தேவதேவனின் படிமங்கள்

எந்த ஒரு கவிஞனையும் அவனுடைய முக்கியமான படிமங்களின் அடிப்படையிலேயே பொதுவாக வாசகர்கள் அணுகுவார்கள், ஞாபகம் வைத்திருப்பார்கள். பலசமயம் அதுபற்றிய உணர்வு அவர்களுக்கு இருக்காது எனினும் கூட. பிரமிள் கவிதைகளில் தீ (கருகாத தவிப்புகள் கூடி நாவின் திரிபிளந்து அணையாது எரியும் ஒரு பெயர் நீ), பசுவய்யா கவிதைகளில் கடல் (கடலோரம் காலடிச்சுவடு), நகுலன் கவிதைகளில் மழை (வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. நான் வீட்டுக்குள் இருந்தேன். ஒரு சொரூப நிலை) ஆகியவை உடனடியாக ஞாபகம் வருபவை.

பல்வேறு அந்தரங்கக் காரணங்களினால் புறப்பொருட்கள் கவி மனதில் விசேஷமான படிமத்தன்மையைக் கொள்கின்றன. அவை தன்னளவில் படிமங்கள்தான். (படிமங்களாக இல்லாத பொருள் இல்லை). கூடவே நீண்ட கவி மரபால் பற்பல கவிப்படிமங்களாகவும் அவை மாற்றப்பட்டு வந்துள்ளன. இக்கவிமனங்கள் அவற்றைத் தங்களுக்குரிய முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி அந்தரங்கப் படிமங்களாக மிக விசேஷமாகக் கவிஞனின் ஆளுமையுடன் நெருங்கிச் சென்று அவனுடைய கவியுலகுக்கே அடையாளமாக மாறுகின்றன. பிரமிளின் கவிதைகளில் நெருப்பும் பாம்பும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை அறியும் ஒருவன், பசுவய்யா கவிதைகளில் கடலும் வீடும் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆராயும் ஒருவன், இக்கவிஞர்களின் கவியுலகை மொத்தமாக ஊடுருவிச் சென்றுவிட முடியும். இப்படிமங்களைக் கவிஞர்கள் பயன்படுத்தும் விதமும் விசேஷமான கவனத்திற்கு உரியது. நிலைச்சுடராய் எரியும் (உக்கிரமற்ற) சுடர் பிரமிள் கண்ணில் ஏன் படவில்லை? பசுவய்யா ஏன் ஒரு முறை கூடக் கடலில் இறங்கவில்லை.

தேவதேவனின் படிமங்கள் குறுகிய எல்லைக்குட்பட்டவை. எனவே பல படிமங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. நவீன காலகட்டக் கவிஞர்கள் அனைவருக்கும் பொருந்தும் விதி இது. அவர்களுடைய படிமங்களில் முக்கியமானவை பத்தைத் தாண்டாது. காவியங்கள் நவீன கவிதையில் உருவாகாது போனமைக்குக் காரணம் இதுதான் போலும். தேவதேவன் கவிதைகளில் மைய இடம்பெறும் படிமங்கள் வீடு, மரம், பறவை ஆகியவை. வீடு சிலசமயம் அறையாக, சிலசமயம் குடிசையாகத் தென்படும். குருவியாக, சிலசமயம் வண்ணத்துப்பூச்சியாகப் பறவை. நடுவே மரம் சிலசமயம் விருட்சமாக, சில சமயம் கிளையாக, சிலசமயம் பாதை நிழல்மரமாகத் தோற்றம் தருகிறது. வீடு மண்ணில் மனிதன் உருவாக்கிக் கொண்ட சுய இடம். (சுயமெனும் இடம் அல்லது இடமெனும் சுயம்) மரமோ மண்ணில் வேர்விட்டு வானில் கைவிரித்து எழமுனையும் பேரிருப்பு. பறவை எப்போதும் வானில் தூது. உயிரின் ஆனந்தப் பெருமிதத்துடன் அது வானில் நீந்துகிறது. மரத்தை விண்ணுடன் பிணைப்பது அது. அறைக்குள் மகத்துவங்களின் அழைப்பாக நுழைந்து பிடிதராது நழுவி வெளியேறுவது.

