உடலழகும் இன்றைய நாகரீகமும்

அன்புள்ள ஜெ

தங்களின் நீண்டநாள் வாசகன் நான்,

சமீப காலமாக நம் சமூகத்தில் வேரூன்றி வரும் ஒரு நவீன தீண்டாமையைப் பற்றிய தங்களின் எண்ணத்தைப் பற்றி அறிய ஆவல். நம் சமுத்தில் அழகியல் சார்ந்த தீண்டாமை மெல்ல பரவி வருகிறது. நாம் வழும் வணிக கலாச்சாரத்தில் அழகு என்பது எல்லாவற்றுக்கும் வரையருக்கப்படாத ஒரு தகுதியாகவே மாறிவிட்டது. எனக்கு தெறிந்து எல்லா மட்டத்திலும் அழகியல் விதிகளுக்கு உட்படாதவர்கள் தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்களது நட்பு,அன்பு,காதல்,மரியாதை போன்ற அடிப்படை உணர்வுகள் கூட அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. இன்னும் அழகு இல்லாதர்வகளுக்கு குறைந்த பட்ச மனிதாபிமாணம் கூட எட்டாது போய் விடுவொமோ என்ற் பயம் தான் தோன்றுகிறது. சக மனிதனை ஏழை, அழகில்லாதவன், கீழ்ஜாதிக்காரன், கருப்பன், என்று ஏதாவது ஒரு காரணத்தை கன்டு பிடித்து நிராகரித்து கொன்டே இருப்பதும், இன்னொரு புறம் ஓரூ சமூகம் குறைந்த பட்ச உண்ர்வுகளுக்கு கூட போராடிக்கொன்டே இருப்பதும் என்பதுதான் கூட்டு வழ்க்கையின் தத்துவமா? நான் கூட இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருகிறேன்

நன்றியுடன்
விக்கி

அன்புள்ள விக்கி,

கிரேக்கப் பெருங்கவிஞர் ஸ்டெசிகொரஸின் காவியத்தில் ஒரு காட்சி. டிராய் நகரப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. பல்லாயிரம்பேரின் அழிவுக்குப் பாத்திரமான ஹெலெனைக் கொல்லவேண்டுமென வெல்லப்பட்ட டிராஜன்களும் வென்ற கிரேக்கர்களும் ஒரேசமயம் ஆசைப்படுகிறார்கள். ஒரு பெருங்கும்பல் அவளைச் சூழ்ந்துகொள்கிறது. அவளைக் கல்லால் அடித்துக்கொல்லவேண்டுமென அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

மக்கள் மத்திக்கு ஹெலென் இழுத்துவரப்படுகிறாள். அவள் கணவன் மெலெனியஸ் அவளை கொல்ல தனக்கு ஓர் வாய்ப்பு வழங்கப்படவேண்டுமென ஆசைப்படுகிறான். அவன் வாளை ஓங்குகிறான். ஆனால் ஹெலென் தன் ஆடைகளை நழுவவிடுகிறாள். அவளுடைய நிர்வாண உடலைப்பார்க்கிறான் மெலெனியஸ். இந்தப்பேரழகுள்ள உடல் ஒரு அரிய படைப்பு. இதை அழிக்க மனிதனுக்கு உரிமை இல்லை என வாளைத் தாழ்த்திவிடுகிறான்.

கிரேக்கப்பண்பாட்டின் உச்சமனநிலையைச் சித்தரிக்கும் காட்சி இது. அது உடல்வழிபாட்டுத்தன்மை கொண்டது. மனிதஉடலை சிருஷ்டியின் உச்சமென கிரேக்கர் கருதினர். அதை காவியங்களிலும் சிற்பங்களிலும் கொண்டாடினார்கள். உடலழகு என்பது இயற்கையின் ஒரு சிறந்த வெளிப்பாடு என்ற நோக்கு அவர்களிடமிருந்தது.

தொன்மையான சமூகங்கள் அனைத்திலும் இந்தப் பார்வை இருப்பதைக் காணலாம். உலகம் முழுக்க செவ்வியல் என்பது இயற்கையையும் மனித உடலையும் வர்ணிப்பதாகவே உள்ளது.தமிழில் சங்க இலக்கியங்கள் இயற்கையையும் உடலழகையும்தான் கொண்டாடுகின்றன. சம்ஸ்கிருத ஆதிகாவியமான வால்மீகிராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இதைக் காணமுடிகிறது.

உலகம் முழுக்க இந்தப் பார்வையின் பரிணாமம் ஒரேபோலிருப்பதாகப் படுகிறது. கிரேக்கமரபின் செவ்வியல் நோக்கை அடுத்துவந்த செமிட்டிக் மதங்கள் மறுத்தன. அவை உடல்ம்றுப்புக் கொள்கை கொண்டிருந்தன. உடல் அழியக்கூடியது, இச்சைகளின் பெட்டகம் அது, ஆகவே மனிதனை பாவத்தில் ஆழ்த்தக்கூடியது, எனவே கட்டுப்படுத்தப்படவேண்டியது என்றபார்வையை அவை முன்வைத்தன.

