அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3

அயோத்திதாசர் உருவாக்கிய வரலாற்றெழுத்தின் அடிப்படையான கூறுகள் என்னென்ன? அவற்றை என் அவதானிப்பில் நான் இவ்வாறு வகுத்துக்கொள்வேன்.

அயோத்திதாசர் அவர்களின் இந்திரர்தேசத்து சரித்திரத்தில் நாம் காணும் முதன்மையான அம்சம் அதன் மாற்று வரலாற்றுத் தரிசனம். அதை எழுதப்பட்ட வரலாற்றின் தலைகீழாக்கம் என்று ராஜ்கௌதமன் போன்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த தலைகீழாக்கம் அயோத்திதாசர் அவர்களால் கண்டடையப்பட்ட ஒன்றல்ல. அது ஏற்கனவே இங்கே இருப்பதன் நவீன வடிவம்தான். தலைகீழாக்கம் எப்போதுமே நம் மரபில் இருந்துகொண்டிருக்கிறது.

ஒரு தொன்மக்கதை. இக்கதை நிகழும் காலகட்டத்தில் பறையர்களும் புலையர்களும் ஆதிக்கசாதிகளாக இருந்தனர். திருவனந்தபுரம்கோயிலிருக்கும் இடம் அனந்தன்காடு என அழைக்கப்பட்டது . அங்கிருந்த அனந்தன்சாமி அன்று புலையர்களின் குலதெய்வம். அதற்கு ஒரு நம்பூதிரி பிராமணன் பூசைசெய்துவந்தான். அவன் பரதேசிப்பிராமணன் என்கிறது கதை. அதாவது வெளியே இருந்து வந்தவன். அவன் கொண்டுவந்த தீ அணைந்துபோனதனால் அருகே உள்ள புலையர் குடிலுக்கு தீ கேட்கசென்றான் . அங்கிருந்த புலையர்பெண்ணைக்கண்டு காதலுற்றான்.

ஆனால் அன்று புலையர் உயர்சாதியாகையால் அவனுக்குப் பெண்கொடுக்க அவள்தந்தையான மூத்தபுலையர் மறுத்துவிட்டார். நம்பூதிரி பலவாறு வற்புறுத்தினான். விரதமிருந்தான். கடைசியில் புலையர்தலைவன் அவனை அனந்தன்காட்டுக்குள் கூட்டிசென்று ஒரு பாழுங்கிணற்றைச் சுட்டிக்காட்டி அதற்குள் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கும்படிச் சொன்னார். குனிந்து பார்த்த நம்பூதிரியின் கால்களை தூக்கி அவனை அபப்டியே கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டான். தலைகீழாக கிணற்றில் விழுந்த நம்பூதிரி இறந்தான்

நெடுங்காலம் கழித்து அவ்வழி வணிகத்துக்காக வந்த செட்டிகள் அந்த கிணற்றருகே அமர்ந்து தங்கள் தயிர்சாதப்பொட்டலத்தை பிரித்தனர். அந்த தயிர்சாத மணம் கேட்டு நம்பூதிரி மேலே வந்தான். நடுவே சோற்றுமூட்டையை வைத்து சுற்றி அனைவரும் அமர்ந்து கொள்ள தலைவன் உருட்டி ஒவ்வொரு கையிலும் கவளங்களை வைத்தான். எட்டு கைகள் சோற்றுக்காக நீண்டபோது ஒன்பதாவது கையாக தானும் கைநீட்டினான். இருட்டாக இருந்தமையால் வணிகர்தலைவன் அதை கவனிக்கவில்லை.

அவர்கள் கிளம்பியபோது நம்பூதிரியின் ஆவியும் கூடவே வந்தது. அடுத்து அவர்கள் குமரிமாவட்டத்தில் உள்ள இரவிப்புதூர் என்ற இடத்தில் மூட்டையை பிரித்தபோது ஆவியும் கைநீட்டியது. இப்போது பகல். ஆகவே ஒரு கை கூடுவதை தலைவன் கவனித்துவிட்டன். சோற்றை அருகே இருந்த கிணற்றுக்குள் வீசினான். நம்பூதிரி தலைகீழாக உள்ளே பாய்ந்தான். மேலே மந்திரம்போட்டு நூலைக்கட்டி அவனை உள்ளே அடைத்துவிட்டான் தலைவன். அந்த நம்பூதிரியை அங்கேயே நிறுவி கோயில்கட்டி வருடத்துக்கு ஒருமுறை தயிர்சாதம் படைத்து வழிபட ஆரம்பித்தனர்

