லோகி:கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ,
ஒரு வாரம் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு இன்று தான் வீடடைந்தேன். வலைமனையில் லோகி பற்றிய உங்கள் அஞ்சலி குறிப்புகள் கண்டு அதிர்ச்சிடைந்தேன் முதலில்.  நம்ப முடியாமல் பல செய்தி தளங்களில் சென்று படித்து உறுதி செய்தபின் மீண்டும் படித்தேன் உங்கள் குறிப்புகளை – நெகிழ வைத்தன.

தனியாவர்த்தனம் கண்டு பல நாட்கள் தூக்கம் பிடிக்காமல் கிடந்திருக்கிறேன் – முக்கியமாக முடிவை மறக்கவே முடியவில்லை. ஏனோ பாலன் மாஷ் கூறும் கிளி-பட்டம் கதை மனசில் வெகு நாட்கள் பதியமிட்டிருந்தது. நீங்கள் குறிப்பிட்டது போல் அவர் திரைக்கதை எழுதிய படங்கள் பெரும்பாலும் பிடித்திருந்தாலும் இயக்கிய படங்களில் பூதக்கண்ணாடி, கண்மதம் (மஞ்சுவின் பாத்திரத்திற்காக) தவிர வேறு ஏதுவும் மனம் கவரவில்லை.

திறமையான கதைச்சொல்லியாகவே அவரை திரையில் அறிந்த என்னைப் போன்றோர்க்கு அவரின் பன்முகங்களை பகிர்ந்தமைக்கு நன்றி! ரசிகனாகவும் காதலனாகவும் வாழ்ந்த லோகியின் கடைசி கால நிகழ்வுகள் கலங்கடித்தன.அரிய உன்னத கலைஞனை நாம் இழந்து விட்டோம்!. வேறு எதுவும் எழுத தோன்றவில்லை இப்போது.

-ரா.சு.

லோகியைப் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை மனதை கனமாக்கியது. நிறைய பெரிய கலைஞர்கள் கடைசி காலத்தில் வறுமையில் வாடியிருக்கிறர்கள். பாரதி, புதுமைப்பித்தன் போல. ஆனால் எவ்வளவோ எச்சரிக்கையாய் இருந்து பணத்தை சேர்த்து வைக்கும் கலைஞர்கள் கூட கடைசியில் ஏதோ ஒருவகையில் ஏமாந்து போய் கோட்டை விட்டு விடுகிறார்கள், தியாகராஜ பாகவதர், லோகி போல. அவர்கள் மக்கள் மனதில் ஒரு இல்யூஷனை உருவாக்குவதைப் போல, காலமும் அவர்கள் மனதில் ஒரு மாயையை உருவாக்கி விடுகிறது. இதனை அவர்கள் உணர்வதில்லை. கலைஞர்களின், தவிர்க்க முடியாத இந்த விதியும் ஒரு தனியாவர்த்தனம் போன்றதுதானோ? வைரமுத்து போன்றவர்கள் விதிவிலக்கு. காலம் அசல் கலைஞனுக்கு இப்படி ஒரு விதியை வைத்திருக்கிறதோ?
ராமலிங்கம்

 

அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம். நலமா?

லோகித் தாஸ் வாழ்க்கையைப் படித்ததும் நெஞ்சுக்குழியில் ஒரு  தேங்கல். எவ்வளவு கஷ்டம், உதாசீனம், அவமதிப்பு இப்படி எல்லாவற்றையும் தாண்டி வந்தவர், வெற்றியை அனுபவிக்க இன்னும் சிலவருஷங்கள் வாழ்ந்திருக்கலாம். கடவுளுக்கு என்ன அப்படி ஒரு அவசரமோ?

அருமையான கலைஞன்,

அவர் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம்.

அந்த சாலக்குடி முரிங்கூரில்தான் என் கேரள வாழ்க்கையும் ஆரம்பித்தது. மலையாளம் பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டது அப்போதுதான்.

என்றும் அன்புடன்,
துளசி

லோகி.5, தனியன்

லோகி4,தனியன்

லோகி. 3, ரசிகன்

முந்தைய கட்டுரைடி.ஆர்.நாகராஜ்,குகா-அர்விந்துடன் உரையாடல்
அடுத்த கட்டுரைஊமைச்செந்நாய் ஓர் எதிர்விமரிசனம்