புதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்

கையிலிருந்த‌ பெட்டியை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டின் க‌த‌வைப் பூட்டினேன். பெட்டியைத் தூக்க‌ அது க‌ன‌மாக‌ இல்லை. ஐந்து வருடச் சம்பாத்தியம் க‌ன‌மில்லாம‌ல் இப்பெட்டியில் கிட‌க்கிறது. அவள் சிறுவாடு சேர்த்ததெல்லாம் என்ன செய்தாள் என்று சரியாகத் தெரியவில்லை. சின்னமனூரில் அவுகப்பன் மூலமாக வட்டிக்கு குடுத்திருக்கலாம். ஐநூறு, ஆயிரமென.. அதிகம் போனால் பத்தாயிரத்திற்கு மேல் இருக்காது. ’அதப்பெறக்கி தின்னுட்டு போறா கண்டாரோழி..அந்த மட்டுக்கும் ஒழிஞ்சா செரி’

குளிரில் உடல் வெடவெடத்தது. வாச‌ல் வ‌ழி கீழிற‌ங்கி யூக‌லிப்ட‌ஸ் ம‌ர‌ங்க‌ள் இருப‌க்க‌மும் தேமேவென்று நின்றிருக்கும்‌ சாலையை அடைந்தேன்.

’அந்த வென்னமகென் தேடிட்டு திரியட்டும்.. இல்ல அந்த ங்கப்பனோலிய வேறெங்குட்டாச்சும் கெட்டி வெக்கட்டும், அவனாச்சு அவென் மவளாச்சு..’

ஆரம்பித்திலிருந்தே எனக்கும் என் மாமனாருக்கும் சுமுகம் இல்லை. நேரடியே இரண்டொரு வார்த்தை பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். சின்னமனூர் பஷீர் கடையில் வைத்து அவன் என் சட்டையைப் பிடிக்கும் பொழுதான் அவன் அத்தனை வார்த்தைகள் என்னிடம் பேசியிருக்கிறான்.

இன்னும் விடியவில்லை. நீரும், காடும், தேயிலையும் கருநீல‌ப்பனியில் மூட‌ப்ப‌ட்டு அசைந்த‌ன‌.. பாதையின் வ‌ல‌ப்புற‌ம் பெரிய‌ நீர்த்தேக்க‌ம். நீர் கொண்ட‌ இத்த‌னை நீல‌ நிற‌ம் எங்கும் காண‌க் கிடைக்காது. ப‌னி ந‌ழுவிப்பாயும் ஏரி இன்று மட்டும் என்னை எதுவோ செய்தது. இங்கேயே இருந்து சமாளிப்போமா என்ற எண்ணத்தை இரவு முழுவது போராடி வென்றும் இப்பொழுது மீண்டும் அது தலை தூக்குகிறது. எப்பொழுதும் எனக்கு இந்த மலையும், குளிரும் பிடித்ததாயில்லை. வந்த புதிதில் ஏற்பட்ட மிரட்சி ஒரு மாத காலத்தில் வடிந்து போனது.

முருக‌ண்ண‌னுக்கு அப்படியில்லை. அவருக்கு மேகமலை ஒரு அற்புதம். காட்டையும், பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் பச்சைமலையும், சுருக்கென்ற குளிரையும் ர‌சித்தவாறே வேலை செய்வார். காலையில் க‌த‌வைத் திற‌ந்ததும் மெல்லிய‌ ப‌ர‌வ‌த்துட‌ன் குளிரை உள்வாங்குவார். சின்ன‌தாய் சிரித்த‌ப‌டியே குந்தி அம‌ர்ந்து எதிரே பிர‌ம்மாண்ட‌மாய் நின்றிருக்கும் காட்டை ர‌சித்த‌ப‌டியே சிறுநீர் க‌ழிப்பார். முடிந்தத‌தும் எழுவ‌தில்லை. அப்ப‌டியே மோன‌ நிலையில் சிறிது நேர‌ம்.