சுவாரசியமென்னவென்றால் இந்த சிறுதெய்வம் தலைகீழாகத்தான் நிறுவப்பட்டுள்ளது. தலைகீழ் தெய்வத்துக்குத்தான் படையலும் வழிபாடும் நடக்கிறது. ஆமாம், தலைகீழாக்கம் இங்குள்ள அடித்தளச்சாதியினரின் வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

இந்திரர்தேசத்துச் சரித்திரத்தில் இதற்கிணையான பல நிகழ்வுகளை அயோத்திதாசர் கூறுதுகிறார். உண்மையில் பிராமணர்களை வெறுத்து ஒதுக்கி சாணியடித்து துரத்துபவர்கள் பறையர்களே என்கிறார். ராஜ்கௌதமன் அவரது நூலில் அது அயோத்திதாசர் செய்யும் ஒரு தலைகீழாக்கம் என்கிறார். ஆனால் நான் என் சிறுவயதுமுதல் அத்தகைய நூற்றுக்கணக்கான கதைகளை கேட்டு வளர்ந்திருக்கிறேன். குறைந்தது முந்நூறு ஆண்டு பழைமைகொண்ட தொன்மங்கள் பலவற்றில் அதற்கிணையான சித்தரிப்புகள் உள்ளன

அதாவது அயோத்திதாசர் எதையும் புதிதாக புனையவில்லை. புதிய தலைகீழாக்கங்களை நிகழ்த்தவுமில்லை. ஏற்கனவே இந்திய வரலாற்று மரபின் ஒரு பகுதியில் இருந்துகொண்டிருந்த ஒரு சரடை நவீன மொழிபுக்குள் கொண்டு வருகிறார் , அவ்வளவுதான்.

அன்றைய வரலாற்றெழுத்து அதை ஒருபொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் அன்று நாட்டாரியல் சார்ந்த எவற்றையும் வரலாற்று ஆதாரங்களாகக் கொள்ளக்கூடாதென்ற எண்ணம் இருந்தது. சுசீந்திரம் பேராலயம் பற்றி ஒரு மகத்தான நூலை உருவாக்கிய கே.கே.பிள்ளை சுசீந்திரம் பற்றிய எந்த நாட்டார்கதையையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவை மனம்போனபடிச் சொல்லப்படும் வாய்மொழிக்கூற்றுக்கள் என்றே நினைத்தார். தொல்லியல் ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களுமே வரலாற்றை உருவாக்குகின்றன என அவர் நினைத்தார்.

அடுத்தபடியாக அயோத்திதாசர் அந்த மாற்று வரலாற்றுத் தரிசனங்களின் அடிப்படையில் தொன்மங்களை மறு கட்டமைக்கிறார். மாவலி பற்றிய தொன்மத்தை அவர் கையாளும் முறை ஓர் உதாரணம். இதுவும் அவரது விசேஷ கண்டுபிடிப்பு அல்ல. இந்தவகையான மாற்று விளக்கங்கள் எப்போதுமே நம்முடைய மரபில் இருந்துள்ளன. கொடுங்கல்லூர் கோயில் இன்று ஒரு துர்க்கை ஆலயம். அதற்கு முன் அது சேரன் செங்குட்டுவன் நிறுவிய கண்ணகி ஆலயம்.

ஆனால் நல்லம்மை தோற்றம் என்ற புலையர்களின் வாய்மொழிப்பாடல் இன்றும் அக்கோயிலில் முதல்நாள் திருவிழாவில் பாடப்படுகிறது. முதல்நாள் திருவிழா புலையர்கள் மற்றும் குறும்பர்களுக்கு உரிமைப்பட்டதாக இருந்திருக்கிறது. இன்று அது எல்லாசாதியினருக்குமானதாக ஆகிவிட்டது. அன்று கோயிலின் பிராமணப்பூசாரிகள் கோயிலை திறந்துவிட்டு தேவியை கொண்டுவந்து முகமண்டபத்தில் வைத்து விட்டு வெளியேறிவிடுவார்கள். பின்னர் அவர்கள் திரும்பிவந்து கோயிலை தீட்டுக்கழித்து திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள்