நெடுங்காலம் முன்னரே இந்தியச்சூழலிலும் செவ்வியல்காலகட்டம் தாண்டியதும் வந்த சமண, பௌத்த மதங்கள் யாக்கைநிலையாமையை முன்வைத்தன. தமிழில் சங்ககாலம் கழிந்து சங்கம் மருவிய காலம் வந்ததுமே உடல்நிராகரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது. மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் அதைக் காணலாம்

உலகநாகரீகம் இநத இருபோக்குகள் நடுவே உள்ள முரணியக்கத்தின் விளைவாக உருவாகிவந்திருக்கிறது என்று சொல்லமுடியும். ஒவ்வொருகாலகட்டத்திலும் ஒருபோக்கு மேலாதிக்கம் பெற்றிருக்கிறது. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் பதினாறாம் நூற்றாண்டுக்கு வரை கிறித்தவ செமிட்டிக் மரபின் உடல்மறுப்பே மையப்போக்காக விளங்கியது.ஐரோப்பியமறுமலர்ச்சி உருவாக ஆரம்பித்ததும் அதற்கு மாறான கிரேக்கமரபு முன்னெடுக்கபப்ட்டது. உடல் பெரும் முக்கியத்துவத்துடன் திரும்ப வந்தது. இலக்கியம் கலை அனைத்திலும் உடல் விரிவாக சித்தரிக்கபப்ட்டது.

தமிழ்மரபில்கூட சங்ககாலம் தாண்டியதும் பௌத்த சமண மதங்களால் உடல்நிராகரிப்பு மனநிலை உருவாகியது. அதன்பின் பக்திகாலகட்டம் மீண்டும் தீவிரமாக உடலை கொண்டுவந்து நிறுத்தியது. இம்முறை சங்ககாலம்போல நேரடியாக அல்லாமல் அது பக்திப்பெருக்கின் ஒரு பகுதியாக மறைமுகமாகவே முன்னிறுத்தப்பட்டது. ஆனால் சைவ வைணவ மதங்கள் கடுமையான ஆசாரஙக்ளுடன் உறுதியான பெருமதங்களாக வடிவெடுத்தபோது மீண்டும் உடல்நிராகரிப்பை காணமுடிகிறது. திருமந்திரம்போன்ற நூல்களை உதாரணமாகச் சொல்லலாம். பதினேழாம்நூற்றாண்டின் சிற்றிலக்கியங்கள் அதை மீறி மீண்டும் உடலை முன்வைத்தன.

இந்தப்போக்கில் இன்றைய காலகட்டம் உடல்வழிபாட்டு மனநிலை ஓங்கியதாக உள்ளது எனலாம். அதற்கான காரணம் ஐரோப்பிய மறுமலர்ச்சி இவ்வுலகை, அதன் இன்பங்களை முதன்மையாக கருதியது என்பதுதான். ஆகவே உடல் முக்கியமானதாக ஆகியது. உடலின் வளர்ச்சிவடிவங்களான இயந்திரங்கள் பண்பாட்டின் முகங்களாயின. நுகர்வு என்பது பண்பாட்டின் மையமனநிலையாக ஆகியது.

இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் உருவான நுகர்வுமனநிலை அதன் உச்சத்தை அடைந்த வரலாற்றுத்தருணத்தில் உள்ளது. ஐரோப்பாவிலிருந்து அந்த மனநிலை உலகமெங்கும் பரவிவிட்டிருக்கிறது. நேர்மாறான மனநிலை ஓங்கியிருந்த கீழைச்சமூகங்கள் கூட அந்த மனநிலையால் சூழப்பட்டுவிட்டன. அந்தமனநிலை இன்றைய உலகின் பொதுமனப்போக்காகவே மாறிவிட்டிருக்கிறது.

நுகர்வுமனநிலை என்பது நவீன முதலாளித்துவப்பொருளியலின் அடிப்படையாகும். சமூகம் ஒட்டுமொத்தமாக நுகர்வுவெறியுடன் இருக்கையிலேயே பெருமளவுக்கான உற்பத்தி உருவாக முடியும். அதுவே பெரும் லாபத்தை உருவாக்கும். ஆகவே முதலாளித்துவம் அதன் எல்லா ஊடகங்கள் வழியாகவும் நுகர்வை பிரச்சாரம் செய்கிறது. அதுவே உலகளாவிய நுகர்வுப்பண்பாட்டை உருவாக்கும் சக்தி.