“தம்பி‌, ப‌ஸ்ட்டு ட‌ய‌ம் ம‌ச்சினெங்கோட‌ லாரில‌ ம‌ர‌ ஏத்த‌ வ‌ந்தேன்டா, யாத்தேன்னு வாய‌ பொள‌ந்துட்டேன், நாம‌ அதுக்கு முன்னாடி சின்ன‌ம‌னூர‌ தாண்டுன‌து கெடையாது, அதே ப‌ஸ்ட்டு ட்யம் பாத்துக்க‌, ம‌லையுங், குளிரும்… ய‌ப்பேய்” என்று சிலிர்த்துக்கொண்டார் ஒருநாள் என்னிட‌ம்.

பின் அவ‌ர் இங்கு வ‌ந்து டீக்க‌டை போட்டிருக்கிறார். சாலையோர‌த்தில் ப‌ஸ் வ‌ந்து நிற்குமிட‌த்தில் முருக‌ன் டீ ஸ்டால் பின்னாடி வீடு. ஒரே கூரையின் கீழ். அண்ண‌ன் ஆறு ம‌ணிக்கு எழுந்திருப்பார். ஆறு முப்ப‌துக்குக் க‌ட‌ந்து செல்லும் தேயிலைத் தோட்ட‌க் கூலிக‌ளுக்கு டீ கிடைக்கும். வடை, இட்டிலி தோசை வகையறக்கள் உண்டு. சுற்றிப் பார்க்க வருகிறவர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போனால் வேண்டுமென்பதை அவரும் அவர் மனைவியும் சேர்த்து சமைப்பார்கள். பொதுவாக அதிகம் சுற்றுலாவிற்கு ஆட்கள் வர மலைப்பாதைகள் அனுமதிப்பதில்லை. முருகண்ணனின் மனைவி வெளியே ஏவாரம் பார்க்க வருவதில்லை. கறுப்பாய், ஒல்லியாய் லேசாகப் பல் எத்தியபடி இருக்கும் அந்த அக்கா. ஆனால் எப்பொழுதும் சிரித்தமுகம்.

நான்கு ம‌ணிக்கு மேல் இருக்கும் இப்பொழுது. ’மன்னிச்சுருங்க மாமா, ஏதோ கோவத்துல கண்ணுமண்ணு தெரியல’ன்னு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகணும். மேலும் அவர் நடத்தி வைத்த திருமணம் இது.

’தம்பி, ஒரு பொண்ணுருக்கு.. சின்னமனூர்ல.. ஒங்காளுகதேன்.. நேத்து போயிருந்தப்ப பேச்சு வந்துச்சு.. கலர் கம்மின்னு பாக்காத..’ என அவரே எல்லாமும் செய்து வைத்தார்.

நான் மீனாட்சியை வீட்டிலிருந்து வெளியே தள்ளும் போது உரிமையுடன் ‘ஒக்கால ஓழி, இன்னிக்கு உன்னைய’ என்று சத்தம்போட்டவாறே டீக்கடையிலிருந்து கையத்தூக்கி அடிக்க ஓடி வந்தவரை நான் அடித்துக் கீழே தள்ளியது வரை என்னை ஒரு அண்ணனைப்போல் பார்த்துக்கொண்டவர். அவரின் காலில் விழுந்துவிட்டு சென்றுவிட வேண்டும். எதுவும் சொல்லக்கூடத்தேவையில்லை..

.

வண்டி வர இன்னும் நிறைய நேரமிருக்கிறது. மேக‌ம‌லைக்குள் சின்னமனூரிலிருந்து வரும் முத‌ல் பேருந்து ஆறு ம‌ணிக்கு நுழையும். பெருங்கூட்ட‌ம் இருக்கும். ப‌ர‌ந்து விரிந்த‌ ம‌லையில் ஆங்காங்கே எஸ்ட்டேட்காரர்கள் கட்டித்தந்த வீடுகளில் வசிப்போர் மலையிறங்க ஒரே வ‌ண்டி. அதில்தான் ஒருவொருக்கொருவ‌ர் பார்த்துக்கொள்ளுத‌லும், பேசிக்கொள்ளுத‌லும், சிரித்துக் கைகாட்டித் த‌ன் இருப்பைத் தெரிவித்துக்கொள்ளுத‌லும். பேருந்தில் இருந்து இற‌ங்கி சித‌றிச்சென்றால் பின் ச‌ந்தித்துக்கொள்வ‌த‌ற்குக் கால‌மாக‌லாம்.

