குகைகளின் வழியே – 14

அம்பிகாபூர் விடுதியில் காலையில் எழுந்து ஜோகிமாரா சீதா பாங்க்ரா குகைகளுக்குக் கிளம்பினோம். வழக்கம்போல வழியில் டீ சாப்பிட்டபின் எல்லா சாலைச் சந்திப்புகளிலும் வழிகேட்டு வழிகேட்டு சென்றோம். எங்களுடன் வந்த இருவருக்கு நன்றாகவே இந்தி தெரியும். சேலம் பிரசாத், ஓட்டுநர் நீல்கண்ட் இருவரும். ஆனாலும் வழி குழம்பிக்கொண்டே இருந்தது. ஏனென்றால் நாங்கள் செல்லும் குகைகள் வழக்கமாக அந்த ஊர்க்காரர்களே செல்லக்கூடிய இடங்கள் அல்ல.

வழியில் ஒருவர் ஏறிக்கொண்டார். பத்திரிகை ஏஜெண்டும் துணிக்கடை உரிமையாளருமான தீபக் அகர்வால் வழிகாட்டிக் கூட்டிச்சென்றார். ஜோகிமாரா குகை அவரது ஊருக்கு கொஞ்சம் அப்பால்தான். வழியில் சட்டிஸ்கர் பற்றிக் கேட்டுக்கொண்டே சென்றோம். நாங்கள் அவதானித்த விஷயங்களுக்கு பலவகையிலும் இணைந்து போவதாகவே அவரது கூற்று இருந்தது.

நாங்கள் சட்டிஸ்கரில் நுழைந்தது தண்டகாரண்யப் பகுதியில். அப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகமிக மோசம். சாலைகள் பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்குப் பழுதடைந்து கிடந்தன. பாலங்கள் உடைந்து கிடந்தன. பல இடங்களில் பிகாரி தொழிலாளர்கள் சாலைகள் போட்டுக்கொண்டிருக்க கனத்த போலீஸ் காவல் அவர்களைச் சுற்றி இருந்தது. சில இடங்களில் துணை ராணுவப்படையினர் ஏகே 47 உடன் அவர்களுக்கு பாதுகாப்பளித்தனர். உடைந்த பாலங்கள் ஏராளமான இடங்களில் திரும்ப பாதிகட்டப்பட்ட நிலையில் இருந்தன. பாலங்களைக் கண்ணிவெடி கண்காணிப்புக் கருவி கொண்டு காவலர்கள் சோதிப்பதைக் கண்டோம்.

பழங்குடிக் கிராமங்கள் கிட்டத்தட்ட காலியாகக் கிடந்தன. இடிந்து கைவிடப்பட்ட வீடுகள். மக்கள் உள்ள கிராமங்களில்கூட அதிகம் நடமாட்டம் இல்லை. சாலைகளில் சந்தித்த மக்கள் வற்றி வறண்ட ஏழைப்பழங்குடிகள். ஆங்காங்கே வரும் சிறுநகரங்களில் மட்டுமே நவீன காலகட்டத்தின் தடயங்கள் இருந்தன.

ஆனால் வடக்கே வர வர சட்டிஸ்கரின் பொருளியல் வளர்ச்சியைக் கண்கூடாகக் காணமுடிந்தது. சிறுநகரங்கள் சென்ற சில வருடங்களில் கடைகள், கட்டிடங்கள், கல்யாண மண்டபங்கள், தங்குமிடங்கள் என எல்லாவகையிலும் வளர்ச்சி கண்டிருப்பதைக் காணமுடிந்தது. எங்கும் ஆங்கிலப்பள்ளிச் சீருடை அணிந்த குழந்தைகள். ராய்ப்பூரின் விமானநிலையம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒன்று. ராய்கட் முதலிய சிறிய நகரங்கள் கூட வசதியானவை. சாலைகள் மிகச்செம்மையாக இருந்தன. முக்கியமாக சட்டிஸ்கரில் முற்றிலும் மின்வெட்டு கிடையாது. மின் உபரி மாநிலம் அது. இத்தனைக்கும் மின்சாரம் சார்ந்த தொழில்கள் பெருவளர்ச்சி பெற்று வரக்கூடிய மாநிலமும் கூட. எல்லா சுற்றுலா மையங்களும் சென்ற ஓரிரு வருடங்களுக்குள் புதியதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, சிறந்த தங்குமிட வசதிகளுடன்.

