உரையாடும் காந்தி

1

 

அன்புள்ள நண்பர்களே

இந்த நாள் எனக்கு மிக முக்கியமானது. நான் பிறந்து வளர்ந்த குமரிமாவட்டச்சூழலில் கிறிஸ்துமஸ் இனிய நெகிழ்ச்சியான நினைவுகளை உள்ளடக்கியது. நண்பர்களின் பெரியவர்களின் நினைவுகள். பின்னாளில் கிறிஸ்து என் ஞானகுருவாக ஆனபோது அதற்கு இன்னும் ஆழமான அர்த்தம் வந்தது. இந்நாள் நித்யசைதன்ய யதிக்கு, சுந்தர ராமசாமிக்கு பிரியமான நாள். மனிதகுமாரனின் நாளில் உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.

பைபிளில் ஓர் அழகான வரி. ‘நீங்கள் மண்ணில் உப்பாக இருக்கிறீர்கள்’. அவனை உங்களில் சிலர் இறைவனாக ஒத்துக்கொள்ளாமலிருக்கலாம். சிலர் இறைஞானியாக எண்ணாமலிருக்கலாம். ஆனால் எவரும் அவனை மானுடத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவனாக எண்ணத்தான் வேண்டும். மண்ணில் உப்பு. பைபிளின் ஒவ்வொரு வரியையும் தேவாலயத்தையும் பாதிரியாரையும் தவிர்த்து கவிதை வாசகனாக நின்று நாம் வாசித்தாகவேண்டும்

உப்பு மண்ணில் எங்குமிருக்கிறது. மண்ணின் ஆழத்தில் உப்பு நிறைந்திருக்கிறது. நாம் உப்பின் மீது நின்றுகொண்டிருக்கிறோம். உப்பை உண்கிறோம். நம் கண்ணீரும் ரத்தமும் உப்பு. நம் உடலே உப்பாலானது. நாம் மண்ணிலிருந்து உப்பை உண்டு மண்ணுக்கு அந்த உப்புகளை திரும்பக்கொடுக்கிறோம். நாம் மண்ணின் உப்பின் ஒரு துளி மட்டுமே. ஆனால் அந்த அர்த்தம் மட்டுமல்ல அதற்கு

உர்சுலா லெ குயின் எழுதிய ஓர் அழகிய கதை. ’ஓமெல்லாசை விட்டு விலகிச்செல்பவர்கள்’ ஓமெல்லாஸ் ஓர் அழகிய நகரம். அங்கே பேரழகு கொண்ட சதுக்கங்களில் அழகிய ஆரோக்கியமான குழந்தைகள் விளையாடுகின்றன. முதியவர்கள் ஓய்வாகப்பேசிக்கொண்டிருக்கிறார்கள். இளம்பெண்கள் கிளுகிளுத்துச்சிரித்து வசந்தகாலக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இளைஞர்க்ள் விளையாடுகிறார்கள். எங்கும் அமைதி சுத்தம் மகிழ்ச்சி. ஓமெல்லா மண்ணில் ஓர் இலட்சிய நகரம்

ஆனால் பயணியே, அது ஒரு மாயைதானா? அந்நகரின் மையத்தில் ஓர் அழகிய கட்டிடம். அக்கட்டிடத்தின் அடியாழத்தில் ஓர் அறை. அங்கே ஒரு சிறுவனை அவர்கள் அடைத்து வைத்திருக்கிறார்கள். பிறந்தது முதலே அவன் அங்கேயே அடைபட்டிருக்கிறான். ஆகவே அவன் மனமும் மூளையும் வளர்ச்சியடையவில்லை. அவன் உடலெங்கும் சொறி சிரங்கு. அரைநிர்வாணமாக இருக்கிறான்

அவனுக்கு உணவளிப்பவர்களிடம் ‘நான் நல்ல பிள்ளையாக இருப்பேன். ஒரு தப்பும் செய்யமாட்டேன். என்னை வெளியே விடுங்கள்’ என்று கெஞ்சுகிறான். நல்லபிள்ளையாக இருப்பதைக் காட்டுவதற்காக சிரிக்கிறான். என்னென்னவோ செய்து பார்க்கிறான். எல்லாரிடமும் கைநீட்டி மன்றாடுகிறான். ஆனால் அவனை வெளியே விடவே கூடாது என்று ஒரு தொன்மம் அங்கே இருக்கிறது. அந்தக்குழந்தை அப்படி சிறையிருக்கும்வரைத்தான் ஓமெல்லாஸின் செல்வமும் வளமும் நீடிக்கும்.

