அறம்-கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

அறம் படித்துவிட்டு எழுதுகிறேன். பொதுவாகவே நான் சற்றே வேகமாகப் படிக்கும் பழக்கம் கொண்டவன். ஆனால் இந்தமுறை அப்படி நடக்கவில்லை. மதியம் மூன்று மணியளவில் ஆரம்பித்து இரவு ஒன்பது மணி வரை
” சோற்றுக் கணக்கு ” வரையே படிக்க முடிந்தது. எந்த சிந்தனையுமின்றி மனம் வேறு ஏதோ உலகில் இருந்தது.

“பைல்க’’ளில் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டும் போல இருக்கிறது.

உண்மையில் “அறம் ” படித்த பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு என்னால் எதுவும் படிக்க முடியவில்லை, சிந்திக்க முடியவில்லை. நானும் இந்த அறச்சீற்றத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

“தாயால் பிறந்தேன்
தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை
நடுவீதியில் சந்தித்தேன்
நீ யார் என்னை
நில்லென்று சொல்வதற்கு” – என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தயாரிப்பாளரிடம் எழுதிய பாட்டிற்குப் பணம் கேட்டுக் கொடுக்காமல் இழுத்ததற்காக அவர்தம் மேஜையில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து எழுதியதாகப் படித்திருக்கிறேன்.

இப்போது இந்த அறச்சீற்றம் உள்ளதா அல்லது இது செல்லுபடியாகுமா???

இன்னும் நிறைய எழுத எண்ணம் எழுந்து நிற்கிறது ஆனாலும் உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பாததாலும் அறம் படித்த நிலையில் இருப்பதாலும் மீண்டு(ம்) எழுதுவேன்.

அன்புடன்

பெருமாள்

அன்புள்ள பெருமாள்

அறச்சீற்றம் என்றும் உள்ளது. என்றும் அது ‘இந்தவாழ்க்கையில் அதற்கு இடமுண்டா/’ என்ற வியப்புடன் மட்டுமே எதிர்கொள்ளவும் பட்டுள்ளது.

அறம் வரிசைக் கதைகள் வெளியானபோது தொடர்ச்சியாக வந்த பல கடிதங்களை வாசியுங்கள். அவற்றில் இன்றும் வாழும் பல அறம்கதைநாயகர்களைக் காணலாம்

ஜெ

முந்தைய கட்டுரைசெல்லுலாய்ட்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகீதா ஹிரண்யன்- இருகடிதங்கள்