வாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்

எண்பதுகளில் நான் சென்னையில் அலைந்திருக்கிறேன். ஒரு நகரில் ‘அத்து அலைவ’தென்பது ஒரு முக்கியமான அனுபவம். காந்தப்புலம் கொண்ட பல பொருட்கள் அலையும் ஒரு வெளியில் ஒரு இரும்புத்துகள் போல அப்போது உணர முடியும். நம்மை ஏதேதோ கவர்ந்து எங்கெங்கோ கொண்டுசென்றபடி இருக்கும். அதன்பின் இத்தனை நாட்களில் நான் அலைந்த நகரங்களை எண்ணிக்கொண்டால் பிரமிப்பு ஏற்படுகிறது. பாலைவன நகரங்கள் மலை நகரங்கள் வேளாண்மை நகரங்கள் தொழில்நகரங்கள். இப்ப்போது வேற்றுமண்ணில் புதிய நகரங்கள்.

ஆனால் பாஸ்டன் நகரில் உலவும்போது மீண்டும் மீண்டும் ஓர் எண்ணம் ஏற்பட்டபடியே இருந்தது, புதிய உலகில் உள்ள எல்லா நகரங்களும் ஒன்றுபோல் இருக்கின்றன. அது கனடாவாக இருந்தாலும் சரி ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி அமெரிக்காவாக இருந்தாலும் சரி.. ஒரேமதிரியான கட்டிடங்கள், சாலைகள், வாகனங்கள், மனிதர்களின் நடையுடைகள், உணவகங்கள், சிலைகள் எல்லாமே

அதேசமயம் மேலதிகப் பார்வைக்கு நுண்மையான வேற்றுமைகள் தென்பட்டபடியே இருந்தன. அந்த வேற்றுமைகளை தொட்டு எடுப்பதற்காக  என் கவனம் சென்றபடியே இருந்ததைத்தான் இப்பயணத்தின் முக்கியமான அம்சம் என்று சொல்லவேண்டும். உதாரணமாக சிட்னி நகரில் மக்கள் எப்போதும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். கன்பராவில் ஒரு அரசாங்க நிதானம். பாஸ்டனில் ஒரு விடுமுறை மனநிலை இருந்தது, காரணம் அது கோடை என்பதனால். அமெரிக்காவின் வடக்கே குளிர் பிராந்தியத்துக்குள் இருக்கும் பாஸ்டனில் கோடை என்பது ஒரு பெரிய வரம் போல.

நானும் வெட்டிப்பயல்பாலாஜியும் ஜூலை பதிமூன்றாம் தேதி பாஸ்டனில் சுற்றினோம். பாலாஜியை வலைப்பதிவர்களுக்கு தெரிந்திருக்கும். வேலைக்காக அமெரிக்கா வருவது எப்படி என்று கட்டுரை எழுதி கவனத்தை ஈர்த்து பொய்யாக சுயவிவரம் அளிப்பது எப்படி என மேலும் எழுதப்போய் வசை வாங்கிக் கொண்டவர். சிறுகதைகள் எழுதும் துடிப்புடன் இருக்கிறார்.

பாலாஜியும் நானும் முதலில் பாஸ்டனில் அறிவியல் காட்சியகத்துக்குச் சென்றோம். அங்கே காலையில் ஒரு ஐமாக்ஸ் திரைப்படக் காட்சி போட்டார்கள். ஐமாக்ஸ் என்றால் என்னவென்று எனக்கு முதலில் புரியவில்லை. அந்தப்பெயர் என் நினைவில் இல்லை. பிரம்மாண்டமான திரையில் நம்மைசூழ்ந்து தெரியும்படி போடப்படும் திரைப்படம் என்று சொல்லலாம். அத்துடன் அரங்கும் அசையும் படி அமைத்திருப்பதனால் நாமே காட்சிகளுக்குள் செல்வது போலவும் காட்சிகளின் மேல் பறப்பது போலவும் பிரமை எழுகிரது

