குடிக்கு எதிரான போராட்டம்

ஜெ

பூரண மதுவிலக்கு கோரி சசிப்பெருமாள் என்ற காந்தியவாதி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததை செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி ஒரு கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்து அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவது சரியா? அது காந்தியவழிதானா? அது இன்னொருவரின் சுய உரிமையிலே தலையிடுவது அல்லவா?

மேலும் குடியை இன்றைய நிலையில் தடுக்கமுடியுமா? பூரணமதுவிலக்கு நடைமுறைச்சாத்தியம்தானா? அதைப்பற்றி யோசிக்காமல் இந்தமாதிரி செய்வது ஸ்டண்ட் அடிப்பது அல்லவா?

கணேஷ் பெரியசாமி

அன்புள்ள கணேஷ்

எந்த ஒரு சமூகப்போராட்டம் நடந்தாலும் இணையத்தில் அதை எதிர்த்து எதையாவது எழுதி ஒருவித நிறைவை அடைபவர்களைத்தான் அதிகம் காண்கிறோம். அந்தப்போராட்டம் தப்பு, அதுமட்டும் இப்படியிப்படி இருந்திருந்தால் நாங்களெல்லாம் இறங்கி இப்படியெல்லாம் தூள்பறத்திருப்போமாக்கும் என்ற ரீதியிலான கருத்துக்கள் வருகின்றன

அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது அவரது போராட்டத்தில் சில்லறைக்குறைகள் கண்டுபிடித்து வசைபாடியவர்கள்தான் அதிகம். அண்ணா ஹசாரே தோற்றுவிட்டார் என்று கொப்பளித்துச்சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் எவரும் அதன்பின் ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. பத்துப்பேரைத் தெருவில்கூட்டக்கூட அவர்களால் முடியவில்லை. இங்கே இருக்கும் இடது -வலது அரசியல்கட்சிகள் எவையும் ஊழலுக்கு எதிராக எந்த சிறுநடவடிககையையும் எடுக்கமுடியாது. அவற்றுடன் ஒட்டிக்கொண்டு அண்ணா ஹசாரேவின் மக்களியக்கத்தை மட்டம்தட்டிய ஒவ்வொருவரும் மனசாட்சி இருந்தால் அந்தரங்கமாகவேனும் கூசவேண்டும்.

ஆகவே இந்தமாதிரி மயிர்பிளப்பு விவாதங்களால் ஒரு பயனும் இல்லை. இவை தொலைக்காட்சிகளில் செய்திக்கேளிக்கைகளாகவே முடியும். அந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் தங்களைப் போராட்டக்காரர்களாகக் காட்டிக்கொள்ள உதவும்.

காந்தியப்போராட்டமென்றால் என்ன என்று நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். மீண்டும் அதை இப்படிச் சொல்வேன். ஓர் அறம்சார்ந்த கோரிக்கையை மக்கள்முன் வலுவாக முன்வைப்பது அதன் முதல்கட்டம். அந்தக்கோரிக்கையின் அடிப்படையில் மக்களாதரவைத் திரட்டுவது, முடிந்தவரை மக்கள்சக்தியை அந்தக்கோரிக்கைக்குப்பின்னால் அணிதிரளச்செய்வது அதன் இரண்டாம் கட்டம். வலுவானதரப்பாகத் தன்னைத்திரட்டிக்கொண்டு தனக்கு எதிரான தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாத்தியமான உடனடிச் சமரசத்தை தீர்வாக ஏற்றுக்கொள்வது மூன்றாம் கட்டம். அந்த வெற்றியை உறுதிசெய்துகொண்டபிறகு மீண்டும் தன் தரப்பைத் தொகுத்துக்கொண்டு மீண்டும் மேலதிக வெற்றிக்காக அடுத்தகட்ப் போராட்டத்தை ஆரம்பிப்பது நான்காம் கட்டம்.

ஆகவே முதல்கட்டம் தன் அறம்சார்ந்த தரப்பை வலுவாக முன்வைத்துப் பிரச்சாரம் செய்வதே. அண்ணா ஹசாரே அல்லது சசிப்பெருமாள் போன்றவர்களின் நோக்கம் அந்தப்பிரச்சாரம் மட்டுமே. அது ஒன்றும் முரட்டுப்பிடிவாதம் அல்ல. அது ஒரு சான்றோன் தன்னுடைய திடமான தரப்பை வலுவாக முன்வைக்கும் ஒரு வழி. ’இது என் உறுதியான தரப்பு. இதற்காக நான் என் உயிரையும் பணயம் வைக்க சித்தமாக இருக்கிறேன்’ என்று அவன் சொல்கிறான். அது ஒரு வெறும் கருத்து மட்டும் அல்ல, அதனுடன் தன் மொத்தவாழ்க்கையையும் சேர்த்தே ஒருவர் முன்வைக்கிறார் என்று காட்டுவதே சாகும்வரை உண்ணாவிரதம் என்பது..