முத‌ல் நாளே சின்ன‌ம‌னூருக்கு அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ள் வாங்கச் செல்லும் கூட்ட‌ம், மலையிறங்கினால் முட்டி நிற்கும் சின்னமனூர். எஸ்ட்டேட் கூலிகள் தங்களுக்குத் தேவையான‌ உருப்படிக‌ளை நாள் முழுதும் சந்தைகளிலும், மளிகைக்கடைத் தெருக்களிலும் தேங்கி நின்று வாங்கும், பின் வெங்க‌டேஸ்வ‌ராவிலோ, புக‌ழ‌கிரியிலோ மாலைவேளை காட்சிக்கு உட்புகும். இர‌வில் பிலால் புரோட்டா ஸ்டாலில் சாப்பிட்டுவிட்டு ப‌ஸ் நிற்குமிட‌த்திற்கு அருகில் உள்ள‌ க‌டைக‌ளில் வந்து கூடும்.. இர‌வு க‌டைக‌ள் அடைத்த‌தும் அனைவ‌ரும் கிடைத்த‌ இட‌த்தில் வ‌ரிசையாக‌வும், ஆங்காங்கே துண்டு துண்டாக‌வும் ப‌டுத்துக் கொள்வ‌ர். விடிகாலை மூன்று
ம‌ணிக்கு முதல் ப‌ஸ் மேகமலைக்கு.

இர‌வு நேர‌ சினிமாவிற்குச் சென்றுவிட்டு வரும் உள்ளூர் ஆண்க‌ள் சில‌ர் அந்த‌ இட‌த்தை ச‌த்த‌மில்லாம‌ல் சுற்றி வ‌ருவ‌ர். பெரும்பாலும் இள‌சுக‌ள். இருட்டில் ஊடுருவி எஸ்ட்டேட் பெண்களின் அருகே ப‌டுத்து உற‌வுக்கு முய‌ல்வார்க‌ள். பெண்க‌ளோ, அவர்கள் ப‌க்க‌த்தில் படுத்திருக்கும் க‌ண‌வ‌னுக்கோ அல்ல‌து உற‌வின‌ருக்கோ கேட்காவ‌ண்ண‌ம் சண்டையிட்டுத் துர‌த்துவ‌ர். ஆனால் சிலர் இண‌ங்கிவிடுவ‌தும் உண்டு

“தம்பியாவுள்ள ஒண்ண நீ புரிஞ்சிக்கனும், இங்கன எம்புட்டு சில்லுன்னு கெடக்கு பாத்தியா… நாளாக ஆக குளிர்ல‌ தோல் அப்டியே ம‌ர‌த்துப்போய்டும்டா , பின்ன அவ‌ங்ய‌தான தேச்சுவிட்டு ஒடம்புக்கு ஒரு ஒண‌ச்சிய‌ கொடுக்குறாய்ங்ய‌, எவ‌ளுக்கு வெர‌ட்ட‌ ம‌ன‌சு வரும்..பத்தாக்கொறைக்கு இங்குள்ளவன் எவன் நைட்டு முழிச்சு பக்கத்துல படுத்துக்கெடக்குறவள பாத்தியான்? சாரயம் சுலுவுல்ல இங்க..’ முருகண்ணன் ஆண் பெண் தாம்பத்யம் பற்றி ஆழ்ந்து யோசிப்பவர்.