நுகர்வுமனநிலையை நிறுவ முதலாளித்துவம் சில தத்துவஅடிப்படைகளை நிறுவவேண்டியிருக்கிறது. அவற்றை நான்கு சொற்களிலாகச் சொல்லலாம்.

1.உலகியல் நோக்கு

2.உடல்வழிபாடு.

3.நிரூபணவாதம்

4.மனிதமையவாதம்

இந்த உலகமும் இதன் இன்பங்களுமே முக்கியமானவை என்று நிறுவுவது நுகர்வுப்பண்பாட்டின் அடிப்படைத்தேவையாகும். மதங்கள் இந்த உலகத்து வாழ்க்கை இதனினும் மேலான இன்னொரு வாழ்க்கைக்கான ஒரு செயல்பாடுதான் என்று காட்டமுயன்று வந்துள்ளன. இந்தவாழ்க்கை இதைக் கட்டுப்படுத்தும் இதற்குஅப்பால் உள்ள நெறிகளால் ஆனது என்பதை நிறுவுவதற்காகவே மதங்கள் இதைச் செய்கின்றன. இந்தவாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, இதில் நாம் அடைவனவே முதன்மையானவை, நெறிகள் என்பவை இந்தவாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்வதற்கானவை மட்டுமே என்பதையே நுகர்வியம் முதலில் நிறுவியாகவேண்டியிருக்கிறது

இந்த உலகை நாம் அறிவதும் நுகர்வதும் உடல்வழியாகவே. ஆகவே உடலே மனிதனின் அடிப்படை. நுகர்வின் அடிப்படை அலகு என்பது உடலே.நுகர்வுப்பண்பாடு உருவாக ஆரம்பித்த காலகட்டத்திலேயே தல்ஸ்தோய் அவரது போரும் அமைதியும் நாவலில் இதை அவதானிக்கிறார். உலக இன்பங்களை நுகரும் பொருட்டு உடலை பேணி போற்றுவதற்காகவே மனிதவளங்களிலும் மனித உழைப்பிலும் பெரும்பகுதி செலவிடப்படுவதைப்பற்றி கதாநாயகனான பியர் விசனப்படுகிறான்.

நிரூபணவாத அறிவியல் இல்லாமல் நுகர்வுப்பண்பாடு செயல்படமுடியாது. ஏனென்றால் இயற்கையை ஓர் இயந்திரமாக உருவகித்து நம் நுகர்வுக்காக அதை பயன்படுத்திக்கொள்ளும்போதே நுகர்வுப்பண்பாடு உருவாகிறது. இயற்கை ஓர் இயந்திரம் அதை இயந்திரவியல் விதிகளின்படி கையாளமுடியும் என்பதே நிரூபணவாதத்தின் அடிப்படை நம்பிக்கை. நவீனத் தொழில்நுட்பம் அதன்மீது கட்டி எழுப்பப்பட்டதுதான். தொழில்நுட்பம் இல்லாமல் நுகர்வுப்பண்பாடு இல்லை. தொழில்நுட்பத்தை நுகர்வுக்காக மிதமிஞ்சி கையாள்வதனால் உருவாகும் பிரச்சினைகளுக்குக் கூட தொழில்நுட்பத்தையே தீர்வாக முன்வைக்கும் பார்வை முதலாளித்துவத்துக்கு உண்டு

இந்த உலகம் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது, மனிதனே இதன் மையம், மனிதனே இயற்கையின் உச்சம், இயற்கையின் அதிபன் அவன், இயற்கையை மனிதன் நுகர்வது இயல்பானதுதான் — என்ற மனநிலை இல்லாமல் நுகர்வுவாதம் நீடிக்கமுடியாது. மனிதன் -இயற்கை என்ற சொல்லாடலே இந்த நோக்குடன் உருவாக்கப்படுவதுதான்.

இவ்வுலகை முக்கியப்படுத்தி அவற்றில் மனிதனை முதன்மைப்படுத்தும் சிந்தனைகளும், உடல்வழிபாடு மற்றும் இயற்கையை நுகர்வது ஆகியவற்றில் மனிதனுக்கிருக்கும் மரபார்ந்த குற்றவுணர்ச்சியை களையும் சிந்தனைகளும் முதலாளித்துவத்தால் பிரம்மாண்டமாக பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் ஐரோப்பாவாலும் அமெரிக்காவாலும் உலக இலக்கியத்தில் பெரும் முக்கியத்துவத்துடன் பிரச்சாரம்செய்யப்பட்ட திரைப்படங்கள், இலக்கியங்கள் பெரும்பாலும் இந்த நோக்கத்துக்கு இசைந்தவையாக இருப்பதைக் காணலாம். காமம், நுகர்வு இரண்டையும் கொண்டாடக்கூடியவை அவை. அவற்றுக்கு எதிரான தயக்கம் குற்றவுணர்ச்சி ஆகியவற்றை பழைமையான மனநிலைகளாக சித்தரிக்கக்கூடியவை. வணிகக் கலைகளும் இலக்கியங்களும் மட்டுமல்ல தீவிர இலக்கியங்களும்கூட அதே நோக்குடனேயே உலகளாவ முன்னிறுத்தப்பட்டன.

