வாசிப்பின் வாசலில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

என் பெயர் ஸ்ரீதர் . ஒரு தனியார் நிறுவனத்தில் IT engineer ஆக வேலை செய்கிறேன் .

சிறு வயதில் இருந்து படிக்கும் ஆர்வம் உள்ளது . பொதுவாக வாரப் பத்திரிகை (ஆனந்த விகடன் , துக்ளக்,கடந்த 15 வருடங்களாக ) ,சுஜாதா புத்தகங்கள் மற்றும் சில ஆங்கில நாவல்கள் படித்துள்ளேன் .சுஜாதா புத்தகங்கள் சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகிறது.

சமீப காலமாக உங்கள் blog படிக்கிறேன் . உங்களது புத்தகங்களைப் படிக்க மிகவும் ஆசைப் படுகிறேன் .ஆனால் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை . தவறு என்னிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது . கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டுமனில் , S .ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நடந்து செல்லும் நீருற்று” படித்தேன். ஆனால் அதை முழுவதுமாக உள்வாங்கிகொள்ள முடியவில்லை . அதனால் தொடர்ந்து அவர் புத்தகங்களைப் படிப்பது இல்லை.

இந்த வாரம் விகடனில் வண்ணதாசனஂ எழிதிய”கணியான பின்னும் நுனியில் பூ ” என்ற கதை படித்தேன் . மிகவும் பிடித்து இருந்தது .அந்தக் கதையை என்னோடும் என் பெண்ணோடும் பொருத்திக் கொண்டு பார்க்க முடிந்தது . ஆனால் அந்தக் கதையைப் புரிந்து கொண்டதாக சொல்ல முடியவில்லை . ஒரு இயலாமை வாடஂடுகிறது.

உங்கள் புத்தகங்களை எப்படி அணுகுவது?

உங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
​ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்,

ஒவ்வொருநாளும் நான் இத்தகைய கடிதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் மீண்டும் பதிலளிக்கிறேன். என் இணையதளத்தில் நீங்கள் வாசிப்பு என்று தேடினாலே இதற்குப்பதிலாக பல கடிதங்களை, கட்டுரைகளைக் காணமுடியும்.

இருந்தாலும் தொடர்ந்து பதிலளிக்கிறேன். காரணம் இப்பிரச்சினை நம்முடைய குடும்பப் பண்பாட்டுச்சூழல், கல்விச்சூழலின் விளைவு. கலைகளை இலக்கியத்தை நாம் அறிமுகம் செய்வதே இல்லை. ஆகவே அறிமுகம் என்றுமே திகைப்பூட்டுவதாக உள்ளது

கீழ்க்கண்டவிதிகளை சொல்கிறேன்

1. எந்தக் கலை, அறிவுத்துறைக்குள் நுழைந்தாலும் தொடர்ச்சியான ஈடுபாடுமூலமே அதை உள்வாங்கிக்கொள்ளமுடியும். ஆரம்பத்தில் திகைப்பை அளிப்பவை விரைவிலேயே பிடிகிடைக்கும். ஆகவே கொஞ்சம் வாசித்தபின் விட்டுவிடாமல் தொடர்ந்து வாசிப்பது அவசியம்

2. புரியாத , புதியதான விஷயங்களைக் கண்டதும் அதில் இருந்து விலகிவிடுவது மிகப்பிழையான விஷயம். அவற்றைத் தொடர்ந்து யோசித்தும் விவாதித்தும் எதிர்கொள்வதே நல்ல வழி

3. புரியாதவிஷயங்களைக் கண்டு எரிச்சல்கொள்வதும் அந்த ஆசிரியன்மீது வெறுப்புக் கொள்வதும் மிக அபத்தமான மனநிலை. பிரச்சினை அந்தப்படைப்பில் இல்லை, நம்மிடம் இருக்கிறது என உணர்ந்தாகவேண்டும்

4. இலக்கிய ஆக்கங்களைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த வழி விவாதிப்பதே. நேர்விவாதம், இணைய விவாதம். இலக்கிய விமர்சனங்கள், மதிப்புரைகள் , குறிப்புகள் அனைத்தையும் வாசியுங்கள். வாசல்கள் திறக்கும்

5. எந்நிலையிலும் நமக்கு கொஞ்சம் மேலே இருக்கிற, அதாவது கொஞ்சம் சவாலாக இருக்கிற நூல்களை மட்டுமே வாசிக்கவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைசிந்தனையின் தேங்குசுழிகள்
அடுத்த கட்டுரைசாதி-வர்ணம்-முக்குணங்கள்