கன்னிநிலம் – நாவல் : 16

மலைக்கு அப்பால் காடு வழிகளற்று பச்சை இலைச்செறிவாக தரையின் இருளாக காற்றின் ஓங்கார ஒலியாக நிறைந்திருந்தது. சூரியக்கதிர்கள் உள்ளே வராத காடு. வேய் மூங்கில் புதர்கள் அடந்த சேற்று நிலம்.  இந்த நிலத்தில் மூங்கில்களின் வகைமாதிரிகள் முடிவற்றவை. இளம்பச்சை நிறமானவை. கரும்பு போன்றவை. துல்லியமான ஒளி ஊடுருவும் குழல்கள்…ஒடித்து அபப்டியே தின்னக்கூடிய இளந்தளிர் மூங்கில்கள். மணிப்புரி மொழியில் ஒவ்வொன்ருக்கும் சொற்கள் உண்டு

அவள் வளைந்து வளைந்து புதர்களைத் தாண்டிச்சென்றாள். நீண்டநேரம் எதுவும் பேசவில்லை. வெறி கொண்டது போன்ற வேகம். பின் ஒருமரத்தடியில் மூச்சிரைக்க நின்றாள். நான் அவளருகே சென்று மூச்சுவாங்கியபடி பேசாமல் நின்றேன். இருவரும் எங்கள் முன் விரிந்த காட்டை நோக்கியபடி நின்றோம்.

 அவளை நெருங்கி அவளுடைய வெளுத்த முகத்தைப் பார்த்தேன். கழுத்தின் பச்சை நரம்பு ஒரு மெல்லிய முடிச்சுடன் இறுகி நின்றது. சிவந்த இதழ்கள் மெல்ல திறந்து வெண்பற்கள் தெரிந்தன. கண்களில் நீலக்கற்களின் மினுமினுப்பு. அவளுடைய தோள்கள் மூச்சில் எழுந்தமைந்துகொண்டிருந்தன

அவள் இடுப்பில் கையை வைத்து மெல்ல வளைத்தேன். இடது கையால் அவள் அவள் விரல்களை பற்றிக்கொண்டேன். அவள் விரல்கள் குளிர்ந்து உயிரற்றவை போல் இருந்தன. அவள் மூச்சு பறவையின் அடிவயிறுபோல கழுத்தில் அதிரவதைக் கண்டேன். மேலுதட்டில் மெல்லிய வியர்வையின் பனிப்பைக் கண்டேன்.  கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டேன். குனிந்து அவள் கண்களைப்பார்த்தேன்.  அவள் விழிகள் சஞ்சலம் கொண்டு தழைந்தன. சட்டென்று நீர்தளும்ப அவள் தலைகுனிந்தாள்.

நான் அவளை ஆவேசத்துடன் அள்ளி என் உடலுடன் இறுக்கிக்கொண்டு அவள் உதடுகளில் முத்தமிட்டேன். முத்தத்தை கண்டடைந்த மூதாதையின் தவிப்பை  மீண்டும் அடைந்தேன். ஒருவரை ஒருவர் உண்டு ஒன்றாகிவிடமுடியாத உடல்களின் பெரும் தவிப்பை துளிதுளியாக ஒத்திப்போடுவதுதானோ முத்தம்!

நேர விழிப்பு கொண்டுமீண்டும்  கிளம்பிய போது இருவரும் சற்று இறுக்கம் தளர்ந்திருந்தோம். நான் அவளிடம் ”உன்னை என்ன செய்தார்கள்” என்றேன்

”ப்ளிஸ்…இனி அதெல்லாம் வேண்டாமே” என்றாள், தலைகுனிந்து பக்கவாட்டில் பார்வையைதிருப்பியபடி.

நான் பெருமூச்சுவிட்டேன். அவளிடம் பேச ஒன்றுமில்லாதது போன்ற தவிப்பு ஒருகணம் ஏற்பட்டது. பின்பு மீண்டும் என் உடல் வெறுமையை உணர்ந்தது. தனித்து அதனால் இருக்கமுடியாதது போல.  அவளை இழுத்து என்னுடன் இணைத்துக்கொண்டேன். 

அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டாள்.  என் உடலின் தவிப்புகளை அவள் உடல் பெற்றுக்கொண்டது. என் கைகள் அவளுடைய சிறிய பின்பக்கத்தை மெலிந்த தோள்களை தழுவி இறுக்கி நெகிழ்ந்து விரிந்து சென்றன.  என் உடலில் நான் அவள் உடலுடன் இணையும் தவிப்பை மட்டுமே உனர்ந்தேன். அவள் இதழ்களை என் இதழ்களால் கவ்விக்கொண்டேன். அவள் மூச்சை என் மூச்சினால் உள்ளே இழுத்து எனக்குள் நிறைத்துக்கொண்டேன்.
அவளுடைய சிறிய மார்பகங்களின் நுனியைப் பற்றிய என் கைகளை சட்டென்று விலக்கியபடி அவள் பின்னால் நகர்ந்தாள். அவள் உடல் எதிர்ப்பு கொண்டு இறுகி என் கைகளில் வளைந்தது. அதுவரை இருந்த உணர்ச்சியை ஒரே கணத்தில் உக்கிரமான காமமாக ஆக்கியது அந்த அசைவு அவளை நான் என் முழுவலிமையாலும் தூக்கி என் உடலுடன் இணைத்துக்கொண்டேன்

அவள் இறுக்கம் மெல்ல நெகிழ்ந்து  அவள் தசைகள் மென்மெழுகு போல உருகுவதை உணர்ந்தபோது நான் அவள் உடலை முழுக்க என் வசமாக ஆக்கிக்கொண்டிருந்தேன்.  உடல்கள் மட்டுமே இருக்கும் காலவெளி ஒன்று இருப்பதை அறிந்தேன். உடல்கள் மட்டுமே பேசிக்கொள்ளும் மொழி ஒன்று எனக்குத்தெரியும் என்பதை அறிந்தேன். நிலம் எங்களை மடிவிரித்து ஏந்திக் கொண்டது.

மிகச்சிறிய ஒரு பாதை. மிக மென்மையான ஒரு நீரூற்று. மிக ரகசியமான ஒரு சத்தம். மிக வேகமான ஒரு குதிரை.. கண்ணாடி இலைகள் விரித்த செடியென ஒரு நீரூற்று.  மிகமிகமிக எடையிலாத ஒரு மேகம். ஒளிமிக்க கணமொன்று தன்னை காலமாக பரப்பிக்கொண்டது..

வானம் என் மேல் பரந்து கிடந்தது. ஒளிமிக்க திரவம் ஒன்றை  ஒற்றி ஒற்றி எடுத்த பிளாட்டின் தாள் போல. அந்த திரவம் அதில் கனத்துத் ததும்பி நின்றது. தொலைவில் எங்கோ ஒளிர்ந்து ஒளிர்ந்து சொட்டிக்கொண்டிருந்தது. குறுக்காக ஒரு பறவை ஒளியை சிறகுகளால் துழாவியபடி கடந்துசென்றது. அப்பால் எங்கோ இன்னொரு பறவை கிராக் என்றது.

அருகே அவள் கிடந்தாள். நான் என் கையை அவள் மேல் போட்டேன். அவள் உடல் மெல்லிய சூடுடன் இருந்தது. ஒரு குருவியின் அடிவயிற்று துடிப்பு போல அதற்குள் உயிர் துடித்தது

”ஜ்வாலா”

”ம்ம்” என்றாள். பின் ஒருக்களித்து கையை ஊன்றி என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் வெட்கமோ சிரிப்போ இல்லை.  போதை கொண்டவள் போல வெறித்து விழித்திருந்தன அவை.

”அவர்கள் தேடிவருவார்கள். நாயர் அப்படி விட்டுவிடக்கூடியவன் அல்ல….இதற்குள் அவன் எங்கள் முகாமுக்கு செய்தி அனுப்பியிருப்பான்”

”ம்ம்”

”போவோம்”

அவள் எழுந்ந்து தன் கூந்தலைசுழற்றிக் கட்டிக்கொண்டாள். இரு நகங்கள் போல சிவந்த நுனிகள் கொண்ட மார்பகங்கள் அசைந்தன. திரும்பி என்னைப்பார்த்து போகலாம் என்று தலையசைத்தாள்

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை விரிந்தது. என் மேல் கவிந்து என் இதழ்களில் சூடாக முத்தமிட்டாள்கருணையை சதையெனக் கொண்டு அமைந்த மென்முலைகள் என்மேல் அழுந்தின. அவள்மூச்சில் பச்சைத்தழை ஒன்றின் வாசனை இருந்தது.