குஜராத் சுவாமிநாராயண் கோயில் சார்பில் தயாரிக்கப்பட்ட மிஸ்டிக் இண்டியா என்ற படத்தை அன்று பார்த்தோம். ஐமாக்ஸ் என்னும் பேரகலத்திரை பிரமிப்பூட்டும்படி இருந்தாலும்கூட படம் மிகச்சுமார்தான். பல காட்சிகளை கத்துக்குட்டித்தனமாகவே எடுத்திருந்தார்கள். சுமாமிநாராயண் அமைப்பை நிறுவிய சுவாமி நீலகன்ட் அவர்கள் தன் பன்னிரண்டு வயதில் வீட்டைவிட்டு கிளம்பி இந்தியா முழுக்க நடந்தே  சுற்றி வந்த பயணத்தைப் பற்றிய மேலோட்டமான சித்தரிப்பு அது. அதை சாதாரணமான படமாக பார்த்திருக்கிறேன்.

இந்தியாவைச் சுற்றிவருவதென்பது மலையில் ஏறுவதோ ஆற்றில் நீந்துவதோ பாறைகளில் அமர்ந்திருப்பதோ அல்ல. சிறிய அளவில் நானும் இந்தியாவைச் சுற்றிவந்திருக்கிறேந்- சுற்றிக்கொண்டே இருக்கிறேன். நாம் ஆன்மீகம் குறித்து கொள்ளும் ஒவ்வொரு நம்பிக்கையும் உடனடியாக இன்னொன்றால் மறுக்கப்படும் பேரனுபவமே இந்திய அனுபவம் எனலாம். கொல்லாமை பேணும் சமணர்கள், தினம் ஆயிரம் ஆடுகளை வெட்டும் குருதி வழியும் காளி கோயில்கள், புராதனமான குகைக்கோயில்கள், அதிநவீன பிர்லா மந்திர்கள் என நம் அனுபவம் தொடர்ச்சியாக தலைகீழாகிக் கொண்டே இருக்கும்.

அமைதி வழியும் இமய மலையுச்சியில் சிலசமயம் நாம் கொந்தளிப்போம். கூட்டம் நெரியும் காசியில் பேரமைதியை உணர்வோம். இவ்வாறாக இந்தியதரிசனம் ஒரு மன விரிவை அளிக்கிறது. ஞானத்தின் எல்லா வழிகளும் ஒன்றே என்ற பக்குவத்தை அளிக்கிறது. சுவாமிநாராயண் குறித்த அந்தப்படம் இந்தியாவை பற்றி வெள்ளைக்காரச் சுற்றுலாப்பயணி எடுத்ததுபோல் இருக்கிறது.

வெட்டிப்பயல் என்னைச் சாப்பிடக்கூட்டிக்கொண்டு சென்றார். அருகிலேயே ஒரு விரைவுணவு நிறுவனத்தில் ரொட்டிக்குள் வைத்த கோழி மாமிசம் சாப்பிட்டோம். அதன்பின் அறிவியல் காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்தேன். நூற்றுக்கணக்கான அறிவியல் விளக்க மாதிரிகள். முகப்பில் பூக்கோவின் பெண்டுலம் இருந்தது. ஒரு புள்ளியில் இருந்து தொங்கவிடப்படும் பெண்டுலக்குண்டு மாலைக்குள் திசைமாறிச் சுழன்றுகொண்டிருப்பதை பார்க்கலாம். அது சுழலும் திசையை கவனித்துவிட்டு போய் கொஞ்சநேரம் கழித்து திரும்பிவந்து பார்த்தால் திசை மாறியிருக்கும்.  அதன் திசை உண்மையில் மாறுவதில்லை, அதன் கீழே பூமி சுழல்வதன்மூலம் பூமிதான் இடம் மாறியிருக்கிறது. பூமி சுழல்கிறது என்பதற்கான முதல் நிரூபணவாத ஆதாரம் அறிவியலாளர் ·பூக்கோ உருவாக்கிய இக்கருவி. உம்பர்ட்டோ ஈக்கோ எழுதிய ·பூக்கோவின் பெண்டுலம் என்ற நாவலை நான் வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் காட்சிகள், குறிப்பாக அதில் அள்ளி இறைக்கப்பட்டிருக்கும் உருவகங்கள், நினைவில் ஓடின