ஆரம்பகாலக் கவிதைகளில் தேவதேவனின் படிமங்கள் வடிவp பிசிறுகளுடன் மெல்ல உருக்கொள்ளத் தொடங்குவதைக் காணலாம். வீடு, மரம், பறவை ஆகிய மூன்றும் தனித்தனியாக உருவாகின்றன. மரங்களைப் பற்றிய தேவதேவனின் குரலைச் சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை என எடுத்துக் கொள்பவர்கள் உண்டு. ஒருவகையில் அதுவும் சரிதான். சூழல் என்பது மனமன்றி வேறென்ன? எனினும் வாகனங்கள் உறுமும் கத்தக பூமியிலிருந்து ஒரு கவிஞன்

‘ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னைத் தைரியமாக நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்கமாட்டேன் என்கிறது.’

என்று ஏங்கும்போது அது வெறுமே பசுமைக்கான – புறப்பசுமைக்கான – குரல் மட்டும்தானா என நாம் யோசிக்க வேண்டும். தொடரும் வரிகளில் தேவதேவனின் படிம உலகு விரிகிறது.

’மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்’

என்று மரம் ஒரு பெரும் ஆற்றுப்படுத்தலாகத் தோற்றம் கொள்கிறது. வான் நோக்கி எழ எப்போதும் துடித்தவாறிருக்கும். மண்ணின் இச்சா சக்தியாகவே இங்கு மரம் தோற்றம் கொள்கிறது. ஒவ்வொருமுறை மரம் வரும்போதும் மறைமுகப் பேசுபொருளாக வானமே எழுந்து வருகிறது அவர் கவிதைகளில்

’உள்ளங்கைக் குழியிலிருந்து
இறக்கிவிடு இறக்கிவிடு எனத்
துடிதுடித்தன விதைகள்….’

அது உயிரின் துடிப்பு. மண்ணை உண்டு, வானமாக மாறுவதற்கான முடிவற்ற இச்சை, இயற்கையின் அனாதியான ஊக்கம் அது. விதைகளை நட்டு நீருற்றியபிறகு வானை நோக்கிச் சொல்கிறார்.

’அன்பானவனே
இப்போது இவள்
இருப்பிற்கு மட்டும் சிறியதாய்
ஒரு முன்னாடையை அணிவித்திருக்கிறேன்
பூமி குளிர மழைக்கும் உன் கரங்களில்
இவளைப் பிடித்து கொடுத்து விட்டேன்
இதுவரை இவள் என் மகளாக வளர்ந்தாள்
இனி இவள் உன்னுடையவள்’.

புராதனமான விவசாய மந்திரம் போல ஒழிக்கும் இவ்வரிகள் மிக அடியாழத்தில் மானுடம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றின் விரிதல்கள் ஆகும். மண்ணும் மரமும் மானுடனுக்கு எப்போதும் ஆதாரப்படிமங்கள். மனிதனை மீறியதும், அவனைப் பேணி வளர்ப்பதுமான ஏதோ வல்லமையொன்றின் ஜடவெளிப்பாடுகள் அவை. கனி தரும்போது தாயாகவும், நிழல் தரும்போது தந்தையாகவும், துணை நிற்கையில் உடன்பிறப்பாகவும் மரம் அவனுக்குத் தன்னை வெளிப்படுத்தியபடியே உள்ளது. இந்தப் படிம முடிவின்மையின் சாரமான அது என்ன? நாம் காண்பது இலைகளை, கிளைகளை, தளிர்களை, மலர்களை, இவற்றையெல்லாம் தொகுத்துருவான வடிவத்தை. இந்த வடிவத்தைப் பேணுவதனூடாக அது கொள்ளும் நோக்கம் என்ன? அறிய முடியாமையயே அங்கு மனிதமனம் தரிசிக்கும். பிரபஞ்ச சாரமான அறிய முடியாமை, அபூர்வமான தருணத்தில் மனம் திரைவிலக்கி அதைக் காண முற்படுகிறது.

