முதுமையும் அலோபதியும்

அன்புள்ள ஜெ ,

விலகவில்லை என்றால் முதுமையில் நரகம் நம்மருகில் வந்து உட்காந்துவிடும் போலிருக்கிறது, நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் முதல் சடலத்தின் மீது கை வைத்து எப்படி இருக்கும் என்று உணர்ந்தேன் , அது எனது தாத்தா,அப்பாவின் அப்பா , அவரின் மரணம் மிகவும் மெதுவாக , படிபடியாக ,நிகழ்ந்த ஒரு மரணம் , அவர் அலோபதி மருத்துவத்தை ஒரு சப்போர்டாக மட்டும் நினைத்தார்,எந்த ஒரு மருந்தையும் நம்பி இருந்ததில்லை

அவருக்குக் காச நோய் என்று இறுதிக் கட்டத்தில்தான் தெரியவந்தது , அவர் இறக்கும் பொழுது எண்பத்திரெண்டு வயது , அவருடன் நான் எனது மிகமுக்கியமான முதல் தத்துவார்த்த விவாதங்களைக் கல்லூரி நாட்களில் நிகழ்த்தினேன் ,தத்துவ ரீதியான அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன்,ஆனால் அவர் இறக்கும் பொழுது அவர் பக்கத்தில் இருக்க முடியவில்லை வேலை காரணமாக , மூச்சுப் பிரிந்து பத்து நிமிடங்கள் கழித்து எனது சொந்த ஊரான முசிறிக்கு வந்து சேர்ந்தேன் அவர் இல்லை அப்பொழுது .

அவரின் மரணம் ஒரு கொடூரமான மரணம் என்றுதான் சொல்லுவேன்,அதே வருடம் ஆறு மரணங்கள் நிகழ்ந்தன , எனது சித்தப்பா பையன்,எனது நண்பனின் அப்பா , நண்பனின் தம்பி , வேலை பார்க்கும் இடத்தில் நண்பன் , எனது சித்தி , சில மரணங்கள் கண்சிமிட்டும் நேரத்தில் நிகழ்ந்தது ,அதைப் பற்றி யோசித்தால் ஒரு கனவு மாதிரி உள்ளது . சுடுகாட்டிற்குப் போவதும் , அவலக் குரல்களைக் கேட்பதும் , கண்ணீர் மல்க நிற்பதுமாய் இருந்த நாட்கள் .

எனது தாத்தாவின் முதுமை காரணமாக நிகழ்ந்த மரணம் பல கேள்விகளை எழுப்பியது , அவருக்கு ஏழு பிள்ளைகள் , புற,அக வயமாக அவர் கிட்டத்தட்ட சன்யாசத்தை அறுபது வயதில் இருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தார் , பிள்ளைகளிடம் இருந்து விலகி இருந்தார். அன்றாட பிள்ளைகளின் வாழ்கையில் ஈடுபட்டதே கெடையாது , அவர்கள்தான் கோடை விடுமுறைக்கு வருவார்கள்,அவர் த்யானத்தில் ,பூஜை மற்றும் சிறுவர்களுக்கு திவ்யப்ரபந்தம் என்று சொல்லிக் கொடுத்து அவரும் சேர்ந்து கற்றுக்கொண்டார்,முதுமையை அவ்வாறாக வகுத்துக்கொண்டார் , நீங்க ஒரு கட்டுரையில் சன்யாசம் பற்றி மாணவ மாணவியருக்குக் குறிப்பிடும் பொழுது எனக்கு எனது தாத்தாதான் ஞாபகம் வந்தார் . அவருக்கு மரணம் பற்றிய ஆவல்தான் கண்டிப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவரிடமே கேட்டிருகிறேன் , அதனைக் கேட்டதற்காக எனது அம்மாவிடம் திட்டுவாங்கியதும் உண்டு .

அவர் மரணத்தில் அவரது பிள்ளைகளின் கவலை அவரின் மரணத்தை மூன்று மாதங்கள் கொடூரப் பயணமாக ஆக்கியது,மூன்றுமாதங்கள் முன்பே அவருக்கு நினைவு தப்ப ஆரம்பித்தது , மருந்து மற்றும் உணவை உடல் ஏற்கவில்லை .அப்பொழுது நான் எனது அப்பாவிடம் அப்படியே விடுங்கள் , மருந்து வேண்டாம் , உடலைத் துன்புறுத்தாதீர்கள் என்று கூறினேன். ஆனால் மக்களின் அலோபதி மருத்துவத்தின் மீது உள்ள அபார நம்பிக்கை என்னை வியப்பிற்குள்ளாகியது ,மூன்று மாதங்கள் ரத்தம் ஏற்றுவதும்,fluids ஏற்றுவதும் என்று உடம்பை ரணகளமாக்கி , bed sore வந்து இறந்தார்,விஷம் கொடுத்து விடுங்கள் என்று கேட்டதாக அம்மா கூறினார்கள் . ஒவ்வொரு முறையும் போன் செய்யும்பொழுது விட்டுவிடுங்கள் அவர் எளிய மனிதர் ,கொடுமைப்படுத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு அழுதுவிடுவேன்,சின்னப்பயல் என்று நினைத்து வார்த்தையைப் பொருட்படுத்தவில்லை .

