வாசிப்பின் நிலைகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

கடந்த சில வாரங்களாக உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். உண்மையைச் சொன்னால் நான் அதிகமாகப் படிப்பதில்லை. படித்து தெரிவதற்கு ஒன்றுமில்லை என்ற ஒரு மூட நம்பிக்கை / சோம்பேறித்தனம். உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது கூடப் பொறுமையில்லாமல் ஒன்றிரண்டு பத்தி தாண்டி ஓடி ஓடிப் படிப்பேன். எளிதான, சிக்கலற்ற, மாற்று சிந்தனை கொண்ட படைப்புக்களைப் படித்து ஒரு வாசகனாக என்னைத் தயார்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் படிக்கும் நண்பர்கள் யாரும் இல்லாததால் உங்களிடம் கேட்கத் தோன்றியது – வாசக அறிவு அற்ற என் போன்றவர்களுக்கு தமிழில் நல்ல படைப்புகளில் சிலவற்றை சிபாரிசு செய்ய முடியுமா?

நன்றியுடன்,

லட்சுமணன்

அன்புள்ள லட்சுமணன்

வாசிப்புக்கு குறுக்குவழிகள் ஏதுமில்லை என்பதே உண்மை. பலரும் திரைப்படம் பார்ப்பது தொலைக்காட்சிபார்ப்பது இசைகேட்பது ஆகியவற்றுடன் வாசிப்பை சம்பந்தப்படுத்துவதுண்டு. அது சரியல்ல. வாசிப்பு வாசகன் தரப்பில் இருந்து தொடர்ச்சியான உழைப்பைக்கோரக்கூடிய ஒன்றாகும்.

ஆகவே தொடர்ச்சியான கவனமும் நீடித்த ஆர்வமும் வாசிப்புக்குத் தேவை. வாசிப்புப்பழக்கம் என்றாவது முறிந்துபோனால் மீண்டும் ஆரம்பிப்பது கடினம். நம்மில் பலர் நம் கல்விக்காலகட்டத்திற்குப்பின் ஏதேனும் ஒரு நூலை வாசிப்பதற்கான மனநிலை இல்லாதவர்களாக ஆகிவிடுகிறோம்.

அதாவது வாசிக்கமுடியவில்லை என்பது அறிவுத்திறனின் பிரச்சினை அல்ல. ஒருவரின் இயல்பும் அல்ல. பழக்கம் இல்லாமலாகிவிடுவதுதான் அது. அதை வெல்ல ஒரே வழி தொடர்ச்சியாக வாசிப்பதுதான். சிலம்பு கற்றுக்கொள்வதுபோல வீணை கற்றுக்கொள்வதுபோல பிடிவாதமாக சற்றேனும் தினமும் வாசித்தாலே போதும். கொஞ்சம் கொஞ்சமாக நம் அகம் வாசிப்புக்குப் பழகிவிட்டிருப்பதை நாம் உணரமுடியும்.

அப்படிப்பழகும்போது ஒன்று தெரியும், வாசிப்புப்பழக்கம் மேலேற மேலேற இன்னும் இன்னும் தீவிரமான நூல்களை நம் அகம் தேடுகிறது. அதாவது உண்மையான வாசிப்பு ஏணியில் ஏறுவதுபோல. அடுத்த மேல் படிக்கு மட்டுமே செல்லமுடியும்

ஆகவே இன்று உங்களைக் கவரக்கூடிய ஏதாவது நூலை வாசியுங்கள். ஆனால் விடாமல் ஒவ்வொருநாளும் வாசித்துக்கோண்டே இருங்கள்

ஜெ

அன்புள்ள  ஜெயமோகன் சார் ,

மணவாளன் சென்னை என்று உங்களுக்கு இரண்டு  மூன்று  தடவை போன் வந்திருக்கும் .ஞாபகம் இருக்கிறதா ?போனில் உங்களிடம் சரியாகப் பேச என்னால் முடியவில்லை . ரொம்பத் தயக்கமாக இருந்தது. உங்கள் ‘நவீன  தமிழ் இலக்கிய அறிமுகம் ‘ படிப்பதற்கு முன் , நாஞ்சில் நாடனின் சில நாவல்களும் ,சிறுகதைகளும் ,சு.ராவின் ‘ஜே ஜே சில குறிப்புகள் ‘,உங்களது  ‘யானை டாக்டர் ‘ சிறுகதையும்,  என்று  ஏதோ சொற்பமாக  வாசித்து  இருக்கிறேன் .என் சந்தேகங்களை  இப்படித்தொகுத்துக் கொள்கிறேன் .