’ஒரு மேற்கத்திய இசை நடத்துனனைப்போல
உணர்ச்சியுடன் கையை அசைத்து அசைத்து
உருகிக்கொண்டிருந்தது ஓர் ஒற்றைமரம்’

அம்மரத்தின் உடனே இசையாகிவிட்டிருப்பதை அறிகிறார் கவிஞர். இசை என்பது கேள்வி மூலம் அறிய நேரும் ஓர் அமைப்பு எனில் இங்கு மரம் ‘கேட்கப்படுகிறது. அப்பெரும் சங்கீதத்தினூடாகப் புகுந்து ஒரு காகம் வியர்த்தம் வியர்த்தம் என்று கூவுகிறது.

’அந்த இசையைத்தான்
இன்னும் செவிகள் எட்டவில்லை
காரணம்
புலன்களுக்கு எட்டாத கண்ணாடிச்சுவர்’

மானுட அனுபவங்களைத் தீர்மானிக்கும் புலன்களின் எல்லைக்கு அப்பால் உள்ளது அம்மரத்தின் முழுமை. அங்கு சென்றடைவது மானுட சாத்தியம் அல்ல. ஆனால் இங்கிருந்து அதை ஊகித்தறிய முடிகிறது.

’ஆயினும் என் மனம் குதூகலித்தது.
நான் கேளாத அந்த இசைக்கு
அந்த மரத்தின் உறுப்புகள் அனைத்தும்
நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு…’
என்று தவிக்கும் மகிழும் மனம் எதிர்பாராத கணத்தில் அக்கண்ணாடிச் சுவர் உடைந்து சிதற
’என் செவியையே மூழ்கடித்து
அடித்துச் சென்றுவிட்ட இசை வெள்ளம்’

மூலம் பேரனுபவத்தை அடைகிறது. ஒருகணம்! மறுகணம் மீண்டும் அந்தக்காகம் வியர்த்தம் வியர்த்தம் என்று கரையும் போலும்! மானுட அனுபவத்தின் எல்லையின்மையை ஒரு முறையும் எல்லைகளை மறுமுறையும் கூறியபடி சதா ஊசலாடும் மரம் அது.

’எங்கே எங்கே என
எத்திசையும் கைநீட்டி ஏமாந்த மரத்தின்
மார்பிலேயே பூத்திருந்தது கனி’

என்று முதல் தொகுப்பில் தேவதேவனின் முக்கியமாக படிமமாகிய மரம் மெல்ல உருவாகி வருவதைத் தொடர்ந்து காணலாம்.

’நிர்வாண கோபியராய்
கரையொட்டிய மரங்கள்
கால்களில் மோகம் வளர்த்து
நதிநீர் நோக்கி ஓடும்.
மண்டையில் மோகம் வளர்த்து
வானத்தை நோக்கி இறைஞ்சும்
மோக நிழலுக்குள் திளைத்தபடி
மனிதர் வருவர் போவர்
குளித்துக் கரையேறியவர்தான் யாரோ?’
(குளித்துக் கரையேறாத கோபியர்கள்)

என்று மரங்கள் மண்ணுடன் வேராலும் விண்ணுடன் சிரத்தாலும் மோகம் வளர்த்து நித்தியமான அலைக்கழிப்பில் நிற்கும் கோபிகைகளாக உருவம் கொள்கின்றன. நித்திய காமினிகளாகிய கோபியர். ஒருபோதும் அடங்காத மோகத்தின் தூலமாகவே தேவதேவன் முன் எல்லாத் தருணத்திலும் இயற்கை காட்சி தருகிறது.

பிறிதொரு கவிதையில் இந்த ‘மரம்’ (அது செடியாக இருக்கையில்?) அவர் காணவிழையும் அம்முகத்தை மறைக்கும் திரையெனவும் வடிவம் கொள்கிறது.