அறிவியல் காட்சியகம் பெரும்பாலும் மாணவர்களுக்கானது. உயிரியல் ,இயற்பியல், கணிதம் போன்றவற்றில் உள்ள உயர்மட்ட கோட்பாடுகளைக்கூட எளிய மாதிரிகள் வழியாக விளக்கியிருந்தார்கள். ஆனால் மிகச்சில மாணவர்கள் தவிர பிறர் ஆர்வத்துடன் கவனிப்பதாக தெரியவரவில்லை. அந்த அருங்காட்சியகத்தில் நான் எதைக் கவனித்தேன் என்பது சொல்வது கடினம். பல்வேறு மண்கள், பாறை வகைகள், இயந்திரங்கள், பூச்சிகள்…..இவை நம் மனதின் ஆழத்தில் எங்கோ போய் படிகின்றன. அங்கே இருந்து எப்போதோ ஏதோ ஆக்கத்துக்குள் முளைத்து மேலெழுந்து வருகின்றன

அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமான சிகுவாவா மரத்தின் குறுக்குவெட்டு பலகை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மிக வசதியான ஒரு கட்டில் செய்யுமளவுக்கு பிரம்மாண்டமான வைரம். மரங்களில் மிகப்பெரியது இதுவே. மரங்களில் அதிக காலம் வாழ்வதும் இதுவே அமெரிக்காவின் தென்பகுதிக்காடுகளில் வளரும் மரம் இது. ராட்சத உயிர். ஆனால் சில சமயம் ஒரு கல்லை புரட்டி வெளியே வரும் சின்னஞ்சிறு செடியின் உயிரின் மூர்க்கமே இந்த மாபெரும் மரம் அளிக்கும் பிரமிப்பை அளித்துவிடுகிறது.

அருங்காட்சியகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு வேடிக்கை இயந்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்றில் இருந்து ஒன்றாக தொற்றிக்கொண்டு நூற்றுக்கணக்கான விசைகள் செயல்படுவதைக் காட்டும் கருவி அது. ஒரு பந்து உருண்டோடி ஒரு சக்கரத்தை சுற்றவைக்கிறது. ஒரு தடுப்பை தட்டிவிட்டு ஒரு படியில் விழுந்து ஒரு கிண்ணத்தில் விழுந்து ஓரு பாதையில் ஓடி ஒரு தராசில் தொங்கி மேலே சென்று மீண்டும் கீழே விழுகிறது. அதன் ஒவ்வொரு செயலும் மேலும் செயல்களை உருவாக்குகின்றன. அவை மேலும் செயல்களை அந்த இயந்திரம் முழுக்க அப்படி ஒருசெயலால் உருவாக்கப்பட்ட பிற செயல்கள்.

கிட்டத்தட்ட ஒரு ‘கர்மவினை’ யந்திரம். நெடுங்காலமாகவே சிந்தனையாளர்களை பிரபஞ்ச நிகழ்வுகள் ஒன்றில் இருந்து ஒன்றாகக் கிளைப்பதில் உள்ள ‘தற்செயல்’ அம்சத்தின் முடிவிலா விசித்திரம் கவர்ந்து வந்திருக்கிறது. ஒரு வினை இன்னொன்றுக்கு காரணமாக ஆவதை கிரேக்க- இந்திய சிந்தனைகள் எல்லாமே மிக விரிவாகப் பேசியிருக்கின்றன.. ஆனால் இந்த அம்சத்தையே தன் அடிப்படைத்தரிசனமாகக் கொண்ட தத்துவம் என்றால் அது சாங்கியம்தான். சாங்கியக் கொள்கையின் படி செயலற்ற நிலையில் பருப்பிரபஞ்சம் என்றோ இருந்த்திருக்கிறது. அது முற்றிலும் சமநிலை கொண்டது. அதன் பருப்பொருள்நிலையின் சமநிலை குலைந்தது ஏதோ ஒரு கணத்தில். அந்த முதல் சலனம் அடுத்த கோடானுகோடி சலனங்களுக்கு காரணமாக அமைந்தது. அதுவே பிரபஞ்சமாக நிகழ்ந்துகொண்டே செல்கிறது. ஒருசெயல் என்பது எப்போதும் இன்னொரு செயலில் இருந்து பிறந்ததாகவும் இன்னொரு செயலுக்கு காரணமாகவும் இருக்கும் என்பது சாங்கியத்தின் விதி. இதை விளக்க கபிலரிஷி இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த அறிவியல் மையத்திலேயே ஒரு கோளரங்கம் இருந்தது. அங்கே வான் முழுக்க நட்சத்திரங்களை பரப்பி நட்சத்திர மண்டலங்களை விளக்கிக் காட்டினார்கள். அவற்றைப்பற்றி உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு தொன்மங்களை விளக்கினார்கள்.மாலை ஏழுமணிவரை அங்கிருந்தோம். மாலையில் பாஸ்டன் பாலா தன் அலுவலகத்தில் இருந்து வந்து எங்களுடன் இணைந்து கொண்டார்.