அங்குள்ள எல்லா குடிமக்களையும் இளமையில் ஒருமுறை அக்குழந்தையைக் கொண்டுவந்து காட்டுகிறார்கள். அது அங்குள்ள விதி. அதைக்காணும் குழந்தைகள் கதறி அழுவார்கள். நாட்கணக்கில் விசும்பிக்கொண்டிருப்பார்கள். மெல்லமெல்ல அவர்கள் சமாதானமாவார்கள். வேறுவழியில்லை என்று நினைபபர்கள். ஒரு நகரின் நலனுக்காக ஒரு குழந்தையை பலிகொடுக்கலாம் என சொல்வார்கள். இந்த நகரை அந்த ஒரு குழந்தைக்காக இழப்பதா? வெளிவந்தாலும் அக்குழந்தை என்ன செய்யப்போகிறது, அது வளர்ச்சிகுன்றிய குழந்தைதானே? பல வகையில் அவர்கள் அதை மறந்து ஆழத்துக்குள் தள்ளி மூடிவிடுவார்கள்

ஆனால் மிகச்சிலரால் மட்டும் சமாதானமே ஆக முடிவதில்லை. அவர்கள் உள்ளூர உதிரம் வடிப்பார்கள். ஒரு நாள் ஓமெல்லாஸை விட்டு கிளம்பிச்சென்றுவிடுவார்கள்.

நாமெல்லாம் வாழ்வது அந்த ஓமெல்லா நகர்களில் .அல்லது அந்த ஓமெல்லாஸிற்கான கனவுகளில். அதை நோக்கிய பயணங்களில். நமக்கு மிகமிக முக்கியமான, அந்தரங்கமான, நம்முடையதேயான ஒன்றை மிதித்து புதைத்து அதன் மேல் நின்றுகொண்டிருக்கிறோம். மண்ணின் உப்பை.

நண்பர்களே, இந்த மேடையில் உரையாடல் பற்றிய அரங்கை காந்தியைப்பற்றி பேசியபடி தொடங்கிவைக்கவேண்டும் என்று பவா செல்லத்துரை கேட்டுக்கொண்டார். எனக்கு உர்சுலாவின் அந்த அழகிய கதை உடனே நினைவுக்கு வந்தது.

ராய் மாக்ஸ்ஹாம் ஒரு பிரிட்டிஷ் ஆய்வாளர்.அவர் லண்டனில் ஒரு பழைய புத்தகக்கடையில் ஒரு புத்தகத்தை வாங்கினார். அது ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஊழியர் எழுதிய நினைவுப்பதிவு. அதில் அவர் இந்தியாவில் இருந்த ஒரு மாபெரும் வேலியைப் பராமரிக்கும் பணியில் அவர் இருந்ததைப்பற்றிக் குறிப்பிடுகிறார் ராய் மாக்ஸ்ஹாம் இந்தியாவந்து அந்த வேலியைப்பற்றி பலரிடம் விசாரிக்கிறார். யாருக்குமே அந்த வேலியைப்பற்றி தெரியவில்லை.எந்த வரலாற்று நூலிலும் எந்தக்குறிப்பும் இல்லை. எந்த ஆய்வாளரும் கேள்விப்பட்டதில்லை