’செடி ஒன்று காற்றில்
உன் முகப்பரப்பிற்குள்ளேயே அசைகிறது.
கோணங்கள் எத்தனை மாற்றியும்
இங்கிருந்து உன் முகம் காண முடியவில்லை
இவ்விடம் விட்டும் என்னால் பெயர ஆகாது
ஆனால் காற்று உரத்து வீசுகையில்
செடிவிலகி உன்முகம் காண முடிகிறது’

மரத்தின் ஊசலாட்டம் அது ஒரே சமயம் ஊடகமாகவும் திரையாகவும் இருக்கும் இரு நிலையினூடாகவும்தான்.

வீடு தேவதேவனின் முக்கியமான படிமங்களில் ஒன்றாக முதல் தொகுப்பு முதல் உருவாகி வருகிறது. விடப்படவேண்டியதும், விட முடியாததும் ஆன வீடு. ஆனால் அவருடைய ஆரம்பகாலக் கவிதைகளில் அது அழுத்தம் பெறவில்லை.

’இரண்டு வீடுகளை
மனிதன் கட்டியாக வேண்டியுள்ளது.
ஒன்றைப் பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்
ஒன்றை சிட்டுக்குருவியிடமிருந்து’
(இரண்டு வீடுகள்)

என்ற துல்லியமான படிமமாக வீட்டை அவர் அடைவது மிகவும் பிந்திதான். தன் உயிரில் ஊறிய சாறிலிருந்து நூலெடுத்து, தன்னைத்தானே உறையவிட்டு ஒரு கூட்டைக்கட்டி, அதற்குள் வாழ்கிறது பட்டாம்பூச்சி. சிறகு முளைத்த கணமே அதை உடைத்து வீசிவிட்டு எழுந்துவிடும். பிறகு அதற்கு வீடு இல்லை. அதன் வீடு தவசாலை. காடெல்லாம் அலைந்து சுள்ளியும் நாரும் பொறுக்கித் தன் வீட்டை எழுப்பும் சிட்டுக்குருவிக்குக் கூடி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து வாழ வேண்டிய இடம் வீடு. பட்டுப்பூச்சியின் வீடு ஓர் ஏகாந்த முனை, சிட்டுக்குருவியின் வீடு ஒரு காதல் வெளி. தேவதேவனின் கவியுலகில் வீடு ‘நான் இருக்கும் இடம்’ என்று ஆகிறது. அதன் சுவர்கள் வெளியிலிருந்து என்னைப் பிரித்து எனக்கு அடையாளத்தையும் பாதுகாப்பையும் அளிக்கின்றன. ஆனால் அது இருக்கும்வரை என்னால் வெளிநோக்கி எழ முடியாது

.
’நெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று
என்ன செய்ய
இந்த வீட்டை நான் இன்னும் விட முடியவில்லை’.
(மாற்றப்படாத வீடு)

ஏனெனில் இந்த வீடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வசதியானது, தவிர்க்க முடியாதது.

’என்றாலும்
நான் அங்கே ஒரு வீடு கட்டி வைத்துள்ளேன்’.

அங்கே ‘அந்த வீடு’ ஓர் இலட்சியப்புள்ளியாக எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இங்கே நாமிருக்கும் வீடு நம்மைத் தொடர்ந்து மறு ஆக்கம் செய்து கொண்டிருக்கிறது. நதிமீது தோணிபோல நம்மை அது இட்டுச் செல்கிறது.

’நீ இளைப்பாறத் தேர்ந்தெடுத்த
மரத்தடியா
ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்
ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா
பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்
பாழ் மண்டபமா
எது உன்வீடு
இவை எல்லாமுமேவா?’
(உனது வீடு)

என்று துவங்கும் தேவதேவனின் தவிப்பு

’உனது வீட்டைக் கடந்து செல்லும்
மேகங்களின் நிழல் உன்னைத் தீண்டியதில்லையா?’

என்று வினவியபடி விரிகிறது. வானின் எல்லையின்மையிலிருந்து பாதுகாப்பதும், வானிலிருந்து பிரிந்து தனிமைப்படுத்துவதுமான அந்த வீடுதான் ‘நாம்’ என்று நாம் காணும் அடையாளம் போலும். ஆனால் நாம் ஒவ்வொரு கணமும் வீடுகளைவிட்டு வெளியேறியபடியேதான் இருக்கிறோம். ஆனால் எப்போதும் ஏதோ ஒரு வீட்டில் இருந்து கொண்டே இருக்கிறோம்.