மாலையில் நண்பர் மெய்யப்பன் அவர்களின் வீட்டில் ஒரு சிறு விருந்து. பது நண்பர்கள்  வந்திருந்தார்கள். மெய்யப்பன் ஏற்கனவே எனக்கு மதுரையில் அறிமுகமானவர். ஆனால் அதை அவர் தொலைபேசியில் சொன்னபோது அடையாளம் தெரியவில்லை. நேரில்பார்த்தபோது அவரைச் சந்தித்த கணம் சட்டென்று நினைவில் மீண்டது. ஏன் என்று யோசித்தபோது ஒரு விஷயம் பட்டது, நூற்றுக்கு தொண்ணூறு சதம் நாம் மனிதர்களை அவர்களின் புன்னகை மூலம்தான் அடையாளம் கண்டு கொள்கிறோம்.  ஒருவரின் முகம் நமக்கு நினைவில் மீளாமல் இருக்கும் போது அவர் புன்னகைத்தால் மூளை மின்னுகிறது.

சாப்பிடுவதற்கு நண்பர் வேல்முருகனும் அவரது நண்பர்  சரவணன்ம் வந்திருந்தார்கள். சரவணன்  திரைப்படத்தில் ஆர்வம் உள்ளவர். இருவருடங்களுக்கு முன்னர் இந்தியா வந்து பவளக்கொடி என்ற படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார். இத்தகைய படங்களுக்கு வழக்கமாக நிகழ்வதே அதற்கும் நிகழ்ந்தது. வினியோகஸ்தர் அமையவில்லை, எனவே சரிவர சென்ரடையவில்லை. ஆனால் _ மேலும் படம் எடுக்கும் உற்சாகத்தில் தான் இருக்கிறார்.

மெய்யப்பன் வீட்டில் பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் பொதுவாக வெளிநாடுவாழ் தமிழர்கள் கொள்ளும் தத்தளிப்புகள், ஐயங்கள், ஆதங்கங்கள் சார்ந்தவைதான். என்னுடைய கருத்துக்களை வழக்கம் போல திட்டவட்டமாகவே சொன்னேன். முதல்விஷயம் ஊர்திரும்பிவிடுவதைப் பற்றியது. அமெரிக்க தமிழர்களில் ஊருக்கு திரும்பவேண்டும் என்ற ரகசியக் கனவு இல்லாதவர்கள் குறைவு. இழந்தகாலம் குறித்த ஏக்கத்தால் நாடு திரும்புதல் என்பது மூடத்தனம் என்றேன். ஏனென்றால் எவருமே இறந்த காலத்துக்கு திரும்பிச்செல்ல முடியாது. திரும்பிச்செல்லும் தமிழகம் அவர்கள் விட்டுச்சென்ற தமிழகம் அல்ல.

சில வரலாற்றுக் காரணிகளால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தியாவை விட கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுக்காலம் முன்னால் உள்ளன. நவீனயுகம் அங்கே இருநூறாண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இயந்திர யுகம் அங்கே முதலில் ஆரம்பித்தது. அதன் விளைவாக உலகை காலனியாக்கினார்கள். காலனியாதிக்கம் மூலம் கொண்டுவந்து குவிக்கப்பட்ட செல்வம் மூலம். நவீனயுகத்துக்கு தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டு முன்னே சென்றார்கள்.  பொதுக்கல்வி, போக்குவரத்து, செய்தித்தொடர்பு ஆகியவை அவை. அவற்றின் விளைவாக ஒரு  தரப்படுத்தப்பட்ட குடிமைச்சமூகமும் குடிமை விழுமியங்களும் அங்கே உருவாயின.

