கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்.

நான் வ.அதியமான் ஏழெட்டு ஆண்டுகளாய் உங்களெழுத்தைப் பின்தொடரும் வாசகன்.

ஈதென் முதல் மடல்.

சமீபமாய் வாசித்த “நான்கு வேடங்கள்“எனக்குள் பல திறப்புகளைக் கொணர்ந்தது. 31 வயது நிறைந்தும் நாளிதுவரையில் வெறும் பகற்கனவுகளும் தீவிர இலக்கிய வாசிப்பும் செவ்வியல் இசை கேட்பதும் மெய்த்தேடல் சிந்தனையுமாய்த் திரிவதைத் தவிர வேறெதற்கும் துணிவற்ற; உலகியல் வாழ்வில் முழுமையாய்த் தோல்வியடைந்தவன்.

என் நிலைக்குத் தாழ்வுமனப்பான்மையும் ஆளுமைக்குறைவும்
துணிவின்மையும் காரணங்கள் என்பதை சமீபமாகவே
தெளிந்தேன். என் வளரிளம்பருவம் முழுதும் ஓஷோவும் பாலகுமாரனும் பாலமுரளிகிருஷ்ணாவுமாய்க் கழிந்ததிலிருந்து என் ஆளுமையை கணித்துகொள்ள ஏலும்.

நான்கு வேடங்களிலொன்றையும் செய்ததில்லை என்பதறிய மனம் ஆற்றாமையால் மேலும் செயலிழக்கிறது.

என் ஐயம் இதுவே

கலைகளின் தீராக் காதலென்பது மானுட அக விடுதலைக்கான பெருவேட்கை மட்டுமே எனில் தன் கலைத்திறமைகளைத் தொழிலாய் மட்டும் செய்து பொருளீட்டுவோர்கள் (உதாரணமாய் திரைத்துறை கலைஞர்கள் வணிக எழுத்தாள ,ஓவிய, இசைக் கலைஞர் முதலானோர்) உலகியல் வாழ்வின் வெற்றி மட்டுமே இலக்காய் கொண்ட மற்றவர்களிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர்களாய்த் தோன்றவில்லை. அவர்கள் அகவிடுதலைக்கான வேட்கை அற்றவர்களா?

மேலும் தன்கலைத்திறமையைப் பொருளீட்டும் தொழிலாய்க் கொள்வதை நான்கு வேடங்களில் எந்த வேடமாய்க் கொள்வது?(நீங்களும் கூடத் திரைக்கு எழுதுவதைத் தொழில் என்றே குறிப்பிடுகிறீர்கள்) பொழுதிருப்பின் தெளிவுறுத்த வேண்டுகிறேன்

அன்புடன்

அதியமான்.

அன்புள்ள அதியமான்.

ஒருவருடைய வாழ்க்கையின் தோல்விக்கு அவரது ஆளுமையின் எவ்வளவோ சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். அதை அவரே தன்னைத்தானே கூர்ந்து அவதானிப்பதன் மூலம் கண்டுகொள்ளமுடியும். அப்படி அறிந்தவற்றை அவர் எப்படி களைந்து கொள்கிறார் என்பதுதான் அவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

நான் சொன்னவற்றை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று ஐயப்படுகிறேன். கலைஞர்கள் எல்லாரும் அகத்தை அறிந்தவர்கள், விடுதலை அடைந்தவர்கள் என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்?

கலை என்பது வெறும் தொழில்நுட்பப் பயிற்சியாக இருக்கமுடியும். அது தொழிலாக மட்டுமே இருக்கமுடியும். எத்தனையோ பாரம்பரியக் கலைகள் அப்படி இருக்கின்றன

உங்கள் பிரச்சினைகளில் முக்கியமானது என இக்கடிதம் வழியாக நான் புரிந்து கொள்வது நீங்கள் புதிய விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதில்லை என்பதே. நீங்கள் ஏற்கனவே எதை சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களோ அதன் பகுதியாகவே வாசிப்பவற்றை எல்லாம் இணைத்துக்கொள்கிறீர்கள். விளைவாக எதையுமே அறிந்து கொள்ள முடியாதவராக நீங்கள் ஆகக்கூடும்

இதைப்பற்றி யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எங்கள் சேவை நிறுவனம் சில கிராமங்களில் சில பணிகளை செய்கிறது. அதற்காக நேற்று கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு சென்றிருந்தேன். வழியில் பழையாறையும் சென்றிருந்தேன். இது பழையாறை கோயிலின் இன்றைய நிலை. பராமரிப்பு இல்லை.