’போய்க் கொண்டிருக்கிறாயா?
சரி
ஆனால் எச்சரிக்கையாக இரு
நீ சோர்வுறும் இடமும்
வீழும் இடமுமே
வீடுகள் தோன்றும் இடம்
வீடுகள் வீதிகள் நகரங்கள்
நாடுகள் மற்றும்
பூமி…’

என்று அக்கவிதை முடியும்போது வீடு பூமியாகி விடுகிறது. பூமி மீது மனிதன் கட்டியெழுப்பிய அனைத்துமாகி விடுகிறது. மனிதன் ‘வீழும்’ இடம் எதுவோ அங்கு தொடங்குகிறது வீடுகளினாலான பெரும் வெளியே அவனுடைய சுயம். சுயத்தால் உருவாக்கப்படும் இகம்.

பின் நவீன சிந்தனை, குறிப்பாக உளவியல், மனிதனின் தன்னிலை,சுயம் பற்றிப் பேசும் பல விஷயங்களைத் தேவதேவனின் இக்கவிதைகளினூடாக ஊடுருவிவிட நம்மால் முடியும். சுயத்தை ஓர் இருப்பாக, அடையாளமாக பின் – நவீன உளவியல் காணவில்லை. அதை ஒரு தொடர் செயல்பாடாக அது அறிகிறது. பிராந்தியப்படுத்தல் மூலம் உருவாகும் ஒரு தோற்றமே அது. ழ்ஷாக் லக்கானின் புகழ் பெற்ற ‘கண்ணாடிப் பிம்ப பருவம்’பற்றிய சித்தாந்தம் மூலம் இதை நாம் விளக்கலாம். சிறுகுழந்தைக்குச் சுயம் இல்லை. அது தன்னைப் பிறருடனும் பிறவற்றுடனும் சேர்த்தே அறிகிறது. ஏறத்தாழ பதினெட்டு மாத வயதில் அது கண்ணாடியில் தன்னைப்பார்க்கும்போது படிப்படியாகத் தன் உடலைப் பிற உடல்களிலிருந்து பிரித்தறியத் தொடங்குகிறது. இவ்வாறு தன் முதல் எல்லைக்கோட்டை அது வகுக்கிறது. பிறகு நான் அல்லாதது நான் என்று அது தொடர்ந்து வகுத்தபடியே உள்ளது. இவ்வாறு அதன் சுயம் உருவாகிறது. அந்தக் கண்ணாடி ஒரு படிமம் என்பதைக் கூற வேண்டியதில்லை. சமூகமனம் உருவாக்கிய அக்கண்ணாடி குழந்தையை அதற்குக் காட்டுகிறது. (அதுவே மொழி). இந்த சுய பிராந்தியப்படுத்தல் எந்தக் கட்டத்திலும் முடிவதில்லை. எனவே மனிதனின் சுயம் எந்நிலையிலும் பூரணமானதல்ல, அதாவது அது ஒரு தொடர் நிகழ்வு. சுயங்களை உதறியும் சுயங்களை அடைந்தும் அவன் முன்னகர்ந்தபடியே இருக்கிறான் (எது உன் வீடு?) அவன் தன் அடையாளமின்மையைத் தானே உணரும் கணத்தில் மனம் பதறிப்போய் ஒரு நிலைத்த சுயத்தைத் தன்னுடையதாகக் காட்டுவதற்கு முயல்கிறான். அப்படிக் காட்டுவதை நம்ப முயல்கிறான். நம்பவும் கூடும். (நீ சோர்வுற்று வீழும் இடமே வீடுகள் தோன்றும் இடம்) வாழ்வில் ஈடுபடும் மனிதமனம் சுயத்தைச் சுமப்பதில்லை. சுய பிராந்தியத்திற்கு வெளியே முடிவின்மையின் அற்புதமான கவர்ச்சி அதை ஈர்த்தபடியே உள்ளது. (வீட்டைக் கடந்து செல்கிறது மேகங்களின் நிழல்.)