அந்த நல்லம்மைத்தோற்றம் பாட்டில் கண்ணகி ஒரு நாட்டார்தெய்வமாக இருக்கிறாள். செங்குட்டுவன் நிறுவுவதற்கும் முற்பட்ட வடிவம். அவளுக்கு பௌத்ததாராதேவியின் சாயல்கள் இருக்கின்றன. மாமங்கலை என்று சொல்லப்படுகிறாள். அதாவது நாம் தொன்மங்கள் உறுதியான கட்டமைப்புகளாக இல்லை. ஏற்கனவே அவை பல்வேறு மாற்றுவடிவங்களுடன்தான் இருக்கின்றன. இந்திரர்தேசத்துச் சரித்திரத்தில் அயோத்திதாசர் எழுதியதுபோலவே இருக்கிறது நல்லம்மைத்தோற்றம்

இன்னொருசுவாரசியம், கொடுங்கல்லூர் தேவி கோயிலின் பூசாரிகள் அடிகள் எனப்படுகிறார்கள். அவர்களுக்கு கேரள நம்பூதிரி மரபில் இடமில்லை.[ இதுசபரிமலை பூசாரிகளுக்கான தந்திரிகளுக்கும் பொருந்தும். அவர்கள் கேரளப் பிராமணர்கள் அல்ல, பிராமணத்துவம் உடைய ஒரு தனிக்குடும்பம். இந்த அம்சம் இவ்விரு ஆலயங்களும் பௌத்த பூர்வீகம் கொண்டவை என்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது] அடிகள் என்பது பௌத்த -ச்மண துறவிகளுக்கான அடைமொழி. அவர்களின் இடத்தை இவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்லலாம். ஆம், இந்திரர்தேசத்துச் சரித்திரத்தை இங்கே அப்படியே திருப்பி எழுதிவிடலாம்

மூன்றாவதாக அயோத்திதாசர் சொற்களை புதியதாக விளக்குவதை சுட்டிக்காட்டலாம். அசுரர் என்ற சொல்லை அவர் விளக்குவதை உதாரணமாகச் சொல்வேன். அதற்கும் நம் மரபில் நீண்ட வேர் உள்ளது. ஆதிகேசவன் பற்றிய தொன்மத்தைச் சொன்னேன். குமரிமாவட்ட அடித்தள மக்களின் வில்லுப்பாட்டில் கேசவன் என்ற சொல்லுக்கு ஒரு விளக்கம் உள்ளது. கேசியின்மகன் என்றுதான அச்சொல் பொருள் தருகிறது. ஆதிகேசவன் கேசியை வெல்லவில்லை, மகனாகிய அவனை அவள் தன் மடியில் வைத்திருக்கிறாள் என்பாகள்.

இப்படித்தொகுக்கிறேன்.

1. அயோத்திதாசர் எழுதப்பட்ட வரலாற்றுக்கான மாற்றுவடிவை மக்களின் நம்பிக்கைகள் மற்றும் தொன்மங்களில் இருந்து எடுக்கிறார்

2. எழுதப்பட்ட வரலாற்றின் முறைமையை முழுமையாக நிராகரித்து மக்களிடையே ஏற்கனவே இருந்துகொண்டிருக்கு ஒரு புராணிக வரலாற்று முறைமையை கையாள்கிறார்

3. அந்த மாற்றுவரலாற்றின் சாராம்சம் இன்றைய விடுதலைக்காகவும் நாளைய சமத்துவசமூகத்துக்காவும் அமையவேண்டுமென நினைக்கிறார். அதனடிப்படையில் அந்த மாற்றுவரலாற்றை அவர் நவீனப்படுத்துகிறார்