ஆனால் ராய் மாக்ஸ்ஹாம் விடாப்பிடியாக முயல்கிறார் . கடைசியில் லண்டன் நிலவியல் கழகத்தின் ஆவணக்காப்பகத்தில் இருந்து அக்கால வரைபடங்களையும் ஆவணங்களையும் சேகரிக்கிறார். இந்தியா வந்து அந்த வேலி இருந்த நிலம் வழியாக பயணம் செய்கிறார். அந்த வேலியைப்பற்றி ‘உலகின் மிகப்பெரிய வேலி’ என்ற பேரில் ஒரு நூலை எழுதிவெளியிடுகிறார். அதன்மூலம் அந்த வேலி பற்றிய தகவல்கள் வெளிவந்தன

அந்த வேலி உப்புவேலி என்று ராய் மாக்ஸ்ஹாம்மால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு சிறப்பு நில அமைப்புண்டு. ஒரிசாவுக்கு கீழே தொடங்கி குஜராத் வரை வரக்கூடிய தென்மேற்குப்பகுதியில்தான் உப்பு கிடைக்கும். ஆனால் உப்பின் மிகபெரிய நுகர்வோர் வடகிழக்கு நிலப்பகுதியினர். அவர்களுக்கு கடற்கரை உப்பு தரைவழியாகச் சென்று சேர்ந்துகொண்டிருந்தது. வெப்பம் மிக்க இந்தியாவில் உப்பு மிக முக்கியமான உணவு. மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும். நீண்டதரைவழிப்பயணம் ஆகையால் உப்புக்கு விலை மதிப்பு அதிகம். ஒரு வடகிழக்குநில மனிதர் வருடத்தில் தானியத்துக்குச் செலவிடும் அதே தொகையை உப்புக்கும் செலவிட்டார்

அந்த உப்புப்போக்குவரத்தை இந்தியாவுக்கு குறுக்காக ஒரு வேலிகட்டி தடுத்துவிட்டனர் பிரிட்டிஷார். இந்தவேலி அன்று உலகிலிருந்த மிகப்பெரிய வேலி. இது முதலில் முள்ளால் கட்டப்பட்டது. காலப்போக்கில் முள்மரங்கள் நடப்பட்டு இது உயிர்வேலியாக ஆக்கப்பட்டது. இதைப்பராமரிக்க பல்லாயிரம் ஊழியர்கள் நியமிக்கப்பட்டார்கள். வழிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து வண்டிகளுக்கு கப்பம் வசூலிக்கப்பட்டது. அது பிரிட்டிஷாரின் முக்கியமான வருமானமாக இருந்தது.

ஒரிசாவில் ஆரம்பித்து காஷ்மீர் வரைச்சென்ற இந்த வேலி இந்தியாவின் மக்கள்தொகையின் கால்வாசிப்பேரை காவுகொண்டது. இந்தியாவின் வரலாற்றின் மிகப்பெரிய இரு பஞ்சங்கள், ஒருவேளை உலகவரலாற்றின் மிகப்பெரிய பஞ்சங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தன. அப்பஞ்சங்களை உருவாக்கிய முதல்பெரும் காரணி இந்த வேலிதான்.

இந்தியாவில் மேற்குப்பகுதியில் அதிக விளைச்சலிருந்தால் கிழக்குப்பகுதி விளைச்சல் குறையும். கிழக்கில் விளைந்தால் மேற்கு வரளும். 1770களில் வந்த முதல்பெரும் பஞ்சத்தில் பஞ்சாபிலும் மகாராஷ்டிரத்திலும் உச்சகட்ட விளைச்சல். வங்கமும் பிகாரும் வரண்டன. இத்தகைய பஞ்சங்களில் உணவு தேவையான இடங்களுக்கு வணிகப்பாதைகள் மூலம் சென்றுசேரும். உழைக்கும் மக்கள் மொத்தமாகவே கிளம்பி விளைச்சல் உள்ள இடங்களுக்குச் செல்வார்கள். அந்த உணவு, மக்கள் போக்குவரத்தை இந்த வேலி முழுமையாகவே தடுத்துவிட்டது. பஞ்சத்தில் மக்கள் செத்துக்குவிந்தபோதும் பிரிட்டிஷார் இந்த வேலியை திறக்கவில்லை

