சில வாசகர் கடிதங்கள்

அன்புடன் ஜெயமோகன் அண்ணாவுக்கு..
நான் ச.ச.முத்து.தமிழீழம் என் தாயகம்.வல்வெட்டித்துறை எனும் சிறுகிராமம் என் ஊர்.உங்களை நீண்ட நாட்களாக வாசித்துவருகிறேன்.உங்களுடைய எழுத்துகளில் வெளித்தெரியும் ஆளுமையும் அற்புதநடையும் எனக்குப்பிடிக்கும்.
உங்களைப்போன்றே எனக்கும் பயணங்கள் பிடிக்கும்.தாய்லாந்தின் பாங்காக்நகர
நெரிசல் முதல் சுவிஸ்நாட்டு ‘ஆர்த்கோல்டவ்’கிராம ஏரியின் பற்றியிழுக்கும் ஆழ்ந்த மௌனம் வரை எனக்கு அமிழ்ந்துபோக பிடிக்கும்.என்ன செய்வது…?
எங்கள் முன் இப்போ நீண்ட பயணம் நீட்டிக் கிடக்கிறது. தாயக மீட்புப் பயணம்….
ஒன்று நிச்சயம் பயணத்தின் முடிவு எமக்குத் தெரியாது.ஆயினும் எங்களுக்கு முடிவு இந்தப் பயணத்தில்தான். எங்கள் முடிவின்போதும் உங்கள் புத்தகத்தை வைத்திருப்போம்-படிப்போம்-தொடர்வோம்
-ச.ச.முத்து-

 

‘அன்புள்ள முத்து

ஒரு இடத்தை தாண்டிச் சென்றபின் பார்க்கும்போது வாழ்க்கை நமக்கு அளித்தது என்ன என்ற வியப்பு ஏற்படுகிறது. நான் சென்ற இடங்கள் சந்தித்த மனிதர்களை காண்போமென்றோ சந்திப்போம் என்றோ எண்ணியதே இல்லை

காலம் வரும் என்று மட்டுமே சொல்லவேண்டியிருக்கிறது இத்தருணம்

ஜெ

 

நன்றி சார்
மலையாளி ஆனாலும் தமிழில் நிறைய வாசிப்பதுண்டு சார்.
உங்கள் படைப்புகளை விமர்சிபவர்கள் பல சமயங்களில் உங்கள் மீது ஒத்துகொள்ளவே முடியாத அபாண்டங்களை சுமத்துகிற போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மார்க்ஸ் மீது எனக்கு கடும் கோபம் வருகிறது. அவருக்கு நீங்கள் எதிர்வினையற்றுகிற வரையில் ஒருவித நிம்மதியின்மையை உணர்கிறேன். இப்படி இருப்பதை நான் விரும்பவில்லை.

இப்படிக்கு,

(தேவதைகள் ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்)

ஷிஜுமோன்

அன்புள்ள ஷிஜுமோன்,

உங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன். அது இளமையின் விளைவு. நானும் அப்படித்தான் இருந்தேன். மாற்றுக்கருத்துக்கள் இருக்கும்போது மட்டும் அவற்றை திட்டவட்டமாக முன்வைத்துவிட்டு நம் உணர்ச்சிகள் மோதாமல் பார்த்துக்கொள்வதே நான் எப்போதும் செய்வது, அதுவே நம்மைக் காக்கும்

ஜெ

 

 

மதிப்பிற்குரிய ஜெமோ

தற்போதுதான் வாடிவாசல் படித்தேன். தங்களின் சிபாரிசுகளில் உள்ள நாவல் அது. என் கடிதம் நாவல் பற்றியது அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

ஆறாவது பதிப்பிற்கு பெருமாள் முருகனால் எழுதப்பட்டுள்ள முன்னுரையில் அவர் இப்படிக்குறிப்பிடுகிறார்

“பிச்சி- மறச்சாதி. ஜமீந்தாரின் சாதி அடையாளத்திற்கான குறிப்புகள் இல்லை. எனினும் மறச்சாதியை கீழாக நடத்தும் ஆதிக்கச்சாதியாக அவர் இருக்கக்கூடும்.அல்லது மறச்சாதிக்குள்ளேயே ‘குடிபடைக்காரன், ஜமீன்தார், காணியாளன்’ என இருக்கும் பிரிவுகளில் குடிபடைக்காரனாக பிச்சியைக் காணலாம்.” (பிச்சி- கதையின் நாயகன்)

