பறவைச்சரணாலயங்கள்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். நான் பூபாலன்.ஏற்கனவே சில கடிதங்கள் தவிர கணிணி,செல்லிடப்பேசி குறுந்திரை என தினமும் தொடர்ந்து உங்களுடன் உரையாடி க்கொண்டிருப்பவன்.பிறந்து வளர்ந்தது,சித்திரங்குடி,முதுகுளத்தூர் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம்.தற்போது பிழைப்பிற்காய் சென்னையில்.எங்கள் ஊர் சித்திரங்குடி இந்தியாவின் மிகத்தொன்மையான வலசைப் பறவைகளின் வாழிடம்.(http://www.forests.tn.nic.in/WildBiodiversity/bs_cbs.html).சில நூற்றாண்டுகளாகவே பல்லாயிரக்கணக்கில் வெளிநாட்டுப்பறவைகள் வந்து தங்கி தலைமுறைகளை உற்பத்தி செய்து செல்லும் தொன்மையான பறவைகள் சரணாலயம்.தொண்ணுறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அப்பத்தா, தான் இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வரும்போதே பல மாமாங்களாக இங்கு பறவைகள் வந்து போவதாக ஊரில் பேசக்கேள்விப்பட்டதாகச் சொல்வார்.ஆனால் இதன் அமைவிடமோ என்னவோ, வேடந்தாங்கல் போன்று புகழ் பெறாமல் போனது பெருந்துயரம்.கோணங்கி தன் பயணத்தில் எங்களூருக்கு இரு முறை வந்து (அவர் மொழியில்) பறவை மனிதர்களோடு பேசிப்போனதாக சொன்னார்.

என் பள்ளிநாட்களில் நாள்தோறும் பள்ளி முடிந்து திரும்புகையில் எங்கள் கண்மாயின் கரையில் அமர்ந்து ஒவ்வொரு மரத்திலும் கூடுகட்டி அமர்ந்திருக்கும்,செங்கால் நாரை,கூழைக்கடா,சாம்பல் நாரை,அரிவாள் மூக்கன்,கரண்டி மூக்கன், நீர்க்காகம், வக்கா, சிறகி, பாம்புத்தாரா,முக்குளிப்பான்,பூநாரை எனப் பல்வேறு பறவைகளை வெறுமனே ரசித்தது எத்தனை ஆன்ம ரீதியான அவதானிப்பு என்பது இப்போது புரிகிறது. நாங்கள் எங்கள் ஊருணியில் குளித்துக்கொண்டிருக்கும் போதே தலையை உரசியபடி ஓடுதளத்தில் இறங்கும் வானூர்தியென நீரில் இறங்கி மீன்களை அள்ளிச்சென்று கூட்டிலிருக்கும் குஞ்சுகளைத் தன் வாய்க்குள் தலைநுழைத்துத் தொண்டையின் அடியில் தொங்கும் தோல்பையில் மீன்களை உண்ணச்செய்து கூழைக்கடாக்கள் தந்தது எல்லாம் பேரின்பக் காட்சிகள். இன்று இராமாநாதபுர மாவட்டத்தின் சாபக்கேடான வேலிகாத்தான் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் பெய்யும் குறைந்த மழையும் உறிஞ்சப்பட்டுக் கடும் வறட்சியில் அழிந்து கொண்டிருக்கிறது எங்கள் சித்திரங்குடி.ஒருமுறை என் அப்பா “பாய் ஒருத்தர் வந்தாருப்பா,அதுக்கப்பறந்தேன் நம்ம ஊர் பறவைகள் சரணாலயமா அரசாங்கம் கண்டுக்கிடுச்சு” என்று சொன்னார்.(ஒருவேளை அந்த பாய் சலீம் அலியாக இருக்கக்கூடும்,தேடிப்படிக்கணும்).இன்று மன்னார் வளைகுடா உயர்கோள் காப்பக வட்டத்துக்குள் சித்திரங்குடி கொண்டுவரப்பட்டும் நீராதாரத்தைப் பெருக்கும் பிரக்ஞையற்ற வனத்துறை அதிகாரிகளால் வெறும் வண்ண போர்டுகள் வைப்பதில் பெரும்பணம் வீணடிக்கப்படுகிறது.

நிற்க….!

சென்னையில் இன்று நகரின் எல்லைக்குள் வரும்ஒரே சதுப்புநிலமான பள்ளிக்கரணை-சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தை மாநகராட்சி குப்பைக் கிடங்காக்கி அழித்ததோடு மட்டுமல்லாது,அந்தப்பகுதியை சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவித்து லாரிகளில் மண்ணைக் கொண்டுவந்து கொட்டி மேவி மென்பொருள் பூங்காவாக்கி அழித்தார்கள்.சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு எஞ்சிய பாதிக்கும் குறைவான சதுப்புநிலப்பகுதி இன்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக மிகப்பெரிய மாற்றங்களைக் காணமுடிகிறது.ஆம், என் ஊரில் நான் கண்ட காட்சிகள் இங்கும் இப்போது.கடந்த இரண்டு ஆண்டுகளாக வலசைப் பறவைகள் குவிந்து வருகிறன.சித்திரங்குடி இயல்பிலேயே என்னுள் ஊட்டிய பறவை அவதானிப்பு இங்கும் என்னை அதற்குள் தள்ளுகிறது.நல்வாய்ப்பாய் நாள்தோறும் எனது அலுவலகம் செல்லும் பாதையாய் இந்த சதுப்புநிலப்பகுதி அமைந்தது பெருமகிழ்ச்சி.

நேற்று நான் எங்கள் ஊரிலும் கண்டிராத சில பறவைகளை அங்கு காண நேர்ந்தது.வாயில் கிளியை ஒத்த சிவப்பு நிற அலகுடன் காட்டுக்கோழியொத்த சிறிய கருப்புநிற உடலுடன் சில பறவைகள் மற்றும் பூநாரைகளை ஒத்த சில பறவைகளையும் காணமுடிந்தது.

பூபாலன்

அன்புள்ள பூபாலன்

தமிழகத்தில் உள்ள பறவைச்சரணாலயங்கள் பலவும் மெல்லமெல்ல அழிந்துவருகின்றன. காரணம் ஏரிகள் பராமரிக்கப்படுவதில்லை. அவற்றுக்கு நீர்வரும் பாதைகள் பராமரிப்பில்லாமல் அழிகின்றன. விளைவாகக் கோடையில் சீக்கிரமே அவை வற்றிவிடுகின்றன. கூந்தங்குளம் பறவைச்சரணாலயத்தில் பறவைகள் அனேகமாக வராமலாகிவிட்டன. பள்ளிக்கரணை பிழைக்கட்டும்

தமிழக அரசும் மக்களும் அவர்களின் மாபெரும் வரலாற்றுச்சொத்துக்களான ஏரிகளைக் கையாளும் விதத்தில் உள்ள அராஜகமும் அறியாமையும் அச்சமூட்டுபவை. கூண்டோடு அழியப்போகும் ஓர் இனத்திடம் மட்டுமே இந்த அளவுக்குப் பரிபூரணமான அறியாமை இருக்கும் என்றுகூட சிலசமயம் தோன்றிவிடுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைநம்மில் வாழ்தல்
அடுத்த கட்டுரைபுதுமைப்பித்தன், பிரமிள்,தஸ்தயேவ்ஸ்கி-கடிதங்கள்