அந்தக்கோரிக்கைக்குப்பின்னால் மக்கள் திரண்டு மக்கள்போராட்டமாக அது மாறும் என்றால் அது இன்றைய அரசுடன் வலுவான ஒரு பேச்சுவார்த்தைமுனையைத் திறக்கமுடியும் என்றால் ஒரு சமரசமுடிவை எட்டக்கூடும். அந்தச்சமரசம் குடி தேவையானதே என்ற தரப்புக்கும் குடிமுழுமையாக ஒழியவேண்டும் என்ற தரப்புக்கும் நடுவே உள்ள ஒரு புள்ளியாக இருக்கும். அது குடி நம் சமூகத்தில் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதாகவே இருக்கும். அது இன்றையசூழலில் மிகமிக முக்கியமான ஒரு விஷயம் என சற்றேனும் சமூக உணர்வுகொண்ட எவரும் ஒத்துக்கொள்வார்கள்

இந்தியாவில் இன்று மது குடிக்க அனுமதி உள்ளது என்பது ஓர் அரை உண்மை. அரசாங்கம் மதுவிற்பனையை முதல்பணியாக கொண்டுள்ளது என்பதுதான் முழுஉண்மை. அரசியல்வாதிகள் மறைமுகமாக மதுவணிகம் செய்து கோடிகளை ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக அரசாங்கம் அடியாள்வேலை செய்கிறது. மதுவணிகத்துக்காக அரசாங்கம் இயற்கை மதுவான கள்ளைத் தடைசெய்திருக்கிறது. மதுக்கடைகளை முழுவீச்சில் நாடெங்கும் அமைத்து வளர்க்கிறது. உடல்நலனை, குடும்பநலனை, தேசப்பொருளியலை அழிக்கும் குடியை அரசே பிரச்சாரம் செய்கிறது

நம்முடைய அரசுகளின் முக்கிய வருமானமாக இருப்பது மது அளிக்கும் வரிப்பணமும் லாபமும். அந்தப்பணத்தைக்கொண்டு போலி நலத்திட்டங்கள் அமைத்து அவற்ற்றில் பெரும் ஊழல்கள் செய்து நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.அதற்காக நம் அரசு குடியை ஊக்குவிக்கிறது. குடிவிற்பனைக்கு இலக்குகள் நிர்ணயித்து பிரச்சாரம்செய்து பரப்புகிறது.

குடிக்கு உச்சக்கட்ட வரியை விதிக்கிறது அரசு. இது குடியைக் குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. மாறாக சராசரி குடும்பஸ்தனின் பெரும்பகுதி வருவாயை பிடுங்கிக்கொள்ளவே அது வழிவகுக்கிறது. ஒரு சராசரி குடும்பத்தின் மொத்த வருவாயில் பாதிக்குமேல் குடிக்கே செலவிடப்படுகிறது இன்று. நம்முடைய அரசுகள் நலத்திட்டங்களாக நமக்கு எந்த அளவுக்கு பணத்தை அளிக்கின்றனவோ அதைவிடப் பலமடங்கு பணத்தைக் குடியாக நம்மிடமிருந்து பிடுங்கிக்கொள்கின்றன.

ஆம், குடி இன்று இங்கே ஒரு கேளிக்கை அல்ல. ஒரு கொண்டாட்டம் அல்ல. ஒரு பழக்கம் அல்ல. தனிநபர் உரிமையும் அல்ல. அந்தக் கோணங்கள் எல்லாமே சிறியவை. குடி இன்று இங்குள்ள அரசு இங்குள்ள மக்களை ஒட்டச்சுரண்டும் ஒரு வழிமுறை. அதுதான் மையமான கோணம்.

ஆகவே குடிக்கு எதிரானபோராட்டம் என்பது கேளிக்கைக்கு அல்லது கொண்டாட்டத்துக்கு அல்லது தனிநபர் உரிமைக்கு எதிரான போராட்டம் அல்ல. அது தன் மக்களின் குருதியையே உறிஞ்சிக்குடிக்கும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம். இன்றைய தமிழ்கச்சூழலைக் கொஞ்சமேனும் அறிந்த எவரும் இதை ஒரு அவசியமான போராட்டம் என்றே சொல்வார்கள். உருவாகியே ஆகவேண்டிய எதிர்ப்புக்குரல் என்றே எண்ணுவார்கள்.

முழுமையாக மதுவைத் தடைசெய்யமுடியுமா? இங்கே முழுமதுவிலக்கு இருந்த காலகட்டத்தில்கூட அப்படி முழுமையாக மது தடைசெய்யப்பட்டதில்லை. ’பெர்மிட்’ முறைமூலம் குடி அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகவே மதுவிலக்கு என்பது நடைமுறையில் மது அருந்தும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும்தான்.மதுவிலக்கு மூலம் மதுவே கிடைக்காத நிலை ஒருபோதும் வராது. மாறாக மது கிடைப்பது சிரமமாக ஆகும். அதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும். அது மதுப்பழக்கம் உருவாவதையும் பரவுவதையும் கட்டுப்படுத்தும். அறுபதுகளில் மதுவிலக்கை இல்லாமலாக்கித் தெருவெங்கும் மதுக்கடை திறந்த மு.கருணாநிதிதான் தமிழ்ச்சமூகத்தைக் குடிநோயாளிகளின் கூட்டமாக ஆக்க அடித்தளம் அமைத்தார்.

