பாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்

அன்புள்ள ஜெமோ

நீங்கள் இப்போது இணைய உலகில் உங்களைப்பற்றி நடக்கும் கூச்சல்களை கவனிப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் ஆணவத்துடன் ஒரு சாதாரண மனிதரை புண்படுத்திவிட்டீர்கள் என்றும், உங்களை மற்றவர்களை விட மேலானவர் என நினைக்கிறீர்கள் என்றும் நீங்கள் மக்களோடு இல்லை என்றும், எழுத்தாளனும் வேறுவேலை செய்பவர்களும் ஒன்றுகான் என்றும் சொல்கிறார்கள். உங்கள் எதிர்வினை என்ன?

சரவணன்

அன்புள்ள சரவணன்

1. நான் இணையத்தில் எனக்கு தேவையானவற்றை அன்றி வேறெதையும் வாசிப்பதில்லை. ஃபேச்புக் போன்றவற்றில் எனக்கு உள்ளே போகவே முடியாது. இப்போது எர்ணாகுளத்தில் ஒரு சினிமா விஷயமாக தங்கியிருக்கிறேன். ஒரேசமயம் இவ்வருடம் ஆறு சினிமாக்களுக்கு எழுதுகிறேன். இணையக்குப்பைகளை வாசித்தால் அதை மட்டும்தான் செய்ய முடியும். இங்கே மரைன் டிரைவுக்கு மேலே விரிந்த கடலை நோக்கி திறக்கும் என்னுடைய அப்பார்ட்மென்ட் ஜன்னலில் பருவமழை திரண்டு நெருங்கிவரும் அற்புதத்தைக் கண்டு கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை மகிழ்ச்சிகளால் மட்டும் நிறைந்தது. வெற்று வேட்டு அரை வாழ்க்கை வாழ்பவர்கள் புளிச்சேப்பம் விடும் இணையம் எனக்கான உலகம் அல்ல.

2. நான் எனக்கான மரியாதை அல்லது பணிவைப்பற்றி பேசவில்லை. நம் சமூகத்தில் இன்றிருக்கும் மதிக்கத்தக்க சிந்தனையாளர்கள் மிகச்சிலரே. அவர்களிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் பற்றியே பேசுகிறேன். அந்த கோபம் அந்த ஆளுமைகள் மீது எனக்கிருக்கும் பெருமதிப்பின் விளைவு. நம்முடைய அற்பத்தனம் மீதான எரிச்சலும்கூட. சிறுமை கொண்டு கொதிக்கும் மனம் என்று எழுத்தாளனை விட்டுச் செல்கிறதோ அதன் பின் அவன் எழுத்தாளன் அல்ல. ‘நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு’ என்று எழுதிய பாரதி முதல் புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் வரை அதுதான் எழுத்தாளர்களின் அடிப்படை இயல்பு

3. என்னுடைய அகந்தையை நான் எப்போதும் பேணி வந்திருக்கிறேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன்’ என்று சொன்ன ஜெயகாந்தன் எனக்கு அதில் முன்னோடி அந்த அகங்காரமே எழுத்தாளனின் சொத்து, ஆயுதம். ஆனால் அதை ஒருபோதும் சுமந்தலைவதில்லை. அற்பத்தனங்களை புறக்கணிப்பால் எதிர்கொள்வதே என் வழக்கம். இணையத்தை கொஞ்சம் வாசிக்கும் வழக்கமுள்ளவர்கள் அதை அறியலாம். ஒரு தருணத்திலும் எனக்கெதிரான சிறுமைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை.

4. இந்த ‘மக்கள்’ விவகாரம் பற்றிப் பேசக்கூடியவர்கள் எவர் என்ன செய்கிறார்கள் என நான் அறிவேன். ஒரு பேருந்தில் பயணம் செய்ய முடியாதவர்கள், கால் நீள ஜிப்பா தைத்து வேஷம் பொட்டுக்கொண்டு தன்னை மக்களிடமிருந்து விலக்கிக் காட்டிக்கொள்ளும் ஆசாமிகள்தான் எழுத்தில் மக்கள் கோஷம் போடுகிறார்கள். நான் இன்று வரை நாகர்கோயிலில் நடந்து செல்லும் நடுத்தர வர்க்க மனிதன் தான். என்னைச் சுற்றியுள்ள எல்லாருக்கும் சாதாரண அண்டைவீட்டான் மட்டுமே. இருபதாண்டுக்காலம் ஒரு நிறுவனத்தில் அன்றாடம் நூறுபேரை சந்திக்கும் சேவை வேலையில் இருந்தவன் நான். மக்களை எப்படி சந்திக்கவேண்டுமென எவரும் எனக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. நான் மக்களில் ஒருவன், அன்றும் இன்றும்.

இங்கும் அதே மொண்ணைத்தனம். தமிழக மக்களின் வாழ்க்கையைப்பற்றி , அதன் அடித்தளப் பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து அணுகி பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய எழுத்தாளனுக்கு உதிரி கட்டுரைகளுக்கு அப்பால் வாசிக்கும் பழக்கமில்லாத அரைவேக்காடுகள் அறிவுரை சொல்கிறார்கள், எப்படி மக்களிடம் கலந்திருக்க வேண்டும் என்று. எழுத்தாளன் என்றால் எந்த அசடும் கிளம்பி வந்து அறிவுரை சொல்லி வழிகாட்டலாமென்ற எண்ணம். பாண்டிச்சேரி அசடுக்கும், இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

5. எழுத்தாளனும், கொத்தனாரும் ஒன்று என்று நல்ல கொத்தனார் சொல்ல மாட்டார். கொத்து வேலையில் கலைஞன் உண்டு என அவருக்கு தெரிந்திருக்கும். நம்மூர் அரைவேக்காடுகள் சொல்வார்கள். அவர்களுக்கு கலையும் தெரியாது, திறனும் தெரியாது. எந்தத் துறையிலும்.

எதிர்வினைகள் எப்படி இருக்கும் என எனக்கு நன்றாகவே தெரியும் . சரித்திர ஆசிரியனுக்கும் எழுத்தாளனுக்கும் வேறுபாடுகூட தெரியாத கும்பல். நான் எழுதியிருப்பதே அந்த ஆசாமிகளைப்பற்றித்தானே? நான் எழுதியிருக்க்கும் பிரச்சினையை இவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு சமூகம் அதன் மிகச்சிறந்த அறிஞர்களை எப்படி நடத்துகிறது என்று நான் சொல்லும்போது ஏன் அவர்களுக்கு என்ன கொம்பா என்று கேட்பவர்களின் மொண்ணைத்தனத்தைப் பற்றித்கானே எழுதியிருக்கிறேன். அதிலுள்ள அத்தனை கோபமும், வசைகளும் அவர்களுக்கு நேராகத்தானே?

இவர்கள் தங்கள் எழுத்துக்கள் மூலம் நான் எழுதியது உண்மை, இது அறிவுச்சொரணை கெட்ட சமூகம் என மீண்டும் மீண்டும் உறுதிசெய்கிறார்கள். அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரஜாபதியும் கிறித்தவர்களும்
அடுத்த கட்டுரைஎத்தனை கைகள்! -சாம்ராஜ்