எப்பொழுதும் இந்த‌ இருட்டு உற‌வில் பிர‌ச்ச‌னை வ‌ந்த‌தில்லை. ‘ம‌லையை விட்டு இற‌ங்குனா இங்க‌தே வ‌ந்தாக‌னும், எதுக்கு வ‌ம்பு’ என்பார்க‌ள். அனைவ‌ரும் தேயிலைத் தோட்ட‌க்கூலிக‌ள். தமிழ்நாடு கேரளாவிளிருந்து வந்து வேலைபார்க்கும் சனம். கஞ்சிக்கற்றுப்போய் வந்தவர்கள். பத்தாக்கூலியால் சுற்றுலாவாசிகளிடம் ஒரு சில பெண்கள் உறவுக்கு உடன்பட்டு, பின் சுற்றுலா செல்வதே அதற்குத்தான் என்பதாக மலைக்கு கீழே உள்ள ஊர்களில் பேசப்படுவதாயிற்று. அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்ச ஒரு சர்ச்சும், ஃபாதரும் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் தோலுறையிட்ட பைபிள் சகிதமாக பெண்கள் சர்ச்சுக்குத் தவறாமல் கிளம்புவார்கள். நான் மேகமலையில் எவளையும் கட்டிக்கொள்ள விரும்பவில்லை.

ஒருமுறை நான் உப்புக்கோட்டைக்கு ஒரு பெண்ணைப்பார்க்கச் சென்றேன். வருடத்திற்கு நான்கு முறையாவது பஸ் பள்ளத்தில் உருண்டாக வேண்டும் என்பது கணக்கு. அந்தக்கணக்கில் அன்று நான். என் கையொடிந்த சம்பவத்திற்குப்பின் பஸ்ஸில் ஏறுவதில்லை. பைக்கில்தான் பயணம்.

மேகமலையில் முருக‌ண்ண‌னிட‌ம் ம‌ட்டுமே பைக் இருக்கிறது. ய‌மகா பைக். அதிலேயே அவ‌ர் சின்ன‌ம‌னூரில் பொருட்களை ஏற்றிப் பின்னால் க‌ட்டிக் கொண்டுவ‌ருவார். ப‌க்க‌த்து ம‌லை சுற்றில் வரும்போதே ய‌ம‌கா ச‌த்த‌ம் க‌டைக்குக் கேட்கும். பின் அரைம‌ணி நேர‌க் க‌ண‌க்கு அவ‌ர் க‌டைக்கு வ‌ந்து சேர‌… … பொதுவாக‌ இர‌வில் கிள‌ம்ப மாட்டார். அவ‌ரது அண்ண‌ன் இற‌ந்த‌ செய்தி லாரி மூல‌ம் இவ‌ருக்கு வ‌ந்த‌டைந்த போது இரவாயிற்று. ஆனால் அவர் கிள‌ம்ப‌வில்லை.

’ஏண்ணே?’என்ற‌துக்கு “ச‌ந்தான‌ம், ஒங்கிட்ட‌ சொல்ற‌துக்கென்ன‌, ரெண்டு வ‌ருச‌ம் முந்தி, க‌டைக்கு சாமான் வாங்கிட்டு சின்ன‌ம‌னூர்லருந்து கெள‌ம்பினேன், வெள்ள‌ன‌வே கெள‌ம்பிட்டேன், அப்ப‌ப் பாத்து, எங்க‌ண்ணே, என‌க்கு நேரா மூத்த‌வே அதே, இன்னைக்கு செத்திருக்கானே அவனுக்கு எளைய‌வே, காசுருந்தா குடுன்னு வந்து நிக்கிறியான், சந்தா கட்டனும் போல.. என்னைக்கும் கேக்காதவெ கேட்டு நிக்கிறியான்.. நா வேற‌ சாமானெல்லா வாங்கிட்ட‌னா, ஒத்த‌ பைசா கெடையாது, அங்கிட்டு இங்கிட்டுன்னு தெரிஞ்ச‌வ‌ய்ங்க‌ கிட்ட‌ காசு தேத்தி நானூரு ரூவா கொடுத்துட்டு கெள‌ம்‌ப‌ இருட்டி போச்ச்சு’

இங்கிருந்து அவர் குரல் ஏதோ ரகசியத்தை சொல்கிறவர் போல் கம்மியது. கண்கள் வெளிவர, உக்காந்திருந்தவர் எழுந்துவிட்டார்