அலோபதி சிறுவர்கள் மற்றும் நடுவயதினர்ருக்கு நோய் வேகமாக குணப்படுத்துவதை வைத்து அது மரணத்தின் பிடியில் இருக்கும் முதுமைக்கும் உதவும் என்று நம்பும் எளிய முறையினால் பல உயிர்கள் தேவையில்லாமல் சித்தரவதைக்கு உள்ளகிறார்களோ என்ற ஐயம் இப்பொழுது ஒரு உறுதியான எண்ணமாக ஆக மாறத் தொடங்கியுள்ளது . இப்பொழுது எனது அம்மாவின் அப்பா அது போன்ற நிலைமையில் தான் இருக்கிறார் .அவரும் சேர்ந்து மருத்துவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்பி , அவரது பிள்ளைகளின் இழுப்புக்கு , ஒரு கவலை முகத்துடன் , பயம் கவ்வி , பசி இல்லை உணவை உணவுக்குழாயில் தள்ளுகிறார்கள் , ஏப்பம் விடக் கூடக் கடினமாக இருக்கிறது,பல மாத்திரைகளை முழுங்குகிறார் , மலச்சிக்கல் , பேதி இரண்டிற்கும் மாத்திரைகள் , இருதயத்திற்குத் தனியாக மாத்திரை , கால் வீக்கத்திற்கு மாத்திரை , சென்னையில் உள்ள ஒரு ரூம் அவரின் உலகமாக மாறிவிட்டது . எனது அப்பாவின் அப்பாவிற்காவது ஒரு கிராமச்சூழல் கிடைத்தது , இவருக்கு நான்குசுவர் , மாத்திரை ,மருந்து ,சென்னை வெய்யில் என்று ஆகிவிட்டது .

வேகமாக இருக்கும் உலகில் முதுமைக்கு , ஒரு அரவணைப்புடன் ஒருவரை மரணத்தை பொறுமையாகத் தழுவ ஏற்பாடு செய்ய இந்த consumerist உலகிற்கு இல்லை என்றே கருதுகிறேன் .

பிரயோபவேஷா என்ற ஒரு முறை ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதையும் பார்த்தேன் ,இவர்களிடம் இருந்து தப்ப முடியும் என்ற ஒரு ஆறுதலும் வந்தது ,
http://www.loaj.com/ayurveda_philosophy.html

உடம்பு உணவு ,மருந்தை ஏற்கவில்லை என்றாலோ , அல்லது வலி பொறுக்கவில்லை என்றாலோ இதனை மூதாதையர்கள் பயன்படுத்தியுள்ளர்கள் . கண்டிப்பாக அதனை மிருகங்களின் மரணத்தில் இருந்துதான் கற்றுக்கொண்டிருக்கவேண்டும் . நான் எந்த நாயும், பூனையும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து முதுமை அடைந்து பார்த்ததில்லை , இறந்தும் பார்த்ததில்லை .

http://www.lifepositive.com/Spirit/Death/Embracing_the_unknown32004.asp
நான் ஒரு நாயின் போட்டோவையும் இதில் இணைத்துள்ளேன் , அதன் கண்களில் இருக்கும் சாந்தம் என்னைக் கவர்ந்தது சொறியுடன் இருந்தாலும் , கண்ணீர்மல்க அதனைப் பார்த்துவிட்டு , நாம்பளும் இப்படித்தான் ஏன் பரிதாபம் என்று விலகி நடந்தேன் . மரணம் என்னை உற்றுநோக்கக் கற்றுக்கொடுத்துவிட்டது . என்னக்கு விஷ்ணுபுரம் வாசகம்தான் ஞாபகம் வருகிறது ,” நம்மரணத்தைப் பார்க்கும்வரையில் அது நமக்குப் புலப்படுவதில்லை .