இதற்கு விடைதரும் விதமாக  நாவலிலேயே ஒரு கட்டம் வருகிறது. இதை எப்படி பெருமாள்முருகன் கவனிக்காமல் போனார் என்பது ஆச்சரியம்தான்.ஜமீந்தாரின் சாதி தெரியவில்லை என்று சொன்னாலும், அவர் பற்றிய கணிப்பு சரியாக இருக்கிறது. அந்த இடம் பின்வருமாறு

“மொக்கையத்தேவர் காரிகிட்ட அம்புலித்தேவன் உலுப்பி விளுந்தான்கிற பேச்சுல்ல நிலைச்சுப்போச்சு.’
(அம்புலித்தேவன் – பிச்சியின் தந்தை)

இதை உங்களிடம் சொல்லக்காரணம் , அவர் கவனத்திற்குப்போகும் வாய்ப்பிருப்பதாக எண்ணி. நிற்க.

நான் இந்நேரத்தில எழுப்பும் கேள்வியே வேறு. ஒரு ஆராய்ச்சி மனப்பான்மையோடு உங்களைக் கேட்கிறேன்.அதாவது , தென் தமிழ்நாட்டைச் சார்ந்த படைப்பாளிகள் அந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மை சமுதாயமான முக்குலத்தோரைப் பற்றி இன்னும் மற்ற சாதியினரைப் பற்றி அந்தந்த சமுதாயங்களைச் சாராத படைப்பாளிகளேகூட பதிவு செய்திருக்கிறார்கள். சி.சு. செல்லப்பாவின் இந்நூல் மற்றும் கமல்ஹாசன் தேவர்மகன் என்று படம் எடுப்பது என்று நிறைய சொல்லலாம்.ஆனால், வட தமிழ் நாட்டின் பெரும்பான்மைச் சமுதாயமான வன்னியர் சமூகம் (தமிழகத்தின் பெரும்பான்மையும் கூட)பற்றிய பதிவுகளை இவ் வட்டாரம் சார்ந்த,சார்ந்து எழுதிய படைப்பாளிகள் பலரும் எழுதியதாகவே தெரியவில்லை. வன்னியர்களைத்  தவிர விதிவிலக்காக சிலர் எங்காவது மேலோட்டமாக செய்திருக்கலாம்.கதாபாத்திரங்களாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கலாம். ஆனால், மற்றவர்களை சாதிய அடையாளங்களோடு சொல்லியிருப்பதுபோல் வன்னியர்கள் பற்றி எழுதவில்லை.ஜெயகாந்தன், பாலகுமாரன்,பிரபஞ்சன் போன்ற சிலரை -நான் வாசித்தவரை மட்டுமே-குறிப்பிடுகிறேன். அதிலும் பாலகுமாரனின் நாவல்கள் சாதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதை காணலாம்.

திரைப்படங்களிலும் இதே நிலை நீடிப்பதையும் உணரமுடியும். ராசு படையாச்சியாக நடிக்க மறுத்த விஜயகாந்த் தெலுங்கு ரீ மேக்குக்கு நாய்டு தி கிரேட் என்று சம்பந்தமில்லாமல் பெயர் வைப்பார். தெற்கத்திக்கள்ளன், சக்கரைத்தேவன், சின்னக்கவுண்டர் என்றெல்லாம் நடிப்பார். அதுபோல்தானா இதுவும்?

சிலையெழுபது என்று ஒரு நூலை காவியப்புலவன் கம்பனே எழுதியிருக்கிறான். அது, கருணாகரத்தொண்டைமான் வன்னியன் என்ற மன்னனைப் புகழ்ந்துபாடுவதற்காக வன்னியர் சமூகத்தின் அருமை, பெருமைகளை பற்றிய பாடல்களின் தொகுப்பு என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.கந்தபுராணம், சிவபுராணம் என்றெல்லாம் இருப்பதைப்போல் வன்னியபுராணம் என்று புராணமே உள்ள சமுதாயம் வன்னிய சமூகம்.அவ்வாறிருக்க இந்த ஒதுக்கல் ஏன் என்பது என் சந்தேகம் மட்டுமே. இதன் உண்மையான பின்புலத்தை தயங்காமல் தெரிவித்தால் மகிழ்வேன்.

மீண்டும் குறிப்பிடுவது, என் கருத்துக்கள் நான் வாசித்த படைப்பாளிகள் மற்றும் அவர்களின் சில ஆக்கங்களை மட்டுமே வைத்து என்பதே.

