கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
இப்போது திரும்பவும் சத்தியசோதனை வாசித்து வருகிறேன். என் கவனம்
எல்லாம் காந்தியின் ஆளுமை மீது இருந்தது ,இப்போது இந்நூல் ஒரு
சுவாரஸ்யமான நூலாக எனக்கு மாறி விட்டது. இந்நூலைப் படிப்பதில் எனக்கு ஒரு
சுயநலம் இருந்தது. அடிப்படையில் தயக்க குணமும் பயந்த சுபாவமும் கொண்டவன்
நான்.ஓரளவிற்கு நானாக முயன்று என் குணத்தை மாற்றிக் கொண்டேன்,இருந்தும்
பயம்.

ஜெமோ,

உங்களுடைய “வெல்லண்ட் கால்வாய்” பத்தியைத் தற்செயலாகப் படித்தேன். ஒரு சுவாரசியமான தகவல், ஒரு 14 வயது அமெரிக்க சிறுவனுடன் விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் செவ்விந்தியர்களைப் பற்றி எங்களுடைய பேச்சு திரும்பியது. நான் செவ்விந்தியர்களுக்குக் குதிரையை அறிமுகப்படுத்தியது ஐரோப்பியர்கள்தான் என்று சொன்னேன், ஆனால் அவனோ குதிரைகளைக் கொண்டுவந்தது ஸ்பானியர்கள்தான் ஐரோப்பியர் அல்ல என்று சொன்னான், நான் ஸ்பெயின் ஐரோப்பாவில் உள்ளதை சுட்டிக் காட்டினேன், அவனோ “வெள்ளை ஐரோப்பியர்கள்” என்றால் அது இங்கிலாந்தை சார்ந்த ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டும்தான் மற்றவர்கள் அல்ல என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தான். இத்தனைக்கும் அவனுடைய குடும்பப் பெயர் ஜெர்மனியைச் சார்ந்தது. வெள்ளையர்களுக்குள் வேறுபாடு உள்ளது தெரியும், ஆனால் இவ்வளவு தூரம் வேறுபாடு இருப்பது அவனுடன் உரையாடும்போதுதான் தெரிந்தது.

நன்றி
சு செல்வபாரதி

அன்புள்ள செல்வபாரதி

நம்முடைய சுயம் எப்படி நம்மைச்சூழ்ந்துள்ள அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இது. என்னுடைய அமெரிக்கத்தமிழ்நண்பர் சொன்னார். அவர் மகன் அவரிடம் சொன்னான், நீ ஒரு இந்தியன் நான் அமெரிக்கன் என்று. அவர் தன்னை அமெரிக்கன் என்று நம்பிக்கொண்டிருப்பவர்

ஜெ

அன்புள்ள ஜெ,

தற்போது வரும் திரை இசைப்பாடல்களில் முழுவதுமாகக் கர்நாடக இசை மறக்கடிக்கப்படுவதையும், அதன் சாயல் கூட இல்லாத வெறும் கூச்சல் மட்டுமே பாடல்கள் ஆனதைக் கவனித்தீர்களா ?! எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், என்.சி. வசந்தகோகிலம் போன்ற கடந்த தலைமுறைப் பாடகிகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். இவர்களைப் போன்றவர்கள் வரும் தலைமுறையில் தோன்றமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. ‘கொலைவெறி’ போன்ற பாடல்களே இதற்கு சாட்சிதானே!

முஹம்மது ஹாரூன்

அன்புள்ள ஹாரூன்

எல்லாக்காலத்திலும் நம்முடைய இசைரசனை மூன்று போக்குகள் கொண்டதாக இருந்துள்ளது. ஒன்று நாட்டுப்புற இசை. இன்னொன்று செவ்வியல் இசை. மூன்று மேற்கத்திய இசை. நாற்பதுகளில் வந்த படங்களிலேயே இந்த எல்லா வகைக்குள்ளும் பாடல்கள் அமைந்திருக்கும். அதற்கு முன்னர் கல்யாணக்கச்சேரிகளிலேயே இங்கிலீஷ் நோட்டு பாடப்பட்டுவந்தது

ஆனால் நீங்கள் சொல்வதுபோல சமீபமாக கர்நாடக இசை சார்ந்த பாடல்கள் அருகி வருகின்றன என்ற எண்ணம்தான் எனக்கும். குறிப்பாக ‘மெலடி’ அதிகமாக வருவதில்லை. இளையராஜாவின் பொற்காலத்தை நினைத்து ஏங்கிக்கொள்ளவேண்டியதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனுக்கு விருது
அடுத்த கட்டுரைகடிதங்கள்