மலையாள சினிமா சென்றவருடம்

அன்புள்ள ஜெ

சென்ற வருடம் மலையாளத்தின் மிகச்சிறந்த படங்கள் வெளிவந்தன என்று எழுதியிருந்தீர்கள். முன்பு மலையாளப்படம் சுவரில் முட்டி நின்றுவிட்டது என்பது போல எழுதியிருந்தீர்கள். அந்த மாற்றம் நிகழ்ந்ததை பொதுவாகத் தமிழ் வாசகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். சென்ற வருடம் வெளிவந்த முக்கியமான மலையாளப்படங்கள் எவை என்று சொல்லமுடியுமா?

ரங்கநாத்

அன்புள்ள ரங்கநாத்,

மலையாளசினிமா தொண்ணூறுகளின் இறுதி முதலே ஒரு சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இரண்டாயிரத்தின் தொடக்கங்கள் மிக மோசமான காலகட்டம். மலையாளத்தில் எப்போதுமே தரமற்ற வணிக சினிமாக்கள் வருவதுண்டு என்றாலும் அதன் மையஓட்டம் என்றுமே கலைத்தரம் கொண்ட படங்கள்தான். ஒரு வருடத்தில் எப்படியும் முக்கியமான பத்து படங்கள் வெளியாகிவிடும். நடுத்தரவர்க்க ரசிகர்களும் பெண்களும்தான் அவற்றுக்கான ரசிகர்கள்.

ஆனால் தொண்ணூறுகளில் நடுத்தரவர்க்கம் திரையரங்குகளுக்கு வருவது குறைய ஆரம்பித்தது. வீட்டில் வாங்கி வைத்துள்ள உயர்தரத் தொலைக்காட்சிகளில் படம்பார்க்கவே மக்கள் விரும்பினார்கள். அதன் விளைவாக பல தரமான படங்கள் தோல்வியைத்தழுவின. அதுவரை திரையுலகை ஆண்டுகொண்டிருந்த கமல், சிபி மலையில் போன்ற முக்கியமான இயக்குநர்கள் தொடர் தோல்வியை அடைந்து ஒதுங்க ஆரம்பித்தனர். முக்கியமான படங்களில் அற்புதமான கதைமாந்தர்களை நடித்த மம்மூட்டியும் மோகன்லாலும் வெறும் அடிதடிப்படங்களைச்செய்ய ஆரம்பித்தன. மோகன்லால் அந்த நிலையை எண்ணி வருந்திப் பேசியிருக்கிறார்

ஆனாலும் இக்காலகட்டங்களில் மிகச்சிறந்த பல படங்கள் வெளியாகியிருக்கின்றன என்பதை மறக்கமுடியாது. உதாரணம் பிளசியின் படங்கள்.

2008 முதல் நிலைமை மாற ஆரம்பித்தது. முக்கியமான புதிய இயக்குநர்கள் வர ஆரம்பித்தது ஒரு காரணம் ஆனால் முதன்மையான காரணம் அச்சுதானந்தனின் தலைமையிலான இடதுசாரி அரசு திருட்டு டிவிடியை கிட்டத்தட்ட ஒழித்ததுதான். கேரளத்தில் இன்று திருட்டு டிவிடி வாங்குவதே குற்றம். இணையத்தில் பார்ப்பதும் குற்றம். டொரெண்டில் படம் பார்த்தமைக்காகக்கூட அங்கே கைதுசெய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு திருட்டு டிவிடி கிடைக்காமலானபோது திரையரங்குகளுக்கு நடுத்தர வர்க்கத்தினரும் பெண்களும் வருவது அதிகரித்தது. அத்துடன் தொலைக்காட்சியில் நல்ல படங்களைப்பார்ப்பவர்கள் அதிகரித்தனர். எனவே படங்களுக்குத் தொலைக்காட்சிகள் நல்ல விலை அளிக்க ஆரம்பித்தன. அத்துடன் டிவிடி-விசிடி விற்பனை மூலமும் கணிசமான பணம் வர ஆரம்பித்தது

ஆகவே ஒரு மலையாளப்படத்தை மிகக்குறைந்த முதலீட்டுடன் எடுத்து வெளியிடமுடியும் என்ற நிலை உருவானது. நஷ்டம் வந்தால்கூட ஒருசில லட்சங்களுக்குமேல் அது செல்லாது. நல்ல படங்கள் அரங்குகளில் ஓடும் என்னும் நிலை உருவானது. ஆகவே தொடர்ச்சியாக முக்கியமான படங்கள் வெளிவந்தன. பரிசோதனைமுயற்சிகள், ஆர்ப்பாட்டமில்லாத படங்கள் வந்தன.

சென்ற வருடம் வெளிவந்த படங்களில் பொதுவாக நான் கீழ்க்கண்ட படங்களைச் சுட்டிக்காட்டுவேன்

1. ஒழிமுறி

2 செல்லுலாய்ட்

3. டைமண்ட் நெக்லஸ்

4 உஸ்தாத் ஓட்டல்

5. அயாளும் ஞானும் தம்மில்

6. ஸ்பிரிட்

7. புதிய தீரங்கள்

8 ஈ அடுத்த காலத்து

9 பூமியுடே அவகாசிகள்

10 இத்ரமாத்ரம்

11 அன்னயும் ரசூலும்

12 களியச்சன்

13. 22 ஃபீமேல் கோட்டயம்

14. அரிகே

15 மஞ்சாடிக்குரு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒழிமுறி தமிழ் விமர்சனங்கள்

1. திரையில் விரியும் காவியம்

2 ஒழிமுறி-ஒரு விமர்சனம்

3 ஒழிமுறி மகேஸ்வரன்

4. ஒழிமுறி உறவெனும் புதிர்

முந்தைய கட்டுரைஅம்மையப்பம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதீபம் [புதிய சிறுகதை]