அதற்காக அயோத்திதாசர் கீழ்க்கண்ட வழிகளை கையாள்கிறார்

1, மாற்று வரலாற்றுத்தரிசனம்

2. மாற்றுத் தொன்மவிளக்கம்

3. மாற்று சொல்விளக்கம்

அயோத்திதாசர் முன்வைப்பது ஒரு எளிய முன்வரைவை மட்டுமே. நம்மை நாம் இப்படியும் பார்க்கலாமே என்கிறார். அன்றைய கேம்பிரிட்ஜ் ஆய்வுநோக்கும், தேசிய ஆய்வுநோக்கும் அதை ஒரு முறைமை இல்லாத பாமரத்தனமான முயற்சி என நிராகரித்துவிட்டன. பின்னர்வந்த மார்க்ஸிய வரலாற்றாய்வுநோக்கும் அதை தரவுகளின் அடிப்படையற்ற ஆய்வுமுறை என நிராகரித்தது. அது ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு எவர் கண்ணுக்கும்படவில்லை

மேலே சொன்ன மூன்று ஆய்வுமுறைகளும் வரலாற்றுரீதியாக நம் ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வதற்கு எவ்வகையிலும் பயனற்றவை. ஆகவே நாம் நம்முடைய சொந்த ஆன்மீகத்தை, நமக்குள் உறையும் ஆழ்படிமங்களையும் தொன்மங்களையும் படிமங்களையும் , புரிந்துகொள்ள நமக்குரிய வரலாற்றாய்வுமுறை ஒன்று தேவை. அந்த தளத்தில் அயோத்திதாசர் அவர்களின் வழிகாட்டல் முக்கியமானது

அந்தக்கோணத்தில் நாம் நம்முடைய வரலாற்றை மீட்டு எழுதவேண்டிய ஒரு பெரும்பணி நம் முன் இருக்கிறது.

*

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் நம்முடைய வரலாறு நவீன நோக்கில் எழுதப்படும் பணி தொடங்கியது. அவ்வாறு வரலாறு தொகுது நவீனப்படுத்தி எழுதப்பட்டபோது அதன் விளைவாக நம்முடைய ஆன்மீகமும் மறுஆக்கம் செய்யப்பட்டது.சைவம் வைணவம் போன்றவற்றில் நிகழ்ந்த மறுமலர்ச்சி என்பது இதுதான். அதாவது அவற்றின் ஆன்மீகமானது மறுவரலாற்றுவிளக்கம் பெற்றது.

ஏறத்தாழ இதேகாலகட்டத்தில்தான் பௌத்தமும் மறுவிளக்கம் பெற்றது. ஆல்காட், ரைஸ் விலியம்ஸ், பால் காரஸ் போண்ற மேலைநாட்டறிஞர்களாலும் அநகாரிக தம்மபால போன்ற கீழை அறிஞர்களாலும். சைவமும் வைணவமும் எப்படி நவீனகாலகட்ட்டதுக்காக மறு ஆக்கம் செய்யபப்ட்டனவோ அதேபோலவே பௌத்தமும் மறு ஆக்கம்செய்யப்பட்டது.

இந்த மறுஆக்கத்தை இப்படி விளக்கலாம். இவை ஒருவகை சுத்தப்படுத்தல்கள். பல்வேறுசல்லடைகள் வழியாக மதமும் பண்பாடும் அரிக்கப்படுகின்றன. முதலில் புறவயத்தன்மை என்ற சல்லடை. அதன்பின் தத்துவத்தர்க்கம் என்ற சல்லடை. அதன்பின் நவீன அறிவியலால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவு என்ற சல்லடை. பொதுநாகரீகம் என்ற சல்லடை.

இப்படி அரித்து எடுக்கப்பட்ட தூய அம்சங்களைக்கொண்டு ஒரு மையம் கட்டப்படுகிறது. அதன்பின் அந்த மையம் எப்படி வரலாற்றில் உருவாகி வளர்ந்துவந்தது என்று விளக்கப்படுகிறது. இங்கே சைவம் வைணவம் எல்லாம் அப்படித்தான் விளக்கப்பட்டன. அதற்காகவே நூல்கள் எழுதிக்குவிக்கப்பட்டன.