இன்னொரு விஷயத்தை ராய் மாக்ஸ்ஹாம் குறிப்பிடுகிறார். அன்று மக்கள் கோடிக்கணக்கில் செத்தமைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று உப்பு பற்றாக்குறை. உப்பு உணவைவிட பலமடங்கு விலை ஏறிவிட்டது. உணவே மிக அரிதாக கிடைத்தது. ஆகவே மக்கள் உப்பே சாப்பிடவில்லை. உப்பில்லாமல் ஏற்படும் நோய்தான் மக்களை , குறிப்பாக குழந்தைகளையும் முதியவர்களையும், கூட்டம் கூட்டமாக கொன்றழித்தது

இந்தவேலி போல இரண்டாம் பெரும்பஞ்சத்திற்குக் காரணமாக அமைந்தது ரயில். பிரிட்டிஷார் உருவாக்கிய ரயில்போக்குவரத்து சரக்குகளுக்காகத்தான். உள்நாட்டு தானியங்களை திரட்டி துறைமுகங்களுக்குக் கொண்டுசென்று அப்படியே தாங்கள் போரிட்டுக்கொண்டிருந்த தேசங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். கோடிக்கணக்கான மக்கள் செத்துக்கொண்டிருந்தபோதும் ஏற்றுமதி நடந்தது. ஆகவே பஞ்சாபின் தானியமலைகள் குவிந்தபோதும் வங்கத்திலும் பீகாரிலும் தக்காணத்திலும் பிணமலைகள் குவிந்தன. இந்திய மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் செத்தழிந்தனர். இந்தியதலித்துக்களில் ஏறத்தாழ எழுபதுசதவீதம் பேர் செத்து மறைந்தனர்.

காந்தி இந்திய அரசியலில் வேரூன்றியபின்னர் இந்திய அளவில் ஓரு பெரும்போராட்டத்தை ஆரம்பித்தார். உப்புசத்தியாக்கிரகம். உப்பை முன்வைத்து ஒரு போராட்டமா என்று இந்தியாவின் பிற தலைவர்களும் அறிவுஜீவிகளும் திகைத்தனர். அவர்கள் எவருக்கும் இந்தியாவில் உப்பின் வரலாறு தெரிந்திருக்கவில்லை. ‘நிலவரியை முன்வைத்து போராட்டம் செய்யலாமே’ என்றனர் மோதிலால் நேரு போன்றவர்கள். ‘நிலம் உள்ளவர்களுக்கான போராட்டமல்ல இது’ என்றார் காந்தி.

உப்பு என்றால் உயிர் என்பதே இந்தியாவின் ஆழ்மனம் அறிந்த யதார்த்தம். அதன் வரலாறு காந்திக்குத் தெரிந்திருக்காது. அவர் ஆய்வாளர் அல்ல. ஆனால் இந்தியத்தலைவர்களில் அவரே இந்தியா முழுக்கப்பயணம் செய்தவர். அடித்தள மக்களை நேரில் அறிந்தவர். அவருக்கு உள்ளுணர்வு சொல்லியிருக்கலாம். ஆம், இந்தியாவின் உப்புடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். அவர் இந்தியாவின் உப்பாக இருந்தார்.

காந்தியை புரிந்துகொள்வது மிக எளிது. காந்தியை ஏற்றுக்கொள்வதே கடினம். காந்தி நம் உப்பைப்பற்றிப்பேசுகிறார். நீதியின்பால் பசிதாகம் கொண்டவர்களாக இருங்கள் என்ற மனிதகுமாரனின் சொற்களை அவர் சொல்கிறார். ஓமெல்லாவின் மக்களாகிய நம்மிடம் காந்தி அந்த பாதாள அறைக்குள் வதைபடும் சின்னஞ்சிறு ஆன்மாவைப்பற்றி பேசுகிறார். அந்த சங்கடமான உண்மையை மறக்க நாம் அவரை நிராகரிக்கிறோம். அவரை குற்றம்சாட்டுகிறோம். வெறுக்க முயல்கிறோம்.

