தன்னைத் தக்கவைத்துக்கொள்ளல்

அன்புள்ள ஜெ,

நலமா? வாசகர் கேள்வி ஒன்றுக்கு பதிலாக, அசோகமித்ரனையும், பஷீரையும் (அவர்களின் எழுத்துக்களை) வழிபாட்டு உணர்வுடன் அணுகுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பீர்கள். அதனால் நீங்கள் பெறுவதற்கு வேண்டுமானால் ஏதும் இருக்குமேயன்றி இழப்பது ஏதுமில்லை என்று. நான் உங்களை அணுகுவதும் அவ்வாறே இருந்து வருகிறது. நீங்களல்லாமல் ஜெயகாந்தன் அவ்வாறு இருந்திருக்கிறார் எனக்கு. இந்த உணர்வு சிறிதேனும் குழப்பமடைகிறது என்றால் மனம் சமநிலை இழந்தது போல் பதட்டம் கொண்டு தவித்துப் போய் விடுகிறது என்பதே உண்மை. இது வருந்தி வரவழைத்த உணர்வில்லை. இயல்பாக வாசிப்பின் ஊடே உருவாகி வந்தது. உங்களை வாசிக்க வாசிக்க, உங்களில் வாசித்துத் தீராத பக்கங்களே பெருகிக்கொண்டிருக்கின்றன.

சமீபமாக, எழுத்தாளர்கள், அறிஞர்கள் தமிழ்நாட்டில் பெரும் மரியாதையைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதை வாசித்த போது மனதில் கசப்போடு ஒன்றை நினைவு கூர்ந்தேன். அது, வாசகர்களுக்கும் கிட்டத்தட்ட அதே நிலை என்பதே. சினிமா, கிரிக்கெட் பைத்தியங்களுக்கு கிடைக்கும் ‘பார்வை’ தனி. வாசகர்களுக்குக் கிடைக்கும் ‘பார்வையே’ தனி. ‘பாவம். பொழப்பில்லாமல் (பொழைக்கத்தெரியாமல்!?) இதையெல்லாம் படிச்சுகிட்டுக் கெடக்குதுகள்!’ எனும் பார்வை. வாசிக்கும் பழக்கம் பற்றியோ, நான் வாசகன் என்றோ சந்திப்பவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதே இல்லை. அதில் இன்றும் தயக்கமே. ஒரு உதாரணம் நண்பர் பன்னீர். நார்வேயிலிருந்து உங்களுக்கு எழுதக்கூடிய வாசகர். அவரும் நானும் முன்பு ஒரே அலுவலகம். இருவரும் அறிமுகமாகி சில மாதங்களுக்குப் பின் எதார்த்தமாக அவர் என்னுடைய கணினித் திரையில் உங்கள் வலைத்தளத்தைப் பார்த்து ‘நீங்க ஜெயமோகன் வாசிப்பீங்களா?’ என்று கேட்க, அப்போதுதான் அவரும் உங்கள் வாசகர் என்பது தெரிய வந்தது.

ஆனால், இப்போது இலக்கியம் பேச விவாதிக்க, அழகான ஒரு சிறு நண்பர் கூட்டம் உண்டு, நண்பர் கணேஷ் பாபு, (சிங்கப்பூரிலிருந்து உங்களுக்குக் கடிதங்கள் எழுதக் கூடியவர், கல்லூரி நாள் தொட்டு நண்பர்கள்), பன்னீர் உட்பட…

நன்றி,
வள்ளியப்பன்

அன்புள்ள வள்ளியப்பன்,

சென்ற சிலநாட்களுக்கு முன்னால் ஒரு மலையாள இதழின் பேட்டியில் என்னிடம் கேட்கப்பட்டது, ’இன்றைய சூழலில் ஒரு தனிமனிதன் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்ன?’