அயோத்திதாசர் அவர்களின் அணுகுமுறை இதற்கு நேர் எதிரானது. அவரிடம் நவீனகாலகட்டம் உருவாக்கிய எந்தச்சல்லடையும் இல்லை. அவருக்கும் அவரதுசமகாலத்தவரும் தோழருமான பேரா லட்சுமிநரசுவுக்கும் இடையேயான வேறுபாடே இதுதான். லட்சுமிநரசு முன்வைப்பது சல்லடைகளால் சலிக்கப்பட்ட பௌத்தத்தை. அயோத்திதாசர் முன்வைப்பது அபப்டியே மண்ணில் இருந்து அள்ளப்பட்ட ஒஉ பௌத்தவரலாற்றை, லட்சுமிநரசுவின் பௌத்ததில் மக்களின் நம்பிக்கைகளுக்கும் தொன்மங்களுக்கும் இடமில்லை. தமிழின் நீண்ட பாரம்பரியமே அதில் இல்லை. அவர் சொல்வது தத்துவார்த்தப்படுத்தப்பட்ட புறவயமாக ஆக்கப்பட்ட பகுத்தறிவுக்கு உகந்த ஒரு பௌத்தத்தை. அதுவல்ல அயோத்திதாசர் முன்வைப்பது.

அயோத்திதாசர் ரும் பௌத்தத்தையே பேசுகிறார், ஆனால் அவர் அடியிலிருந்து பேசுகிறார். லட்சுமிநரசு மேலிருந்து பேசுகிறார். அவரது சமகாலத்துச் சிந்தனையாளர்கள் அனைவரும் மேலிருந்து பேசியவர்களே.பிற அனைவரும் ஆன்மீகத்தின் வரலாற்றை உச்சங்களைக்கொண்டு புனைகிறார்கள். சிறந்தபுள்ளிகளைக்கொண்டு கட்டுகிறார்கள். அயோத்திதாசர் எல்லாவற்றையும் அப்படியே அள்ளி வைக்கிறார். அதில் ஒரு ’பண்படாத தன்மை’ இருக்கிறது. ஆனால் அதுவே அவரது பலம், சிறப்பம்சம். அதையே நான் அவரை முன்னோடி என்று சுட்டுவதற்கான காரணமாக கருதுகிறேன்.

அந்த ‘பண்படாததன்மை’ காரணமாக பிறவழிமுறைகளில் தடுக்கப்பட்டு வெளியே நிறுத்தப்பட்ட பல்வேறு வரலாற்றுக்கூற்றுகள் உள்ளே வந்துவிடுகின்றன. அடித்தள மக்களின் குரல்கள் வரலாற்றுக்குள் ஒலிக்கமுடிகிறது. வேறுவகையான வரலாற்று மொழிபுகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அணைகட்டி நிறுத்தப்பட்ட நம்முடைய வரலாற்றுக்களத்தில் குப்பையும்கூளமும் மலர்களும் மண்மணமுமாக புதுவெள்ளம் ஒன்று நுழைய முடிகிறது.

*

என் முதிரா இளமையில் வரலாற்று ரீதியான ஆன்மீகம் என்று பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்ன சொல் என்னுடைய ஆழத்தில் கிடந்திருக்கவேண்டும். பின்னர் விஷ்ணுபுரம் எழுதியபோது நான் முயன்றது அதற்காகவே. அந்நாவல் நம்முடைய ஆன்மீகத்தேடலை பிரம்மாண்டமான வரலாற்றுப்பின்னணியில் நிறுத்தி ஆராய்வதற்கான ஒரு முயற்சி. அந்நாவலைப்பற்றி நான் இங்கே விரிவாகச் சொல்லவேண்டியதில்லை. வெளிவந்தபோது மிகப்பெரும்பாலான ஆய்வாளர்களால் மேலோட்டமான அபிப்பிராயத்துடன் கடந்துசெல்லப்பட்ட நாவல் அது. இன்றுதான் அதற்கான மிகச்சிறந்த வாசிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன

அந்நாவலில் முதன்மையாக நான் உருவாக்கியது ஒரு பின்னலைத்தான். அந்நாவலில் வரும் விஷ்ணு முதல் ஆறுகள் மலைகள் சிறுதெய்வங்கள் வரை அனைத்துக்கும் மூன்று முகங்கள் உண்டு. ஒரு வைதிகமுகம். ஒரு ஆதிக்கத்தமிழ் முகம். ஒரு ஆதிச்சமூகத்தின் முகம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் மூன்று விளக்கங்கள் உண்டு. ஏன் ஒவ்வொரு சொல்லுக்கும் மூன்று முகம் உண்டு. அந்த மூன்று அடுக்குகள் நடுவே நிகழும் ஒரு நுட்பமான ஊடுபாவுதான் அந்நாவல்.