1 . கடந்த சில மாதங்களாக உங்களது  வலைப்பூவில்  நிறைய  வாசித்து இருக்கிறேன். வாசிக்க வாசிக்க என் இலக்கிய வாசிப்பு மீது  ஆழ்ந்த பரிசீலனை தேவை என உணர்ந்தேன் .நீங்கள்  சொல்லும் ‘இலக்கிய  வாசிப்பில் லார்வாக்கள் நிலை’,அதாவது  சும்மா வாசித்துத் தள்ளுவது,நான் படித்த புத்தகத்தைப் பற்றி என்னால்  எளிய மதிப்புரை  கூட  சொல்ல முடியவில்லை எனக்கு என்று உணர்ந்தேன்.ஆனால் நான் மேற்கூறிய படைப்புகளில் மிக அற்புதமான நிலையை அடைந்தேன் . அதற்கு நான் இது வரை புத்தகம் படிக்காதது(புதியதாய் ஒரு பழக்கம் உருவான மகிழ்ச்சி) தான் காரணமா என்று தெரியவில்லை? 2 . உங்கள்    ‘நவீன  தமிழ் இலக்கிய அறிமுகம் ‘ வாசித்தேன்.”இளம் வயதில் லட்சியவாத எழுத்துகள் வாசிக்காமல்,கனவுகளில் மனம் நனையாமல் நேரடியாக சீரிய  இலக்கிய உலகில் நுழையும் வாசகர்களின் மனோபாவம் சூம்பிப் போனதாக இருக்கும்”என்று எழுதி இருந்தீர்கள்.என்னை மிகவும் பாதித்த வரி . நான் தற்செயலாய்  நேரடியாக சீரிய  இலக்கிய உலகில் நுழைந்து  விட்டேன் .நான்  எப்படி என் இலக்கியப் பயணத்தைத் தொடர்வது ?

3 .வணிக எழுத்துக்களின் எல்லா சாத்தியங்களையும் நீங்கள்  ‘நவீன  தமிழ் இலக்கிய அறிமுக’த்தில் சொல்லி விட்டீர்கள்.அதனால் அவற்றைப் படிக்க எனக்கு ஆர்வம் வர மாட்டேன்  என்கிறது .என்ன செய்வது?

4.   உங்கள்    ‘நவீன  தமிழ் இலக்கிய அறிமுகம் ‘ வாசித்த பிறகு ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.தருக்கபூர்வமாக வாசிக்க ஆரம்பிதேன்.காட்சிகளை வலிய  வலியக் கற்பனை செய்து கொண்டேன்.கதாபாத்திரங்களின் முகங்களை கதைகளில்  நீங்கள் கூறிய  வர்ணனைகளின் ஒப்பீட்டில்   கற்பனை செய்ய முடியவில்லை.உதாரணமாக ‘கோட்டி’ யில் பூமேடையை ‘சீனி கம்’படத்தில் வரும்  தபுவின் அப்பா முகத்தோடு தான் என்னால் படிக்க முடிந்தது.மேலும் காட்சிகள்           காட்சிகளாகவே  இருக்கின்றது.படிமங்களாக மாறுவது ஒரு சில மட்டுமே.கதையின் முக்கிய பகுதியான வாசகர் நிரப்பும் இடம் (subtext ) என்னால் நிரப்ப முடியவில்லை.

5 . நீங்கள் ப்ளாக்கில் ஒரு வாசகர் கடிதத்தில் வாசிக்கும் போது  காட்சிகளை ஆழ்மனமே வாசிக்க வேண்டும் ,அறிவு அல்ல என்று சொல்லியிருந்தீர்கள். நான் இப்பொழுது அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேனா ?