வேறு ஒரு தீவிரமான தளத்தில் மேலும் பலமடங்கு விரிவான விதத்தில், ‘அக’த்தை அல்லது சுயத்தை ஆராயும் இந்திய ஞானமரபுடனும் நாம் இக்கவிதையை இணைத்துப் பார்க்கலாம். (இந்திய மரபில் அகம் என்பது மனமும் வீடும் ஆகும்) இந்திய மரபுப்படி அகம் என்பது ஒரு அறிதல் மட்டுமேயாகும். பிரபஞ்சப் பிரம்மாண்டம் அல்லது ‘ஜகத்’ சுயத்தின் இன்னொரு அறிதல். இவ்விரு அறிதல்களும் திரிபுக் காட்சிகள் மட்டுமே. பௌத்தம் ‘விகல்பம்’ என்றும் அத்வைதம் ‘மாயை’ என்றும் இதைக் குறிப்பிடுகிறது. திரிபற்ற பெருவெளியின் அடையாளமின்மையிலிருந்து நாம் நம்மையறியாது அடையாளப்படுத்திக் கொள்வதே அகம் என்பது. விரிவாக இவ்விவாதங்களுக்குள் புக இது இடமல்ல. எனினும் கவித்துவத்தின் அறிதல் எவ்வாறு தருக்க அறிதல்களையும் உள்ளடக்கியபடி, அதை ஒரு வகையில் தாண்டிச் சென்றபடி, நமக்குக் காட்சியளிக்கிறது என்பதை விளக்க இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீடு பற்றிய தேவதேவனின் படிமங்களில் மிக முக்கியமானது என்று நான் கருதும் ஒன்று சமீபமாக வெளியாகியது.

’பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பினுள்
பாதுகாப்புடன் இருக்கிறேன் நான்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒரு காலத்தில்
என்னை ஓய்வு கொள்ள விடாது
வாட்டியெடுத்த ஓட்டைக் குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்த நூல் சேலையிலும்
கருக் கொண்டது
எப்போதும் நம் இலட்சியமாக இருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு
நம்மில் ஒருக்காலும் இதுபோல
கருக் கொண்டதில்லை என்று அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப் போல
நாம் ஒருக்காலும் இருந்ததில்லை என்பதையும்
நான் அறிவேன்’
(வீடும் வீடும்)

வீடு தன் உறுதியுடனும் நிரந்தரத் தன்மையுடனும் ஒரு மலரின் கதகதப்பினுள் குடியிருக்கிறது. எப்போதும் நம் இலட்சியமாக இருக்கும் இவ்வுலகம் பற்றிய கனவு அது. நாம் ஒரு போதும் அக்கனவைத் தாண்டிச் சென்றதில்லை என்ற அறிதலின் சுமைமிக்க துயரத்துடன் முடியும் இக்கவிதை தன் அற்புதமான கவித்துவ மௌனத்தின் மூலம் கூர்ந்து படிப்பவரை வெகுதூரம் இட்டுச் செல்லக் கூடிய ஒன்றாகும்..

தேவதேவனின் கவிதைகள் எங்கும் பறந்து வரும் அந்தப் பறவையை வாசகர் மறக்க முடியாது. நவீனக் கவிதையில் அது தொடர்ந்து பறந்தபடியுள்ளது.

’சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது’
(பிரமிள் காவியம்)

என்ற அற்புதமான கவிதைவரி – ஒருவேளை நவீனத் தமிழ் படைத்த ஆகச் சிறந்த வரி – இத்தருணத்தில் நம் மனதை ஊடுருவக் கூடும். தேவதேவனின் ஒவ்வொரு பறவைப் படிமத்தையும் அவருடைய கவியுலகில் பறவைக்கு உள்ள விசேஷமான இடத்தின் பின்னணியிலும், நவீன கவிதையில் பறவை பெற்றுள்ள விசேஷ இடத்தின் பின்னணியிலும் நிறுத்தி நாம் படிக்க முயலவேண்டும். அதேசமயம்

’’பொன்னுலகாளீரோ புவனமுழு தாளீரோ
நன்னயப் புள்ளினங்காள்….’’