இந்தியா நவீனயுகத்தில் காலடிவைத்து நூறாண்டுகள் ஆகவில்லை.  இருநூறாண்டுகளாக பொருளியல் ரீதியாகச் சுரண்டப்பட்ட  நாடு நவீன யுகத்துக்குள் நடைபோடத்தேவையான அடிப்படை நிதியாதாரம் இல்லாமல்  அரை நூற்றாண்டுக்காலம் உழன்றது. 1950களுக்குப்பின்னர்தான் தமிழகத்தில் சீரான பொதுக்கல்விக்கான அடிப்படை அமைப்பை காமராஜ் உருவாக்கினார் என்பதும் நம்மில் பெரும்பாலானவர்களின் குடும்பங்களில் முதலில் கல்விகற்றவர் நம்முடைய அப்பாவோ  மாமாவோதான் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். ஆயிரத்து எண்ணூறுகளில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்த அடிப்படைக்கட்டுமானங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இப்போதுதான் நிகழ்கின்றன. ஆகவே இங்கே இன்னும் தரப்படுத்தப்பட்ட குடிமைச்சமூகம் உருவாகவில்லை. குடிமைப்பண்புகள் சீராக இல்லை

அமெரிக்காவில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிவிட்டு அங்குள்ள  அன்றாடவசதிகளும், முன்னேறும் வாய்ப்புகளும், நாசூக்குகளும் பண்புகளும் இங்கே இல்லை என்று சொல்வது பொத்த்தமில்லாதது.  அவற்றை எதிர்பார்த்தால் அவர்கள் அமெரிக்காவிலேயே இருப்பதே உசிதமானது. அவர்கள் வந்து இந்தியாவுக்கு ஆற்ற வேண்டிய இன்றியமையாத சேவைகள் எதுவும் இல்லை. இந்தியாவில் அறிவுத்திறனுக்கும் மானுடவளத்துக்கும் எந்தப் பஞ்சமும் இல்லை. முதலீடுக்கு மட்டுமே பஞ்சம் உள்ளது.

திரும்பி வந்து மகிழ்ச்சியாக நிறைவாக இருப்பவர்கள் பலரை நான் அறிவேன்.  அவர்கள் இலட்சியவாதிகள். ஒரு இலட்சிய நோக்குடன் இந்தியா வந்தவர்கள். இதை நான்செய்ய வேண்டும், எந்தத் தடை இருந்தாலும் செய்வேன் என எண்ணுபவர்கள். தடைகளும் சிக்கல்களும் அவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும். வேகம் கொள்ளச்செய்யும். அதாவது அவர்கள் இந்தியாவில் இருக்கும் எதிர்மறை அம்சங்களை உணர்ந்து அவற்றுடன் போராடுவதற்காகவே இந்தியா வந்தவர்கள். மாற்று வேளாண்மை செய்ய இந்தியா வந்தவர்கள் உண்டு. நாலாயிர திவிய பிரபந்தத்தை பிரச்சாரம்செய்ய திரும்பியவர்கள் உண்டு. கணிப்பொறி நிறுவனம் அமைக்க வந்தவர்கள் உண்டு. அப்படி ஒரு வேகம் இருந்தால் வரலாம்.

இன்னொரு விஷயமும் உண்டு. இந்தியா கோடானுகோடி மக்களின் தேசம். அம்மக்கள் மேல் பிரியம் இல்லையேல் இந்தியா வருவது பெரும்பிழை. பேருந்தில் நெரிசலில் நம் மடியில் சாய்ந்து தூங்கும் கிராமவாசியை ரயிலல் சந்தித்ததுமே ”அய்யா எங்கிட்டு போறீய?” என்று பேச ஆரம்பிக்கும் மஞ்சள்பைக்காரரை வியர்வையை வெற்றிலை எச்சிலை உங்களால் நேசிக்க முடியும் என்றால் இந்தியா வரலாம். இந்தியா இம்மக்களின் நாடு.