உங்கள் வாசகன்

(இணையத்தில் வெளியிடும் பட்சத்தில் என் பெயரை வெளியிடவேண்டாம் எனக் கோருகிறேன்.சில நல்ல காரணங்களைத் தவிர வேறேதும் அர்த்தம் இல்லை இதற்கு. )
நன்றி

 

அன்புள்ள மு

உங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்ல வருவதென்ன என்றே எனக்கு புரியவில்லை. ஆனாலும் சில அடிப்படை மனநிலைகளை உங்கள் கடிதம் காட்டுகிறதென்பதனால் இதை எழுதுகிறேன்

ஒன்று, பெருமாள் முருகன் தேவர் சாதியை அடையாளம் காண மறுக்கிறார் என்றா? அந்த நாவலில் ஜமீன் தாரின் பெயர் குறிப்பிடப்படும் இடத்தை அவர் காண விட்டுப்போயிருக்கலாம். மற்றபடி தேவர் சாதியை அவர் எங்கே மறுத்தார்?

வன்னியர் சாதியை எவர் புறக்கணிக்கிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை. நீங்கள் சொல்வதெல்லாமே சில வகை மாப்பிரமைகள். வன்னியர் குறித்து பலர் எழுதியிருக்கிறார்கள்.

இத்தனைக்குப்பின்னரும் உங்கள் பெயரைச் சொல்ல உங்களுக்கு தோன்றவில்லை என்பது இன்னமும் ஆச்சரியம். நண்பரே உங்கள் அடிபப்டை மனநிலை சமூகப்புரிதல் போன்றவற்றை சிறந்த வாசிப்பு வழியாக நீங்கள் மறு அமைப்பு செய்தாகவேண்டும்

ஜெ

 

அன்பிற்கினிய  ஜெமோ,

தங்களின்  நகைச்சுவை பற்றிய கட்டுரை  மிகச் சரியான சமயத்தில்  வந்திருக்கிறது. வீட்டில் எதையுமே கிண்டலும் கேலியுமாகவே  பார்க்கத் தெரிந்த என்னைத்  திருமணத்திற்கு தயாராகி  நிற்கும் மகளைக் காண்பித்தும் ஒரு திட்டமிட்ட, பொருளாதார  ரீதியில் மிகப்பெரிய உயர்வை நோக்கிய பயணமாக மட்டுமே வாழ்க்கையைப் பார்க்க வைக்கும் முயற்சிகொண்ட குடும்பத்தாரின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்துச் செல்லும் எனக்கு உங்களின் நகையுணர்வு மிகவும் உற்சாகம் தருகிறது.  ஆனால் இவ்வளவு தெளிவான புரிதல் கொண்ட தாங்கள் ஏன் தங்களைப் பற்றிய விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது முழு எதிர்த்தாக்குதலுக்கு தயாராகிறீர்கள் என்பது நெருடுகிறது (அதன் விளைவாக வரும் ஆக்கங்கள் மிக விரும்பத்தக்க எழுத்துக்ளைத் தருகின்றன என்பது வேறு விசயம்).  ஒரு மாறுதலுக்காக, ஏன் சுயநகைப்பார்வையுடன் தங்களைக் குறித்து ஒரு பத்தி எழுதக்கூடாது ?

= ஜேயார்ஸி

 

அன்புள்ள ஜேயார்ஸி

நகைச்சுவை குறித்த கருத்துக்களுக்கு நன்றி. என்னுடைய இணையதளத்தை கவனித்து வந்தாலே தெரியும் நான் ஒருபோதும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்வதில்லை. முழுமையாகவே புறக்கணிபெபென், அல்லது ஒரு மெல்லிய கிண்டலுடன் நின்று விடுவேன்.

தீவிரமான எதிர்மொழி இரு தளங்களில் மட்டுமே. நான் அழுத்தமாக நம்பும் விஷயங்களை மறுத்து அல்லது திரித்து எழுதப்படும்போது அதற்கு பதிலாக என் தரப்பை வலிமையாகவும் திட்டவட்டமாகவும் முன்வைப்பேன்

ஒருவகை பண்பாட்டு மூடத்தனம் காரணமாக எழுத்தாளனின் சமூக முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தி எழுதப்படும் வரிகளுக்கு கடுமையாகவே எதிர்வினை ஆற்றுவேன். அது சில சமயம் எனக்கு எதிரான கருத்தாக இருந்தால் நான் எனக்காக வாதாடுவதாக தோன்றும்

என்னுடன் உரையாடும் மாற்றுத்தரப்புகள் மேல் என்றுமே எனக்கு மதிப்பும் ஈடுபாடும் மட்டுமே இருந்து வந்துள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைசொல்வனம், பதில் கடிதம்
அடுத்த கட்டுரைவீடு