பின்பு எழுந்து தன் உடைகளை அணிந்து கொண்டாள். நான் வெறுமே படுத்திருந்தேன். அவள் என்னை நோக்கிக் கைநீட்டினாள். நான் அந்த மெல்லிய கரத்தைப் பற்றி எழுந்தேன். கனம் தாளாமல் அவள் சிரித்தாள்

”போவோம்” என்றாள்

”எங்கே?”
.
அவள் நீலமலையைக் காட்டி ‘ கான்ஹாங் சிங்”என்றாள்.

”சிங் என்றால் மலைதானே?””

“‘ஆமா;;என்றாள் புன்னகையுடன்

”கான் ஹாங் – நிங்தௌ சிங்!”என்றேன்

அவள் வியப்புடன் என்னைப்பார்த்தபின் வெடித்துச்சிரித்தாள்.

”ஏன் சரிதானே?”

”சரிதான்… ” அவள் முகம் மலர்ந்து சிரிப்பதைக் காண காடே ஆயிரம் வெயில்குழாய்களுடன் ஒளி கொண்டது. ” துமி — மி –  நிங் தௌ.”என்றாள்

நீ என் அரசன்! நான் அவளை பாய்ந்து பிடித்தேன்.”ஆறுமாசத்தில் நான் மணிப்புரி கற்றுக் கொள்கிறேன் பார்”

”அங்கமி மொழி?”

“இதுவேறு அது வேறா?”

“கிட்டத்தட்ட ஒன்றுதான்”

”அப்புறமென்ன?”

ஒருவர் உடலை ஒருவர் உணர்ந்தபடி ஒருவர் சொற்களை ஒருவர் கேட்டபடி ஒருவர் நெஞ்சை ஒருவர் சொற்களால் தொட்டு உரசியபடி அந்த மலைக்காடு வழியாக இரு வண்ணத்துப்பூச்சிகள் போலச் சென்றோம்.

கான் ஹாங் மலையின் முடி எங்கள் மேல் எழுந்து எழுந்து வந்தது. அதன் நீள நிழல் அப்பால் சமவெளியில் பச்சைநிரமாக விரிந்து கிடப்பதைக் கண்டோம்.  சிகர நிழல்களை ஆடைகளாக அணிந்துகொண்டு நின்றன பிற சிகரங்கள்.

மலைச்சரிவில் ஏறி ஏறிச் சென்ரோம். அவள் எனக்கு கைகொடுத்து பாறைகளில் ஏற்றிவிட்டாள். அவள் அக்காட்டிலேயே பிறந்தவள் போலிருந்தாள். மெல்லிய வெண்கலக் கால்களுடன் தாவும் மான்போல.

சிவப்புநிறத்தில் ஷிராய் லில்லி படர்ந்த சிறிய மலைச்சரிவைக் கண்டோம். நான் ஓடிப்போய் மதூக மலர்களை கைகளை விரித்து தழுவிக் கொண்டேன். முகர்ந்தேன். தண்ணீர் கண்ட பாலைவனப் பயணி போல. அவளும் சிரித்தபடி ஓடிவந்து என்னருகே அமர்ந்தாள்.

பெரிய கண்கள் விழித்த சிறகுகளுடன் நீலமும் சிவப்பும் கலந்த வண்ணத்துப்பூச்சிகள் எங்களைச் சுற்றி சிறகடித்தன. மெல்லிய ஒளியுடன் முகில்கள் அடர்ந்த வானம் கவிழ்ந்திருந்தது. மலை அனைத்துமறிந்த தியானத்தில் நிற்க அதன்மீது மேகநிழல்கள் நகர்ந்தன

”போகலாம்” என்றாள்

”மதூகம்!”