ஆனால் அவர் என்ன சொல்கிறார் என நாமனைவருக்கும் தெரியும். இந்த ஆடம்பரத்துக்காக இந்த சுயநலத்துக்காக நாம் அழிக்கும் எல்லாவற்றையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நாம் எதன் மேல் அமர்ந்திருக்கிறோம் நாம் எதனாலானவர்கள் என்று அவர் சொல்கிறார்

சார்லஸ் டி சால்வோ என்ற அமெரிக்க ஆய்வாளர் காந்தியின் வழக்கறிஞர் வாழ்க்கையைப்பற்றி ஆராய்ந்து The man before mahathma என்ற நூலை எழுதியிருக்கிறார். காந்தி வாழ்ந்த தென்னாப்ரிக்க நகரங்களுக்குச் சென்று அங்குள்ள நீதிமன்ற ஆவணங்களை பார்த்து காந்தியின் வழக்கறிஞர் வாழ்க்கையை பற்றி ஆராய்ந்து விரிவாக எழுதுகிறார் அவர். காந்தியைப்பற்றி ஆய்வு செய்ய சுதந்திர இந்திய அரசு கோடிகளை கொட்டியிருக்கிறது. நம்முடைய உதவாக்கரை பேராசிரியர்கள் தின்று தூங்கியதன்றி உண்மையில் எதையுமே செய்யவில்லை. இந்த ஆய்வை நாம் அரைநூற்றாண்டு முன்னரே செய்திருக்கவேண்டாமா?

1888ல் ல் லண்டன் நகருக்கு ஒரு மெலிந்த கரிய இளைஞன் வந்து இறங்கினான். எவரிடமும் பேசும் தைரியமில்லாத, உள்ளொடுங்கிய பதினெட்டு வயதுச் சிறுவன் அவன். மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. 1918ல் நாற்பத்தேழு வயதில் அவன் தென்னாப்ரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது உலகை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஆளுமையாக மாறிவிட்டிருந்தான். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? சட்டத்தால் என்கிறார் டி சால்வோ

டி சால்வோவின் நூல் சட்டம் வழியாக காந்தி அடைந்த பரிணாமத்தை அற்புதமாகச் சொல்லிச்செல்கிறது. காந்தி தென்னாப்ரிக்காவிற்க்ச் சென்றதே தாதா அப்துல்லா என்ற பெரும் கப்பல்வணிகரின் வழக்குக்கு உதவிசெய்வதற்காக. அக்காலமதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்டமான வழக்கு அது. பலவருடங்களாக நடந்துவந்தது. பல்லாயிரம் பக்கங்களுக்கு கணக்குகள் ஆவணங்கள் கொண்டது. வழக்கு ஆரம்பித்தபோதிருந்தவர்கள் பிறகு இல்லை. எவருக்கு அந்த வழக்கு என்ன ஏது என்றே தெரியாது

காந்தி அந்த வழக்கை ஆதியில் இருந்தே கற்க ஆரம்பிக்கிறார். அதற்காக கணக்கு எழுதுவதை கற்கிறார். மெல்லமெல்ல சட்டச்சிக்கல்களை நீவி அந்தவழக்கை சுருக்கிச்சுருக்கி என்ன பிரச்சினை என தெளிவாக்குகிறார் . அதன்பின் இரு தரப்பினரிடமும் சென்று அதைப்பற்றிப் பேசுகிறார். இந்த வழக்கு இருசாராருக்குமே எவ்வளவு இழப்பை உருவாக்கும் என்று விளக்குகிறார். ஒவ்வொருவரும் சற்றே விட்டுக்கொடுத்தால் வழக்கை எப்படி எளிதாக முடித்துக்கொள்ளலாம் என்று புரியவைக்கிறார். அவ்வழக்கின் உண்மையான பிரச்சினை இருதரப்பினரின் அகங்காரம் மட்டுமே என தெளிவாக்குகிறார். வழக்கு சமரசமாகிறது. இருசாராருமே காந்திக்கு தென்னாப்ரிக்காவில் மிகபெரிய பக்கபலமாக ஆகிறார்கள்.