மொத்த விஷ்ணுபுரத்தையே பாண்டியனும் மகாவைதிகனும் சேர்ந்து தொல்தெய்வமான நீலியின் முன் காலடியில் கொண்டுவைக்கும் ஒரு பெரும் காட்சி சித்தரிப்பு அந்நாவலில் உண்டு. அந்த அத்தியாயத்தை எழுதியபோது நான் உண்மையிலேயே ஒரு புதிய வாசலைத் திறந்ததாக உணர்ந்தேன். மூர்க்கமாக தட்டித்தட்டி ஒரு சிறு இடுக்கைக் கண்டுகொண்டிருக்கிறேன். ஆம், விஷ்ணுபுரம் ஒரு மாற்று வரலாறு.

அப்போது நான் அயோத்திதாசரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. ஆச்சரியமென்னவென்றால் விஷ்ணுபுரம் சம்பந்தமான ஒரு விவாத அரங்கில்தான் முதல்முறையாக ஒருவர் அயோத்திதாசர் பற்றி என்னிடம் சொன்னார். இன்று அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ‘தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் விஷ்ணுபுரம் நாவலில் எழுதிய விஷயங்களை நீங்களே புரிந்துகொள்ளவேண்டுமென்றால் அயோத்திதாசர் நூல்களை வாசிக்கவேண்டும்’ என்றார் அவர். அவருடன் சென்று நான் அன்பு பொன்னோவியம் அவர்களைச் சந்தித்தேன்

கொற்றவையை எழுதும்போது நான் அயோத்திதாசர் நூல்களை வாசித்துவிட்டிருந்தேன். அவரது மாற்றுப் ’புராணவரலாற்றெழுத்து’ முறையால் உற்சாகமும் அடைந்திருந்தேன். கொற்றவையில் ஒரு வாச்கான் அயோத்திதாசர் தன் நூல்கள் வழியாக காட்டிய மூன்று வழிகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். விஷ்ணுபுரத்தில் அறியாமல் அவற்றைக் கையாண்டவன் அதைப்பற்றிய தெளிவுடன் கொற்றவையில் அந்த வழிமுறைகளை பயன்படுத்தினேன்

கொற்றவை ஒரு மாற்றுத்தமிழ்வரலாறு. மேலிருந்தும் கீழிருந்தும் அதில் வரலாறு எழுதப்பட்டுள்ளது அதிலும் நீலி வருகிறாள். வரலாறு அவளுக்கு வெளியே ஒன்றாகவும் அவள்வழியாக இன்னொன்றாகவும் அந்நாவலில் ஓடிச்செல்கிறது. அதில் ஒட்டுமொத்த தமிழ்த் தொன்ம உலகும் மறுவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சொற்கள் மறுஆக்கம்செய்யப்பட்டு அதன் வழியாக இன்னொரு வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. கொற்றவையில் சாம்பவர் பற்றிய தொன்மக்கட்டுமானம் போன்றவற்றை அயோத்திதாசர் அவர்களின் முன்னுதாரணம் இல்லையேல் எழுதியிருக்கமுடியாது. அயோத்திதாசர் அவர்கள் கையாண்ட பல சொற்கள் பல தொன்மங்கள் அந்நாவலில் கையாளப்பட்டுள்ளன.

*

ஊழ்கத்தில் நாம் கண்மூடி அமர்கையில் என்ன நிகழ்கிறது? முதலில் நாம் சொற்களை நம் அடியிலா ஆழம் நோக்கி ஏவுகிறோம். நமக்குள் ஒரு ராணித்தேனீ இருந்து சொற்களை முட்டையிட்டு குஞ்சுபொரித்து அனுப்பிக்கொண்டே இருப்பதை அறிகிறோம். இது முடியவே முடியாதா என சலிக்கிறோம். சொற்கள் வழியாக ஒரு படிக்கட்டை அமைத்து அதில் கால்பதித்து அந்த இருளுக்குள் இறங்கிச் செல்கிறோம்

அச்சொற்களெல்லாம் தீர்ந்தபின் நாம் படிமங்களை ஏவ ஆரம்பிக்கிறோம். நமக்குள் இருக்கும் ஒரு சில அச்சுகளுக்குள் நம் கற்பனை சென்றமைந்து படிமங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பதை உணர்கிறோம். அலைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும் முடிவில்லா பெருங்கடலென அதை அறிகிறோம். ஏதோ ஒருபுள்ளியில் நாம் கடலை கண்டுவிட்டால் அலைகள் இல்லாமலாகிவிடுகின்றன.