என்னைப்பொறுத்தவரை நான் என்  மக்களின்  நெரிசலில் இடிபடும்போது அடையும் நிறைவை எங்குமே அடைவதில்லை. ஆகவேதான் காசி எனக்கு அத்தனை பெரிய ஆன்மீக அனுபவமாக இருக்கிறது. அழுக்கும், கூச்சலும் ,நெரிசலும், சிரிப்பும், கும்மாளமும், வண்ணஜாலங்களுமாக; ஆணும் பெண்ணும் குழந்தைகளும் முதியோருமாக மொத்த இந்தியாவே கொப்பளிக்கும் ஒரு சக்திமையம் காசி.  ஆகவேதான் நான் திருவிழாக்களை நேசிக்கிறேன். டீக்கடை ஒன்றில் அமர்ந்திருக்கும் போது என் மனம்  உவகையால் நிறைகிறது. இவர்கள் என் மக்கள். இவர்களில் நானும் ஒருவன். எளிய மக்கள். வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் போராடும்போதும் மனிதப்பண்புகளை மறக்காதவர்கள். என் மூதாதையரின் கண்கூடான வடிவங்கள். இவர்களின் பலவீனங்களும் குறைகளும் என்னுடைய குறைகளே. நானே இந்த தேசம்

அந்த ஒருமையுணர்வை அடையமுடியாமல் இந்தியா வந்தால் விமானநிலையம் விட்டு வெளியே வந்தக் கணமே உங்கள் வாயில் சாபச்சொர்கள் வர ஆரம்பித்துவிடும். பின் ஒவ்வொரு கணமும் வாழ்க்கை நரகமாக ஆகிவிடும். ஆம், இந்த பாஸ்டன் நகர மையத்தில் பரிசுத்தமான பூங்காவில் இளவெயிலாடும் மக்களின் அழகிலும் அமைதியிலும் நானும் மனம் கரையத்தான் செய்கிறேன். ஆனால் என் மக்கள் வடசேரிச் சந்தையில் முட்டிமோதுபவர்கள்தான். இங்கே இந்த வாழ்க்கையில் மனம் அமிழ்ந்து அங்குள்ள வாழ்க்கையில் இருந்து அன்னியப்பட்டீர்கள் என்றால் வராதீர்கள். ஒரு நகரப்பேருந்தில் சாதாரணமாகப் பயணம்செய்ய முடியாதென்றால் வராதீர்கள். உங்கள் நாட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள். புதிய நாட்டை அடைந்துவிட்டீர்கள். இங்கேயே வேர்விடுங்கள்.

நள்ளிரவில் திரும்பி காரில் பாலா வீட்டுக்குச் சென்றோம். சாலைக்குக் குறுக்கே மான்கள் ஓடும் என்றார் பாலா. நான் ஒளி வருடிச்சென்ற காட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஸ்கங்க் மிருகத்தை பார்த்தோம். அது கீரி வகையான மிருகம். வேகமானது. தாவர உண்ணி. அதன் சிறப்பு தாக்கப்பட்டால் — சிற்றிதழ்க் கலக எழுத்தாளர்கள் போல — கடும் துர்நாற்றத்தை பீச்சியடிக்கும் என்பதே. ஒளியில் தன் முதுகு முடிகள் சிலிர்க்க அது மின்னி சென்று மறைந்தது

நள்ளிரவில் பாஸ்டன் பாலா வீட்டு முன் நின்றபோது சட்டென்று ஒரு ஆழமான தனிமை உணர்ச்சியை அடைந்தேன். அதை ஏன் என்று உணர முயன்றபடி படி ஏறினேன். சட்டென்று தோன்றியது , கண்ணில் பட்ட ஏதோ ஒன்று அருண்மொழியை நினைவூட்டியது என. எது என உணர முடியவில்லை. தூங்கும் வரை அதை மனம் தொடவும் இல்லை

முந்தைய கட்டுரைகடன்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிளி சொன்னகதை:கடிதங்கள்