என்று ஆழ்வார் உருகியழைத்த அப்பறவைகளில் ஒன்றுதான் இதுவும். தேவதேவன் கவிதைகளில் மரத்தையும் வீட்டையும் முடிவின்மையுடன் பிணைக்கும் ஒரு வருகையாக உள்ளது இப்பறவை.

தேவதேவனின் கவிதைகளில் இம்மூன்று படிமங்களும் விதவிதமாகக் கலந்து கவியனுபவத்தை உருவாக்குகின்றன. இப்படிமங்கள் அவர் கவியுலகில் கொள்ளும் அழுத்தத்தை உணர்ந்த வாசக மனம் வெறுமே மரம் அல்லது பறவை எனும்போதே படிமவெளியாக விரிந்து விடும். அவரது ஒவ்வொரு கவிதையையும் இவ்வாறு விரித்துக் கொள்ள முடியும், அவசியமும் கூட.

’என் ஜன்னல் வழியே
வானையும் நட்சத்திரங்களையும் மறைத்து
ஒரு நூறு பறவைகளின் ஓசைகளுடன்
இலைசெறிந்து அடர்ந்து
இருண்டிருந்த ஒரு மரம்….’

என்ற வரிகளில் மரத்தையும் வீட்டையும் தேவதேவனுக்கேயுரிய படிமங்களாக நாம் கொள்ளும் போதுதான் கவித்துவ அனுபவம் சாத்தியமாகிறது. வெவ்வேறு விதமாக இவ்விணைப்புகள் நிகழ்கின்றன.

’யார் சொன்னது
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லை என்று?
தன் இலைகளாலும் கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கொரு
வீடு கட்டிக் கொண்டுள்ளது…’
(மரத்தின் வீடு)

என்று அவர் கவிதை விரியும்போது வீடு எனும் இடவயப்படுத்தப்பட்ட சுயமாக மரம் வகிப்பது எவ்வடையாளம் என்ற பிரமிப்பு வாசகனில் எழக்கூடும்.

’மழை புயல் வெயில் பனி திருடர்கள்
ஆகியவற்றிலிருந்து நம்மைப்
பாதுகாக்கவே வீடு என அறிந்திருந்த
மனிதனைத் திகைக்க வைத்த அதன் வீடு
காலம் மரணம் வேதனை ஆகியவற்றிலிருந்து
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்
தன் மலர் காய் கனி மற்றும்
இவை எல்லாமுமான தனக்காவே
அது தனக்கோர் வீடு கட்டிக் கொண்டுள்ளது.’
(மரத்தின் வீடு)

பௌதிக உலகில் மனிதன் கட்டிய வீடுகளைப் போலன்றி அபௌதிக வெளியில் மரம் தன் வீட்டைக் கட்டி வைத்துள்ளது. காலத்திலிருந்து அது வெட்டியெடுத்த இடம் அதன் வீடு. வீட்டையும் அதன்மீது எழுந்த மரத்தையும் அதன் மீது விரிந்த வானையும் இணைக்கும் ‘அந்த சிறு குருவி’ பறந்து வரும்போது இப்படிம இணைப்பு முழுமை பெறுகிறது.

’என் வீட்டுக்குள் வந்து
தனி கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்து தவ்விப் பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி

சுரீரெனத் தொட்டது அக்கடலை, என்னை,
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்தப் பெருமிதத்துடன்.

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன்வீட்டை.