அதன்பின் நாம் நமக்கான ஒரு படிமத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தப்படிமத்தின் கடைசிப்படியில் நின்று நாம் நம் ஆழத்து இருளுக்கு அப்பால் திறக்கும் ஒரு வாசலை சென்றடைகிறோம்.

இந்தப்யணத்தில் நாம் கையாளும் சொற்களும் படிமங்களுமெல்லாம் இந்த பண்பாட்டுவெளியிலிருந்து நமக்களிக்கப்பட்ட்டவை என்னும்போது அவற்றை அறியாமல் நாம் ஒருபோதும் நம் ஆன்மீகத்தை உணர்ந்துவிடமுடியாது. ஒலியோ சொல்லோ பொருளோ சித்திரமோ நாம் அதை ஆழ்ந்தறியாமல் அதை சரியாகப் பயன்படுத்துவது முடியாது. ஆகவேதான் வரலாற்றுரீதியான ஆன்மீகம் என்று பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னார்

நாம் கையில்வைத்திருக்கும் சொற்களும் படிமங்களுமெல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டுவரை வரலாற்றின் பல ஓடைகள் வழியாக பல வழிகளில் பலவற்றைக் கரைத்துக்கொண்டு ஓடிவந்து சேர்ந்தவை. பதினெட்டாம்நூற்றாண்டுக்குப்பின் அவை பல்வேறு மதங்களாக அணைகட்டி கால்வாய்கள் வழியாக ஒழுங்குபடுத்தப்பட்டு அனுப்பப்பட்டு நம்மிடம் வந்துள்ளன. அவற்றை மேலும் மேலும் பின்னகர்ந்து சென்று அறியாமல் அவற்றுக்குள் நாம் நுழைய முடியாது.

நம்மிடமிருப்பவை எல்லாமே மேலிருந்து பார்க்கப்பட்டவை. மேற்பரப்பிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை. கிளையிலிருந்தும் இலையிலிருந்தும் மலரில் இருந்தும் எடுக்கப்பட்டவை. அவை அளிக்கும் அர்த்தத்துக்கு மிகப்பெரிய எல்லை உண்டு. இவையனைத்தையும் அடியிலிருந்து பார்க்கமுடியும். வேரிலிருந்து அணுகமுடியும். அதற்கான ஒரு வழியை அயோத்திதாசர் அவர்களின் அணுகுமுறை திறந்துவைக்கிறது.

நான் நாட்டுப்புறப்பாடல்களை சேர்த்துவைப்பதில் ஆர்வமுடையவன். கடையில் ஒரு நாட்டுப்புறப்பாடலை வாங்கினேன். புலைச்சியம்மன் தோற்றம் பாட்டு. நாட்டுப்புறப்பாட்டு என்று சொல்லமுடியாது, எண்சீர்கழிநெடிலடி ஆசிரியமும் நடுவே பயின்று வருகிறது. அந்நூலை பிரசுரித்தவரின் தொலைபேசி எண் இருந்தது. அவரிடம் பேசினேன். அம்மன் அருள்வாக்கு சொன்னதனால் அந்தப் பாடலை பாடியதாகச் சொன்னார். புலைச்சியம்மன் ஒரு கிழவியில் சன்னதமாகி வந்து ‘என் சரித்திரத்தைப் பாடுடா’ என்று ஆவேசமாக ஆணையிட்டாளாம்.

என் சரித்திரத்தப்பாடு என ஆணையிடும் நூற்றுக்கணக்கான தெய்வங்கள் உறங்கும் மண் இது. அவர்களுக்கெல்லாம் இடமுள்ள ஒரு வரலாற்றை நாம் உருவாக்கியாகவேண்டியிருக்கிறது

[ 8-12-2012 அன்று மதுரை அயோத்திதாசர் ஆய்வுமையத்தின் சார்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]

முந்தைய கட்டுரைமரபு- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதி ஹிண்டு செய்தி