நான் பதில் சொன்னேன் ‘கரையாமல் உருவத்தைத் தக்கவைத்துக்கொள்வது’

இந்தச்சிக்கல் வேறெந்த காலகட்டத்திலும் இந்த அளவுக்கு இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பழைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தனிமனித ஆளுமை என்ற ஒன்று சாதாரணமாக அடையாளம் காணப்பட்டதில்லை. தன்னையறியாமல் ஒரு கலைஞனுக்கோ கவிஞனுக்கோ அது உருவாகி வந்து வெளிப்பட்டிருக்கலாமே ஒழிய அதற்கான முயற்சிகள் இருந்திருக்குமோ என்பது ஐயமாகவே உள்ளது.

அன்று ஒருவர் அவரது குலம்,சாதி, மதம், சமூகத்தால் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டார். கம்பன் போன்ற பெருங்கவிஞர்கள்கூட. அந்த சுயம் அவருக்கு அவர் வாழ்ந்த சூழல் அளிப்பது. அவர் அதுதான். அதற்குமேல் ஒரு தனித்தன்மை அவரே அடைவது. இக்காரணத்தால்தான் சங்கப்பாடல்கள் எல்லாம் அமைப்பில், வெளிப்பாட்டில் ஒன்றுபோலிருக்கின்றன.

ஆளுமையின் தனித்தன்மை என்பது நவீனகாலகட்டம் உருவாக்கிய கருத்து.நவீனத்துவ காலகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. தமிழ்நவீனத்துவத்தின் உச்சமாகிய ஜி.நாகராஜன் ,சுந்தர ராமசாமி இருவரையும் தனித்தன்மையின் சுவிசேஷகர் என்றே சொல்லமுடியும்.

ஆனால் இந்த சமகாலகட்டத்தில் மீண்டும் நாம் தனித்தன்மையை இழக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். மிதமிஞ்சிய ஊடகவலை மூலம் நாம் உலகளாவ இணைக்கப்பட்டிருக்கிறோம். உலகம் ஒரே மூளை போல சிந்திக்க வைக்கப்பட்டிருக்கிறது.

சென்ற சில மாதங்களில் நான் விட்டு விட்டு சிலவாரங்கள் கேரளத்தில் இருந்தேன்.அப்போது சிலசமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். முதல்தடவை சென்றபோது அமைச்சர் கணேஷ்குமார் என்பவரின் கள்ள உறவைப்பற்றி மட்டுமே ஊடகங்கள் பேசின. மொத்த மலையாளிகளும் அதைப்பற்றி மட்டுமே பேசினர். அடுத்தமுறை அச்சுதானந்தன் மீதான நடவடிக்கை பற்றி அனைத்து ஊடகங்களும் கொப்பளித்துக்கொண்டிருந்தன.

இங்கும் அப்படித்தான். ஒரு மாத காலம் பாலசந்திரனின் மரணம் தவிரவேறேதுமில்லை.தொலைக்காட்சி, பத்திரிகைகள், சிற்றிதழ்கள் , இணையம் முழுக்க அதைப்பற்றித்தான் பேச்சே.அதை அதன்பின் பாலசந்திரன் எவரென்றே யாருக்கும் தெரியாது.

இணையத்திலும் இதைக்காணலாம்.சமூகவலைப்பின்னல்கள் ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து ஒரே சிந்தனைப்பின்னலில் இணித்துவிடுகின்றன. காலையில் எழுந்ததும் அத்தனைபேரும் ஒன்றையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இதன் விளைவாகப் பெரும் இழப்புகள் உருவாகின்றன. ஒரு மனிதன் தனக்குப்பிடித்த ஒன்றில் மூழ்கி அதைத் தாண்டிச்செல்வதன் வழியாகவே தன் ஆளுமையின் முழுமையை அடைகிறான். உதாரணமாக நான் 1986 முழுக்க ருஷ்ய இலக்கியங்களை மட்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த வாசிப்பு என் ஆளுமையை வடிவமைத்தது.நான் வாசிப்பது இன்றும் அப்படித்தான்.