”நாம் போவது கான் ஹாங்கின் ஷிராய் லில்லி சரிவுக்கு. அங்கே எங்கே பார்த்தாலும் மதூகம்தான்… வேறு பூவே இல்லை…. அங்கே மனிதர்கள் போவதேயில்லை…நாம் மட்டுமே அதைப்பார்க்கப்போகிறோம்’

”நோ மேன்ஸ் லேண்ட்” என்றேன். ”சொல்ல சொல்ல எப்படி இனிமையாக இருக்கிறது தெரியுமா? நோ மேன்ஸ் லேண்ட்”

”கமான்!”

பூக்களினூடாக ஓடி மறு சரிவைத் தாண்டினோம்.

”எவ்வளவு தூரம்! நாம் போகும்தோறும் அது விலகிச்செல்கிறதா?”

”நாம் அதிகதூரம் நடக்கவில்லை….”

”அங்கே செல்லும்போது இருட்டிவிடுமே”

”இன்று அரைநிலவு உண்டு….மேகம் இல்லை. நல்ல ஒளி இருக்கும்”அவள் என் கைகளைப்பற்றினாள் ” நிலவில் ஷிராய் லில்லி சரிவில் ஓடுவோம்”

நான் அவளை அப்படியே அள்ளி முத்தமிட்டேன். நினைத்த இடத்தில் எல்லாம் நின்று நின்று தழுவி முத்தமிட்டபடியேதான் சென்றோம். முத்தம் மூலம் அவள் இருப்பை நான் உணரவில்லை, என் இருப்பை நான் உணர்ந்து கொண்டிருந்தேன்.

அவள் என் கைகளைப் பற்றினாள். எச்சரிக்கையுடன். ”ரேடியோ”என்றாள் ரகசியமாக.

நானும் ஒரு ரேடியோவின் ரகசிய கீய்ங் ஒலியைக் கேட்டேன். என் உடலில் ஆயிரம் பூனைக்காதுகள் கவனம் கொண்டு திரும்பின.

மெல்ல பதுங்கி எதிர் திசையை நோக்கி சென்றோம். ஆனால் புதருக்குள் இரு அங்கமி வீரர்களைக் கண்டோம்.

”அவர்கள் தேஜாவையும் சரிதாவையும் பிடித்துவிட்டார்கள் ”அவள் கிசுகிசுத்தாள். உதட்டை இறுகக் கடித்திருந்தாள். முகம் ரத்தமாக இருந்தது. கண்ணீர் உருண்டு சொட்டியது.

”வா” நான் அவள் கையைப்பற்றி விலகிச் சென்றேன்.

சட்டென்று மூங்கில் புதருக்குள் இருந்து குண்டு முழங்கியது. என்னருகே மரப்பட்டை பிளந்தது. ” தானு ஜிடாரகா! ” என்ற கட்டைக்குரல் ஒலித்தது. நான்குபக்கமும் விசில்கள் ஒலித்தன. மனிதக்குரல்கள் கேட்டன. ஆணைகள், கூச்சல்கள்.

நான் என் முழுப்பிரக்ஞையையும் கால்களில் வைத்து வெறி பிடித்தது போல ஓடினேன். துப்பாக்கிக் குண்டுகள் வெடித்து வெடித்து காட்டை அதிரடித்தன. என்னருகே அவள் ஒரு நிழல் போல ஓசையில்லாமல் வந்துகொண்டிருந்தாள். அப்பால் மலையின் சரிவின் பாறைச்சுவர்கள் ‘கலாங் கலாங்”என்று அவ்வொலிகளை எதிரொலித்தன.

ஒரு மண்சரிவில் குதித்து இரு பாறை இடுக்குகலில் உயரமான புற்களின் நடுவே பதுங்கினோம். என்னருகே இருந்த மட்கியமரத்தில் இருந்த பச்சைத்தவளை சேற்றில் குதித்தது. சிறிய கொசுக்கள் கலைந்தெழுந்து என் முகத்தைமூடின.

”துப்பாக்கி ஒலி கேட்டால் இந்தியர்கள் வருவார்கள்….”என்றாள் அவள் கிசுகிசுப்பாக.