மத்தியப்பிரதேசத்தில் இருந்து பிரிந்தது சட்டிஸ்கரின் பொருளியல் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது என்றார் தீபக். நாங்கள் கண்ணால் கண்ட எல்லா வளர்ச்சியும் மாநிலம் உருவானபின் நிகழ்ந்தவை. அதற்கு முன்னால் சட்டிஸ்கரின் சுற்றுலாத்தலங்கள் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் என்றார். வேலைவாய்ப்புச் சந்தை விரிவடைந்துள்ளது. சட்டிஸ்கருக்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்கள்.

தீபக் சொன்னவற்றில் இருந்து வளர்ச்சிக்கு சட்டிஸ்கரின் நிலக்கரி, சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்தான் காரணம் என்று தெரிந்தது. நம்மூர் ஊடகங்கள் உருவாக்கும் பிரமைக்கு நேர் எதிரான சித்திரம் அவர் அளித்தது. அரசாங்கம் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும்போது எப்போதுமே சந்தைவிலை அளிப்பதில்லை. பேரம்பேசி விலை முடிவுசெய்வதில்லை. கடைசியாக அப்பகுதியில் கிரயம்செய்யப்பட்ட விலையை மட்டுமே கொடுக்கும். அது சந்தைவிலைக்கு சம்பந்தமே இல்லாத சாதாரண தொகையாக இருக்கும். அந்தத் தொகையும் உடனே கைக்கு வராது. நெய்வேலி நிலக்கரிச்சுரங்கத்திற்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்துக்கான பணம் கொடுத்து முடிக்கப்பட முப்பதாண்டு காலமாகியிருக்கிறது.

நடைமுறையில் நிலத்துக்கான மதிப்பீட்டுப் பணம் ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்பட்டு அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்டு நிதித்துறையால் நிதியனுமதி செய்யப்பட்டுக் கீழ்மட்டம் வரை வந்துசேரவேண்டும். அதையும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளவேண்டும். அந்தப் பணத்தில் மேலிருந்து கீழே வரை ஐந்து அடுக்கு அதிகாரி வர்க்கம் கையிட்டு அள்ளிக்கொள்ளும். எஞ்சும் பணத்தின் மதிப்பு பத்தில் ஒருபங்கு கூட இருக்காது. ரயில்வே நில ஆர்ஜிதத்துக்கான பணம் மட்டும் ஒப்புநோக்க சீக்கிரம் கையில் கிடைக்கும். இதுவே இந்திய யதார்த்தம். நர்மதைத்திட்டம் போன்றவற்றில் நிகழ்ந்தது அதுதான்.

தனியார் அவ்வகையில் காத்திருக்கமுடியாது. மேலும் நிலத்திற்கு அவர்கள் அளிக்கும் மதிப்பை உற்பத்திச்செலவின் ஒருபகுதியாக முன்னரே திட்டமிட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு நேரம் முக்கியம். ஆகவே பெரும்பாலும் சந்தைவிலையே நிலத்துக்குக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. மேலும் பெரும்பாலான பழங்குடி நிலங்களுக்குப் பட்டா இருப்பதில்லை. அரசு பட்டா இல்லா நிலங்களைக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களாகவே கருதும். தனியார் அந்நிலங்களையும் வாங்கிக்கொள்கிறார்கள்.

இன்று சட்டிஸ்கரில் ஏராளமான பழங்குடிச்சபைகள் உருவாகி அவர்கள் நிலத்தை வைத்துக்கொண்டு போராடுகிறார்கள். அது பேரம் பேசும் முறை. உரிய விலை பெற்றதும் நிலத்தை விற்றுவிடுகிறார்கள். ஆகவே பழங்குடிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறது என்றார் தீபக். குறைந்தபட்சம் பத்து லட்சம் . சிலருக்குக் கோடிகள் வரை.

ஆனால் அந்தப்பணம் வீணாகவே ஆகிறது. பழங்குடிகள் அந்தப் பணத்தால் ஆங்கிலமதுவைக் கண்மூடித்தனமாகக் குடிக்கிறார்கள். பொலிரோ போன்ற ஜீப்புகளை வாங்கி ஓட்டுகிறார்கள். தொழிலிலோ வேறு நிலத்திலோ அந்தப் பணத்தை முதலீடு செய்பவர்கள் மிகமிகக் குறைவு. பொதுவாக சட்டிஸ்கரின் பொருளியல் வளர்ச்சி இரண்டு விஷயங்களை வளர்க்கிறது. ஆங்கிலமது, ஆங்கிலக்கல்வி. இந்தி மொழியைப்படிப்பவர்கள் அநேகமாக இல்லை என்ற நிலை வந்துகொண்டிருக்கிறது என்று தீபக் சொன்னார்.

