பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

பிரகாஷ் அவர்களின் வேஷம் மாறுதல்களின் காலகட்டத்தை உணர்த்துவதாகத் தோன்றியது..
நிஜத்தை அது தரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் நேரில் கண்ட பின்பு,
போல செய்வதின் மதிப்புதான் என்ன..அது எவ்வளவுதான் உண்மைக்கு நெருக்கமாக,புனிதமாக இருந்தாலும் கூட.
சில சமயங்களில் நினைப்பதுண்டு ,கட்டுடைப்புகள் நிகழாமல் இருந்தால் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் ரசனையாக இருந்து இருக்ககூடும் என்று..

நல்லவேளை பிரகாஷ் அவர்களின் கருணை புலியையும் ஆசானையும் கொன்று விட்டது…யதார்த்தம் புலியை சர்க்கஸ் வித்தைக்கும், ஆசானை வெறுமையிலும் தள்ளி இருக்குமோ?..

பல்வேறு கிளைசிந்தனைகளை விதைத்தபடி நீள்கிறது கதை..
எப்படி எந்த புள்ளியில் முடித்து கொள்வது என்றே தெரியவில்லை..புலிக்கலைஞனின் கால வீழ்ச்சியாக மட்டும் கதையை உள்வாங்க மனம் மறுக்கிறது என்பதே உண்மை. நீங்களோ,குழும நண்பர்களோ, , சண்முகம் போன்றவர்களோ எழுதும் கடிதங்களை வைத்தே முழுவதும் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்ற நிலையிலேயே காத்து இருக்கிறேன்..

அன்புடன்,
பிரதீப்.

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம், நான் உங்களின் வலைப்பக்கத்தை நாள்தோறும் தவறாது படிக்கும் சிங்கப்பூர் (இந்திய) வாசகன்.நேற்று தங்களின் வலைப்பக்கத்தில் வெளியான”கன்னிப்படையல்” எனும் ராமகோபாலன் அவர்களின் கதையைப்படித்த போது கண்களில் நீர் கோர்த்தது. நான் அந்த கதையை படித்த போது விரைவு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தேன். அந்த கதை என்னுள் பல கேள்விகளை கேட்கத்தூண்டுகிறது, சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஏன் இன்னும் அந்த பழைய சட்ட நடைமுறைகளையே கடைபிடிக்க வேண்டும்?, கோடிக்கணக்கில் நீதி மன்றங்களில் வழக்குகள் தேங்கி நின்றபோதும் ஏன் இன்னும் சரியான சாட்சியங்களை கண்டுபிடிக்கும் நடைமுறைகள் உருவாக்கப்படவில்லை?, ஒரு வேளை அப்படிப்பட்ட நடைமுறைகள் ஏற்கனவே இருக்கிறதெனில் அது எப்படி அனைத்து வழக்குகளிலும் அவை பின்பற்றப்படாமல் போகிறது?

பாலமுருகன்

அன்புள்ள ஜெ

வேஷம் அருமையான சிறுகதை. கதையைக் கண்முன்னால் நிகழ்த்திக்காட்ட புதிய எழுத்தாளரால் முடிந்திருக்கிறது. நுட்பமான வர்ணனைகளும் சரளமான நடையும் உள்ளது. அதோடு நம்முடைய நேரடி அனுபவங்களும் கதைக்குள் வந்து அமர்ந்துவிடுகின்றன. நான் ஊரிலே சாமிகொண்டாடியைப்பார்க்கும்போதெல்லாம் அது அவருடைய ஒரு பீக் ஸ்டேஜ் என்று நினைப்பேன். அது முடிந்து வந்துவிட்டால் அவருக்கு வாழ்க்கையிலே ஒன்றுமே பெரிதல்ல என்றும் தோன்றும். அது வேஷமா இல்லை இங்கே நாம் போட்டுக்கொள்வது வேஷமா என்ற எண்ணம் வரும். நல்ல கதை

சிவராம்

முந்தைய கட்டுரைசிவேந்திரன்
அடுத்த கட்டுரைசிறுகதைகள் இரு விமர்சனக்குறிப்புகள்