மலை தன் மௌனம் கலைத்து உறுமுவது போலிருந்தது. உயர்ந்த செதிகளுடன் மாபெரும் டைனோசர் போல அது தோன்றியது. குரூரமான சிறிய கண்கள் விழித்து என்னை பார்த்தன.

எங்களைச் சுற்றி அவர்கள் தேடினர். அவர்களின் கனத்த பூட்ஸ¤களுடன் சேறும் இணைய் அவை சளக் சளக் என சேற்றுப்பரப்பில் பதிந்தன. பூட்ஸுகள் இழுபட்டு எழும்போது சேறு சப்புகொட்டிக் கொண்டது அவர்கள் அர்த்தமில்லாமல் புதர்களுக்குள் சுட்டனர். சேற்றில் கலைந்த புதர்களை தடம் பார்த்து தேடிதேடி சென்றனர். இதயத்துடிப்பே பேரொலியாகக் கேட்க மூச்சை கைகளால் அடக்க்கியபடி அமர்ந்திருந்தோம்

அவர்கள் மறுபக்கம் பாறையை அடைந்து அதில் தொற்றி ஏறி விலகியதும் எழுந்து ஓடினோம். ஈரத்தால் பச்சைப்பாசி படந்து வழுக்கிய குட்டைப்பாறைகளில் பதுங்கி தாவி முன்னகர்ந்து மலைச்சரிவை ஏறிக்கடந்தோம்.

மலை ஒரு ரகசியத்துடன் உறைந்து கிடந்தது. நான் அதன் கீழ்விளிம்பையே உற்று பார்த்தேன். மலைக்கு அப்பால் புதர்களினூடாக இந்திய ராணுவத்தின் பச்சைச்சீருடை அணிந்த வீரர்களைக் கண்டேன். ரை·பிள்களின் பயனெட் நுனிகள் வெயிலில் ஒளிர்ந்தன. ஒரு பளீர் என் கண்களை பிளேடுபோல வெட்டிச்சென்றது

அவளை பிடித்தபடி மலையின் மூன்றாவது பக்கம் நோக்கி ஓடினேன்.

”இந்த மலையிடுக்குவழியாகப் போனால் காங்ஹாங் மலைக்கு அப்பால் போகலாம்”என்றாள் ஜ்வாலா ”நோ மேன்ஸ் லேண்ட் அங்கேதான் இருக்கிறது. அதற்குள் நுழைந்தால் தப்பிவிடுவோம்…”

கீழே இந்திய ராணுவம் எ.எல்.எ·ப் ஆட்களைப்பார்த்துவிட்டது. எம்203/ஏ1 கிரனேட் லாஞ்சரின் அதிரலைக் கேட்டேன். குண்டு சென்று விழுந்து வெடித்த புகை காட்டுக்கு மேல் எழுந்தது. குரல்கள் விசித்திரமான பறவைக்கூச்சல் போல எழுந்தன. மயிலகவல் போல ஒருவன் அலறிவிழுந்தான். தொடர்ந்து கிரனெடுகள் வெடிப்பதும் ரை·பிள்கள் துடிப்பாக சுடுவதும் கேட்டது.

மலைச்சரிவில் இருந்து மேலேறி பாறைமீதிருந்து பார்த்தபோது கடுமையான போர் நடப்பது தெரிந்தது. சாம்பல்நிறமான பெரிய செம்மரி ஆடுகள் போல பச்சைசரிவில் கிரனைடுகளின் புகை தவழக்கண்டேன். காடு நாலாபக்கமும் குண்டொலியால் அத்ர்ந்தது.

” மூன்று மணிநேரம்… அதற்குள் நாம் நோ மேன்ஸ் லேண்டுக்குப் போய்விடலாம். அங்கே இரு ராணுவங்களும் நுழையாது. எங்கள் ஆட்களை இந்திய ஆர்மி தடுத்துவிடும்” ஜ்வாலா ஓடியபடியே சொன்னாள்.