தீபக் கொஞ்சம் எரிச்சலுடன் சொன்ன விஷயம் ஒரு சாதகமான மாற்றமாகவே எனக்குப்பட்டது. இந்த பணவரவின் காரணமாக பழங்குடி சபைகள் அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கின்றன. அவர்கள் சட்டிஸ்கரின் அரசியலில் ஒரு முக்கியமான சக்தியாக மாறக்கூடும். காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் அவர்களின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாமல் போகலாம். தீபக் சொன்னதுபோல பண ருசிகண்ட பழங்குடிகள் ஊழல் செய்யலாம். அவர்களுக்குள் பூசல்களும் இருக்கலாம். ஆனால் பழங்குடிகள் அதிகாரம் நோக்கிச் செல்வதற்கான ஒரு வழி என்றே எனக்குப்பட்டது.

பழங்குடிகள் அதிகாரம் நோக்கிச்செல்வதற்கான முக்கியமான தடை என்பது இன்று பழங்குடிப்பகுதிகளில் கணிசமான இடங்கள் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருப்பதுதான். மாவோயிஸ்டுகள் இருக்கும் வரை தண்டகாரண்யம் ஒரு போர்ப்பகுதியாகவே நீடிக்கும். இப்போது இதை எழுதும்போது நாங்கள் கடந்து வந்த பகுதியில் ஒரு ஹெலிகாப்டரை மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தி விட்டதாக செய்தி வந்திருக்கிறது. ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தும் சக்திவாய்ந்த மார்ட்டர்களும் அதை ஏவுவதற்குப் பயிற்சியும் உள்ளவர்கள் அங்கிருக்கிறார்கள். ஆனால் அதைச்செய்பவர்கள் அங்கே நாங்கள் சந்தித்த அந்த கள்ளமற்ற ஏழைப் பழங்குடிகள் என ஊடகங்களும் கூலி ஆய்வாளர்களும் நம்மிடம் சொல்கிறார்கள்.

ஜோகிமாரா குகைகளுக்குச் சென்றோம். அந்தக் காலைவேளைக் குளிரில் அங்கு யாருமில்லை. கம்பியிட்ட ஒரு குகை பூட்டப்பட்டிருந்தது. ஏறிக்குதித்து உள்ளே சென்று பார்க்கவேண்டியிருந்தது. சிறிய குகை. திறந்து கிடந்த பெரிய குகை ஒரு மிகப்பெரிய நாடக அரங்காக இருந்திருக்கலாம் என்கிறார்கள். இதுவே உலகத்தின் முதல் திறந்தவெளி அரங்கு என்றுகூட சொல்கிறார்கள். கிமு நான்காம் நூற்றாண்டுக்கு முந்தைய குகை இது. திறந்தவெளி நோக்கி விரிந்திருக்கும் அகலமான வாய் கொண்டது இக்குகை. வளைவான படிக்கட்டுகளாக இதன் முகப்பு அமைந்துள்ளது. அதன் கீழே படிப்படியாக பலர் அமர்ந்திருக்கும்வகையில் இருக்கைகள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன.

ஜோகிமாரா குகை

அருகே உள்ள சிறிய குகை சீதாபெங்க்ரா. இதுவும் ஓர் திறந்த வெளி அரங்குதான். இது இசைக்கலைஞர்கள் அமர்ந்து வாசிப்பதற்கான அரங்காக இருக்கலாம்.

இதன் சுவர்களில் நிறைய ஓவியங்கள் இருந்திருக்கின்றன, அரசின் ஆவணக்குறிப்புகளில் இந்தியாவின் மிகப்புராதனமான சுவர் ஓவியங்கள் இவை என்று போட்டிருந்தார்கள். இங்குள்ள ஓவியங்களில் நடனமாதரும் காதல் காட்சிகளும் மட்டுமே இருக்கின்றன, மதம் சார்ந்த சித்தரிப்புகள் இல்லை என்று சொல்லியிருந்தனர். ஆனால் நாங்கள் பார்த்தவரை அங்கே ஓவியங்கள் என எவையும் கண்ணுக்குப்படவில்லை. அவை சமீபத்தில் அழிந்திருக்கலாம்.