அதுதான் காந்தி கண்டு கொண்ட வழிமுறை. வாழ்நாள் முழுக்க அவர் முன்வைத்த அரசியல் தரிசனம் அதுவே. வரலாற்றின் எந்த தரப்புக்கும் அதற்கான இருத்தல்நியாயம் ஒன்றிருக்கலாம். எல்லா தரப்பும் பிற தரப்புகளுடன் போராடித்தான் தன்னை நிறுவிக்கொண்டு முன்னகர முடியும். ஆனால் அந்தப்போராட்டத்தை வன்முறை இல்லாமல் வெறுப்பு இல்லாமல் நிகழ்த்தமுடியும். நீயும் நானும் வரலாற்றின் இரு தரப்புகள் மட்டுமே என்ற புரிதலுடன் அதை முன்னெடுக்கமுடியும்

காந்தியின் அரசியல் அப்படித்தான் அமைந்திருந்தது. ஒற்றுமை மூலம் அறச்சார்பு மூலம் நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டு எதிர்தரப்பின் அறத்துடன் தீர்மானமான விடாப்பிடியான பேச்சுவார்த்தையை நிகழ்த்துவதையே அவர் போராட்டம் என்று சொன்னார். இருபதாம் நூற்றாண்டில் பேரழிவு இல்லாமல் வெற்றிகளை அடையக்கூடிய ஒரே போராட்ட வழி அதுவே என்று கற்பித்தார். அது தன் இறுதி விளைவாக வெறுப்பை உருவாக்குவதில்லை.

ஆகவே காந்தியின் எதிர்தரப்புகள் அவரை வெறுத்ததில்லை. தென்னாப்ரிக்காவில் இரு காவலதிகாரிகளை காந்தி நீதிமன்றத்துக்கு இழுத்து வேலையிழக்கச்செய்கிறார். ஆனால் பிறகு அவர்களில் ஒருவருக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அவர் காந்தியைத்தான் நம்பகமான நண்பராக நினைத்து அணுகுகிறார். அதுவே காந்தியின் வழி

ரிக்வேதம் சொல்கிறது.

‘ஒன்றுசேர்ந்து பயணம்செய்யுங்கள்
சேர்ந்தமர்ந்து விவாதியுங்கள்
உங்கள் மனங்களெல்லாம் ஒன்றாகட்டும்’

ரிக்வேதமே பழைமையானது. அதிலும் அதன் முதற்காண்டங்கள் மிகமிகத் தொன்மையானவை. மானுட சிந்தனை தோன்றிய காலகட்டத்தைச் சேர்ந்தவை. அக்காலகட்டத்திலேயே விவாதத்தின் சாத்தியக்கூறுகள் கண்டடையப்பட்டுவிட்டன. விவாதத்தின் எதிர்மறைப்பண்புகளும் அறியப்பட்டுவிட்டன. ஆகவேதான் விவாதம் மூலம் மனங்கள் ஒன்றாகவேண்டும் என வேதரிஷி அறைகூவுகிறார்

நீ சொல்லும் ஒரு சொல்லையேனும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நீயும் நானும் ஒரே ஞானத்தேடலின் இருபக்கங்கள் என்ற பிரக்ஞை நம்மிடம் இருந்தால் நாம் எதைப்பற்றியும் விவாதிக்கமுடியும். விவாதத்தின் விளைவாக இரு சாராரும் வைத்திருக்கும் ஞானம் மேம்பட முடியும். இருவரும் தங்களை இன்னும் தெளிவாக கண்டடைய முடியும்

உரையாடலுக்கான இந்த அமைப்பில் அந்த விவாதம் நிகழட்டும். வாழ்க

[25- 12-2012ல் திருவண்ணாமலை வம்சி புத்தகக்கடை மாடியில் தொடங்கப்பட்ட உரையாடலுக்கான டையலாக் என்ற அமைப்பு மற்றும் விவாத அரங்கின் முதல்நாள் விழாவில் ஆற்றிய உரை]

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 30, 2012

 

 

 

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனின் காந்தி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42