’நானு கெள‌ம்பிட்டேன், வாரென் வாரேன் நாம்பாட்டுக்கு வாரென், வருச‌னாட்டு ப‌ள்ள‌ம் தாண்டி ரெண்டாவ‌து திருப்ப‌த்தில் நிக்கிது பா‌த்துக்க‌ நாலு யான‌, அதில‌ ஒன்னு குட்டி, லை‌ட்டு ப‌ட்ட‌தும் ப்ப்பீய்ங்ஞ்க்குன்னு ஒரு அல‌றல‌ குடுத்துச்சு பாத்துக்க‌, லேய் ப‌ய‌த்தில‌ பேல்ற‌ய்ங்ய‌ன்னு சொல்லுவாங்யல்ல‌, அது உண்ம‌தாண்டா, ஒட‌ம்பு ந‌டுங்கி பொல‌க்குன்னு மினிக்கூண்டு வெளில‌ வ‌ந்திருச்சு, வ‌ண்டிய‌ப் போட்டுட்டு ஓடுறேன்னு பொதுருக்குள்ள‌ ஓடி, மேலெல்லாம் முள்ளு கிழிச்சுப் போட்டுச்சு, அதில‌ இருந்து நைட்டு ந‌ம‌க்கு செட்டாக‌ல‌, ப‌கல்ல‌ இங்க‌ருந்து போம்போது மாரிய‌த்தாள கும்புட்டுகிருவேன், அங்க‌ருந்து வ‌ரும்போது தென்ப‌ழ‌னி முருக‌ன‌க் கும்புட்டுக்கிருவேன். சும்மா சொல்ல‌க்கூடாது…தென்ப‌ழ‌னி முருகனுக்கு அம்புட்டு ச‌த்தி பாத்துக்க‌, கொக‌க்குள்ள‌ சின்ன‌தா ஒக்காந்திருந்தாலும் கீர்த்தி பெருசு,

முருகன் அண்ணனின் வீட்டிற்கு வெளியே மரப்பலகையில் உட்கார்ந்தேன். கதவைத் தட்டிக் கூப்பிடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. அங்கயே உட்கார்ந்திருந்தேன். அவரைப் பார்த்துவிட்டு அவர் தடுத்தாலும் கிளம்பி விட வேண்டும். வண்டிப்பெரியார் போய் அங்கிருந்து வேலை கிடைக்குமிடங்களுக்கு நகர்ந்து கொள்ளலாம்.

அவள் தேடி வந்தால் என்ன செய்வது என்று மீண்டும் தோன்றியது. எதற்கெடுத்தாலும் அவளை சந்தேகப்பட்டிருக்கத் தேவையில்லைதான். இங்கிருக்கும் பெண்களில் இருந்து எனக்கு மீனாச்சியை வித்தியாசப்படுத்திப் பார்க்கத்தெரியவில்லை. அவளின் இயல்பான சிரிப்பும், பேச்சும் சகஜமாகப் பழகும் விதமும் எனக்குப் பிடிக்கவில்லை. இங்கு யாரும் சகஜமானவர்கள் இல்லை என்பது அவளுக்குப் புரியவில்லை. பெண்கள் உட்பட என்பது என் எண்ணம்.. சொன்னால் சட்டென கேட்கும் புத்தியுமில்லை. இரவு எட்டுமணிக்கு முருகேசு வாசக்கதவுபக்கம் சாய்ந்து நின்று பேசிக்கொண்டிருக்கிறான்.

