்சியுடன் ஒப்பிடுகிறது இக்கதை. ஆணின் முரட்டுவிளையாட்டுத்தனத்தை காதலிக்கும் எளிய நடுத்தவர்க்க பெண்ணின் மனநிலையை ஈழமக்களின் மனநிலையுடன் ஒப்பிடுகிறது. அந்த மனநிலையை கடைசிவரை நீட்டி அவனுடைய வன்முறையையும் கூட மன்னித்துவிடும் ‘புரிந்துகொள்ள முடியாத’ தன்மையை யாழ்ப்பாண மக்களின் இயல்புக்கு சமானமாகச் சுட்டிக்காட்டுகிறது. யோசிக்க யோசிக்க விரியும் ஒரு கற்பனை. விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு.

போருக்குப்பிந்தைய ஈழ இலக்கியத்தில் சயந்தன் [ஆறாவடு], அகிலன், யோ.கர்ணன் போன்ற சிலர் முக்கியமாக கவனம் ஈர்க்கிறார்கள். இளங்கோவையும் அவ்வரிசையில் வைக்கமுடியும்.

முந்தைய கட்டுரை10. கடைசிக் கண் – விஜய் சூரியன்
அடுத்த கட்டுரைமு.வ.வின் எக்ஸ்ரே