அன்புடமும்  தயக்கத்துடனும் ,
மணவாளன்

அன்புள்ள மணவாளன்

நீங்கள் தொடர்ச்சியாக வாசிக்கிறீர்கள், வாசித்தவற்றைப்பற்றிச் சிந்திக்கிறீர்கள் என்றால் நீங்கள் சரியாகத்தான் வாசிக்கிறீர்கள். இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்ற விதிமுறை ஏதுமில்லை. ஒன்றே ஒன்று சொல்லலாம். ஒவ்வொருமுறை வாசிக்கையிலும் முந்தைய நூலைவிட இன்னும் ஒரு படி அதிக சவாலை அளிக்கக்கூடிய நூலை தேர்ந்தெடுக்கவேண்டும்

நாம் வாசிக்கும்போது ஒருவேளை ஆரம்பத்தில் வெறுமே தகவல்களை மட்டுமே கவனிக்கக்கூடிய வாசிப்பை நிகழ்த்தலாம். வெறுமே கதைச்சுவாரசியத்தைமட்டும் வாசித்துச்செல்லலாம். ஆனால் நாம் தொடர்ந்து வாசித்துக்கோண்டே இருந்தோமென்றால் மெல்லமெல்ல நம் அகம் மேலதிக வாசிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருப்பதைக் காண்போம். நாம் அதை வலிந்து செய்யவேண்டியதில்லை. அதுவே நிகழ ஆரம்பிக்கும்.

ஆகவே வாசித்துக்கொண்டே இருப்பதுதான் முக்கியம். யானை காட்டில்மேய்வதுபோல என்று வாசிப்பைச் சொல்லலாம். அதன் இயல்புக்கு ஏற்ப அது முதலில் அதிக ஸ்டார்ச் உள்ள தழைகளையே தேர்ந்தெடுக்கும். அதாவது இனிக்கக்கூடிய புல்லையும் மூங்கிலையும் . அதன் பின்னர் தளிர்களை. அதன்பின் பட்டைகளை. அதேபோல நீங்களே உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வீர்கள்

வாசிப்பவற்றைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தால் எது மேலே வாசிக்கவேண்டியது எது தவிர்க்கவேண்டியது என்று தெரியவரும். ஒரு நூல் தொடர்ந்து சிந்திக்கச்செய்தது என்றால் தொடர்ச்சியாகப் பலவிதமான அகஎழுச்சிகளை அளித்தபடியே இருந்தது என்றால் அது நல்ல நூல். அவ்வகை நூல்களையே மேலே வாசிக்கவேண்டும். உங்களுக்கு வரலாற்று நூல்கள் எவ்வகையிலும் ஆர்வத்தை ஊட்டவில்லை என்றால் விட்டுவிடுங்கள் அவை உங்களுடையவை அல்ல

தொடர்ச்சியான வாசிப்பு, அதுவே ரகசியம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு!

ஐயா எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. சிறிது தயக்கத்துடனேயே உங்களிடம் கேட்கலாம் என்று துணிந்தேன். எனக்கு சில பிரச்சனைகள் உள்ளன என நினைக்கிறேன். பிரச்சனை என்கிற வார்த்தையை இங்கே உபயோகிப்பது சரியானதா என்று கூட தெரியவில்லை.

1. எனக்கு ஆங்கிலம் பேச வராது. வசனமாகக் கேட்டாலும் புரியாது. (ஓஷோ பேச்சு அப்படியே புரியும் அவ்வளவு நிதானமாகப்பேசுவதால் இருக்கலாம்.) இதைக் கூறும்போது, இது ஒரு பிரச்சனையே அல்ல ஆங்கிலத்தை இன்னும் பயிற்சி எடுத்தால் சரியாகி விடும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் விநோதம் என்னவென்றால் நான் ”எழுத்தில்” ஆங்கிலத்தை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் முடிகிறது. சிட்னி ஷெல்டன், ஜான் கிரிஷாம், இர்விங் வேலஸ்… இவர்களின் நாவல்களைப் பெரும்பாலும் படித்திருக்கிறேன். அறிவியல் கட்டுரைகளைப் படிக்கிறேன். உலக சினிமா என்று பல மொழிப் படங்களை சப் டைட்டில் துணையுடன் பெரும்பாலானவைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசவோ பேசுவதைக் கேட்டால் புரிந்து கொள்ளவோ முடிவதில்லை.