மூச்சுவாங்க உடலெங்கும் அனல் வியர்வையுடன் கலந்து எரிய நாங்கள் மலையின் விலாப்பகுதி உச்சியை அடைந்தோம். நான் குப்புரபப்டுத்து மலைச்சரிவைப் பார்த்தேன். என்னருகே வாயால் மூச்சுவிட்டபடி அவள் பார்த்தாள். இந்திய ராணுவம் அங்கமி ஆட்களை துரத்திவிட்டு எங்களை நோக்கி முன்னேறுவதைக் கண்டோம்.

நான் சரிவில் ஓட ஆரம்பித்தேன். இருமுறை விழுந்து எழுந்து ஜ்வாலா என்னுடன் ஓடினாள்.

பின்பக்கம் மைக் குரல் ஒலித்தது ” லெ·ப்டினெண்ட் நெல்லையப்பன். இது இண்டியன் ஆர்மி . வெஸ்டர்ன் கமாண்ட் சிக்ஸ்த் கம்பெனி மேஜர் பேசுகிறேன். நீங்கள் தப்ப முடியாது. இருவரும் சரண்டையுங்கள்”

”வா”என்றேன். அவளால் ஓடமுடியவில்லை. வாய் திறந்து மார்புகள் அதிர நின்று ஏங்கினாள்.

”வா”

”என்னால் ஓட முடியவில்லை நெல்…”

”இந்த மலைச்சரிவுக்கு அப்பால்தான்..வா”

”லெ·ப்டினெண்ட் நெல்லையப்பன். நீங்கள் செய்வது கடுமையான குற்றம்….சரண்டையுங்கள். சட்டபூர்வமாக உங்களை விசாரிப்போம்…”

”நெல்… நெல்…”அவள் முச்சு வாங்கினாள். ”நம்மால் அங்கே போக முடியாது. நீங்கள் சரண் அடையுங்கள். உங்கள் நாட்டில் நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது…” அப்படியே அமர்ந்தாள்” இனி என்னால் ஓடமுடியாது…நெல்…” 

”உளறாதே…. வாழ்ந்தால் சேர்ந்து வாழ்வோம் செத்தால் சேர்ந்து சாவோம்… வா” என்று அவளை இழுத்தேன். அவள் துவண்டு எழுந்தாள் ”ப்ளிஸ் ஜ்வாலா…ப்ளிஸ்… இதோ வந்துவிட்டது…பக்கம்தான்”

அவள் எழுந்ததும் எங்கலை ஒரு கிரானெட் கடந்து சென்று விழுந்து புகை கக்கி வெடித்தது. அவள் அலறியபடி என்னைக் கட்டிக் கொண்டாள். இருவரும்  எழுந்து வெறி கொண்டு ஓடினோம்.

அப்பால் சிறிய மலைமீது இந்திய ராணுவத்தினரைக் கண்டேன். கிரானைட் லாஞ்சர்கல் ரை·பிள்கள். தீப்பொறிகள் மின்னின. குண்டுகள் எங்களை தாண்டிச்சென்றன. பாறைகளின் மீது பொறிபறக்க மோதி சிதறின.

நாங்கள் கால்கள் மட்டுமே உயிருடன் இயங்க ஓடினோம்.

ஒரு கணத்தில் நான் நம்பிக்கை இழந்தேன். அவ்வளவுதான். அவ்வளவுதான். கடைசி கணங்கள். நோ மேன்ஸ் லேண்ட் …அது எப்படி இருக்கும்? நோ மேன்ஸ் லேண்ட்….. அது எவராலும் எட்டமுடியாத இடம் . ஆகவேதான் அது நோ மேன்ஸ் லேண்ட்… ஆனால் நாங்கள் ஓடும்போதே கொல்லப்படவேண்டும் .எங்கள் கால்கள் அதை நோக்கி எம்பிய நிலையிலேயே நாங்கள் செத்துவிழ வேண்டும்.அது போதும்.

ஜ்வாலா விழுந்து உருண்டாள். அவள் உடலெல்லாம் சேறு அப்பியது. நான் அவளை இழுத்து பாறை மறைவுக்கு சென்றேன். கன்னங்களைத் தட்டி ”ஜ்வாலா ! ஜ்வாலா!”என்றேன்.