நம் தமிழ் நாட்டில் புராதன சின்னங்களைக் காப்பதில் சற்றும் அக்கறையில்லை என்றே தோன்றுகிறது. வட இந்தியாவில் சரித்திர சின்னங்கள் இன்று ஓரளவாவது பாதுகாக்கப்படுகின்றன.
இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் இன்று அவர்களிடமில்லை. உண்மையில் கும்பகோணம் நகரில் மட்டுமே பல பிரசித்தி பெற்ற பெரிய கோயில்கள் உள்ளன. அவற்றின் எந்த நிலங்களும் அவர்களுக்காக இல்லை.
இந்த கோயில்களைப் பராமரித்துப் புராதன சரித்திர ஆன்மீக தளங்களாக பேசப்பட்டாலே இந்த கோயில்களுக்கு வருவாயும் வரும். ஆனால் யாருக்கும் விருப்பமில்லை. இன்று குடந்தையை சுற்றி பரிகார ஸ்தலங்கள் மட்டுமே சற்று செழிப்புடன் காணப்படுகின்றன. அதுவும் அந்தப் பரிகார தெய்வங்கள் மட்டுமே. நிறைய பக்தர்களுக்கு அந்தக் கோயிலின் முக்கிய ப்ராதானிய தெய்வம் கூட யாரென்று தெரிவதில்லை.
இன்று குடந்தை நகரவாசிகளுக்கு அவர்கள் வாழும் நகரின் பெருமையும் அறிந்திருக்கவில்லை. இந்த நகரத்திலேதான் என்னுடைய பல கோடை விடுமுறைகள் கழிந்திருக்கிறது. அந்தத் தெருக்கள் அதன் மணம் அந்த விதவிதமான மக்கள் இன்று எதையுமே காணவில்லை. பல பழமையான உணவகங்களும் இல்லை. எங்கு பார்த்தாலும் அந்நிய கருப்பு பண முதலீட்டால் ஏற்பட்டிருக்கும் பிரம்மாண்டமான நகைக் கடைகள். இதையெல்லாம் பார்த்தால் எங்கிருந்துதான் இந்த அளவு பணபுழக்கம் ஊற்றெடுக்கிறது என்றே புரியவில்லை.
குடந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுவாகவே இன்றும் மண் வளமாகவே இருக்கிறது. ஆனால் விவசாயக் கூலியாட்கள் கிடைப்பதில்லை. இன்றைய தலைமுறை வெளிவேலைகளுக்கே செல்கிறது. பெரும்பாலான கிராமங்களில் நாற்பது வயதிற்கு அதிகமானோர் அதிகமிருக்கிரார்கள். ஆனால் இன்று எல்லோரும் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். ஒரு நூறு வருடத்திற்குப் பின் இந்தப் பகுதி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யகூட முடியவில்லை.

அன்புடன்
திருச்சி வே விஜயகிருஷ்ணன்

அன்புள்ள விஜயகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்றுள்ள நிலையின் ஒரு சித்திரம் உங்கள் கடிதத்தில் உள்ளது. தஞ்சையின் கிராமங்களில் மிகப் பெரிய கோயில்கள் இன்றுள்ளன. ஆனால் அக்கோயில்களைப்பாதுகாக்குமளவுக்குப் பெரிய சமூக அமைப்பு இல்லை. கொஞ்சம் பணமுள்ளவர்கள்கூட வெளியூர் சென்றுவிட்டனர். விவசாயத்தை நம்பியிருக்கும் சிலரே எஞ்சியிருக்கிறார்கள். ஆகவே கோயில்கள் அழியும் நிலையில் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன

மறுபக்கம் மக்கள் செல்லும் கோயில்கள் முழுக்க ஏகப்பட்ட கான்கிரீட் கட்டிடங்களை எழுப்பி, ஆசியன் பெயிண்ட் அடித்து சீரழிக்கிறார்கள்

ஜெ

நான்கு வேடங்கள்

முந்தைய கட்டுரைபக்தி ஞானம்-கடிதம்
அடுத்த கட்டுரைசாங்கியமும் வேதங்களும்