**

நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதி இருபதாவது நாள் என் தாய் வழித் தாத்தா காலமானார் , இது அவர் காலமாவதற்கு ஒரு வாரம் முன்னால் எடுத்த புகைப்படம் இதில் மூக்கில் இருந்து வயிறுவரை துளைக்கப்பட்ட குழாய்,பசியே இல்லாமல் உணவு , கடைசி வாரத்தில் இன்னும் பல கூத்துகள் நடந்தது . அவர் இறக்கும் பொழுது யாரும் உடன் இல்லை ICU வில் . என்னிடம் அவர் கடைசியாக செய்கைகாட்டியது அந்தக் குழாயை எடு என்று . என்னால் இயலாமல் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன் . கடைசி மூன்று நாட்கள் உயிர் உடலைப் பிரிவதற்குள் ரண வேதனையாய் இருந்தது .

மது லச்சின்

அன்புள்ள மது,

உங்கள் கடிதம் நானறிந்த பல விஷயங்களை மீண்டும் நினைக்கச்செய்தது.இந்த தளத்திலேயே விரிவாக எழுதியிருக்கிறேன்

இது எளிய விஷயம் அல்ல. ஒன்று நோயாளியின் மனநிலை. இன்னொன்று நோயாளியின் உறவினர்களின் சமூகச்சூழ்நிலையும் அதுசார்ந்த உளவியல் கட்டாயங்களும். கடைசியாக இன்றைய நமது வணிக மருத்துவத்தின் உள்நோக்கங்கள். இவையெல்லாம் பின்னிப்பிணைந்த ஒரு நிகழ்வு இது.

நித்ய சைதன்ய யதி நோய்வாய்ப்பட்டு இருந்தபோது சொன்னார் ‘வாழும்கலை’என்று சொல்கிறார்கள். நான் சாகும்கலை பற்றி ஒருசில வகுப்புகள் எடுக்கலாமென நினைக்கிறேன்’. வேடிக்கையாகத்தான்.

‘சாவதும் ஒரு கலை- வாழ்வதைப்போலவே’ சில்வியா பிளாத்தின் இவ்வரிகள் புகழ்பெற்றவை. அவர் தற்கொலையைச் சொல்கிறார். நான் சொல்வது முழுமையாக ஆகும் மரணம் பற்றி

மரணத்தை எதிர்கொள்வதைப்பற்றிய ஆயுர்வேதத்தின் நிலைப்பாடு விஷ்ணுபுரம் நாவலில் ஓர் அத்தியாயத்தில் விரிவாகவே வரும். ஆயுர்வேதத்தில் சிகிழ்ச்சை என்பது மரணத்துக்கு எதிரான போர் அல்ல. பிறப்புடன் மரணமும் உருவாகிவிட்டது என அது நினைக்கிறது. உடல் அதன் முழுமையான ஆயுளை அடையச்செய்வதுதான் அதன் இலக்கே ஒழிய மரணத்தை வெல்வது அல்ல.

கழிவுகளை அகற்றுவது போல இயல்பாகவும் சுகமாகவும் மரணம் நிகழவேண்டும் என்று வைத்தியர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறேன். அதுவும் ஒரு கழிவகற்றல்தான்.அழிவற்ற ஒன்று உடல் என்னும் அழியக்கூடியதை வெளியேற்றுகிறது

ஆனால் அலோபதி உடல் என்னும் இயந்திரத்தின் பழுதுகளாகவே நோயைப்பார்க்கிறது. பழுதுபார்க்கிறது, உறுப்புகளை மாற்றுகிறது. அதைப்பொறுத்தவரை மரணம் என்பது சிகிழ்ச்சை என்னும் தொழில்நுட்பத்தின் கடைசித்தோல்வி

சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் அலோபதி மருத்துவம் ஒரு மாபெரும் வணிகமாக ஆகிவிட்டிருக்கிறது. அந்த வணிகத்தில் அது அடைந்த பெரிய கண்டுபிடிப்பு என்பது பிறப்பையும் இறப்பையும் நோயாக ஆக்க முடியும் என்பதுதான். அவ்விரு இயற்கையான நிலைகளுக்காகவே இன்று அலோபதியின் பெரும்பாலான மருந்துகள் விற்கப்படுகின்றன.

அலோபதி சிகிழ்ச்சை அலோபத்வணிகம் என இரண்டாகவே நான் பிரித்துக்கொள்கிறேன். முதுமையை எதிர்கொள்வதில் அலோபதிசிகிழ்ச்சை அடைந்துள்ள பெரும் வெற்றிகளை மனிதகுலத்துக்கு வரம் என்றே சொல்வேன். மனித ஆயுளை அது நீட்டியிருக்கிறது. முதுமையின் துயர்களில் பெரும்பகுதியை நீக்கியிருக்கிறது.