அவள் கண்களை விழித்தாள் ‘நெல்!”என்று என்னை கட்டிக் கொண்டாள்”நாம் உயிருடன்தான் இருக்கிறோமா?”

”ஒன்றும் ஆகவில்லை. இனி கொஞ்ச தூரம் தான்”

”இல்லை…இனி என்னால் முடியாது…ப்ளீஸ்…” அவள் அழுதாள்

”ஜ்வாலா கொஞ்சம் ஓடு..இதோ”

”இல்லை நெல். நம்மால் அங்கே போக முடியாது…”

நான் அவள் கண்ணீர் வழிந்த முகத்தைப்பார்த்தேன். வெகு அருகே மீண்டும் மைக் குரல் ” லெ·ப்டினெண்ட் நெல்லையப்பன். இது உங்கள் கம்பெனி கமாண்டர் பேசுகிறேன்   .சரண்டையுங்கள்….நீங்கள் மியான்மார் போக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.”

நான் பெருமூச்சுடன் திரும்பிய கணம் உறைந்தேன். எங்கள் கால்களுக்கு கீழே ஷிராய் லில்லி பள்ளத்தாக்கு தெரிந்தது. செக்கச்சிவந்த மலர்களினாலான மலைச்சரிவு. காற்றில் அது மெல்லிய கம்பளம் போல அலையடித்தது.

”ஜ்வாலா..அங்கே பார் ..ஜ்வாலா”

அவள் திரும்பிப் பார்த்தாள். கண்கள் விரிந்தன ” ஷிராய் லில்லி !”

”அதுதான் நோ மேன்ஸ் லேண்ட்…அங்கே பார்” ஒரு பாறைமீது இந்திய எல்லையின் அறிவிப்பு இருந்தது. இந்திய ராணுவச்சின்னம்.

”வா!” என்று அவளுடன் எழுந்து ஓடினேன்.

கணங்கள் காலடிகள் மூச்சுகள் எண்ணங்கள்…

இந்திய எல்லையை நாங்கள் தாண்டியபோது ஒரு விடுதலை உணர்வை அடைந்தேன். எம்16 ரை·பிள் ரேஞ்சை தாண்டிச்செல்ல வேண்டுமென எண்ணி மேலும் ஓடினோம்.  செம்மை குமுறி விரிந்த ஷிராய் லில்லி பூக்களினூடாக…. உயிருள்ள சதைக்குள் புதையும் இரு அம்புநுனிகள் போல…….

இந்திய எல்லையில் ராணுவம் கூடிவிட்டதை கண்டேன். கிரானைட் லாஞ்சர்கள் பாறைமீது நிறுத்தபப்ட்டன.

மறுபக்கம் ஒரு குண்டு வெடித்தது. மியான்மார் ராணுவம். பர்மிய மொழியில் ஏதோ அறிவிப்பு ஒலித்தது. மீண்டும் வெடியொலி. இம்முறை கிரானெட் வந்து இந்திய எல்லையருகே விழுந்து வெடித்தது.

”ஸ்டாப் ! டோன்ட் மூவ்!”என்ற ஒலியை மியான்மார் எல்லைக்கு அப்பாலிருந்து கேட்டேன்.

”டோண்ட் மூவ் லெ·ப்டினெண்ட் ”என்றார் மேஜர்.

நான் கைகளை தூக்கினேன். ஜ்வாலா என்னை கட்டிப்பிடித்தாள்.

மதூகமலர்கள் என்னைச்சுற்றி கூத்தாடின. மலை செந்நிறப் பட்டாடை அணிந்து தென்றலில் நிற்பது போலிருந்தது. பலநூறு பட்டாம்பூச்சிகள். பல நூறு தேன் சிட்டுகள் . சிறகு ஒளிரும் பறவைகள்.

” அப்படியே எங்கள் எல்லைக்கு வாருங்கள்…”என்றார் மேஜர்

”நீங்கள் குறிவைக்கப்பட்டுவிட்டீர்கள்… மெல்ல மியான்மார் எல்லை நோக்கி நகருங்கள்”என்றது பர்மிய குரல். இப்போதுதொலைவில் பர்மிய எல்லையில் பாறைமீது மியான்மார் சிப்பாய்களைக் கண்டேன்.