ஒட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர்சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்’
(ஒரு சிறுகுருவி)

தேவதேவனின் இக்கவிதையை ஒரு தனிக் கட்டுரையில் விரிவான ரசனையனுபவமாக நான் முன்பு விரித்திருந்தேன். மண்ணில் உருவாக்கி அடையாளப்படுத்தப்பட்ட ‘என் வீட்டில்’ நுழைந்து கூடுகட்டுகிறது அப்பறவை. அங்கிருந்து நிலையற்றுத் தத்தளித்து எழுந்து அது சென்ற இடம் மரக்கிளை. பின்பு அங்கிருந்து வானத்திற்கு. மரணமற்ற பெருவெளிக் கடலில் உயிரின் ஆனந்தப் பெருமிதத்துடன் நீந்துகிறது. கீழே வீடு. ஒளியும் சிரிப்பும் நிழலும் அழுகையும் உதிர்சருகுகளும் மரணங்களும் பரவிய இடம். தேவதேவன் கவிதைகளில் உச்ச நிலையில் மட்டும் சாத்தியமாகும் மந்திர நாதம் கொண்ட இறுதி நான்கு வரிகளைத் தமிழ்க் கவிமரபின் ஆகச் சிறந்த வரிகளின் வரிசையிலேயே வைக்க முனைவேன். இக்கவிதை தன்னளவில் முழுமையானது என்றாலும் தேவதேவனுக்கே உரிய படிமங்களின் சிறப்பான வரைபடமாகவே, அவர் கவிதையியக்கத்தின் குறியீடாகவே, அமையும் தன்மையும் கொண்டது. அப்பறவை வானின் அழைப்பு. வானைத் தொடும். மண்ணின் துளியும் கூட. வானையும் மண்ணையும் நிரப்பும் அதுவே தேவதேவனின் கவித்துவம் எனினும் மிகையல்ல. இதே கவிதையின் அடுத்த கணம் நாம் ‘அமைதி என்பது’ என்ற கவிதையை எடுத்துக் கொள்ளலாம்.

வந்தமர்ந்தும் எழுந்து சென்றும் மரக்கிளையை முடிவின்மையில் அசைய வைக்கும் அப்பறவையை எப்போதும்

தேவதேவனின் கவியுலகில் காணமுடிகிறது.

’அப்போதுதான் முடிந்திருந்தது
அனைத்தும் முழுமுற்றாய்த் தூய்மை செய்யப்பட்டு
பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை
நித்தியத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்
அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல
வானளாவிய சூனிய வெளியெங்கும்
என்பார்வையை இழுத்தபடியே
பறந்து கொண்டிருந்த பறவை
அதில் அமர்ந்திருந்தது
அதன் கூரிய கால் விரல்களில் காலம்
ஒரு செத்த எலி.’
(மழை பெய்து)

அக்கிளை மரத்தின் ஒரு கை. அது நித்தியத்துவத்திலிருந்து குதித்த ஒரு சொல். அதில் அப்பறவை அகாலமாக உட்கார்ந்திருக்கிறது. சிலகணங்கள்தான். பிறகு கிளை மீள்கிறது. அமைதி என்பது மரணத்தருவாயோ அல்லது விழிப்பின் கணமோ என்று வியந்தபடி, முடிவற்ற ஊசலாட்டமே அதன் இயல்பு என்று படுகிறது.

’விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கிய நீர்
சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது.
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை.
அப்பாடா என்று மேலெழுந்தது இலை.
அது தன்னில் ஒரு புன்னகை மிளிர
தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பைச் சொல்வதாய்
அசைந்து கொண்டிருந்தது இங்குமங்குமாக.
ஒரு நீண்ட கிளையின் சிறு உறுப்பு
தான் என் ஒருகணமும்,
முழுமுதல் என ஒருகணமும்.
இங்கும் அங்குமாக அல்லாத
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருப்பதை மட்டுமே அறிந்திருந்தது அது.’

நித்தியத்துவத்தைத் துழாவியபடி என்றுமிருக்கும் தனிமையாகவும் ஒருமையாகவும் தன்னை உணரும் கணங்களையே தேவதேவனின் இந்த மூன்று மையப்படிமங்கள் பரஸ்பரம் பூர்த்தி செய்தபடி இணைந்து முன்வைத்தபடி உள்ளன எனலாம்.. அவர் கவிதைகளின் இலக்கு அதுதான். அது மட்டும்தான்

முந்தைய கட்டுரைஅயோத்திதாசர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது