சடங்குகள் ஒரு கடிதம்

ஆசிரியருக்கு ,

வணக்கம். தங்கள் சடங்குகள் குறித்து படித்தேன். முழுக்க , முழுக்க உண்மை. கடும் சைவமான என் அம்மா தனது பேத்திகளுக்கு ஆடு வெட்டிப் படையல் போடப் பெரும் பிடிவாதம் கொண்டார்கள். அம்மாவின் ஆசையா , ஆடா என்று மூன்று நிமிடம் குழம்பி அப்புறம் அம்மா சொன்னதைத்தான் செய்தேன். நாத்திகம் பேசியதைப் பின்பு பிரியாணி சாப்பிடுகையில் மறந்து போனேன். சாப்பிட்டு முடித்த பின் நியாபகம் வந்தது. :-) அம்மா தனியாக சைவ உணவு சாப்பிட்டார்கள் என்பது தனிக் கதை. குல சாமி சன்னதிக்கு முன்னால் துண்டால் திரை பிடித்து ஆடு பலி நடந்தது. சாமியும் சைவம்தான் என நினைத்துக் கொண்டேன். பின்னொரு நாளில் உங்கள் சமண பௌத்தக் கட்டுரை படிக்கும்போது இது சமண சாமியோ என்று தோன்றியது. உருவமே இல்லாமல் பெரும் பாறை ஒன்றில் கோபுரம் இல்லாமல், சன்னதி இல்லாமல் சாமி இன்றும் உண்டு. அதற்ககு வாயில் துணி கட்டி பூசை செய்யும் பூசாரியும் உண்டு. அவர் முழு நேர விவசாயி, பகுதி நேரப் பூசாரி. வைதீக மந்திரம் இன்றிப் பூசை உண்டு. இன்னொரு குல சாமியும் உண்டு. அது பெண் தெய்வம். அதற்கு அப்பாவே பகுதி நேரப் பூசாரி.

பிற மதங்களோடு இந்து வாழும் முறையை ஒப்பிடவே முடியாது. எந்த மூல நூலும் , வைதீக வடிவும் , வேதம் ,புராணம் தெரியாமல் என் குல கோவிலில் பூசை செய்யும் பூசாரியும் இன்றைக்கு இந்து என அழைக்கப்படும் பிரதிநிதியே. அவருக்கும் , என் கிராமத்துக்கும் எந்தத் தத்துவ வடிவும் தெரியாது. அது அவர்கள் வாழும் முறை. பூஜை முறைகள் அவர் பாட்டனார் செய்தது, பாட்டனாரின் பாட்டனார் செய்தது , எனவே அவர் செய்கின்றார். எங்கள் பூசாரி கடுமையான சாதி நம்பிக்கை உடையவர். அது மிக வெளிப்படையானது. அதில் ஒளிவு மறைவு சுத்தமாகக் கிடையாது. அது நில உடைமையின் நீட்சியென உரையாடலில் தெரியும்.

சாதியும் சடங்கும் படிக்க தெரிந்து கொள்ள வெளியில் மட்டும் பார்க்க வேண்டியதில்லை, உள்ளுக்குளும் பார்க்க வேண்டும் என்ற வரிகள் முழு உண்மை . திரண்ட இந்த இந்திய வரலாற்றின் ஒரு துளியே நான் , என் குடும்பம், என் கிராமம். இந்திய இயங்கு தன்மை , வடிவம் , பிடிவாதம், மூட நம்பிக்கை, சாதி குறித்த எண்ணங்கள் எல்லாம் இந்தத் துளியில் உண்டு.

அன்வர் பாலசிங்கத்தின் கருப்பாயி என்ற நாவல் படித்தேன். மனத்தினை உலுக்கியது. இன்று பேசப்படும் பிரச்சனைகளின் ஒருபுறம்தான் அது. இந்து எனும் முத்திரை கொண்டு தொகுக்காமல் இருந்திருந்தால், இந்த இனக்குழுக்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை வேறு விதத்தில் தீர்த்து இருக்கலாமா என்றும் படுகின்றது. இந்து முத்திரைதான் குல நம்பிக்கை, குலப்பழக்க வழக்கம் எல்லாம் மத நம்பிக்கை ஆக்கிக் குழப்பி விட்டதா எனத் தெரியவில்லை. இந்த முத்திரை வைதீகத்தினைத் தலைமை பீடம் கட்ட மட்டுமே பயன் பட்டது.

வைதீகம் இனக்குழுக்களை இந்து முத்திரைக்குள் தொகுக்கவில்லை, அவர்களை ஒன்றாக்க வில்லை. மாறாக அந்த இனக் குழுக்களின் நம்பிக்கைக்கு, சடங்குகளை மட்டும் ஓரளவு வைதீகப்படுத்தியது. இந்தப்பழங்குடி ,குலம், இனம், சாதி என தொகுக்கப்பட்ட சமுகம், அதன் அடுத்த கட்டம் நகரவில்லை. இந்தத் தேக்கம் தாண்டாததே இங்கு பிரச்சனை. நீ, நான் ஒரே மதம், ஒரே நிறம், ஒரே ஊர் , ஒரே பொருள் வலிமை ஆனால் நான் ஏன் தாழ்த்தப்பட்டவன் அன்வர் பாலசிங்கதின் நாவலில் என்ற கேள்வி எழுந்த பொழுது அதை இந்து மதத் தலைமைகள் விளங்கிகொள்ளவில்லை, இன்னமும் விளங்கிக்கொள்ளவில்லை . தங்கள் அதிகாரம் திரட்டிக்கொள்ள , தங்கள் பழம் பெருமை பேச மட்டுமே அவர்கள் செயல் பட்டார்கள், செயல் படுகின்றார்கள். விவசாயம் வாழும் முறை , தொழில் என இரு வடிவிலும் இருந்ததும் பிரச்சனைதான். கிராமத்துக்கு ஒரு காந்திக்கு எங்கு போவது? இந்த இடத்தில் நேரு , அம்பேத்கார் நினைத்த பெரும் ஆலைகளே , தொழில் அமைப்புகளே இந்த கிராம அமைப்பை உடைத்து பிறப்பு மறுத்து திறன் சார் மாற்று அதிகார அமைப்பை உண்டாக்க முடியும் என்று படுகின்றது. நீங்கள் பெரு நகரங்களில் இந்த மாற்றங்கள் வந்தது குறித்துக் குறிப்பிட்டு இருந்தீர்கள். உரிமை மறுக்கப்படும் இனக்குழுக்கள் தங்களை ஒத்தவர்களைத் தொகுத்துக் கொண்டு அதிகார, பொருள் பீடங்களை நோக்கிப் புது விழுமியங்களோடு நகர்வதும் மிக முக்கியம். தொகுத்தல் பிரதிநித்துவ அரசியல் உலகில் அவர்களை வலிமை ஆக்குகின்றது. அவர்களை தங்கள் வலிமையை உணரச் செய்கின்றது. அவர்களை உரையாடலுக்குள் அவர்களுக்குக் கொடுத்தாகப்பட வேண்டிய மரியாதையுடன் கொண்டு வருகின்றது.

அதிகாரம் அடக்கு முறையில் பூரணமாகின்றது. நவீன தொழில் உலகில் கேட்டில் நிற்கும் வாட்ச்மேன் வணக்கம் வைக்காதது குறையென நினைத்து வாட்ச்மேனைத் திட்டி ஆறுதல் அடைந்த கடுமையான பகுத்தறிவு பேசும் உறவினர் , ஆடு வெட்டுபவனை ஒன்றாக உணவு சாப்பிட விடாத மற்றொரு சொந்தகாரரைக் கண்டால் கிண்டல் செய்வது ஒரு வேடிக்கையான காட்சி. இவர் நவீன ஜமீன்தார். அதை சொன்னால் அவர் ஆட்சேபித்தார். பொருளைக் கொண்டு சாதியை மாற்றி இருக்கின்றார். சாதியில் எதிர் பார்த்த அதே அதிகாரத்தினை இன்று பொருளின் மூலமாக எதிர்பார்க்கின்றார். பந்தியில் அவருக்கு ஒரு தனிச்சிறப்பு கவனிப்பு இருத்தல் அவருக்கு தேவைப்படுகின்றது. அது இல்லாமல் பிற விருந்தினருக்கு உள்ள மரியாதையை அவருக்குத் தரும் பொழுது மரியாதைக் குறைவாய் நினைக்கின்றார். தன்னைத் துருத்திக் கொள்லல் அவருக்கு முக்கியம். இது ஒரு ஆதி வேட்கை என்றே நம்ப வேண்டி இருக்கின்றது. இதை மட்டு செய்ய நவீன குடிமை விழுமியங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