”மூவ் டுவேர்ட்ஸ் அஸ்” என்றார் மேஜர்

”கம் ஆன்”என்றது பர்மிய எல்லை.

நான் இருபக்கமும் பார்த்தேன். ஆயுதங்கள் தேனீக்கள் ஒன்றாவது போல கூடின. கணம் கணமாக காலம் கனத்தது.

சட்டென்று நான் ஒன்றை உணர்ந்தேன். அவர்கள் எங்களைச் சுடமாட்டார்கள். நாங்கள் அவர்களைச் சேர்ந்தவர்களல்ல, இந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் அறிவார்கள். அவர்கள் குண்டுகள் எங்களை தொடாது. அதை அத்தனை உறுதியாக உணர்ந்தேன். என் பதற்றம் இல்லாமலாயிற்று. உள்ளூர உவகை எழுந்தது

”ஜ்வாலா…அவர்கள் நம்மை சுட மாட்டார்கள். சுட முடியாது….நாம் வேறு மனிதர்கள். நாம் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். வி ஆர் த பீப்பிள் ஆ·ப் நோ மேன்ஸ் லேண்ட்” என்றேன். அவளை அணைத்தபடி நிதானமாக காட்டுக்குள் மூன்றாம் திசையில் நடந்தேன்.

இருபக்கமும் அமைதி நிலவியது. காற்று மலர்ச்செடிகளைக் கோதிச்செல்லும் ஒலிமட்டுமே கேட்டது.

அவர்கள் சுடமாட்டார்கள். சுட முடியாது. அவர்களால் தங்களுக்குள் மட்டுமே சுட்டுக்கொள்ள முடியும். மனிதர்கள் எங்களைச் சுடமுடியாது. நாங்கள் வேறு…எங்கள் மண் வேறு…

ஒரு தனி குண்டைக் கேட்டேன். பின்பு அத்தனை துப்பாக்கிகளும் சேர்ந்து வெடித்த பேரிரைச்சல்.

ஆனால் குண்டுகள் எங்களைத் தொடவில்லை.  அங்கே பறந்த எந்த வண்னத்துப்பூச்சியையும் தேன்சிட்டையும் குண்டுகள் தொடவில்லை. அந்த குண்டுகளுக்கும் புகைக்கும் பேரொலிகளுக்கும் தொடர்பே இல்லாமல் வேறு ஓரு உலகில் அமைதியே நிலமாக மாறி விரிந்து கிடந்தது கான்ஹாங் சமவெளி.

”இதுதானா? ”என்று நான் கேட்டேன்.

”ஆமாம். இதுதான்… ” அவள் என்னைத் தழுவிக் கொண்டாள். ”இதுதான் நோ மேன்ஸ் லேண்ட்”

இருவரும் வெகுதூரம் நடந்தோம். மனிதர்களின் கால் படாத கன்னிநிலத்தில்.

நிலம் இருண்டு மலர்கள் மறைந்தன. கான் ஹாங் கல்முடிக்கு அப்பாலிருந்து முழு நிலவு எழுந்துவந்தது. இளஞ்சிவப்பான நிலவு. தொட்டுவிடலாம் போல மிக அருகே வானில் நின்றது. ஒளிரும் மேகச்சாமரங்கள் சூழ

”நிலவா?”என்றேன்”இன்றைக்கு பௌர்ணமியா என்ன?”

”சரியான மக்கு”என்று ஜ்வாலா என் காதைப்பிடித்தாள்.” இந்த நிலத்தில் என்றுமே பௌர்ணமிதான். இதுகூடத்தெரியாதா?”

நான் அண்ணாந்து நிலவைப்பார்த்தேன். அப்பகுதியின் அதிபன் அது என்பதுபோல செந்நிறமான குளுமையுடன் துல்லியமான வானில் நின்றது தேய்வறியா நிலவு.

மதுக்கமலர்வெளியில் எப்படி நிலவு அணைய முடியும்.?

[முற்றும்]

முந்தைய கட்டுரைஒரு முகம்
அடுத்த கட்டுரைவிவசாயிகள்:கடிதங்கள்