இந்தவகையான தனிப்பட்ட அறிவுத்தேடல்களை இந்தப் பொது விவாத அலை அழித்துவிடுகிறது. உப்புப்பொம்மை கடலில் இறங்குவதுபோல தனிப்பட்ட ஆளுமைகள் இந்த விரிவில் கரைந்து மறைந்துவிடுகின்றன.

இந்த விரிவு ஒரு தனிமனிதரை தன் சராசரித்தளம் நோக்கிக் கொண்டு வருகிறது. கீழிருப்பவரை மேலே கொண்டு வருகிறது. இணையவெளிக்கு அறிமுகமாகக்கூடியவர் உடனடியாகப் பலவற்றை அறிந்துகொள்கிறார். பல புதிய திறப்புகளை அடைகிறார். ஆனால் அது ஒவ்வொருவரையும் சராசரியில் கட்டிப்போடவும் செய்கிறது. இணையவெளியிலே இருப்பவர் அந்தச் சராசரியில் தேங்கி விடுகிறார்.

இந்தச்சூழலில் ஒருவரின் முழுப்போராட்டமும் தன் தனியடையாளத்தைத் தக்கவைக்கவும் தன்னை முன்னெடுத்துக்கொள்ளவும் தேவைப்படும் நிலை உள்ளது. அதற்கான வழிகளை அவரே தேடிக்கண்டடையவேண்டும். இல்லையேல் மெல்லமெல்ல நாளும் மனமும் வீணாகி அழிந்துவிட் நேரும்

நான் உணரும் சில வழிகள் உண்டு

1. பொது ஊடகங்களை முழுமையாகக் கவனிக்கவேண்டியதில்லை. இன்றைய ஊடக வீக்கச் சூழலில் நீங்கள் அறியவேண்டியது தேடி வந்து சேரும். நான் செய்தித்தாள்களை ஐந்து நிமிடத்துக்குமேல் வாசிப்பதில்லை. தொலைக்காட்சி இணைப்பே என் வீட்டில் இல்லை. இணையத்தில் செய்திகளை வாசிப்பதில்லை.

2. ஒருபோதும் பொதுவிவாதங்களில் உக்கிரமாக தொடர்ந்து ஈடுபடவேண்டியதில்லை. அரசியல் இலக்கியம் எதிலும் நிகழ்வனவற்றை ஓர் எல்லைக்கு மேல் கவனிக்கவேண்டியதில்லை. சொல்லப்போனால் அவை முடிந்தபின் மொத்தமாக என்ன நிகழ்ந்தது என்று கவனிப்பதே நல்லது. நான் பொதுவிவாதங்கள் முடிந்தபின்னர் ஏதேனும் ஒரு கட்டுரை மூலம் எல்லாக் கோணங்களையும் அறிந்துகொள்வதுடன் சரி. பெரும்பாலும் எதிர்வினையாற்றுவதில்லை. எதிர்வினையாற்றினாலும் உடனே எதிர்வினையாற்றுவதில்லை

3. ஒருபோதும் சராசரி வாசிப்பும் சராசரி ரசனையும் உடையவர்களிடம் அதிகமான உரையாடலை வைத்துக்கொள்வதில்லை. அவர்கள் என் நேரத்தையும் மனதையும் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஒதுங்கி இருப்பேன். நான் மனிதர்களை கவனிப்பவன் மட்டுமே.

4. எப்போதும் இரு தளங்களில் வாசிப்பைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் நிகழ்த்துவேன். தமிழ்வரலாறு சார்ந்தும் அமெரிக்க பிராக்மாட்டிசிசம் சார்ந்தும் கடந்த நாலைந்து மாதங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.இந்த வாசிப்பைத்தான் என் மையச்சிந்தனை ஓட்டமாக முன்னெடுப்பேன்.

5. எப்போதும் நான் முக்கியமானவையாக நினைக்கும் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பில் இருப்பேன்.

அந்த வழியையே அனைவருக்கும் சொல்வேன்

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரரம் 1
2010 ஜூலை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45
அடுத்த கட்டுரைஹூஸ்டன், ஆஸ்டின்