உள்ளே அவரின் குறட்டை ஒலி ஒன்றும் கேட்கவில்லை. சட்டென கதவு திறக்க பலகையில் இருந்து எழுந்தேன். அண்ணன் வெளியே வந்தார். என்னைக் கண்டும் அவர் முகத்தில் எந்த அதிர்ச்சியுமில்லை. மெதுவாக என்னைக் கடந்து சென்று சிறுநீர் கழித்தார். நான் நின்றுகொண்டிருந்தேன். நான் அமர்ந்த இடத்தில் வந்து அமர்ந்தார். சிறிது நேரம் நானோ அவரோ ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை, என்மீது அவருக்குக் கோபம் தணியவில்லை. தணியும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. அவர் மீனாட்சிக்கு எப்பொழுதும் வக்காலத்து. ’பொண்டாட்டி கட்டிப் பொழக்கத் தெரியாதவனுக்குப்போய் கட்டி வச்சேன் பாரு’ என்ற சலிப்பு,

அவரே மெல்லிய குரலில் தொடங்கினார் ’சந்தானம்,

அதிர்ந்து அவர் பக்கம் திரும்பினேன். அவர் தலை குனிந்தவாறே உட்கார்ந்திருந்தார்.

’எம்பங்காளிகூட இங்க லாரில வருவேன். நான் கிளீனரு அவரு ட்ரைவரு..மரம் ஏத்த.. மஹாராஜா மெட்டத்தாண்டி போவோம். ஒண்ணும் அமையலன்னா ரெண்டு நாள் கூடச்செல்லும் இங்கருந்து கெளம்ப..

யாருக்கோ சொல்வதுபோல் லேசாக முணுமுணுத்தவாறு பேசினார். அவர் எனக்கான அறிவுரையை சுற்றி வளைத்தே சொல்லுவார். அவர் பேச்சு நிற்குமிடத்தில் அவரின் காலில் விழுந்துவிட்டு விறுவிறுவென கிளம்பிவிடவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

’ஒருநா லாரி தங்கிப்போச்சுயா. வண்டிய வீடுக இருக்க எடத்துக்குக்கொண்டு வந்து விட்டுட்டு, என்னனைய இருக்கச் சொல்லிட்டு பங்காளி எங்கயோ போனாப்ல. வெளியகிளிய போவாப்லன்னு நெனச்சேன், கையில எதுவும் எடுத்துட்டு போல.. பேட்ரி லைட்ட குடுக்கலாம்னு பின்னாடி போனேன். கொஞ்ச தூரத்தில இருக்குற வீட்டத்தட்டி உள்ள போய்ட்டாப்ல.. எனக்கு ஒண்ணும் புரிய பஸ்ட்டு. நம்ம சொந்தக்காரவுக யாரும் இங்கனக்குள்ள இல்லியே..செரி வரட்டும்னு வெளிய ஒக்காந்துருந்தேன். நல்ல கூதலு, திடீர்னு பக்கதுல இருக்குற வீட்டுலருந்து ஒருத்தி வெளிய வந்தா’

ஏனோ அவர் குரல் அழுவதுபோல் எனக்குத் தோன்றியது. சிறிது நேரம் பேசாமல் இருந்தார். தோளில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தார். கண்களை அழுத்தித் துடைத்தவாறு தோன்றியது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.

’என்ன குளிருல இங்கன ஒக்காந்திருக்கீகன்னு கேட்டா.. நான் என்னத்த பேசுறதுன்னு தெரியாம நின்னேன். உள்ள வாங்கன்னா..இப்பிடியே நின்னா என்னாவுறதுன்னா. யாருடா இவ இம்புட்டு உரிமையா கூப்டுறாளேன்னு எனக்கு ஒன்னும் புரியல. உள்ள வாங்கங்ககுறேன்லன்னா.. பொண்டாட்டி புருசன அதட்டுற மாதிரி.’

இப்பொழுது மெதுவாகத் தலையை நிமிர்ந்து பார்த்தார். அவ்விருட்டிலும் அவர்கண்கள் கலங்கியிருப்பது எனக்கு தெரிந்தது. இரு மணிபோல.. நான் அடித்துக் கீழே தள்ளியபோது அரண்டு போய் அங்கேயே உட்கார்ந்திருந்தார். அக்கா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவளின் சத்தம்கூடக் கேட்கவில்லை. என்னை நம்ப முடியாமல் பார்த்த அவர் கண்கள் சட்டெனப் பொங்கி வருவதை அரை வினாடி கண்டேன். அப்பொழுது பார்த்ததுபோலவே இருந்தது அவர் கண்கள் இப்பொழுது. எனக்குள் என்னைப்பற்றிய அசிங்கமான மதிப்பீடு நான் இப்பொழுது கசப்புடன் ஏற்றுக்கொண்டேன். இதுவரை அதனை மறுத்தே என்னை சமாதானம் செய்திருந்தேன்.