2. முதலில் மொழிப் பிரச்சனை என்றால். இரண்டாவது “இசை”யைக் கேட்டல். எனக்குப் பாடல்களைக் கேட்கும்போது வரிகள்மேல் கவனமே செல்வதில்லை. ஆனால் அதன் மெட்டுகளிலேயே லயிக்கிறது. பாடல் கேட்டு முடிந்தவுடன் எந்த வரிகளும் எனக்குத் தெரிந்திராது. வரிகளைக் கேட்டேனா என்று கூட சந்தேகம் தோன்றும். பாடும் பாடகர்களின் குரலும் ஒருவித இசைக் கருவியாகவே எடுத்துக் கொள்கிறேனா தெரியவில்லை. ஆனால் இசையைக் கேட்பதில் எனக்கு அவ்வளவு இன்பம். எனது நண்பன் என்னிடம் பலமுறை பாடல்களைத் தேர்ந்தெடுத்து வட்டுகளில் பதிந்து தருமாறு கேட்டிருக்கிறான். நானும் காலைவேளையில், மாலைவேளையில் மற்றும் இரவு வேளைகளில் கேட்பது போல் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறேன். அத்தேர்வுகளும் அருமையாக அமைந்ததாகக் கூறியிருக்கிறான். எனக்கு இளையராஜா, எம்.எஸ்.வி, இவர்கள் இசை என்றால் அதிக இஷ்டம்.

இந்த விநோதம் எனக்கு ஆரம்பம் முதலே இருந்தாலும் சிக்கலாக உணர்ந்ததில்லை. இப்போதும் இது ஒன்றும் எனக்கு தொந்தரவாக இல்லை. ஆனால் சமீப காலமாக இதை தியானிக்கும்போது ஒரு சந்தேகம் முளைத்தது. என் மனம் சரியாகத்தான் இயங்குகிறதா? என்று. ஒரு இலக்கிய, புனைவு எழுத்தாளரிடம் போய் இதைக் கேட்கலாமா என்ற ஒரு தயக்கம் இருந்தது. தாங்கள் தொடர்ச்சியாக தியானத்தையும், மன அடுக்குகள் பற்றியும் பேசி வருகிறீர்கள். அதனால் உங்களிடம் கேட்கத் துணிந்தேன். தாங்களுக்கு நேரம் இருந்தால் பதிலளிக்கவும். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

பிரேம்குமார்
மதுரை.

அன்புள்ள பிரேம்குமார்,

எந்த மொழியாக இருந்தாலும் அது தொடர்ந்து காதில் விழுந்துகொண்டே இருந்தால் மட்டுமே அதை சிறப்பாகப் பேசமுடியும். சிறப்பாக நாம் பேசும் மொழியை மட்டுமே புனைவில் சிறப்பாகப் பயன்படுத்தவும் முடியும். பலவருடங்களுக்கு முன் நான் கேரளத்தில் இருந்தபோது இதைச்சுட்டிக்காட்டித்தான் நான் தமிழகத்திற்கு வந்தாகவேண்டும் என்றார் ஆற்றூர் ரவிவர்மா.

ஆகவே நீங்கள் ஆங்கிலம்பேசமுடியாதது மிக மிக இயல்பே. நானும்கூடத்தான் ஆங்கிலம் பேசமுடியாது, முப்பது வருடங்களாக ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆங்கிலம் பேசியே ஆகவேண்டுமென்றால் அதற்கான பயிற்சிக்குச் செல்லலாம். அங்கே நிறைய ஆங்கிலம் காதில் விழச்செய்வார்கள். மெல்லமெல்ல பேசவந்துவிடும்

இசையைக்கேட்கையில் பாடல்களைக் கேட்காமலிருப்பதும் எல்லாருக்கும் உள்ள குணம்தான். சொல்லப்போனால் பெரும்பாலானவர்கள் தாளத்தை மட்டுமே கேட்பார்கள். அடுத்த கட்டத்தில் வரிகளில் உள்ள மெட்டை மட்டும் கேட்பார்கள். அதற்கு அடுத்த கட்டத்தில் பின்னணி இசைக்கோவையை கவனிப்பார்கள். வரிகளைக் கவனிப்பவர்கள் மிகச்சிலரே

தமிழில் வரிகளை கவனிக்க ஆரம்பித்தால் பல பாடல்களை நாம் கைவிடவேண்டியிருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைதிகசி இணையதளம்
அடுத்த கட்டுரைசங்க இலக்கியம் பயில