வாக்களிக்கும் பூமி:கடிதங்கள்

ஜெயமோகன்,

எந்திரத்தின் தொடர்செயல்பாட்டை கர்மாவுடன் ஒப்பிட்டிருந்தது ஆர்வமூட்டுவதாக இருந்தது. இன்னொரு விஷயம், ஸ்கங்குகள் தாவரங்களை மட்டும் உண்பதில்லை எல்லாவற்றையும் உண்ணும். அது சீசனைப்பொருத்தது

மணி ஆறுமுகம்.

அன்புள்ள மணி ஆறுமுகம்,

உண்மைதான். கீரிகளும் அப்படித்தான்.
ஜெ

 
சட்டென்று ஒரு ஆழமான தனிமை உணர்ச்சியை அடைந்தேன். அதை ஏன் என்று உணர முயன்றபடி படி ஏறினேன். சட்டென்று தோன்றியது , கண்ணில் பட்ட ஏதோ ஒன்று அருண்மொழியை நினைவூட்டியது என. எது என உணர முடியவில்லை.
 
மனைவி, குழந்தைகளுக்கு விசா கிடைக்காமல் தவிப்பவர்கள் இங்கே ஏராளம். அவர்கள் அனுதினம் படும் உணர்ச்சி. ஒரு சின்னக் குழந்தையை பார்த்த நொடியில் கூட சட்டென்று உருவாகி சற்று நேரத்துக்கு மனதின் ஆழத்தை கீறி விடக்  கூடியது.
 
அதன் சிறப்பு தாக்கப்பட்டால் — சிற்றிதழ்க் கலக எழுத்தாளர்கள் போல — கடும் துர்நாற்றத்தை பீச்சியடிக்கும் என்பதே.
 
 
சத்தமாய் சிரித்து விட்டேன். :-)
 
திரும்பிச்செல்லும் தமிழகம் அவர்கள் விட்டுச்சென்ற தமிழகம் அல்ல.
 
quotable quote!
 
அதேசமயம் மேலதிகப் பார்வைக்கு நுண்மையான வேற்றுமைகள் தென்பட்டபடியே இருந்தன. அந்த வேற்றுமைகளை தொட்டு எடுப்பதற்காக  என் கவனம் சென்றபடியே இருந்ததைத்தான் இப்பயணத்தின் முக்கியமான அம்சம் என்று சொல்லவேண்டும்.
 
நுண்மையான வேற்றுமைகளை காண முயல்வதை வரவேற்கிறேன். மேலோட்டமான தகவல்களையே பல இடங்களில் படித்து விட்டு, இங்கே வாழ்ந்து பார்க்கும்போதுதான் நல்லதும் கெட்டதுமான உண்மை சொரூபங்கள் பலவும் ஆச்சரியமும், திகைப்பும் தர புலப்படுகின்றன. அவற்றை நீங்கள் அவ்வப்போது குறிப்பிடும் கேளிக்கை வகையிலான சிறுகதைகளாக ‘துகள்கள்’ என்னும் தலைப்பில் என் தளத்தில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறேன்.
 
இந்தியா போல் அமெரிக்கா இல்லை என்பதும், அமெரிக்கா போல் இந்தியா இல்லை என்பதும் நான் விரும்பாத வாதம். உங்கள் கட்டுரையின் ஊடே இதையொத்த கருத்தை தாங்கள் குறிப்பிட்டதில் மகிழ்ச்சி.
 
பொதுவாக நான் மெதுவாகவே பேச ஆரம்பிப்பேன். உங்களிடம் நான் பேசத் துவங்கிய போது நீங்கள் கிளம்பிச் சென்று விட்டீர்கள். :-)  டி.சியில் உங்களுடன் செலவிட முடிந்த அந்த இரண்டு நாட்களுக்காக  நன்றியும், மகிழ்ச்சியும்.
 
மிக்க அன்புடன்,
[சத்யராஜ்குமார்]
http://sathyarajkumar.com

 

அன்புள்ள சத்யராஜ் குமார்
நன்றி. உங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வாசிங்க்டனும் நியூயார்க்கும் அவசரப்பயணங்கள் போல ஆனதனால் நண்பர்களிடம் அதிகம் நெருக்கமான உறவு உருவாகவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பரவாயில்லை, சந்திக்க நேர்ந்ததே நல்ல விஷயம்தானே.
ஜெயமோகன்

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 1
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 2