’மந்திருச்சுவிட்ட மாதிரி அவகூட போனேன் தம்பி. தட்டெடுத்து வச்சா. சோத்தையும் கொழம்பையும் போட்டா. என்ன ஏதுன்னு கேக்காம சாப்ட்டேன். எல்லாத்தையும் ஒதுங்க வச்சிட்டு என்னக் கூப்டு போய் கட்டில்ல படுத்துக்கிட்டா’

அவர் என்ன பேசுகிறார் என்று எனக்கு விளங்க ஆரம்பித்தது.

’நான் எந்திரிக்கும் போது, விடிஞ்சதும் வண்டியெடுக்க வேண்டியதுதான, எதுக்கு இந்நேரத்திலன்னா? என்காலுக்கு கம்பளிய இழுத்துப் போத்திவிட்டா.. நான் போம்போது, சமயலுக்குக் காசுகுடுங்கன்னு அம்பது ரூவா வாங்கிக்கிட்டு, செரி பத்திரமா போய்ட்டு வாங்கன்னா..நான் மறையரவரைக்கும் நின்னு பாத்திட்டு அப்பறம்தேன் உள்ள போனா.. எனக்கு என்னமோ ஆயிப்போச்சு தம்பி.. எங்கவீட்ல ஒரு பொம்பளயாள் கெடையாது. ஏதோ அவ பேச்சும் நடத்தையும் ரொம்பநாளு கூட கெடந்தவமாதிரி என்னமோ..’

இப்பொழுது அவரின் பேச்சு ஒரு சுவாரசியமான கதை சொல்ல வருபவர் போல் வேகமாய் இருந்தது, ஆனால் வார்த்தையைத் தடுக்கித் தடுக்கிப் பேசினார்.

’அடுத்தவாட்டி, ஏரில வண்டிய கழுவிட்ருக்கும்போது பாத்தா, கைய புடிச்சுக் கூட்டிட்டு வந்துட்டா, வரும்போது கருவாடு புடிக்குமான்னு கேட்டுக் கடையில வாங்கிக்கிட்டா.. வீட்டுக்கு வரலன்னு கோவம் வேற.. ஆமா, இல்லன்ங்கிறத தவுத்து நான் எதுவும் பேசிக்கல்ல.. வேலைக்குப் போய்ட்டு வர புருஷனப் பாத்துக்கிறமாதிரி பாத்துகிட்டா.

அவர் யாரைச்சொல்கிறார் என்று புரிந்து நான் விக்கித்துப்போனேன்.

’அப்பறம் ரொம்ப நாளைக்கு அந்தப்பக்கம் லாரி போவல.. எனக்கு ஒருதடவ போய் பாத்துட்டு வந்திருவோமான்னுகூட ஒரு நெனப்பு.. அப்பத்தேன் எனக்கு வீட்டுல பொண்ணு கட்டனும்னாங்ய.. எனக்கு என்னமோ ரெண்டாங்கல்யாணம் பேசுறமாதிரி இருந்துச்சு. முடியாதுன்னுட்டேன். பங்காளி வந்து வீட்ல நம்ம சேதிய சொல்லிவிட்டாப்ல. பெரிய பிரச்சன பண்ணாங்ய.. தேவுடியா பின்னாடி திரியிறேன்னு ஒரே சண்டக்காடு. இவங்யளுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்கன்னு தெரியல.

என்னைக் கண்களைப் பார்த்து ‘எனக்கே ஒன்னும் புரியலங்கும்போது.. அவங்யட்ட என்னத்த சொல்லறது சொல்லு..