இங்கே ஒரு பிராமி மொழி கல்வெட்டும் அழிந்த நிலையில் சில சம்ஸ்கிருதக் கல்வெட்டுகளும் உள்ளன. பெரும்பாலும் அழிந்துபட்ட பிராமி கல்வெட்டு கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள். இக்கல்வெட்டின் சில வரிகளே வாசிக்கப்பட்டுள்ளன. ‘கழுத்தில் மல்லிகை மாலை அணிந்துகொள்ளுங்கள்’ என்ற வரி வாசிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ மன்னர்களின் வனக்கேளிக்கை அரங்கு என ஊகிக்கிறார்கள். மகா கவி காளிதாசன் இங்கே வந்திருந்ததாகவும் மேகசந்தேசம் இங்கே எழுதப்பட்டதாகவும் ஓர் ஊகம் உள்ளது. இக்குகையில் உள்ள சம்ஸ்கிருதக் கல்வெட்டின் சில சொற்கள் மேகதூதம் காவியத்தில் உள்ளவை என்று சொல்லப்படுகிறது.

இந்தக்கல்வெட்டில் இருந்து வாசிக்கப்பட்ட ஒரு வரி ஆழமான கற்பனையைக் கிளப்புகிறது. ’தேவதாசியான சுதானுகாவின் நடன அரங்கேற்றத்தை ஒட்டி, ஓவியக்கலை நிபுணனான தேவதத்தன் இந்த ஓவியங்களை வரைந்தான்’ என்று குறிப்பிடும் பிராமி எழுத்துக்கள் தேவதாசி அமைப்பைப்பற்றிய மிகத்தொன்மையான குறிப்பு என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இக்குகைகளுக்குக் கீழே ஹாத்திபோல் என்ற குகைவழி உள்ளது. யானை செல்லக்கூடிய குகை என்று பெயர். இருபதடி உயரத்துக்கு மேல் உள்ள இந்த குகை, நீர் வழிந்தோடி இயற்கையாக உருவானது. 55 மீட்டர் நீளம் கொண்டது. நீர் வழிந்த மணல் உள்ளே குவிந்து கிடக்கிறது. ஒரு மலையைக் கடந்து மறுபக்கம் செல்கிறது இந்தப்பாதை. அதனுள் வற்றாத ஊற்றுக்கள் உள்ளன. தீபக் சொல்லியனுப்பிய வழிகாட்டியை அங்கே தற்செயலாகக் கண்டோம். அவன்தான் அந்த குகைவழிக்குக் கொண்டு சென்றான். இல்லையேல் சென்றிருக்க முடியாது.

ஹாத்தி போல்

இக்குகைகளில் இருந்து விலகிச்செல்லும் பாதையில் சென்றால் ஒரு சிவன்கோயில் உள்ளது. மிகத்தொன்மையானது. பழைய கோசலமன்னர்களின் வனதேவதையான காளியின் கோயில் மலையுச்சியில் இருந்தது. அதனருகே அந்த சிவன் கோயில் கட்டப்பட்டது. நாங்கள் காரில் சென்று அங்கே இறங்கி மேலே சென்றோம். சிவன் கோயிலுக்குச் செல்லும் சாலை செப்பனிடப்பட்டுக்கொண்டிருந்தது. நடந்து சென்றால் நெடுந்தொலைவு செல்லவேண்டும். ஆகவே சிவன் கோயில் செல்வதைக் கைவிட்டோம்.

வனதுர்க்கை கோயில் ஒன்று மலைக்குடைவரையில் உள்ளது. அங்கே செல்லும் வழியில் ஓர் உற்சாகமான சாமியார் வரவேற்றார். அவரே மேலே கொண்டு சென்று காட்டினார். நீளமான கூந்தலும் தலைமுடியும் கொண்டவர். ரூபேஷ்குமார் யாதவ் என்று பெயர் சொன்னார். அவர் ஊருக்குள் சென்று தானியம் வசூல் செய்து அங்கே வருபவர்களுக்கு உணவு கொடுப்பார் என்றார். நாங்கள் அவருக்கு நூறு ரூபாய் காணிக்கை கொடுத்தோம். ஆசீர்வாதம் செய்து பெற்றுக்கொண்டார்.