மேலைப்பண்பாடு மீது ஆழ்ந்த ஐயம் கொண்டிருந்த காந்தி முதல் ஃபுகோகா வரையிலான கீழைஞானிகள் இந்த நான்கு அடிப்படைகளையுமே நிராகரிப்பதைக் காணலாம். அவர்கள் மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாக, இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டவனாக உருவகிக்கிறார்கள். நிரூபணவாத அறிவியலின் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். உடல்வழிபாடும், நுகர்வும் அழிவைநோக்கிக் கொண்டுசெல்லும் என எச்சரிக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் தரப்புகள் இன்றைய உலகில் மிகமெல்ல ஒலிக்கும் மாற்றுக்குரல்கள் மட்டுமே. மையமாக ஒலிப்பது நுகர்வை அடிப்படை மனநிலையாகக் கொண்ட இன்றைய நவமுதலாளித்துவ வாழ்க்கைநோக்குதான். அது உடலைக் கொண்டாடும். உடலை மையமாக்கியே உலகை அணுகும். உடல்வலிமையும் உடலழகும் மனிதவாழ்க்கையின் அடிப்படைவிதிகளாக ஆகும்.

இன்றைய நுகர்வுப்பண்பாட்டில் மிக அதிகமான பொருட்கள் உடலைப் பேணுவதை, அழகுபடுத்துவதைச் சார்ந்தவை. உலக உற்பத்திசக்திகளில் பெரும்பகுதி உடலை அழகுபடுத்தி நவீனப்படுத்திக் காட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது.

அழகு என்பதை இந்த நுகர்வுப்பொருட்களை உற்பத்திசெய்பவர்கள்தான் வரையரைசெய்கிறார்கள். சென்ற தலைமுறைவரை நம்முடைய அழகுணர்ச்சி சற்றே கொழுகொழுவென்றிருக்கும் பெண்களை அழகிகளாக எண்ணச்செய்தது. இன்று மெலிந்து எலும்புதெரியும் பெண்களே அழகிகள் என அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள்.

நாம் பெண்களுக்கு உயரத்தை பெரிதாக எண்ணியவர்கள் அல்ல. ஆனால் இன்று உயரமே அழகு என நினைக்கிறோம். நமக்கு சங்ககாலம் முதல் மாநிறமே அழகு என்ற நம்பிக்கை இருந்துவந்தது. இன்று வெண்ணிறம் அழகு என்று நம்புகிறோம். இந்த அழகை நோக்கி நம்மைக் கொண்டுசெல்ல நம் வருமானத்தில் கணிசமான பகுதியைச் செலவிடுகிறோம்.அழகிப்போட்டிகள், விளம்பரங்கள், திரைப்படங்கள் மூலம் அதை அவர்கள் நிறுவுவிகிறார்கள்.

அழகு குறித்த வரையறையில் ஆதிக்கமும் உள்ளடங்கியிருக்கிறது. சென்ற பத்தாண்டுகள் முன்புவரை அழகு என்பது ஐரோப்பியத்தன்மை என்பதே நம் எண்ணமாக இருந்தது. ஐரோப்பிய உடைகள், ஐரோப்பிய சிகையலங்காரம். இன்று மெல்லமெல்ல சீனா அந்த இடத்தை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது. நம் இளைஞர்களின் ’ஸ்பைகஸ்’ சிகையலங்காரமும் பெண்களின் ’ஸ்ட்ரெயிட்னிங்’ செய்யப்பட்ட கூந்தலும் சீன மஞ்சளினத்தின் இயல்பான சிகைவடிவங்கள்தான். சென்றகாலத்தில் நாம் ஐரோப்பியர்களைப்போல முடியை சூடாக்கிச் சுருட்டிவிட்டோம். இன்று சூடாக்கி நேராக்குகிறோம். ஐரோப்பாவே சீனாவை நகல்செய்ய ஆரம்பித்துவிட்டது

ஆகவே வேறுவழி இல்லை. உங்களுக்கு நவீன முதலாளித்துவம் உருவாக்கியளிக்கும் நுகர்வுப்பண்பாடு தேவை என்றால் அது உருவாக்கும் அழகு பற்றிய வரையறைகளும் உடல்மைய நோக்கும் எல்லாம் சேர்த்துத்தான் கிடைக்கும். உங்கள் உடலை அழகாக்க நீங்கள் உழைப்பின் ஒருபகுதியை தொடர்ந்து செலவிட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைஎதிர்வினைகளின் வழியே
அடுத்த கட்டுரைமனிதன்