சொல்வதைச் சரியாய் சொல்கிறோமா என்று அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது போல் தோன்றியது எனக்கு. தலையை ஒரு மாதிரி அசைத்துக்கொண்டார்.

‘அவகிட்ட படுத்தசொகம் ஒண்ணும் எனக்கு நெனப்புல இல்லயா, ஆனா அவ எங்கிட்ட பேசுன பேச்சும், சிரிப்பும்… பொண்டாட்டிகெணக்கா.. ஒரு உரிமையா.. ’ எப்படியாவது நெஞ்சுக்குள் சிக்கிக்கொண்ட நெனப்பை வார்த்தையாக்க முடியாமல் தோற்றுபோனார் ‘’என்னத்த சொல்ல.. மனசு அவள என்னமோ நான் கட்டிக்கிட்டவமாதிரிதேன் காம்பிச்சுச்சு..’

மூச்சு இரைத்துக் கொஞ்சம் நின்றார்

’கெளம்பி நேரா இங்கன வந்துட்டேன்.. வந்து பாத்தா கொடுமையப்பாரு.. இவ வீட்டுல மொடங்கிக் கெடக்கா முடியலன்னு.. வாடி ஆஸ்பத்திரிக்குன்னா வரமாட்டேங்குறா.. ரெண்டு போடு போட்டு இழுத்துட்டுப் போனேன். ‘டாக்டரு நோயி வந்து போச்சுப்பாண்ட்டாரு…’

அழுகைய அடக்கமுடியாமல் கேவினார்..

’அவளுக்கு அதப் பத்தி ஒன்னும் புரியல சந்தானம்.. ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு சரியாப்போயிரும்லன்னு கேட்டு சிரிக்கிறா.. ’

அவர் அழுவதைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.

’தர்மாஸ்பத்திரி வெளிய ரோட்டுல நிக்கிறேன் அவளவச்சுகிட்டு. என்னபன்றதுன்னு புரியல. அப்பரம் நேரா அவள பஸ் ஏத்திவிட்டேன். ஒருவாரத்துல எனக்குண்டானத குடுங்கன்னு சண்டய போட்டு எங்கண்னேமாருகட்டருந்து வாங்குனேன். இங்கவந்து அவ கழுத்துல வீட்டுல வச்சே ஒரு தாலியக் கட்டினேன். வேணாம்னு கேவிக்கேவி அழுகத்தேன் செஞ்சா. ஒரு போடு போட்டு பேசாமக்கெடடின்னுட்டேன். ஆரம்பத்தில அப்பப்ப சொந்தக்காரங்ய வந்து மல்லுக்கு நின்னாங்ய..’

ஆவேசம் வந்தது போல் ‘சத்தியப்படிக்கு என்ன பேச்சு கேட்டாலும் நான் அதப்பத்திக் கவலப்பட்டது கெடையாது..இவ்ளோ நாளா அவள நல்லாத்தேன்..மருந்து மாத்திர, சிரிப்புன்னு ஒரு கொறையுமில்லாம..’ வார்த்தையை முடிக்க முடியாமல் திணறினார்.

பின் மெல்லிய வெளிச்சத்தில் மீண்டு வந்த காட்டையும், நெடிந்து நின்ற மலையையும் பார்த்தபடி பேசாமல் இருந்தார்.. திறந்திருந்த கதவுப்படலைப் பார்க்க முடியாமல் நான் தயங்கி நின்றேன்.

முருகண்ணன் மீண்டும் முகத்தையும் கண்களையும் துடைத்தவாறே

‘கொஞ்சம் எனக்குக் கூடமாட இருய்யா.. சொந்தக்காரவுக யாரும் இதுக்கு வரமாட்டாக..நானாத்தேன் பாத்தாகனும்’ முடிஞ்சா மீனாட்சிய வரச்சொல்லு.. என்றார்

எனையறியாமல் தேம்பியபடி சரி என்று தலையாட்டியவாறே அவர் பின்னே நடந்து வீட்டுற்குள் சென்றேன்…

முந்தைய கட்டுரைபயணம் இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைதனசேகரின் ‘உறவு’- கடிதங்கள்