கதைகள் புதிய கடிதங்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

இதுவே நான் தாங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்கள் வலைத்தளத்தில் வெளிவரும் புதியவர்களின் கதைகளை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். முதல்கதையாக வெளிவந்த தனசேகரின் ‘உறவு’ சிறுகதை இதுவரை வந்ததில் மிகச்சிறந்த கதையாக எனக்கு பட்டது. இன்னும் சொல்லப்போனால் அது தங்களது சமீபத்திய சிறுகதைகளின் உத்வேகத்தையும், யதார்த்தத்தின் புதிர் தன்மையையும் தாங்கியுள்ளது. இக்கதையில் வரும் முருகண்ணனின் மண உறவில் உள்ள புதிர் தன்மை எந்த அளவுக்கு பேசபட்டதோ அதேயளவுக்கு பேசப்படாமல் போன ஓரு விஷயம் முருகண்ணனுக்கும் காட்டுக்கும் ஆன உறவு.

//முருக‌ண்ண‌னுக்கு அப்படியில்லை. அவருக்கு மேகமலை ஒரு அற்புதம். காட்டையும், பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் பச்சைமலையும், சுருக்கென்ற குளிரையும் ர‌சித்தவாறே வேலை செய்வார். காலையில் க‌த‌வைத் திற‌ந்ததும் மெல்லிய‌ ப‌ர‌வ‌த்துட‌ன் குளிரை உள்வாங்குவார். சின்ன‌தாய் சிரித்த‌ப‌டியே குந்தி அம‌ர்ந்து எதிரே பிர‌ம்மாண்ட‌மாய் நின்றிருக்கும் காட்டை ர‌சித்த‌ப‌டியே சிறுநீர் க‌ழிப்பார். முடிந்தத‌தும் எழுவ‌தில்லை. அப்ப‌டியே மோன‌ நிலையில் சிறிது நேர‌ம்.

“தம்பி‌, ப‌ஸ்ட்டு ட‌ய‌ம் ம‌ச்சினெங்கோட‌ லாரில‌ ம‌ர‌ ஏத்த‌ வ‌ந்தேன்டா, யாத்தேன்னு வாய‌ பொள‌ந்துட்டேன், நாம‌ அதுக்கு முன்னாடி சின்ன‌ம‌னூர‌ தாண்டுன‌து கெடையாது, அதே ப‌ஸ்ட்டு ட்யம் பாத்துக்க‌, ம‌லையுங், குளிரும்ஸ ய‌ப்பேய்” என்று சிலிர்த்துக்கொண்டார் ஒருநாள் என்னிட‌ம்.
பின் அவ‌ர் இங்கு வ‌ந்து டீக்க‌டை போட்டிருக்கிறார்.//

சின்னமனூரை விட்டு வெளியே வந்தேயிராத முருகண்ணன் குளிரையும், தனிமையையும் பொருட்படுத்தாமல் மேகமலையில் ஒரு டீக்கடையை போடவேண்டிய அவசியம் என்ன?கடுமையான மேற்குத்தொடர்ச்சி மலைபிரதேசங்களில் கடை போட்டிருக்கும் சமவெளியை சேர்ந்தவர்களை(பெரும்பாலும் மலையாளிகள்) கண்டு பலசமயம் நான் ஆச்சர்யர்யபட்டதுண்டு. நிச்சயம் அவர்கள் அங்கிருப்பதற்கு வியாபாரப் போட்டியின்மை மட்டும் காரணமாக இருக்கமுடியாது. முருகண்ணனைப் போன்றவர்கள் இயல்பிலேயே லௌகீகமான பிரச்சனைகளை தாண்டி தூய்மையை தேடுபவர்கள்.

முருகண்ணன் எந்த விதத்திலும் ஒரு நீதிமான் அல்ல அவர் பெண்களை பற்றி பெரிய மதிப்பு கொண்டவரும் அல்ல. ஆனால் ஒரு பெண்ணிடம் ஆண் எதிர்பார்க்கும் உச்சபட்ச குணாதிசயமான அக்கறையும் பரிவையும் அதேநேரத்தில் dependencyயும் (காமம் இரண்டாம் பட்சம்தான்) ஒருசேர கண்டவுடன் அவளை மனைவியாக பார்க்க அவருக்கு அழகு, சமூக அந்தஸ்து என எதுவும் குறுக்கே நிற்கவில்லை. அதேபோலத்தான் அவர் மேகமலையிலேயே இருக்க தீர்மானித்ததும். முருகண்ணனை போன்றவர்கள் யானையையும், சமூகத்தையும் எதிர்த்து தூய்மையின் வெளிச்சத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்தி செல்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் பிரிவோ, மரணமோ இருக்கலாம் ஆனால் எமாற்றமோ துயரமோ இராது.
தனசேகர் அவர்கள் இந்த charactarisationஐ consciousஆக உருவாக்கி இருந்தால் அவர் நல்ல எழுத்தாளர் இல்லையெனில் அவர் மிகவும் நல்ல எழுத்தாளர். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

இதே தளத்தில் வெளிவந்த கதைகளான ‘வாயு கோளாறு’ம் ‘பீத்தோவனின் ஆவி’யும் மிகவும் சராசரியான கதைகளாக பட்டது. முதலாமதற்கான inspirationஇன் துவக்க புள்ளியை எளிதாக retrace செய்து செல்ல முடிகிறது. என்னதான் characterization என்றாலும் இது என்னை பொறுத்தவரை ஒரு குறைபாடுதான் அதுவும் ஆரம்பப்புள்ளி ஒரு சின்ன நகைச்சுவையாக மட்டும் இருக்கும்போது. இரண்டாவது கதை ஒரு மிகவும் சுவாரஸ்யமற்ற உரையாடலாக மட்டுமே பட்டது. பெரும்பாலான இசை பற்றிய கதைகள் போல ஒரு pretentiousness இக்கதையில் வெளிப்படுகிறது. கதாபாத்திரங்களின் செய்கைகளிலும் உவமைகளிலும் எழுத்தாளரின் self consciousnessஓ அல்லது inadequacyஓ வெளிப்படுகிறது.

அன்புடன்
R.முகேஷ்

அன்புள்ள ஜெயமோகன்

புதியவர்களின் கதைகளால் அதிகம் பயன் எனக்குதான் என்று நினைக்கிறன் . வேலை செய்யும் இடத்திலேயே அதுவும் வீடு எதிரில் ஒரு எழுத்தாளரை காட்டியதற்கு. வேணுவை அவர் வீட்டில் சந்தித்தேன். ஆறு மாதங்களாக அருகில் இருந்தும் பழகாத ஒருவரை தங்கள் வலைத்தளம் மூலமாக சந்தித்ததில் மகிழ்ச்சி.

அன்புடன்
கிஷோர்

முந்தைய கட்டுரைராம், சோபானம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 9,கன்னிப் படையல்- ராஜகோபாலன்