மறுபக்கம் அலோபதி வணிகம் மொத்த முதுமைக்காலத்தையும் ஒரு மாபெரும் சிகிழ்ச்சைக்காலகட்டமாக ஆக்கிவிட்டிருக்கிறது. இன்றைய முதியவர்களுக்கு அவர்களின் அதுவரையிலான மொத்த சேமிப்பும் மருந்துகளுக்கே செலவாகிவிடுகிறது.

நான் தொலைபேசித்துறையில் வேலைபார்க்கையில் இதைக் கவனித்திருக்கிறேன். ஓர் ஊழியர் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுக்காலம் சம்பாதிப்பதை முழுக்க கடைசி இருபது வருடங்களில் ஆஸ்பத்திரிக்குக் கொடுத்துவிட்டு இறக்கிறார். அதாவது அவர் வாழ்நாள் முழுக்க சம்பாதிப்பதை முழுமையாகவே அலோபதிவணிகம் பிடுங்கிக்கொள்கிறது. எவ்வளவு பெரிய பணம்! நம் தேசிய சேமிப்பின் பாதி வரும்போலிருக்கிறது.

இன்னொருபக்கம் நம் முதியவர்களின் மனமும் மாறிவிட்டது. ‘போதும்..போய்வருகிறேன்’ என்று சொல்லி மரணத்தை நோக்கிச் சென்ற முதியவர்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எளிய விவசாயிகள், சமானியர்கள்.

ஆனால் இன்று அப்படிப்பட்டவர்களே அபூர்வம்.கடைசிக்கணம் வரையில் மரணத்துடன் போராட விரும்புகிறார்கள் முதியவர்கள். மருத்துவச்செலவால் தன் பிள்ளைகள் பெரும்கடனாளிகளாக ஆவதை கட்டாயப்படுத்துகிறார்கள். காரணம் சென்ற தலைமுறையிடம் இருந்த அடிப்படையான ஆன்மீக அம்சமும் அதன் விளைவாக உருவாகும் ஒட்டுமொத்த வாழ்க்கைநோக்கும் அவர்களிடமில்லை.அவர்கள் வாழ்ந்தது முழுக்கமுழுக்க லௌகீகமான உலகில். அந்த உலகை கடைசிக்கணம் வரை அவர்களால் உதறமுடிவதில்லை.

ஒரு முதியவர் இறந்துபோகும்போது அந்தக்குடும்பத்தில் அடுத்த இருபதாண்டுக்காலத்துக்கான கடனை விட்டுப்போவதை அடிக்கடிக் கண்டிருக்கிறேன். அதை தவிர்க்கவே முடியாது. அவர் அதை கோருவார். அப்படிச் செலவழிக்காவிட்டால் அது நன்றிகெட்டத்தனம் என்பார். பெரும் குற்றவுணர்ச்சியை பிள்ளைகளிடம் உருவாக்குவார்.

அந்த மனநிலையின் மறுபக்கம் சமூகத்திலும் உருவாகி வந்துள்ளது. ஒருமுதியவரை கடைசிக்கணம் வரை எப்படியாவது உயிருடன் வைத்திருக்க குடும்பங்கள் முயல்கின்றன. இல்லாவிட்டால் அவரை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை என்ற பழியைச் சந்திக்கவேண்டியிருக்கும். அது குற்றவுணர்ச்சியாக வளரவும் கூடும்.

இந்த இரு மனநிலைகளையும் அலோபதி வணிகம் ஊக்குவிக்கிறது. பழையகாலத்தில் வைத்தியர்கள் ஒரு கட்டத்தில் சொல்லிவிடுவார்கள். அவ்வ்வளவுதான், வாழ்க்கை நிறைவடைகிறது என்று. சென்ற கால டாக்டர்கள் கூட் ‘சரி, வாழ்ந்தாச்சே…இனிமே பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணுங்க’ என்று சொல்வதுண்டு. நானே கேட்டிருக்கிறேன். இன்று அப்படியல்ல. கடைசிக்கணம் வரை எதையாவது செய்து உயிரை நிலைநிறுத்துகிறார்கள். உயிர் இருக்கும் வரை பணம் கொட்டிக்கொண்டே இருக்கிறது.

இந்த முத்தரப்பு கூட்டுமனநிலையினால் கொடுமையான நீண்ட அவஸ்தைகளை அடைவது முதியவர்கள்தான். அதற்கு இன்று நடைமுறையில் ஒன்றுமே செய்யமுடியாது.கனிந்த கனி தானே உதிரும். அது கனியவேண்டும், அவ்வளவுதான்

ஜெ


மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

நவீனமருத்துவம் பழையவிவாதங்கள்

முந்தைய கட்டுரைமிருகங்களைப்பற்றி…
அடுத்த கட்டுரைஎன் பெயர்-கடிதங்கள்