எந்த போதைப்பொருளானாலும் அது சகஜமாகக் கிடைப்பதும், அதன்மீதான சமூக விலக்குகள் இல்லாமலாவதும் அது கட்டின்றி வளர்வதற்குக் காரணமாக அமைகிறது என்பதைக் காணலாம். எந்த போதைப்பொருளையும் பிரச்சாரம்செய்வதும் பரப்புவதும் சமூகத்தில் பேரழிவையே உருவாக்கும். தமிழகமும் கேரளமும் சாராயமுதலாளிகளால் அழிக்கப்படுகின்றன. அவர்களிடமிருந்து மக்களை மீட்டாகவேண்டும். அதற்கு மது கட்டுப்படுத்தப்படவேண்டும். இந்தப் போராட்டங்கள் அதையே கோருகின்றன

தனிமனித உரிமை என்று பேசக்கூடியவர்கள் உலகில் எங்கும் எந்த போதைப்பொருளும் கட்டுப்பாடில்லாமல் அனுமதிக்கப்பட்ட வரலாறே இல்லை என்பதை அறிந்திருப்பதில்லை. குடி ஒரு அன்றாடப் பண்பாட்டு அம்சமாக உள்ள அமெரிக்காவில்கூட வயதுக்கு வராதவர்கள் குடிப்பதற்குத் தடை உள்ளது. அதுவும் உண்மையான, நடைமுறையில் கறாராகப்பேணப்படும் தடை. இங்கே எந்த தடையும் இல்லை. ஏழாம் வகுப்பு மாணவர்கள் டாஸ்மாக்கில் சென்று குடித்துவிட்டு வகுப்புக்கு வருவதைப்பற்றி என் ஆசிரியநண்பர் சொன்னார். இதைத் தனிமனித உரிமை என்று வாதிடுகிறார்கள். குடி விஷயத்தில் மட்டும் நாம் ஐரோப்பாவுக்கே ஜனநாயகத்தைக் கற்றுக்கொடுப்போம் போல

பெரும்பாலும் அடித்தள மக்களாலான நம் சமூகத்தில், ஆணின் வருமானத்தையே மொத்தக்குடும்பமும் நம்பியிருக்கும் சூழலில், மருத்துவம் கல்வி உட்பட அனைத்திலும் எல்லாவகையான மக்கள்நலத்திட்டங்களையும் அரசுகள் கைவிட்டு அவற்றை தனியார்மயமாக்கிவரும் இக்காலகட்டத்தில் குடிப்பழக்கம் பெரும் சமூக அவலத்தையே உருவாக்குகிறது.

மது கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும். என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதைப் படிப்படியாகக் கண்டறிந்து உருவாக்கலாம். முதல்கட்டமாக பகல்நேரங்களில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட ஆணையிடலாம். அடுத்தகட்டமாக மதுகுடிப்பவர்கள் பதிவுசெய்துகொண்டு அனுமதிபெற்றவர்களாக இருக்கவேண்டுமென வகுக்கலாம்.உடல்நலக்கேடு வருமளவுக்குக் குடிக்கும் மதுஅடிமைகளை சிகிழ்ச்சைக்குக் கொண்டுசெல்ல அரசு முயலலாம். எவ்வளவோ வழிமுறைகள் உள்ளன

இன்று தென்னிந்தியா குடியில் மூழ்கி அழியும் நிலையில் உள்ளது. அதைத் தடுக்கப் பெரிய அளவிலான மக்கள்போராட்டங்கள் தேவை. நாம் போராடுவது ஜனநாயக அரசுகளுடன் அல்ல. இன்றைய அரசுகள் சாராயவியாபாரம்செய்யும் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன.ஆகவே உக்கிரமான போராட்டங்கள் மட்டுமே கொஞ்சமேனும் வெற்றியை அளிக்கமுடியும்.

ஒன்றும் செய்யாமலிருப்பவர்கள் நடுவே சசிப்பெருமாள் போன்றவர்களின் போராட்டம் மதிக்கத்தக்கது. ஆனால் எதையும் வெட்டிவிவாதமாக ஆக்கும் வீணர்கள் அறிவுஜீவிகளாக மேடைகளில் அமர்ந்திருக்கும் நம் சூழலில் அவரது தியாகமும் கொச்சைப்படுத்தப்பட்டு சமகால வேடிக்கையாக ஆக்கப்பட்டு மறையவே வாய்ப்பதிகம்

ஜெ

முந்தைய கட்டுரைசோழநாட்டில் பௌத்தம்
அடுத்த கட்டுரைசமணர் கற்படுக்கை