சாதி, மத விழுமியங்களுக்கு மாற்று குடிமை விழுமியங்களே. பணக்காரனை வில்லனாகப் பார்த்து அதே நேரம் பணம் சேர்க்கும் வெறியோடு அலையும், பொங்கலுக்கு 100 ரூபாய் கொடுக்கும் குடிமை சமூகத்திடம் மாற்று விழுமியங்கள் சென்று சேர வேண்டும். சேரும் என்ற நம்பிக்கை உண்டு. காந்தி சொன்ன அதிகார அடுக்குகள் உயரம் கொள்ளாத குடிமை சமூகம் மிக சுதந்திரம் ஆனது. அங்கு எல்லோருக்கும் உரிமை உண்டு, உரிமை காக்கும் பொறுப்பு உண்டு. அது ஒரு உன்னத சமுதாயம். இன்று பொறுப்பு இல்லாத உரிமையே பெரும் சிக்கல் தருகின்றது.

ஈவெரா அவர்கள் படம் கொண்ட கிராமங்களின் சாதி வெறி பற்றி சொன்னீர்கள். அதே நேரம் காந்தி படத்தினை 500 ரூபாயில் போட்டு , காந்தியை பீரங்கி வண்டியில் சவ ஊர்வலம் செய்த காந்திய அரசியல் வாரிசுகளைக் கொண்ட சமூகம் இது என்பதும் உங்களுக்கு தெரியும். ஏழைகளின் தேசத்தில் ஜனாதிபதி மாளிகை கங்கா அபிஷேகம் , கவர்னருக்கு சிறப்பு ரயில் என காந்தி கட்சியின் வேடிக்கை கொண்டதே இந்த சமூகமே , பெரியார் படம் போட்டு சாதி பேசுவோரையும் கொண்டுள்ளது . காந்தியின் மனசாட்சி என சொல்லப்பட்டவர் குலக்கல்வி செய்தார். அரசிடம் காசு இல்லாமல் அவர் செய்யவில்லை, ஏனென்றால் அவருக்குப் பின்னர் இரண்டாண்டுகளில் மற்றொரு முதல்வர் இலவச உணவோடு மாநிலமெங்கும் கல்விச்சாலை அமைத்தார். இந்த சூழலில் ஈவெரா பிரதிநிதித்துவ அரசியலை நெறி செய்யச் சொன்னார். பிரதிநிதித்துவ அரசியலே அரசு. அதுவே மக்களாட்சியின் குறியீடு. அதுவே சமூகம் நகரும் வழி. அது குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் சிக்கித் தேங்காமல் தவிர்க்கச் சொன்னார். அவர் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் சென்று சிக்கக் காரணமாக நினைத்ததை எதிர்த்தார். அவர் எதிர்ப்பு, அவர் நினைத்த மக்களாட்சி அமைப்பு முறை அவருடைய கால கட்டத்தில் மிக முக்கியமானது. தீர்க்கதரிசிகளை அல்லது குறி சொல்பவர்களைத் தேடி நின்று ஒற்றை வரி பஞ்ச் டயலாக் பேசி அவரைப் பின்பற்றுவதாக நினைத்த நவீன ஜமீன்தார்களிடம் அவர் கருத்தோட்டம் சிக்கி நின்று விட்டது. அது தொடர் வழியில் விரிவு படுத்தப்படவில்லை. காந்தியின் போராட்டம் என்பது உண்ணாவிரதம் என்று தவறாகப் புரிந்து கொள்ளும் சமூகமே , ஈவெரா பாதை எனபது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை எதிர்ப்பது என்று தவறாய்ப் புரிந்து கொள்கின்றது என்று நம்புகின்றேன்.

நிர்மல்

முந்தைய கட்டுரைதேடியவர்களிடம் எஞ்சுவது
அடுத்த கட்டுரைவிவாதமுறை பற்றி மீண்டும்