சட்டிஸ்கரில் எங்கள் பயணம் முடிவுக்கு வந்தது. நேராக ஒரிசா செல்லவேண்டியதுதான். செல்லும் வழியில் மான்பாட் என்ன ஊரில் ஒரு மலைமேல் திபெத்தியக் குடியிருப்பு இருக்கிறது என அறிந்து அதைக்காணச்சென்றோம் 1960இல் சீனப்படையெடுப்புக்காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த திபெத்திய அகதிகளுக்காக நேருவின் அரசு அம்மாதிரி பல குடியிருப்புகளை உருவாக்கியிருக்கிறது. குடகில்கூட ஒன்று உள்ளது. இந்த திபெத்தியக்குடியிருப்புகள் எல்லாமே மலையின் மீது குளிரான இடத்தில் இருக்கும்.

மான்பாட் குடியிருப்பில் ஏழுகிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு அங்கே நிலம் அளிக்கப்பட்டது. மழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யக்கூடிய அச்சூழலில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரநோக்குடன் நகரங்களுக்குச் சென்றுவிட்டார்கள். இப்போது குறைவான குடும்பங்களே உள்ளன. ஐம்பதுகளில் கட்டப்பட்ட வளையோடு வேயப்பட்ட பழைய கட்டிடங்கள் பல காலியாகக் கிடக்கின்றன. அந்தப் பகுதியைப்பார்க்கையில் விசித்திரமான ஒரு ஏக்கம் மனதில் எழுந்தது. வரலாறு வானில் பறக்கும் ஒரு பறவை. அது பறந்து சென்றுவிட்டது. இது ஓர் உதிர்ந்த ஒற்றை இறகு.

இங்கே மூன்று மடாலயங்கள் உள்ளன. ஒரு உறைவிடப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. மைய மடாலயம் பெண்டிலிங் [Phendeyling] மடாலயம் என்று அழைக்கப்படுகிறது. உள்ளது. கான்கிரீட் கட்டிடம். ஆனால் உள்ளே ஒரு திபெத்திய கோயிலுக்குரிய அமைப்பு இருந்தது. நடுநாயகமாக வைரமுடியுடன் பூமித்தொடுகை கோலத்தில் அமர்ந்திருக்கும் புத்தரின்ஆளுயர வெண்கலச்சிலை. இருபக்கமும் போதிசத்வர் சிலைகள். நீளமான டோங்காத்திரைகளில் பழைய ஓவியங்கள். கண்ணாடிச்சட்டமிட்ட அலமாரியில் நூற்றுக்கணக்கான சிறிய புத்தர் சிலைகள். ஒலிக்கக் காத்திருக்கும் பெரிய முரசு. குளிர்ந்த அமைதியான விரிந்த அறையில் உலவும் மெல்லிய காற்று.

பெண்டிலிங் [Phendeyling] மடாலயம்
மடாலயத்தின் இருபக்கமும் இரு பிரம்மாண்டமான சிம்மாசனங்கள். இருபதடி உயரமுள்ள ஒரு மனிதர் வசதியாக அமரலாம். அவை மகாலாமாவுக்கும் ரிம்போச்சேவுக்கும் உரியவை. மகாலாமா தலாய்லாமா. அவரது ஒரு புகைப்படம் ஒரு இருக்கையில் வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு இருக்கையில் ரிம்போச்சே.

பஞ்சன் லாமா

1995இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறுவயதான பஞ்சன் லாமாவான ஜேடுன் சோய்கி யியாமா தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே குடும்பத்துடன் காணாமலானார். பின்னர் சீன அரசு தங்கள் காவலில் அவர் இருப்பதை ஒப்புக்கொண்டது. ஆனால் உலக சமூகமே மன்றாடி வற்புறுத்திப்பார்த்த பின்னரும் கூட அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. உலகிலேயே இளமையான அரசியல் கைதி என அவர் மனித உரிமை அமைப்புகளால் சொல்லப்படுகிறார்.

பிரார்த்தனை மணிகள்

அந்த சின்னஞ்சிறு மழலைமுகத்தின் படம் மடாலயத்திலிருந்தது. அந்தக்கண்களைப் பார்க்கவே முடியவில்லை. ஒரு மகாலாமாவாகவே அந்தக் கண்கள் பொருள்பட்டன. ஆனால் குழந்தையின் களங்கமற்ற பதைப்புடன் மனிதனின் அதிகார வெறியை அவை பார்த்துக்கொண்டிருந்தன. சட்டிஸ்கரின் பழங்குடிகளின் கண்கள் அவை என நினைத்துக்கொண்டேன்.

[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைகிறித்துவம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழில் இஸ்லாமிய இலக்கியம்